பா - கே
அலுவலகத்தில், உணவு இடைவேளைக்கு பின், அனைவர் முகத்திலும் சோர்வு தெரிய, சிறிது நேரம் வேலை செய்வது, சிறிது நேரம், 'ரிலாக்ஸ்' செய்வதுமாக இருந்தனர்.
அப்போது, 'அசைன்மென்ட்' ஒன்றை முடித்து வந்த லென்ஸ் மாமா, 'உஸ்... அப்பாடா, என்ன வெயில், என்ன புழுக்கம்...' என்றபடி, என் அருகில் அமர்ந்தார்.
'இந்தாங்க மாமா... மோர் குடியுங்க...' என்று என்னிடமிருந்த மோர் பாட்டிலை நீட்ட, என்னை ஒரு மாதிரியாக, 'லுக்' விட்டு, அருகிலிருந்த உ.ஆசிரியர் ஒருவரை கைக் காட்டி, 'இவங்களுக்கு கொடு...' என்றார்.
'உம்ம குசும்பு உம்மை விட்டு போகுமா? மோர் வேண்டாம்ன்னு நேரிடையா சொல்ல வேண்டியதுதானே...' என்று சிலிர்த்தெழுந்தார், உ.ஆ.,
'கோவிச்சுக்காதம்மா... சோர்வா இருக்கீங்களேன்னு சொன்னேன்...' என்று சமாளித்தவர், 'ஏன் எல்லாரும் இப்படி கோழித் துாக்கம் துாங்கிக்கிட்டு இருக்கீங்க... மதிய உணவுக்கு பின், 15 நிமிடம் கண்களை மூடி, 'ரிலாக்ஸ்' செய்யணும் அல்லது வேறு வேலையில் ஈடுபட்டு, மூளைக்கு வேலை கொடுக்கணும்...' என்றார், மாமா.
'நீர்தான் ஏதாவது மூளைக்கு வேலை கொடுங்களேன்...' என்று கூறினார், உ.ஆ.,
'சரி... ஒரு கதை சொல்றேன். அதில் புதிர் இருக்கும். சரியான பதிலை கண்டுபிடிக்கணும்...' என்று சொல்ல ஆரம்பித்தார்:
அரசர் ஒருவர், தன் நாட்டையும், மக்களையும் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்.
அந்நாட்டின் முதன்மை அமைச்சருக்கு வயதாகி விட்டதால், ஓய்வுபெற விரும்பினார். அரசருக்கு அமைச்சர் மீது, மதிப்பும், அன்பும் அதிகம். அவரது புத்திக்கூர்மையும், ஆலோசனைகளும் நாட்டுக்கு மிகவும் தேவை என்று எண்ணினார். எனினும், அமைச்சரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு ஓய்வளிக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால், இரண்டு நிபந்தனைகளை விதித்தார்.
'முதல் நிபந்தனை, நீங்கள் ஓய்வுபெற்ற பிறகும், நாட்டின் நலன் தொடர்பாக உங்களுடைய கருத்தைத் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும்; மற்ற அமைச்சர்களுக்கும் உதவ வேண்டும்.
'இரண்டாவது நிபந்தனை, உங்களுக்கு பதிலாக யார் முதன்மை அமைச்சராக வேண்டும் என்பதை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்...' என்றார், அரசர்.
'நல்லது அரசே... நம் நாட்டுக்காக என்னால் இயன்ற பணிகளை எப்போதும் செய்து வருவேன். திறமையுடன் நிர்வகிக்கக் கூடிய புதிய முதன்மை அமைச்சரை தேர்ந்தெடுத்துத் தருவேன்...' என்றார், அமைச்சர்.
நாட்டுக்கு முதன்மை அமைச்சர் தேவை என்று கேள்விப்பட்டதும், ஏற்கனவே அமைச்சர்களாக இருப்பவர்கள், புதியவர்கள், இளைஞர்கள், அனுபவமிக்க நிர்வாகிகள் என்று, பலர் விண்ணப்பம் போட்டனர். அவர்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, மிகச்சிறப்பான ஒருவரைத் தேர்ந்தெடுத்தார், அமைச்சர்.
எனினும், அவர் மனதில் முழு நிறைவு இல்லை. நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை யாரோ ஒரு புதியவரிடம் ஒப்படைப்பதா என்று தயங்கினார். அந்தப் புதியவருக்கு ஒரு தேர்வு வைக்கத் தீர்மானித்தார்.
அந்தப் புதியவரை வரவழைத்து, தனியறைக்கு அழைத்துச் சென்றார், அமைச்சர்.
அங்கு, மான் ஒன்று சோர்ந்து படுத்திருந்தது. அதன் அருகில் ஒரே மாதிரியான நான்கு குடுவைகள் இருந்தன.
புதியவரிடம் குடுவைகளை காட்டி, 'இந்தக் குடுவைகளில் மூன்றில் தண்ணீரும், மற்றொன்றில் அரிய மருந்தும் இருக்கிறது. ஆனால், எந்த குடுவையில் அந்த மருந்து இருக்கிறது என்று தெரியாது. அந்த மருந்து, இந்த மானுக்கு ஏற்பட்டிருக்கும் நோயைக் குணப்படுத்தி விடும்.
