அன்பு சகோதரிக்கு —
என் வயது: 45. திருமணமாகி, 25 ஆண்டுகள் கடந்து விட்டன. திருமண வயதில் இரு மகள்களும், கல்லுாரியில் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். சொந்த பிசினஸ் செய்கிறார், கணவர். வயது: 50.
பள்ளி இறுதி படிப்போடு என்னை நிறுத்தி விட்டார், அப்பா. படிப்பில் ஆர்வம் இருந்தும், அப்பாவை மீறி எதுவும் செய்ய இயலவில்லை. மகள்கள் இருவரும் பட்டப் படிப்பு படித்துள்ளனர்.
என் மகன் கல்லுாரியில் சேர்ந்தபோது, என் படிப்பு ஆர்வம் மீண்டும் தலை துாக்கியது. என் விருப்பத்தை, குடும்பத்தினர் யாரும் புரிந்து கொள்ளாமல், கேலி செய்தனர். அஞ்சல் வழி கல்வியிலாவது பட்டப் படிப்பு படிக்கட்டுமா என்று கேட்டால், 'மருமகன் வரப்போகும் நேரத்தில், எதற்கு இந்த வீண் வேலை...' என்கிறார், கணவர்.
'இந்த வயதில் என்ன படிப்பு வேண்டியிருக்கிறது...' என்று என்னை நானே கேட்டுக் கொண்டாலும், மகன் மற்றும் அவனது வயதொத்தவர்கள் படிப்பதை பார்க்கும் போதெல்லாம், எப்படியாவது படித்தே ஆகவேண்டும் என்ற வேகம் எழுகிறது.
ஆனால், வீட்டினர் எதிர்ப்பால், வருத்தம் ஏற்படுகிறது.
என் கடமைகளை எல்லாம் முடித்த பின்தானே, படிக்க விரும்புகிறேன். நான் படித்து, வேலைக்கா போகப் போகிறேன். நான் படிப்பதால், யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப்போகிறது.
எதற்காக, என் ஆசையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியமும் ஏற்படுகிறது.
என் ஆசையில் தவறு உள்ளதா. எனக்கு நல்ல ஆலோசனை கூறுவீர்களா சகோதரி.
— இப்படிக்கு,உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
ஒருவர் பெற்ற கல்வி, பணிக்கு செல்ல, ஏற்கனவே பணியில் இருப்பவர் உயர் பதவி பெற உதவுவதுடன், நின்று விடுவதில்லை.
பெண்களுக்கு தலைமைப் பண்பை, ஆண்கள் நிர்வாகத்தை, குடும்ப நிதி நிர்வாகத்தை, குழந்தை வளர்ப்பை, ஆண்-, பெண் உறவு சிக்கல்கள் களைய தேவையான அறிவை அள்ளித் தருகிறது, கல்வி. பெண்கள் சொந்தக்காலில் நிற்கவும், சுய அடையாளம் பெறவும், கல்வி உதவுகிறது.
கல்வி கற்க கணவரிடமோ, மகன் - மகளிடமோ அனுமதி கேட்க தேவையில்லை. கல்வி கற்பது உன் பிறப்புரிமை, சகோதரி.
தமிழகத்தில் தொலைதுார கல்வி கற்றுத்தரும் பல்கலைக்கழகங்கள் நிறைய உள்ளன. அதில் சேர்ந்து படிக்கலாம்.
கையில் சேமிப்பு வைத்திருப்பாய் அல்லவா? அதை படிப்புக்காக செலவழி.
பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகரித்த, 40 வகை பட்டபடிப்புகளில் ஒன்றை தேர்ந்தெடு. நீ எந்த பல்கலையில் சேர்வதானாலும், அதன் தொலைதுார பட்டபடிப்புகள், பல்கலை மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என பார்.
நீ சேரும் பட்டபடிப்பு படித்து முடிக்க, ஆகும் மொத்த செலவை கணக்கிடு. பாடத்திட்டம் தரமாய் உள்ளதா என கவனி. தொலைதுார கல்வி இயக்ககங்களில் எது மாணவருக்கு சாதகமான அம்சங்களை கொண்டிருக்கிறது என, ஒப்பிடு.
சகோதரி... செமினார் வகுப்புகளுக்கு உன்னை விட, 20 வயது குறைந்த மாணவ - மாணவியருடன் செல்ல வேண்டும். கல்வி தனிப்பட்ட யாருக்கும் ஏக போக உரியமையானதல்ல. அது மனித குலத்தின் பொது சொத்து என்ற ஞானம் உனக்கு பிறக்கும்.
உன்னை குறைவாய் மதிப்பிட்ட குடும்ப அங்கத்தினர்களும், உறவுகளும், நட்புகளும் உண்மையான மதிப்பை உணர்வர்.
ஊமைத்துாக்கத்துக்கு ஓலை வாங்கும் கடைசி நொடி வரை, கல்வி கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்ற கல்வியை எளிமையாக, இளைய தலைமுறைக்கு ஊட்டிவிடுவது நம் கடமை.
கேலி, எதிர்ப்பு இவற்றை உன் கல்வி முன்னேற்றத்துக்கான எரிபொருளாக மாற்று. இளங்கலை, முதுகலை, இளம்முனைவர், முதுநிலை முனைவர் பட்டம் வரை தொடர்ந்து படி. உன்னுடன் தொலைதுார கல்வி இயக்ககத்தில் படிக்கும் மாணவியருடன் தோழியாகி, சந்தேகங்களை தீர்த்துக் கொள்.
கற்ற கல்வியை பயன்படுத்த விரும்பினால், படிப்புகளை முடித்து விட்டு, டியூஷன் எடுக்கலாம்.
எவரெஸ்ட் தொட்டு விடும் துாரம் தான் சகோதரி!
— என்றென்றும் பாசத்துடன் சகுந்தலா கோபிநாத்