வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்டு, வெளியே வந்தான் குணா.
நின்றிருந்தவர் சொன்ன தகவலை கேட்டதும், கணவனின் அலறல் கேட்டு ஓடி வந்த மலர், ''யாருக்கு, என்னாச்சுங்க?'' என்றாள்.
''வாக்கிங் போகும்போது, அப்பாவுக்கு விபத்தாகி, மருத்துவமனையில் சேர்த்திருக்காங்களாம். நான், உடனே கிளம்புறேன்,'' என்றான், குணா.
''வயசான காலத்துல, வீட்டுக்குள்ள முடங்கி கிடக்காம, எதுக்குங்க வெளிய போகணும். இப்போ சிரமப்படறது யார்,'' என்றாள், மலர்.
அவளின் அலட்சியப் பேச்சுக்கு பதில் ஏதும் சொல்லாமல், இருந்த பணத்தை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் திணித்து, 20 நிமிடத்தில், மருத்துவமனையை அடைந்தான், குணா.
முதல் உதவி செய்து, காத்திருந்த மருத்துவர், ''நீங்க, இவரோட மகனா. ஆபத்து எதுவும் இல்ல, தம்பி. பயப்படாதீங்க; உடனே ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கு,'' என்றார்.
அவர் சொன்னது, சற்று ஆறுதலாய் இருந்தது. பணத்தைக் கட்டி, அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான், குணா.
இரண்டு மணி நேரத்திற்கு பின், அறைக்கதவைத் திறந்து வந்த நர்ஸ், ''சார், அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. ஒரு மணி நேரத்துல வார்டுக்கு மாத்திடுவோம். அங்க போங்க, மற்ற விபரத்தை, மருத்துவர் வந்து சொல்வார்,'' என்றாள்.
நடேசனை ஸ்டெச்சரில் அழைத்து வந்தார், வார்டு உதவியாளர். நினைவின்றி இருந்தவருக்கு, படுக்கைக்கு அருகே மருத்துவ உபகரணங்களை பொருத்தினாள், நர்ஸ்.
''பயப்பட வேண்டாம். சிகிச்சை, நல்லபடியாக முடிந்தது, தம்பி. குறைஞ்சது மூன்று மாசமாவது அவர் ஓய்வில் இருக்கணும்,'' என்றார், மருத்துவர்.
சிறிது நேரம் கடந்ததும், நடேசனுக்கு நினைவு திரும்பி, கண் விழித்து மிரட்சியுடன் சுற்றுமுற்றும் பார்த்தார். இடது கை மற்றும் வலது தொடைப் பகுதியில் கட்டு போடப்பட்டிருந்ததை உணர, அவருக்கு சில கணம் பிடித்தது.
அப்போது, காக்கிச் சட்டையோடு வார்டுக்குள் நுழைந்தார், ஒரு காவலர்.
''விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் பதிவெண், அப்பகுதியிலிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவை எடுத்துட்டோம். வண்டியை ஓட்டி வந்த இளைஞன் யாருன்னு தெரிய வந்திருக்கு. நீங்க புகார் கொடுத்தீங்கன்னா, அவன் மேல நடவடிக்கை எடுக்கலாம்.''
''அதெல்லாம் வேணாம் சார். ஏதோ, என் பொல்லாத நேரம். நான் தான், கவனமா பார்த்து போயிருக்கணும். இதோட விட்டுடுங்க,'' வலியிலும் முனகியவாறு சொன்னார், நடேசன்.
அப்போது, மலரிடமிருந்து மொபைல்போன் அழைப்பு வந்தது.
''எங்க இருக்கீங்க, கிளம்பி மூணு மணி நேரமாச்சு. எந்த ஒரு தகவலும் இல்ல,'' சலித்துக் கொண்டாள்.
''அறுவை சிகிச்சை செய்திருக்காங்க, மலர். உதவிக்கு, கூடவே இருக்கணும். நான், ஒரு மாசம் விடுப்பு சொல்லிட்டேன். ரெண்டு பேருக்கும் தேவையான துணிகளை எடுத்து வா,'' என்றான், குணா.
