பூங்குழலி! - சரண்யா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2011
00:00

ஆலமரத்தடியை அடைய வெகு நேரம் பிடித்தது பேரறிவாளனுக்கு. காட்டுப் பாதை மாறி விட்டது. வேறு ஏதோ பாதையில் நுழைந்துவிட்டான். ""பேரறிவாளா! இது, மேக நாட்டிலிருந்து வெளியே அடுத்த நாட்டுக்குச் செல்லும் பாதை. இப்படி போகாதே! வலதுபக்கம் திரும்பி நடந்து சிறிது தூரம் சென்றபின், மறுபடியும் வலதுபக்கம் திரும்பி அதில் சென்று இடதுபக்கம் திரும்பு. அங்கு ஒரு பலாமரம் இருக்கும். அதில் நிறைய பலாப்பழங்கள் காய்த்திருக்கும். அந்த பாதையில் போ...
""மின்னல்புரி நகரின் வெளியே இருக்கும் பெரிய மைதானத்திலுள்ள ஆலமரத்தை அடையலாம். அங்குதான் பூங்குழலி கிளியாக இருக்கிறாள். அவள் எங்கும் சென்றுவிடாதிருக்க, பல நூறு கிளிகள் ஒரு படையாக அவளுக்கு காவல் வைத்திருக்கிறேன்!'' என்றது புழு.
அது சொன்னபடி நடந்தான் பேரறிவாளன். பலாமரம் வந்தது. அதன் வேரில் பெரிய பெரிய வேர் பலாக்கள் காய்த்திருந்தன. பழத்தின் வாசம் காற்றில் மிதந்து வந்தது. அதன் இனிமை நிறைந்த மஞ்சள் வண்ண சுளைகள், எவ்வளவு பத்திரமாக மேலே முள்ளும் உள்ளே சுளையுமாக வைக்கப்பட்டிருக்கின்றன என்று வியந்தபடி நடந்தான் அவன்.
மின்னல்புரி நகரின் வெளியே உள்ள பெரிய மைதானத்தை அடைந்தவுடன், ஆல மரத்திலுள்ள கிளிகள் எல்லாம், "கீ, கீ...' என்று கூவுவதும், சிறகடித்து அங்குமிங்கும் பறப்பதும் தெரிந்தது.
ஆலமரத்தினடியில், சுமைதாங்கி கல்லின் மேல் சாய்ந்து அழுத கண்களுடன் ஆல மரத்தை அண்ணாந்து பார்த்தபடி கவலையுடன் இருக்கும் புலந்திரன், பேரறிவாளன் வருதை பார்த்ததும், ""பேரறிவாளா!'' என்றழைத்தபடி ஓடிவந்தான்.
""போன காரியம் என்னவாயிற்று பேரறிவாளா? பூங்குழலியை கிளியாக மாற்றிய மந்திரவாதியைக் கண்டாயா? தனியாக வந்திருக்கிறாயே! அவளை அழைத்து வரவில்லையா? பூங்குழலி மீண்டும் பெண் வடிவம் பெறுவாளா? அவளை நான் பார்ப்பேனா?'' என்று புலம்பினான் புலந்திரன்.
""கவலைப்படாதே புலந்திரா! பூங்குழலி மறுபடியும் பெண் வடிவம் எடுத்து நம்மிடம் வருவாள்? அவளை கிளியாக மாற்றிய மந்திரவாதி, காலக் கொடுமையால், இதோ என் கையிலுள்ள இலைப் பெட்டியில் ஒரு புழுவாக இருக்கிறான். முதலில் இவனை மனிதனாக மாற்ற வேண்டும்!'' என்ற பேரறிவாளன், காட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் ஒன்றுவிடாமல் கூறினான்.
""இந்தப் புழுவை மனித உடலில் கூடுவிட்டு கூடுப்பாயச் செய்ய, அப்போதுதான் இறந்த ஒரு மனிதனின் உடம்பு வேண்டுமென்றாயே புலந்திரா. என் பூங்குழலி மீண்டும் பெண் உருவம் அடைய, நான் இறக்கவும், என் உடலை மந்திரவாதி கூடுவிட்டு கூடுபாயவும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்!'' என்றான் புலந்திரன் உடைவாளை உருவியபடி.
