உலக மசாலா தினம், 2015ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. உணவுகளில் நிறம், மணம், சுவைக்காகவே, மசாலாக்கள் பயன்படுத்தப்படுவதாக நினைக்கிறோம். ஆனால், மசாலாக்களுக்கும், உடல் நலன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாக்கள், 13 சதவீதம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, 20 சதவீதம் சர்க்கரை அளவை குறைப்பதாக கூறுகின்றனர், அமெரிக்காவின் பென்ஸ்டேட் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள்.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் அசைவ உணவுகளின் பாதிப்பை குறைப்பதற்காகவே, அதில் பட்டை, லவங்கம் சேர்க்கப்படுவதாக கூறுகின்றனர், மைசூர் உணவு தொழில்நுட்ப மைய ஆய்வாளர்கள்.
ஒருவர் நலமுடன் வாழ, நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு குடல் நலமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மசாலாக்களில் இஞ்சி, செரிமானத்துக்கு உதவும் முக்கியமான திரவங்களை ஊக்குவிக்கும். இதிலுள்ள ஜிஞ்சரால் எனும் எண்ணெய், வயிற்றில் உணவை கரைக்கும் போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல் மற்றும் உணவு குழாயில் தேங்க விடாமல் வெளியேற்றுகிறது.
லவங்கத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் செரிமானத்துக்கு உதவுகிறது. அதோடு செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவை கட்டுப்படுத்தி, வாந்தி மற்றும் குமட்டல் வராமல் தடுக்கிறது. வயிற்று கோளாறுகளுக்கு லவங்கம் ஒரு நிவாரண பொருளாக செயல்படுகிறது; காரணம், அதிலுள்ள யூஜினோல் அமிலம்.
சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள், இரைப்பை ஒவ்வாமையை குணமாக்கும். அதோடு, நுண் தொற்றுகளிடமிருந்து இரைப்பையின் உட்பகுதியை பாதுகாக்கிறது. மேலும், நாள்பட்ட செரிமான பிரச்னைகளால் மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது. ஜீரணத்திற்கு உதவுவதிலும், நம் உடலமைப்பிலிருந்து தேவையற்ற நச்சுக்களை அகற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, சீரகம்.
ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்த மிளகு, ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும், குடல் மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சோம்பு குளிர்ந்த மற்றும் இனிப்பு பண்புகள் கொண்டது. இவை நொதிகளை செயல்படுத்துவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இதனால், உணவுக்கு பின் பொதுவாக சோம்பை கொறிப்பது வழக்கமாக உள்ளது.
கறி மசாலாவோடும், தாம்பூலத்தோடும் ஜாதிக்காய் சேர்ப்பது வழக்கம். காரணம், இது வாயு, வயிற்று பொருமல் மற்றும் வயிற்று வலியை சரி செய்கிறது. அஜீரணத்தையும், உடலில் சேரும் நச்சுக்களையும் அகற்றும்.
கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவை, பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டவை. இந்த மசாலா பொருட்களை உணவில் தாராளமாக சேர்த்து கொள்பவர்கள், சாதாரண உணவு உண்பவர்களை விட, அதிக நாட்கள் உயிர் வாழ்வதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மசாலா பொருட்கள் உடலுக்கு நல்லது தான். இருப்பினும், அதையும் அளவாகத்தான் பயன்படுத்த வேண்டும்.
கோவீ. ராஜேந்திரன்