ஜூனியர் ரஜினியாக, சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடித்த, டான் படத்தை இயக்கியவர், சிபி சக்கரவர்த்தி. அதையடுத்து, ரஜினியை வைத்து இயக்குவதற்காக ஒரு, 'ஸ்கிரிப்ட்' தயார் செய்து வந்தார். ஆனால், அந்த கதையை கேட்ட ரஜினி, 'இந்த கதை, எனக்கு பொருத்தமாக இருக்காது. யாராவது இளவட்ட நடிகர்களை வைத்து பண்ணுங்கள்...' என்று, 'அட்வைஸ்' கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து, அந்த கதையை, சிவகார்த்திகேயனிடம் கூறி, ஓ.கே., வாங்கியுள்ள, சிபி சக்கரவர்த்தி, 'இந்த படத்தில், இளமைக்கால ரஜினி போன்று, சிவகார்த்திகேயனின், 'கெட் - அப்'பை மாற்றி, அவரை, ஜூனியர் ரஜினி போன்று திரையில் வெளிப்படுத்த தயாராகி வருகிறேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
வில்லி, 'ரூட்'டை தொடரும், வரலட்சுமி!
தமிழில் விஜய் நடித்த, சர்க்கார், விஷால் நடித்த, சண்டக்கோழி-2 போன்ற படங்களில், வில்லியாக நடித்த, வரலட்சுமி, தெலுங்கில், 'ஹீரோயின்' ஆக புதிய, 'ரூட்' போட, 'என்ட்ரி' கொடுத்தார். ஆனால், அங்கேயும், இவரை வில்லி நடிகையாக்கி விட்டனர்.
இதனால், வரலட்சுமியின், 'ஹீரோயின்' கனவு முற்றிலும் தகர்ந்து, மீண்டும் கோலிவுட்டில் முழு நேர வில்லியாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளார்.
'ரஜினி, விஜய், அஜித் துவங்கி அத்தனை, 'ஹீரோ'களுடனும், வில்லியாக மோதுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்...' என, கோலிவுட்டில், 'ஹாட் நியூஸ்' வெளியிட்டுள்ளார். — எலீசா
கதையின் நாயகியாக உருவெடுக்கும், ராஷ்மிகா!
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என, பல மொழிகளிலும் நடித்து, பான் இந்தியா நடிகை ஆகிவிட்ட, ராஷ்மிகா மந்தனாவிற்கு, ஹிந்தியில் நடித்த இரண்டு படங்களும் அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டன.
தற்போது தமிழில், ரெயின்போ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருபவருக்கு, ஹிந்தியிலும் ஒரு படத்தில், கதையின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என, நான்கு மொழிகளில் தயாராகிறது.
முன்னணி ஹீரோகளின் படங்களுக்கு இணையாக, அதிகப்படியான தியேட்டர்களில் இந்த படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர், தயாரிப்பாளர்கள். ராஷ்மிகா மந்தனா இதற்கு முன், 'டூயட்' பாடிய ஹீரோகளின் படங்களுடன், இவர் படங்களும் தியேட்டர்களில் எதிரும் புதிருமாக போட்டி போட தயாராகி வருகின்றன.
— எலீசா
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய்!
அஜித் நடித்த, மங்காத்தா படத்தை இயக்கிய, வெங்கட் பிரபு, அந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை தயார் செய்து, அவரிடத்தில், 'கால்ஷீட்' கேட்டார். ஆனால், அந்த கதையில், அஜீத்துக்கு பெரிதாக திருப்தி ஏற்படாததால், தொடர்ந்து பிடி கொடுக்காமல் இருந்தார்.
இந்நிலையில், அவருக்காக தயார் செய்த கதையில், சில திருத்தங்களை செய்து, விஜயிடத்தில் சொல்லி, ஓ.கே., பண்ணி விட்டார்.
அந்த வகையில், விஜயின், 68வது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும், வெங்கட் பிரபு, 'அஜித்தை வைத்து, நான் இயக்கிய, மங்காத்தா படம் பாணியில், அதிரடியான, 'ஆக் ஷன்' படமாக இதுவும் இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு, மாறுபட்ட, 'ஆக் ஷன்' தீனி போடுவதற்கு, தயாராகிக் கொண்டிருக்கிறேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
பீட்சா நடிகரை, ஏற்கனவே பல நடிகையர் துரத்தி வந்த நிலையில், தற்போது, தன மார்க்கெட் பாலிவுட் வரை விரிவடைந்ததை அடுத்து, கோலிவுட் அம்மணிகளை கழட்டி விட்டுள்ளார். இருப்பினும், சமீபத்தில் அவருடன் இணைந்து நடித்த, சில இளம் நடிகையர், அவரை விடாமல் துரத்தி வருகின்றனர்.
உலக நடிகரின் படத்தில், வில்லனாக நடித்த பீட்சா நடிகருக்கு ஜோடியாக நடித்த, மூன்றெழுத்து நடிகை, தற்போது, அவரை உடும்புபிடியாக பிடித்திருப்பதோடு, தனக்கு பாலிவுட்டிலும், சிபாரிசு செய்யுமாறுனா துரத்தி வருகிறார்.
அதற்காக, அடிக்கடி மும்பைக்கு, 'விசிட்' அடித்து, சில நாட்கள் அங்கு முகாமிட்டு, அவர் கை காட்டும் இயக்குனர்களை சந்தித்து, 'மிட்நைட் பார்ட்டி'களில் அங்கம் வகித்து, அஸ்திவாரத்தை அழுத்தமாக போட்டு வருகிறார், மூன்றெழுத்து நடிகை.
இதையடுத்து, 'மேற்படி நடிகை, கூடிய சீக்கிரமே பாலிவுட்டில் கனவு கன்னியாகி விடுவார்' என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.
சினி துளிகள்!
* விக்ரம் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த, ஷிவானி, 'நடித்தால், 'ஹீரோயின்' ஆக மட்டுமே நடிப்பேன். சிறிய வேடங்களில் நடிக்க மாட்டேன்...' என்று தன்னை தேடி வந்த பல வாய்ப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார்.
அவ்ளோதான்!