பேசிக் கொண்டிருக்கும்போதே, சட்டென இணைப்பைத் துண்டித்து, இரண்டு மணி நேரத்திற்கு பின், துணிப்பையோடு நிதானமாக மருத்துவமனை வந்தாள், மலர்.
நன்கு உறக்கத்தில் இருந்தார், நடேசன்.
வார்டுக்குள் நுழைந்ததும், ''இப்போ, யார் வெச்சுக்கிட்டு கஷ்டப்படறது. குணமாக, எத்தனை நாளாகுமோ?'' மலரின் குரல், பக்கத்து வார்டு வரை கேட்டது.
''கொஞ்சம் மெதுவாப் பேசு. எல்லாரும் பார்க்கறாங்க,'' என்றான், குணா.
குணாவைத் தனியாக அழைத்து, ''வாழப் போற இடத்துல, பொண்ணு சுதந்திரமா இருக்கணும்ன்னு, ஒரே பிள்ளை இருக்கற வீடா, குறிப்பா, மாமியார் இல்லாத வீடாப் பார்த்து கட்டி வச்சாங்க.
''கல்யாணமாகி முழுசா ஆறு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள, இந்த நிலைமை. என்னால முடியாது. என் அம்மா வீட்டுக்குப் போய், அங்கிருந்து ஆபீஸ் போறேன்.
''வேலைக்காரிய இப்போதைக்கு வரவேண்டாம்ன்னு சொல்லிட்டேன்,'' என்றவள், வீட்டுச் சாவியை குணாவின் கையில் திணித்து, ''சாப்பாடெல்லாம், கேன்டீன்ல பார்த்துக்குங்க,'' என்று சொல்லி புறப்பட்டாள், மலர்.
எதிர்பாராமல் தந்தைக்கு நடந்த விபத்தும், மனைவியின் பேச்சும், குணாவை நிலைகுலையச் செய்தது.
இரண்டு வாரம் கடந்தது. வழக்கமான பரிசோதனைகளை முடித்து, குணாவை அழைத்தார், மருத்துவர்.
''நாங்க செய்ய வேண்டிய சிகிச்சை எல்லாம் முடிஞ்சுது, தம்பி. இனிமே, அவருக்குத் தேவை, தெரெபி தான். நர்சிங் கேர் சர்வீஸ் நிறைய இருக்கு. குறிப்பா, தெரெபி கொடுக்க தனியாவே ஆள் இருக்காங்க,'' என, ஆலோசனை சொல்லி, அடுத்த வார்டுக்கு நகர்ந்தார், மருத்துவர்.
உடனே, கூகுளில் நர்சிங் கேர் மையங்களைத் தேடினான், குணா. இரண்டு மணி நேர தேடலுக்குப் பின், சில மையங்களில் இருந்து மட்டும் பதில் வந்தது.
இரண்டு நாட்கள் கடந்ததும், மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் ஒருவர், ''சார், தெரெபி கொடுக்க ஆள் இருக்காங்க. பக்கத்து ஊர் தான், நான் சொல்லியிருக்கேன். இன்றைக்கு, உங்களை வந்து பார்ப்பாங்க,'' என்றாள்.
எதிர்பார்ப்புக்குப் பலன் கிடைத்தது.
வார்டுக்குள் வந்த இளைஞன், மருத்துவர் எழுதி வைத்த ஆலோசனைகளை படித்த பின், நடேசனை உட்கார வைக்க முயற்சித்தான். அவரும், நன்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
''சார், என் பெயர் அன்பு. பக்கத்து ஊரிலிருந்து வரேன். சீக்கிரம் சரி பண்ணிடலாம். எனக்கு நம்பிக்கை இருக்கு. தினமும் உங்க வீட்டுக்கு வந்து பயிற்சி தரேன். கவலைப் படாதீங்க,'' என்றான்.
மருத்துவ மனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' ஆகி, குணாவும், அன்பும், கைத்தாங்கலாக நடேசனை வீட்டுக்குள் அழைத்து வந்தனர்.
மலருக்கு செய்தி சொன்னான், குணா.