"நானும், நீயும் திருமணம் செய்துகொண்டு கணவன் - மனைவியாக சேர்ந்து வாழ வேண்டும்!' என்று சொல்வதுபோல், பூங்குழலி கிளி பறந்து வந்து புலந்திரனை சுற்றி சுற்றி வந்து, அவன் உடைவாளின் மீது வைத்திருந்த கையை, "எடு, எடு...' என்பது போல குத்திற்று.
""புலந்திரா! அவசரப்படாதே... கிளியை பூங்குழலியாக்க சரியான மார்க்கத்தோடு தான் வந்திருக்கிறேன். முதலில் பூங்குழலி கிளியாக இருக்கிறாள் என்பதும், அவள் இன்னும் சிறிது நேரத்தில் பூங்குழலியாக மாறப் போகிறாள் என்பதையும், அரசர், மகாராணி ஆகியோருக்கு தெரிவித்து, அவர்களை இங்கு வரச் செய்ய வேண்டும்!'' என்றான் பேரறிவாளன்.
""நான் போய் அரண்மனையில் தெரிவிக்கிறேன்!'' என்று கூறியபடி அரண்மனை நோக்கி ஓடிச் சென்றான்.
காவலர்கள் தடுத்து நிறுத்தியும், அவர்களையும் தள்ளிக்கொண்டு அரண்மனையினுள் நுழைந்துவிட்ட புலந்திரன், கண்ணீரை பெருக்கியபடி, அன்ன ஆகாரம் உட்கொள்ளாமல் சோகமாக உட்கார்ந்திருக்கும் அரசர் அமரசிம்மனிடமும், மகாராணி மாணிக்கவல்லியிடமும் எல்லாவற்றையும் கூறினான்.
அரசர், அரசி இருவரது கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் பெருகிற்று.
""என்ன சொல்கிறாய் இளைஞனே? எங்கள் மகள் பூங்குழலி ஒரு கிளியாக இருக்கிறாளா? அவள் இன்னும் சற்று நேரத்தில் பூங்குழலியாக பெண் உருவம் அடையப் போகிறாளா? எங்களால் எதையும் நம்பவே முடியவில்லையே... எதையும் கண்ணால் காண வேண்டும். நாங்கள் இதோ உன்னுடன் வருகிறோம். அந்த அற்புதம் நடக்கப்போகிற இடத்துக்கு எங்களை அழைத்துச் செல் இளைஞனே!'' என்று அரசரும், மகாராணியும் உடனே கிளம்பினர்.
ரதம் வந்து அரண்மனை வாயிலில் நின்றது. அவர்கள் அதில் ஏறிக் கொண்டனர். புலந்திரனையும் ஏற்றிக் கொண்டனர். ரதம் வில்லிலிருந்து செலுத்திய அம்பு வேகமாக இலக்கு நோக்கி செல்வது போல, ஊருக்கு வெளியே இருந்த மைதானத்தை நோக்கி விரைந்தது.
அதற்குள், அரசப்பிரதானிகளுக்கும், அரண்மனை ஊழியர்களுக்கும், மக்களுக்கும் செய்தி பரவிவிடவே, அவர்களும் ஊரின் நான்கு புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக மைதானத்தை நோக்கி ஓடினர்.
அரசரும், அரசியும் ரதத்தை விட்டிறங்கியதும், பூங்குழலி கிளி அவர்கள் அருகில் பறந்து வந்து அவர்களை சுற்றிச் சுற்றி வந்தது. அவர்கள் அதை கையில் பிடித்துக் கொள்ள முயன்றபோது, அது படபடவென சிறகை அடித்துக்கொண்டு அவர்கள் கைகளுக்குள் கட்டுண்டு கிடந்தது.
""அரசே! பூங்குழலியை கண்டுபிடித்து கொடுப்பவர் யாராக இருந்தாலும், அவருக்கு பூங்குழலியை திருமணம் செய்து வைப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தீர்கள் அல்லவா?'' என்று கேட்டான் பேரறிவாளன்.
""யார் பேரறிவாளா? அமைச்சர் அறிவுமதியின் குமாரனா? ஆம் பேரறிவாளா... அப்படி ஒரு அறிவிப்பை நான் நாடறிய அறிவித்துள்ளேன். அதன்படியே நடந்து கொள்வேன். இது சத்தியம்!'' என்றார் அரசர் அமரசிம்மன்.
