பிள்ளை பாசம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2011
00:00

சந்தனபுரி நாடு ஆற்றுவளம், ஊற்றுவளம், கடல்வளம், காட்டு வளம், மண்வளம், பொன்வளம், மனிதவளம் என்று எல்லா வளங்களைப் பெற்று வீரமும் ஈரமும் தீரமும் கொண்டு திகழ்ந்தது.மன்னன் சிங்கராயனுக்கு ஐந்து புதல்வர்கள். அவர் தன் புதல்வர்கள் ஐவரின் மீதும் ஒரே மாதிரியான அன்பும், பாசமும் வைத்திருந்தான். ஒருவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அதே கவலையில் அவரும் படுத்துக் கொள்வார். ஒருவன் உண்ணவில்லை என அறிந்தால், அவரும் உண்ணும் வரைக்கும் இவர் பட்டினி கிடப்பார்.
"எனக்குப் பஞ்சபாண்டவர்களே மகன்களாகப் பிறந்திருக்கும் போது எனக்கென்ன கவலை?' என மார்தட்டிக் கொள்வார். ஐந்து புதல்வர்களும் இந்த அவனியை ஆள்வதைக் கற்பனை செய்து பார்த்து மகிழ்ச்சி அடைவார். என் எதிரிகள் எல்லாரும் இனிமேல் பஞ்சு பஞ்சாய்ப் போவார்கள் எனப் பூரிப்பில் மிதந்தான்.
இவர் நினைத்தது போல் எதிரிகள் யாரும் பஞ்சு பஞ்சாய்ப் போகவில்லை. இவர்தான் பஞ்சு பஞ்சாய்ப் போனார்.
பஞ்ச பாண்டவர்கள் பஞ்சமா பாதகர்கள் ஆனார்கள். பிள்ளைகளாய்ப் பிறந்தவர்கள் தொல்லைகளாய் நின்றனர். ஐந்து புதல்வர்களுக்குள்ளும் ஒற்றுமை என்பது இம்மியும் இருந்ததில்லை. ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதையே அன்றாடப் பொழுது போக்காக்கிக் கொண்டிருந்தனர். சின்ன வயசிலிருந்தே அவர்களுக்கு இப்படியொரு பழக்கம். "சின்ன வயதுதானே? போகப் போக எல்லாம் சரியாகிவிடும்!' என அரசன் எண்ணியிருந்தான்.
நாளுக்கு நாள் வளர்ந்ததே தவிர அவர் நினைத்து போல் சரியாகவில்லை. அவரால் சரிப்படுத்தவும் முடியவில்லை. அவர்கள் போட்டுக் கொள்ளும் சண்டைக்கு ஏதாவது ஓர் அற்பக் காரணம் கூட இருக்காது. காரணமின்றியே மோதிக் கொள்வர். ரத்தக்காயத்தோடு நிற்பர்.
அரசன் என்ற அப்பன் சொல்லையும் கேட்பதில்லை. அரசி என்ற அம்மா சொல்லையும் கேட்பதில்லை. அமைச்சர் சொல்லையும் கேட்பதில்லை. அந்தப்புர உறவினர் சொல்லையும் கேட்பதில்லை. அரண்மனைக் குரு ஆளவந்தார். மிகச் சிறந்த ஞானி. அவர் சொல்லுக்கு அடுத்த சொல் இல்லை என அந்த நாடே புகழும். அப்பேர்ப்பட்ட ஆளவந்தாரே பேசிப்பார்த்தார். ஒருமுறை அல்ல; பல முறை. ஐம் புலன்களையும் அடக்கிய அவரால் இந்த ஐவரையும் அடக்க முடியாமல் திண்டாடிப் போனார்; திருதிருவென விழிக்கலானார். முடிவில்... முதலைகளைப் போலப் பிடித்த பிடியை விடாதிருக்கும் இவர்களைத் திருத்த அந்த ஆண்டவனால் கூட இயலாது, என்று இடத்தைக் காலி செய்துவிட்டு மீண்டும் இமயத்திற்கே சென்று விட்டார்.
இந்தக் கவலையிலேயே கருங்கல் போல இருந்த மன்னன், படுத்த படுக்கையானார். அரண்மனை மருத்துவருக்கு மட்டுமில்லை. அந்தப்புரத்தில் உள்ள அனைவருக்குமே இது தெரிந்த உண்மையாகிவிட்டது. சோதிடன் வரவழைக்கப்பட்டான்.
""மன்னனுக்கு ஒரு பெரிய கண்டம் . இன்னும் இரண்டு திங்கள்வரை அந்தக் கண்டம் நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன்பிறகுதான் அரசனின் ஆயுள் கணக்கை உறுதியாய்க் கூற முடியும்.'' என்றார்.