'ஆனால், அந்த மருந்து செயல்படுவதற்கு, 12 மணி நேரம் ஆகும். அதுவரை, மானிடம் எந்த மாற்றமும் தெரியாது. ஆனால், 12 மணி நேரத்துக்கு பிறகு, மான் துள்ளிக் குதித்து ஓட ஆரம்பித்துவிடும்...' என்றார், அமைச்சர்.
'புரிந்தது அமைச்சரே. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?' என்றார், புதியவர்.
'நான், உங்களுக்கு, 24 மணி நேரம் தருகிறேன். இந்த நான்கு குடுவைகளில் எதில் அந்த மருந்து இருக்கிறது என்று கண்டுபிடித்து, மானை குணப்படுத்த வேண்டும். அப்படி குணப்படுத்தி விட்டால், நீங்கள் தான் இந்நாட்டின் அடுத்த முதன்மை அமைச்சர்.
'ஒருவேளை, 24 மணி நேரத்திற்குள் உங்களால் அதைக் கண்டுபிடிக்க இயலாவிட்டால், அரண்மனை மருத்துவர்கள், மானை குணப்படுத்தி விடுவர். ஆனால், உங்களுக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்காது. ஆகவே, கவனமாக சிந்தித்து தீர்மானியுங்கள்...' என்று சொல்லி வெளியேறினார், அமைச்சர்.
யோசிக்கத் துவங்கினார், புதியவர்.
இப்போது, முதல் குடுவையிலிருக்கும் திரவத்தை, மானுக்கு தரலாம். 12 மணி நேரத்துக்குப் பிறகு அது குணமாகி விட்டால், நான் வெற்றி பெற்று விடுவேன். ஒருவேளை, குணமாகாவிட்டால், இரண்டாவது குடுவையைப் பயன்படுத்த வேண்டும். அது செயல்படுகிறதா என்று தெரிவதற்கு, மேலும், 12 மணி நேரம் ஆகிவிடும்.
ஒருவேளை, அதுவும் மானை குணப்படுத்தாவிட்டால், 24 மணி நேர காலக்கெடு முடிந்து விடும். என்னால் சரியான குடுவையை கண்டுபிடிக்க இயலாது.
இதனால், இந்த போட்டியில் தன்னால் வெற்றி பெற இயலாது என்று தோன்றியது புதியவருக்கு. அதேநேரம், அமைச்சர், இப்படி ஒரு சாத்தியமில்லாத போட்டியை நடத்த மாட்டார் என்றும் அவருக்கு புரிந்தது. ஆகவே, வேறு ஏதாவது ஒரு வழியில் மானை குணப்படுத்த இயலுமா என்று சிந்தித்தார்.
'அவரோடு சேர்ந்து நீங்களும் சிந்தியுங்கள். மானை குணப்படுத்துங்கள் பார்ப்போம்...' என்று கூறி, இடைவெளி விட்டார், மாமா.
மாமா கூறி முடித்ததும், விடையை கண்டுபிடிக்க முடியாமல் விழித்தனர், உ.ஆசிரியர்கள்.
'நானே சொல்லி விடுகிறேன்...' என்று மாமா விடையை சொன்னார்.
'ஆஹா, பிரமாதம் மாமா, இந்த கோணத்தில் நாங்கள் யோசிக்கவே இல்லை...' என்று பாராட்டினர், உஆ.,
'சரி, சரி சாயந்திரம் கேன்டீனில் இருந்து சுடச்சுட சமோசா, மசால்வடையும், பில்டர் காபியும் வாங்கித் தந்துடுங்க...' என்றார், மாமா.
விடை:
ஒவ்வொரு குடுவையிலும் இருக்கிற திரவத்தை மானுக்கு கொடுத்த விட்டு, 12 மணி நேரம் காத்திருந்தால், நிச்சயம் வெற்றி பெற இயலாது. மேலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரவங்களை மானுக்கு கொடுத்தாலும் எது சரியான மருந்து என கண்டுபிடிக்க இயலாது.
எனவே, போட்டி துவங்கியவுடன், மானுக்கு முதல் குடுவையில் இருக்கும் திரவத்தை தர வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு பின், இரண்டாவது குடுவையில் இருக்கும் திரவத்தை தர வேண்டும். இதேபோல், ஒரு மணி நேர இடைவெளியில் மூன்றாவது மற்றும் நான்காவது குடுவையில் இருக்கும் திரவங்களை தந்துவிட வேண்டும்.
அதன்பின், பொறுமையாக காத்திருக்க வேண்டும். 12 மணி நேரத்தில் மான் குணமாகி விட்டால், முதல் குடுவையில் உள்ளது தான் சரியான மருந்து. 13 மணி நேரத்தில், குணமானால், இரண்டாவது குடுவைதான் சரியான மருந்து. 14 மணி நேரத்தில் குணமானால், மூன்றாவது குடுவையில் உள்ளதுதான் சரியான மருந்து. 15 மணி நேரத்தில் குணமானால், நான்காவது குடுவையில் உள்ளதுதான் சரியான மருந்து.
இந்த முறையை பயன்படுத்தி, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மானை குணப்படுத்தி விட்டார் புதியவர்.
சரியான மருந்தை கண்டுபிடித்து விட்டதை அறிந்த முதன்மை அமைச்சரும், அரசரும் மகிழ்ந்தனர். புதியவரை அந்நாட்டின் அமைச்சர் பொறுப்பில் அமர்த்தினார், அரசர்.