""பூங்குழலி கிளியாக மாற்றப்பட்டிருக்கிறாள் என்பதையும், என்ன செய்தால் அவள் மீண்டும் பெண் உருவம் பெறுவாள் என்பதையும் அறிந்து வந்திருக்கிறேன் அரசே... பூங்குழலியை நான் மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால் அல்ல. அவளும், அவளை நேசிக்கும் இந்த புலந்திரனும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில். இப்போது நடக்கப் போகிற நிகழ்ச்சியின் முடிவில் நான் இருக்க மாட்டேன். புலந்திரனும், பூங்குழலியும் மட்டுமே எஞ்சி இருப்பர். அவர்களுக்கு தாங்கள் விவாகம் செய்து வைக்க வேண்டும் அரசே... இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவீர்களா அரசே?'' என்றான் பேரறிவாளன்.
""நிச்சயம் நிறைவேற்றுவேன் பேரறிவாளா! நண்பனின் நல்வாழ்வுக்காக நீ பட்ட சிரமங்களுக்கு பிரதியுபகாரமாகவும், என் மகள் பூங்குழலி எனக்கு மறுபடியும் பெண் வடிவில் கிடைத்து விட்டாள் என்ற மகிழ்ச்சியில் ஏற்படும் நன்றி உணர்வாலும், புலந்திரனுக்கும், பூங்குழலிக்கும் திருமணம் செய்து வைப்பேன் பேரறிவாளா!'' என்றார் அரசர் அமரசிம்மன்.
""அதுதான் எங்கள் விருப்பமும் கூட பேரறிவாளா!'' என்றார் மகாராணி மாணிக்கவல்லியும்.
இலைப் பெட்டியை திறந்தான் பேரறிவாளன். அதனுள்ளிருந்து மந்திரவாதி புழு வெளியில் வந்தது.
""ஏ மந்திரவாதிப் புழுவே! நீ கூடுவிட்டு கூடு பாய உனக்கு ஒரு உடம்பு கிடைத்ததும், கிளியாக இருக்கும் பூங்குழலியை பெண் உருவமடைய செய்து விடுவாயல்லவா?'' என்று புழுவிடம் கேட்டான் பேரறிவாளன்.
""எவ்வளவோ தீமைகள் செய்துவிட்ட எனக்கு, ஒரு நன்மை செய்ய நல்ல வாய்ப்பு உன் மூலம் எனக்கு கிடைத்திருக்கிறது பேரறிவாளா? நிச்சயம் பூங்குழலி கிளியை பெண் வடிவமாக மாற்றுவேன்!'' என்று சத்தியம் செய்வது போல, தலையை இலைப் பெட்டியின் மீது மூன்று முறை அடித்துக் கூறியது புழு.
அவ்வளவுதான்.
தன் இடுப்பிலிருந்து குத்து வாளை உருவி, தன் வயிற்றில் ஆழமாக குத்திக் கொண்டான் பேரறிவாளன். அடுத்த கணமே, உயிரற்ற சடலமாக கீழே சாய்ந்தான் அவன். பேரறிவாளனின் உயிரற்ற சடலத்தின் மேல் பாய்ந்து போய் விழுந்தது புழு.
அடுத்த கணம், பேரறிவாளனின் சடலம் உயிர்பெற்று எழுந்தது. பூங்குழலி கிளியைப் பார்த்து ஏதோ மந்திர உச்சாடனம் செய்தது.
பூங்குழலி கிளியை சுற்றி ஒரு ஒளி பரவ பரவ, கிளி மறைந்து பூங்குழலி தோன்றினாள்.
""சொன்னபடி இப்போதே புலந்திரனையும், பூங்குழலியையும் சேர்த்து வையுங்கள் அரசே!'' என்றான் பேரறிவாளனின் உடலில் புகுந்திருந்த மந்திரவாதி.
""இதோ!'' என்றபடி, புலந்திரன், பூங்கொடி கைகளை பிடித்து சேர்த்து வைத்தனர், அரசர் அமரசிம்மனும், மகாராணி மாணிக்கவல்லியும். மக்கள், மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரித்தனர்.
""தீமையே செய்து வந்த அமைச்சரை தீர்த்துகட்ட நான் செல்கிறேன்!'' என்று சொன்னபடி, வானில் சீறிச் சென்றான் பேரறிவாளன் உடலில் புகுந்திருந்த மந்திரவாதி.
மற்ற கிளிகள் எல்லாம், நாலா திசைகளிலும் பறந்து சென்றன.
(முற்றும்)

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நித்யா.கே - சென்னை,இந்தியா
05-ஆக-201110:29:10 IST Report Abuse
நித்யா.கே its intresting story i like it very much.very very intresting ending part.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X