"தந்தை நோய்வாய்ப்பட்டிருக்கிறாரே?' என்ற கவலை அந்த ஐந்து பிள்ளைகளில் எந்தப் பிள்ளைக்குமே இல்லை. மாறாக மகிழ்ச்சியே இருந்தது.
கிழவன் சீக்கிரம் செத்தால்தானே தனக்கு மகுடம் கிடைக்கும்! ""மருத்துவ சிகாமணியே! உம் மருத்துவத்தால் மன்னர் எக்காரணம் கொண்டும் பிழைத்து விடக்கூடாது. ஒருவேளை அவர் பிழைத்துவிட்டார் என்றால் அப்புறம் நீ பிழைத்திருக்க முடியாது!''
மிரட்டினான் ஒரு புதல்வன். அரசனக்குப் பின் ஆனைசேனை பட்டாளத்துடன் அரசாள வேண்டும்; ஆட்சி பீடத்தை அலங்கரிக்க வேண்டும் என்ற தீராத ஆசைதான்.
""பிள்ளையா இவர்கள்? பேரரசனுக்கு வாய்ந்த தொல்லைகள்! அப்போதே சொன்னேன் ஒன்றுக்குமேல் வேண்டாம் என்று. கேட்டாரா மன்னன்? கேட்கவில்லையே!
""பிள்ளைகளைச் செல்வம் என்றார். கடவுள் கொடுத்த வரம் என்றார். சோற்றுக்குப் பஞ்சமா என்றார். சொத்துக்கு குறைவா என்றார். அதிகப் பிள்ளைகளே அரசனுக்குப் பலம் என்றார். இன்று அவதிப்படுகிறார்!'' மருத்துவரின் மனம் எண்ணிற்று. வாய் மவுனவிரதம் மேற்கொண்டது. அப்பன் படுத்தபடுக்கையில்! அரண்மனையில் கலவரம்! சீதளபுரியை ஐந்து பங்காகப் பிரிந்து நின்று மோதிக் கொண்டது. வாள்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும் ஒலியும் "ஐயோ அம்மா...!'' என்ற அலறலும் காதைத் துளைத்தன. கட்டடங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. உள்நாட்டுக் கலவரத்தில் சீதளபுரி.
எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை! சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர் சமூகவிரோதிகள். சுருட்டியவரை ஆதாயம் எனச் சுருட்டிக் கொண்டனர். இருட்டிய பிறகு திருட்டுத் தொழில் செய்தவர்கள் பட்டப் பகலிலேயே பலரது தாலிகளை அறுத்தனர். பெண்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. குழந்தைகள் தெருவிற்கு விளையாட வர இயலவில்லை. எங்கு நோக்கினாலும் பிணக்காடு. ரத்த வெள்ளம்.
பக்கத்து நாடு சந்தனபுரி அதன் மன்னன் சந்தனவர்மன் சீதளபுரியின் நீர்வளமும் நிலவளமும் செல்வச் செழிப்பும் அவனது கண்ணை உறுத்திக் கொண்டே இருந்தன. எவ்வாறேனும் சீதளபுரியைக் கைப்பற்றி விட வேண்டும் என்று நாக்கை முழம் நீளம் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தான். பலமுறை படையெடுத்தும் தோல்வியைத் தவிர அவனுக்கு வேறெதும் கிடைக்கவில்லை. சீதளபுரிப் பெரும் படை அவனைச் சின்னபின்னமாக்கியது.
சகோதரக் கலவரத்தில் தொடங்கி உள்நாட்டுக் கலவரமாக உருமாறி இருக்கும், இந்த நேரமோ சீதளபுரியைச் சிறைபிடிப்பதற்குத் தக்க தருணம் என எண்ணிப் போர்முரசு கொட்டிவிட்டான்.
தன் மூத்தமைந்தனை அழைப்பித்தான் மன்னன்.
"" எனக்குப் பிறகு நீதான் இந்த நாட்டிற்கு அரசன். இதுதான் அரசர் குல வழக்கம். நீ முடிசூடா மன்னன். நான் இருக்க வேண்டிய இடத்தில் நீ இருந்து சந்தனவர்மனை எதிர்க்கப் படை நடத்து!'' என ஆணையிட்டான்!
மூத்தவன் போன பிறகு அமைச்சருடன் அரசர் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
""அமைச்சரே...! நானும் பிழைக்கமாட்டேன். இந்த நாடும் பிழைக்காது. என முன்னோராலும் என்னாலும் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த இந்தச் நாடு மாற்றானுக்கு மண்டியிடப் போவது நிச்சயம். அதில் சந்தேகமே இல்லை. அது மண்டியிடுவதற்கு முன்னால் நான் மரணமடைந்து விட வேண்டும்!'' என்று கண்கலங்கி திக்கித்திக்கி, மூச்சுத் திணறலோடு சொன்னான்.