அலங்கோலமாய் கிடந்த வீட்டை சுத்தம் செய்து, சமையலறைக்கு சென்றாள், வேலைக்காரி.
தரைத்தள அறையில், நடேசனுக்கு பயிற்சி கொடுத்தான், அன்பு.
''தம்பி, சிறுநீர் கழிக்கணும்,'' என, நடேசன் சொன்னதும், குவளையை எடுத்து வந்து பிடித்து, கழிப்பறையில் கொட்டினான்.
'யாரு பெத்த பிள்ளையோ, இந்தளவுக்கு பணிவிடை செய்யுது. ஆண்களைப் பொறுத்தவரை, கட்டியவளுக்கு முன்னால போய் சேர்ந்திடணும் அல்லது குறைஞ்சது நாலைந்து பிள்ளைகளாவது இருக்கணும்...' என, முணுமுணுத்த நடேசனின் கண்கள், லேசாகக் கலங்கியது.
''சார், கவலையை விடுங்க. நேரம் கிடைக்கும்போது, முடிந்தளவு பயிற்சி பண்ணுங்க. நான் தினமும் மாலை நேரத்துல வந்து பார்க்கிறேன்,'' ஆலோசனை சொல்லி விடைபெற்றான், அன்பு.
அப்போது, வீட்டுக்குள் நுழைந்த மலர், ''என்னங்க, யாரது நம் வீட்டிலிருந்து ஒருத்தன் போறான்,'' என்றாள்.
''அப்பாவுக்கு, 'பிசியோ தெரபி' கொடுக்கிறவர், பேரு அன்பு. ரெண்டு மாசத்துக்கு, தினமும் சாயங்காலம் வந்து பயிற்சி கொடுப்பார்,'' என்றான், குணா.
''முன்ன பின்ன தெரியாத ஆளையெல்லாம் வீட்டுக்குள்ள விட்டீங்கன்னா எப்படி? என்னவோ பண்ணுங்க,'' வந்ததும் வராததுமாக, பிரச்னையைக் கிளப்பினாள், மலர்.
''நல்ல பையன். ஒரு பிரச்னையும் வராது. அப்பாவுக்கும், அவனைப் பிடிச்சிருக்கு,'' மனைவியை சமாதானப்படுத்தினான், குணா.
தினமும், தவறாமல் நடேசனுக்குப் பயிற்சி கொடுத்தான், அன்பு. சில நாட்களில், அவரிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
நாட்கள் விரைவாய் கடந்தன. யாருடைய உதவியும் இன்றி நன்றாக நடக்க ஆரம்பித்தார், நடேசன்.
''சார், உங்களால இப்போ நல்லாவே நடக்க முடியுது. இனி எந்தக் கவலையும் வேணாம். நாளையிலிருந்து போன்ல பேசறேன். ஏதாவது பிரச்னை இருந்தா மட்டும் சொல்லுங்க,'' என்றான், அன்பு.
''பயிற்சியை முடிச்சுட்டு பணத்தை வாங்கிக்கறேன்னு சொன்னியே, தம்பி. எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா,'' என்றான், குணா.
அப்போது, மலரின் அலறல் சத்தம் கேட்டு ஓடினான், குணா.
''என்னாச்சு, ஏன் பதற்றமா இருக்க?''
''அலமாரியில் வச்சிருந்த, 50 ஆயிரம் ரூபாயை காணும். எல்லா இடத்துலயும் தேடிட்டேன். புது ஆளுங்களை வீட்டுக்குள்ள விட வேணாம்ன்னு, படிச்சிப் படிச்சி சொன்னேன். கேட்டீங்களா?''
''மெதுவாப் பேசு. அப்படியெல்லாம், ஒருத்தரை சட்டுன்னு சந்தேகப்படக் கூடாது, மலர். பதற்றப்படாம தேடு,'' சொல்லிவிட்டு கூடத்துக்கு வந்தான், குணா.
ஏதும் புரியாமல், நடேசனும், அன்புவும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.
குணாவின் தோளில் தட்டி, ''நான் போய் பார்க்கிறேன், குணா. எனக்கும் பயிற்சி வேணும்ல,'' மெதுவாக நடந்தார், நடேசன்.
