தற்போதைய இட நெருக்கடியான நகர வாழ்க்கை முறையில் தோட்டம் வைக்க வாய்ப்பே இல்லை என தயங்குபவர்களுக்காக, சின்ன சின்ன உத்திகள் மற்றும் வழிமுறைகள் வாரா வாரம் உங்களுக்காக...
முதலில், துளசி செடியில் ஆரம்பிப்போமா!
வாசனை, தெய்வீக குணம் மற்றும் நல்ல அதிர்வலைகளை உண்டாக்கும் துளசியை, ஒரு சின்ன மண் தொட்டி, துளசி மாடம், உடைந்த பாத்திரம் என, ஏதாவது ஒன்றில் வளர்க்கலாம்.
தொட்டி தயார். அதற்கான மண்? ரொம்பவே எளிதாய் கிடைக்கக்கூடிய தோட்ட மண், களிமண், செம்மண் கலவை போதுமானது. கொஞ்சம் காய்ந்த சாணம் சேர்ப்பது கூடுதல் சிறப்பு.
செடி, செழிப்பாய் வளர, அதன் பூக்களை நறுக்கி விடவும். விதைகள் வேண்டும் என்றால் மட்டுமே, துளசி பூக்களை செடியிலேயே விட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் வேப்ப எண்ணெய் கலந்து, செடி முழுவதும், 'ஸ்பிரே' செய்து விட்டால், பூச்சி தொல்லை இராது.
துளசி செடி, புதர் போல் வளர்ந்து விட்டால், அதன் இலைகளை மற்ற செடிகளுக்கு உரமாய் பயன்படுத்தலாம். 50 கிராம் துளசி இலைகளை, மூன்று லிட்டர் நீரில் ஒருநாள் ஊற வைத்து, மறுநாள் இலைகளை அரைத்து, அதே நீரில் கலந்து வடிகட்டி, பிற செடிகளுக்கு தெளித்து வந்தால், பூச்சி தொல்லை இருக்காது.
துளசியில், 100 தனித்துவமான வகைகள் உண்டு.
பொதுவாக நமக்குத் தெரிந்தது, வெண் துளசி மற்றும் கருந்துளசி மட்டும் தான். இதில் ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, கல் துளசி, நல் துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள் துளசி, கற்பூர துளசி, கபூர் துளசி மற்றும் வன துளசி என, பல வகைகள் இருக்கின்றன. கிருஷ்ண துளசி, ஊதா இலைகளைக் கொண்டிருக்கும். இது, கோவில்களில் அதிகம் காணப்படும்.
துளசி மருந்தாக மட்டும் பயன் படுவதில்லை. சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.
வீட்டு வாசலில், மாடியில், பால்கனியில் துளசி செடியை வளர்த்தால், புகை மற்றும் நச்சுக்காற்றிலுள்ள கார்பன்டை ஆக்சைடை தான் எடுத்து, ஆக்சிஜனை வெளியேற்றும் வேலையை செய்கிறது.
குப்பைத் தொட்டிக்கு அருகில், கற்றாழை மற்றும் முள் செடிகளுக்கு அருகில், துளசியை வளர்க்கக் கூடாது.
* தினமும், 10 துளசி இலைகளை மென்று முழுங்கினால், ரத்தம் சுத்தமாகும். மார்பு வலி, வயிற்று வலி சரியாகும்
* ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சில துளசி இலைகளை போட்டு, எட்டு மணி நேரம் ஊற வைத்து, அந்த நீரை பருகினால், எந்த நோயுமே வராது
* துளசி இலையை கைகளால் கசக்கி சாறு எடுத்து தேன், இஞ்சி சாறு கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க, நாள்பட்ட இருமல், சளி சரியாகிவிடும்
* துளசி இலையை மைப்போல் அரைத்து, எலுமிச்சை சாறு கலந்து சொரி, சிரங்கு, படை மீது பூச குணமாகும்
* செரிமான பிரச்னை, மன அழுத்தம், துாக்கமின்மை, நீரிழிவு நோய், பசியின்மை, உடல் எடை போன்ற பிரச்னைகளுக்கு, தண்ணீரில், தேன் மற்றும் துளசி விதைகளை கலந்து குடிக்க வேண்டும்
* துளசி செடியை வீட்டில் வடக்கு அல்லது வட கிழக்கு திசையில் வளர்ப்பது நல்லது. இது மூட நம்பிக்கையோ, வாஸ்தோ அல்ல. வடக்கிலிருந்து வீசும் காற்றில் அதிகமுள்ள கார்பன்டை ஆக்சைடை, ஆக்சிஜனாய் மாற்றுவதற்காகத்தான்
* துளசி செடிக்கு சூரிய வெளிச்சமும், கொஞ்சம் நிழலும் தேவைப்படுவதால், வெளியில் வைத்துதான் வளர்க்க வேண்டும்
* எப்போதும் செடியின் மண் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். துளசி செடி வாடி, காய்ந்து வீணாகி விட்டால், நமக்கு வந்த ஏதோ ஒரு தீயதை, அது உள்வாங்கி, மடிந்து விட்டதாய் பெரியவர்கள் சொல்வர்
* துளசியை விதைப்பதற்கோ அல்லது செடியாய் நடுவதற்கோ வியாழக்கிழமை உகந்தது
* தினமும், காலை - மாலை வேளையில், துளசி செடிக்கு அருகில் தீபம் ஏற்றி வைத்தால், லஷ்மியின் அருள் கிடைக்கும்
* துளசி மணி மாலை, துளசி செடியின் அடிபாகத்திலிருந்து எடுக்கப்படும் கட்டையிலிருந்து செய்யப்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
துளசி செடியுடன் கற்பூரவள்ளி செடியையும் சேர்த்து வளர்ப்பது நல்லது மட்டுமின்றி, இரட்டிப்பு பலன்களையும் பெற முடியும். எப்படி?
- வளரும்- ம. வான்மதி