தந்தை, மூத்தவனை முடிசூடா மன்னன் எனச் சொல்லியதும் படைதிரட்டிப் பகைவனை எதிர்க்க ஆணையிட்டதும், ஏனைய நான்கு புதல்வர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. நெருப்பில் விழுந்த புழுவாய் நெளிந்தனர்.
""சந்தனபுரியான் எனக்கு எதிரி இல்லை. நீயே என் முதல் எதிரி!'' எனப் படுக்கையில் கிடந்த மன்னனின் மீது நீண்ட வாளைப் பாய்ச்சினான் இரண்டாவது புதல்வன்!
""சொந்த நாட்டில் சாகும் பாக்கியம் கிடைத்து விட்டதே!'' என எண்ணி மன்னர் சிரித்துக் கொண்டே இருந்தார்.
""இன்னும் நால்வர் உயிரோடிருக்கிறார். அவர்களைக் கொல்ல வேண்டும். எங்கே அவர்கள்...?'' என்று பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தான்.
""இவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது போலும்! தந்தையையும் கொன்றுவிட்டு, உடன் பிறந்தவர்களையும் கொல்வதற்கு இப்படி ஓடுகின்றானே!'' என அமைச்சர் எண்ணிக் கொண்டார்.
இவனுக்கு மட்டும் என்ன? ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்ற பைத்தியம் இவனோடு பிறந்தவர்களுக்கெல்லாம் பிடித்திருந்தது. மகுடத்தைத் தலையில் சுமக்க ஆசைப்பட்டனர். தலைதான் இல்லை. தலையை மதுரவாயனிடம் இழந்து முண்டமாய்க் கிடக்கின்றனர்.
நாட்கள் சென்றன.
அரண்மனைக் காவலரும் அமைச்சரும் பதவியை இழந்த நிலையில் சாதாரணக் குடி மக்களாய் ஓர் ஏரிக்கரையில் நடந்து சென்றனர். அப்போது, அரண்மனைக் காவலர், ""சீதளபுரியின் சீரழிவிற்கு ஐந்து புதல்வர்கள் தானே காரணம்?'' என்று கேட்டார்.
உடனே அமைச்சர், ""இல்லை இல்லை அரசனே காரணம்'', எனப் பளிச்சென்று கூறினார்.
""என்ன... அப்படிச் சொல்கிறீர்கள்! நம் அரசர் எவ்வளவு நல்லவர்! உயர்ந்தவர்! உத்தமமானவர்! ஒழுக்கசீலர்! ஏகபத்தினி விரதர்! இந்த ஐந்து புதல்வர்களிடமும் அளவுகடந்த பாசம் செலுத்தியவர்! அவரைப் பார்த்தா இப்படிச் சொல்கிறீர்கள்?''
""எல்லாம் சரிதான். கடைசியாக என்ன சொன்னீர்கள்?''
""இந்து ஐந்து புதல்வர்களிடமும் அளவு கடந்த பாசம் செலுத்தியவர் என்றேன்...!''
""உம்...பிள்ளைகளிடம் பெற்றோர் பாசம் வைக்க வேண்டியதுதான். அளவுகடந்த பாசம் வைக்க வேண்டியதில்லை. சீதளபுரியின் நாசத்திற்கு அந்தப் பாசமே காரணமாயிற்று!''
""விளக்கமாச் சொல்லுங்கள்!''
""பிள்ளைகள் தவறு செய்யும் போது தவற்றினை எடுத்துச் சொல்லித் திருத்த வேண்டும். அப்படி இல்லாமல் பிள்ளைகள் செய்யும் தவறுகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் பிள்ளைகள் தருதலைகளாத்தான் ஆவார்கள்.
""தனக்குப் பிறந்த ஐந்த புதல்வர்களையும் தறுதலைகளாக ஆக்கியவார். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் துணைபோனான்!
""ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு இருவருக்குள் சண்டை வந்தால், "வீரர்கள் இப்படித்தான் மோதிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் துணிவு வரும்' என உற்சாகமூட்டுவார். பின்னர் அந்தத் துணிவே கல்வி கற்றுத்தரும் ஆசிரியரை அடிக்கும் அளவிற்கு வந்த போது, ""ஆசிரியரே! அரண்மனைப் பிள்ளைகளுக்குக் கல்வி தேவையில்லை. அதையெல்லாம் அமைச்சர் பார்த்துக் கொள்வர் என்பார். பிள்ளைகளின் உடல் நலத்தைக் கவனித்தானே தவிர அறிவுநலத்தைக் கவனிக்கவில்லை. குழந்தைகள் தறுதலைகளாகப் பிறப்பதில்லை. வளர்க்கும் முறை சரியில்லாததால் தான் தறுதலைகள் ஆகின்றன'', என்று முன்னாள் அமைச்சர் கூறியதை முன்னாள் காவலர் முகமலர்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X