டெலஸ்கோப் தயாரித்து, விண்வெளியை ஆராய்ந்து, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்று அறிந்தார், கலிலியோ. அவருக்கு முன், கோபர்னிகஸ் கண்டுபிடித்த உண்மை தான் அது. சர்ச்சுக்கும், போப்பாண்டவருக்கும் அந்த கருத்து பிடிக்கவில்லை. அதை, மத விரோதமான செயல் என்றனர்.
இந்த உண்மையை, இரண்டு பேர் விவாதிப்பது போல் வைத்து, ஒரு புத்தகம் எழுதினார், கலிலியோ. அந்த புத்தகத்தில், பூமி சுற்றவில்லை என்று வாதிடுகிறவர், பித்துக்குளித்தனமாகவும், அசடு போல பேசுவது போல் எழுதியிருந்தார். அந்த பாத்திரம் போப்பாண்டவரைத் தான் குறிக்கிறது என்று, பலர் கோள்மூட்டி விட்டனர்.
போப்பாண்டவரை உடனே சந்திக்கும்படி, கலிலியோவுக்கு சம்மன் போனது. கிழவரான கலிலியோ, போப்பாண்டவரின் கட்டளையை மீற முடியாமல், போனார். அங்கே, மண்டியிட்டு தலை குனிந்து, கோபர்னிகசின் கருத்து ரொம்ப தப்பு என்றும், இனி அதை பரப்பினால் தனக்கு தண்டனை கொடுக்கலாமென்றும், இப்போது மன்னிக்கும்படியும் ஒரு பத்திரம் வாசித்து, கையெழுத்து போட்டார்.
அங்கிருந்து திரும்பி வரும்போது, 'கையெழுத்து போட்டு விட்டேனே தவிர, பூமி என்னவோ சுற்றத்தான் செய்கிறது...' என்று ரகசியமாக முணுமுணுத்தாராம்.
***
மழையில் நனைந்தபடி, கல்லுாரிக்கு வந்தான், அந்த மாணவன். கையில் குடை இல்லை. அதை வாங்குகிற அளவுக்கு அவனிடம் வசதியும் இல்லை. இந்தியாவை வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம் அது.
கல்லுாரி முதல்வர் பில்டர்பெக் துரை, கண்டிப்பானவர்.
நனைந்த சட்டையை கழற்றி பிழிந்து உலர்த்தி விட்டு, சட்டை போடாமல் வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டார்.
'வகுப்பில், சட்டை போடாமல் வந்து உட்காருவது சரியில்லை. ஒழுங்கற்ற செயல். எனவே, உனக்கு, எட்டணா அபராதம் விதிக்கிறேன்...' என்றார், முதல்வர்.
'எட்டணா இருந்தால், ஒரு புது சட்டை வாங்கி விடுவேன்...' என, கண்ணில் நீர் பெருக சொன்னான், அந்த மாணவன்.
இந்த பதில், கல்லுாரி முதல்வரை என்னவோ செய்தது. சிறிது யோசனைக்கு பின், என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அந்த அபராத தொகையை அவரே கட்டினார். அதுமட்டுமல்ல, அந்த மாணவருக்கு புது சட்டையும் வாங்கிக் கொடுத்தார்.
அந்த மாணவர் பெயர், சீனிவாசன். பின்னாளில், 'வெள்ளி நாக்கு பேச்சாளர்' சீனிவாச சாஸ்திரி என்று, வெள்ளைக்காரர்களால் வியந்து போற்றப்பட்டவர்.
அவர், சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அக்கல்லுாரியின் முதல்வராக இருந்தவர், ஹால் துரை. அவர் ஏதோ ஒரு ஆங்கில வார்த்தையை உச்சரித்தார். அவர் உச்சரித்த விதம் தவறு என்றார், மாணவன் சீனிவாசன்.
முதல்வர் திகைத்தார்.
'நுாலகத்தில் இருக்கும் அகராதியை கொண்டு வாருங்கள்...' என்றார், முதல்வர்.
நான்கு டிக் ஷனரிகள் வந்து சேர்ந்தன. புரட்டி பார்த்தனர்.
மாணவன் சீனிவாசனின் உச்சரிப்பே சரி என்பது புரிந்தது.
அந்த சீனிவாசன், பிற்காலத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராகவும் ஆனார்.
***
எம்.ஆர்.ராதா, தன் நாடக நிகழ்ச்சிகளில் இடைவேளை விட மாட்டார்.
'இடைவேளை விடாமல் நாடகத்தை நடத்தினீர்களே ஏன்...' என்று அவரை கேட்டனர்.
'இடைவேளை விட்டால், என் நாடகத்தை பற்றிய கருத்துக்களை, கழிவறையில் பேசுவர். என்னை பற்றி பேசக் கூடிய இடமா அது... நாடகம் முடிந்ததும் தெருவெல்லாம் மக்கள் பேசி போவதையே நான் விரும்புகிறேன். அதனால் தான், 'இன்டர்வெல்' விடுவதில்லை...' என்றார், எம்.ஆர்.ராதா.
- நடுத்தெரு நாராயணன்