க.சிவசங்கர், மதுரை: ஒழுக்கமுள்ள மனிதனை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?
ஒழுக்கமுள்ள மக்களை உருவாக்க, நல்ல அரசுகள் தான் வேண்டும். அதே மக்களை, ஒழுக்கமில்லாத, குடிகாரர்களாக மாற்ற, மாவட்டத்திற்கு, நான்கு கயவர்கள் இருந்தாலே போதும்!
அ. ரகுராமன், தேனி: 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் வரை...' என்கின்றனரே... நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?
எட்டு நாள் வரை என்பதெல்லாம் முடிந்து, எவ்வளவோ காலம் கடந்து விட்டது. ஊழல் அரசியல்வாதிகள் வந்த பின், ஆட்சியை பிடித்த ஐந்து ஆண்டுகள் வரை, இது தொடரும் என்ற நிலைமைக்கு மாறிப் போனது.
ப. நாதன், தென்காசி: பெருந்தவம் என்று சொல்கின்றனரே... அப்படி என்றால் என்ன?
தன் பசியைத் தாங்கிக் கொள்வது, ஒரு தவம். பிறர் பசியை தணிப்பதே பெருந்தவம்!
ஆர்.மீனா, சென்னை: புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் திறக்க, 19 கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பது ஏன்?
ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் என்கின்றனர்... அப்படியானால், ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு எதிராக நின்றனரே ஏன்? வரும் லோக்சபா தேர்தலில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்!
* மு.இசக்கி, சென்னை: புழக்கத்தில் உள்ள, 2,000 நோட்டு திரும்ப பெறுவது பற்றி...
சாதாரண மக்களிடம், 2,000 ரூபாய் நோட்டு இல்லவே இல்லை... ஆனால், அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் மற்றும் வரி கட்டாத சிலரிடமும் தான், 2,000 நோட்டுகள் குவிந்து கிடக்கின்றன...
அவர்கள் அதை மாற்றுவதற்கு வழி காண வேண்டித்தான், செப்டம்பர் 30 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதோ என, எண்ணத் தோன்றுகிறது!
* எம்.எஸ்.மணி, பெங்களூரு: கர்நாடகாவில், தி.மு.க.,வின் தோழமை கட்சியான காங்கிரஸ் ஆட்சியை பிடித்து உள்ளதே... இனி நமக்கு காவிரி நீர் தடையில்லாமல் கிடைக்க வழி செய்யுமா?
வழி செய்யவே செய்யாது... காங்கிரஸ் கட்சிக்கு, தாங்கள் ஆளும் மாநில மக்களின் நலம் தான் முக்கியம். தமிழகத்தில் காங்கிரசும், தி.மு.க.,வும் இனி காவிரி பற்றி வாயே திறக்காது என்பதே நிதர்சனம்!
கே.ராஜ், மதுரை: புதிய பார்லிமென்டில் சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவி விட்டார்களாமே...
இது, தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்... இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்காமல், தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் கலந்து கொண்டு சிறப்பித்திருக்க வேண்டும்!
ஆர்.ஜெயபாரதி, சாத்துார்: 'இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும், வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையாக இருக்க வேண்டும்...' என்று, மார்க்சிஸ்ட் பொதுச்செயலர், சீதாராம் யெச்சூரி கூறி இருக்கிறாரே...
இந்தியா என்ன அழிந்தா கொண்டிருக்கிறது! உலக நாட்டு தலைவர்கள் எல்லாம் இந்தியாவின் வளர்ச்சியை பாராட்டிக் கொண்டு தானே உள்ளனர். முதலில், இவர்களது, வ.கம்யூ., மற்றும் இ.கம்யூ., ஒன்று சேரட்டும்!