''அன்புவோட அப்பா சுந்தரம்,'' என்றார், வந்தவர்.
''அப்படியா... உள்ளே வாங்க,'' அழைத்தார், நடேசன்.
சற்று நேரம் அமைதியாய் இருந்த சுந்தரம், ''எப்படி சொல்றதுன்னு தெரியல. இவனை மன்னிச்சிடுங்க,'' என்றார்.
''என்ன, பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க. மன்னிக்கிற அளவுக்கு, அன்பு என்ன தப்பு செய்தான்?'' என்றார், நடேசன்.
'ஒரு வேளை மலர் சொல்வது உண்மையா இருக்குமோ...' அருகில் நின்று குழம்பினான், குணா.
தலைகுனிந்து நின்றிருந்தான், அன்பு.
''அன்பு இப்போ வேலையில் இருக்கறதே, நீங்க காட்டின கருணையால் தான், சார்,'' என்றார், சுந்தரம்.
''என்ன சார் சொல்றீங்க?''
''பிசியோ தெரெபிஸ்ட் வேலைக்கு தேர்வாகி இருந்தான். அப்போ தான், சாலையில் நடந்து சென்ற உங்களை இடிச்சுட்டு, பயத்துல, நிற்காம வீட்டுக்கு வந்து, நடந்ததைச் சொன்னான். நிதானமா யோசித்து, அவனை அழைச்சிக்கிட்டு போலீசுக்குப் போனேன்.
''அப்போ, 'பசங்க வாழ்க்கை பாதிக்கும். புகார் வேண்டாம்'ன்னு, நீங்க சொன்னதா, ஏட்டு சொன்னார். ஒரு வேளை, நீங்க மட்டும் போலீஸ்ல புகார் கொடுத்திருந்தா, அவனுக்கு இந்த வேலையே கிடைச்சிருக்காது,'' என்றார், சுந்தரம்.
''வேலையில் சேர்ந்த மறுநாள், மருத்துவமனைக்கு வந்து விசாரிச்சேன். அப்போதான், 'பிசியோதெரபி' பயிற்சி கொடுக்க ஆள் தேவைன்னு, நர்ஸ் மூலமா தெரிஞ்சுது. எதைப் பற்றியும் யோசிக்காமல், செய்த தவறுக்கு பிராயச்சித்தமா பயிற்சி கொடுக்க, கடவுள் போட்ட முடிச்சாக் கருதி, வார்டுக்கு வந்து பேசினேன்.
''மன்னிக்கிறது கடவுள் குணம். என்னை மன்னிச்சிடுங்க சார்,'' என சொல்லி காலில் விழுந்தான், அன்பு.
இவ்வளவு பரபரப்பிலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் கூடத்துக்கு வந்து, ''பணம் துணிக்கு அடியில் தான் இருக்கு. 50 ஆயிரமாச்சே, அதான் பதறிட்டேன்,'' என்று அலட்சியமாய் சொல்லி சென்றாள், மலர்.
அப்போது, குணாவுக்கு மொபைல்போனில் அழைப்பு வந்தது.
பேசி முடித்ததும், மலரிடம், ''உடனே, உன் வீட்டுக்குப் புறப்படு. உன் அம்மா, குளியலறையில் வழுக்கி விழுந்துட்டாங்களாம். மருத்துவமனைக்குப் போக, உதவிக்கு உன்னை வரச் சொல்றாங்க,'' என்றான், குணா.
''என்னடா, இவ்வளவு அலட்சியமா சொல்ற. அவங்க, உனக்கும் அம்மா தான். மலர், சின்னப் பொண்ணுடா, பாவம். நீயும் புறப்பட்டுப் போய், கூடவே இருந்து, என்ன ஏதுன்னு பாரு. பணம் தேவைப்பட்டா சொல்லு. என்னைப் பற்றிக் கவலைப்படாதே,'' என்றார், நடேசன்.
நடேசன் சொல்லச் சொல்ல, கண் கலங்கி, அவரைக் கடவுளாய் நினைத்து, கையெடுத்து வணங்கினாள், மலர்.
பி. பி. சாமி