நிரந்தரமான சுகம் எது தெரியுமா? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நிரந்தரமான சுகம் எது தெரியுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:00

பகவானிடம் மனதை செலுத்தி, பக்தியில் ஈடுபட வேண்டும். இப்படி சாதாரணமாக ஈடுபடும் பக்தி, நாளடைவில் தீவிர பக்தியாகி, சதா காலமும் பகவானைப் பற்றியே நினைப்பதிலும், அவன் புகழ் பாடுவதிலுமே திருப்தி கொள்வர். நாம் என்ன செய்கிறோம் என்பதைக் கூட மறந்து விடுவர். கோராக் கும்பர் என்ற பக்தர், பஜனை செய்து கொண்டே, பானைகள் செய்வதற்கான களி மண்ணை தண்ணீர் விட்டு, கால்களால் மிதித்து பக்குவப் படுத்திக் கொண்டிருந் தார். அவரது கால்கள் தான் களி மண்ணை மிதித்துக் கொண்டிருந் ததே தவிர, அவரது மனம் பகவானிடமே இருந்தது.
இப்படி பஜனை செய்து கொண்டே, களி மண்ணை மிதித்து கொண்டிருந்த போது, அவரது குழந்தை மெல்ல தவழ்ந்து வந்து, இவர் மிதித்து கொண்டிருந்த களி மண்ணை நெருங்கி விட்டது. பஜனையில் ஈடுபட்டிருந்த கோராக் கும்பர் குழந்தையை கவனிக்காமல், அதையும் சேர்த்து களி மண்ணோடு மிதித்து விட்டார். அப்போது கூட அவருக்கு அது தெரியவில்லை. குழந்தையை தேடி அங்கு வந்த அவரது மனைவி, குழந்தையை களி மண்ணோடு சேர்த்து, தன் கணவர் மிதித்து கொண்டிருப்பதைப் பார்த்து, அலறினாள்.
கோராக் கும்பருக்கும் அப்போது தான், என்ன நடந்தது என்று, தெரிய வந்தது. பின்னர், அவர் பாண்டுரங்கனைத் துதிக்க, குழந்தை பாண்டுரங்கன் சன்னிதியிலிருந்து தவழ்ந்து வந்து பெற்றோரை அடைந்தது. இப்படியொரு கதை உண்டு. அதீதமான கடவுள் பக்தியில் ஈடுபட்டு விட்டால், மற்றவைகளைப் பற்றி பக்தன் கவலைப்பட மாட்டான். அவனுடைய நிலையே வேறு. பக்தி செய்வதில் பல விதங்கள் உள்ளன. ஒன்பது விதம் என்றுள்ளது. பிரகலாதன் இது பற்றி சொல்லியிருக்கிறார்; நாரதரும் சொல்லியிருக்கிறார்.
இதில் மிகவும் சுலபமானதும், சிரமமில்லாததும், செலவில்லாததும் மிகுந்த பலனளிப்பதாகவும் இருப்பது நாம சங்கீர்த்தனம். சங்கீர்த்தனம் என்றால் ராகம் போட்டு, பக்க வாத்தியங்களுடன் செய்ய வேண்டும் என்பதல்ல; வெறும் பகவத் நாமாக்களை சொல்லிக் கொண்டிருந்தாலே போதும். உட்கார்ந்திருக்கும் போதோ, நடந்து கொண்டிருக்கும் போதோ எப்போது வேண்டுமானாலும் தமக்கு பிடித்தமான தெய்வ நாமாக்களைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
மனம் பகவானிடம் லயித்திருக்க வேண்டும். பிறவி என்பது சுகம், துக்கம் இரண்டும் கலந்தது. ஆனால், இந்தப் பிறவியில் காணும் சுகமும், துக்கமும் நிரந்தரமானதல்லவே!
நிரந்தரமான சுகம், பகவத் சரணத்தை அடைவதேயாகும். இதற்கான சுலபமான மார்க்கம் தான் நாமோச் சரணம். இதை, நாள் முழுவதும் செய்து கொண்டிருக்கலாம். ஆத்மார்த்தமாக தினமும் எத்தனை முறை சொல்ல முடியுமோ, அத்தனை முறை சொன்னாலும் போதும். கடைசி காலத்திலாவது பகவத் நாமாவைச் சொல்லி விட்டால் போதும் என்றனர்.
இது, அவ்வளவு சுலபமல்ல... சதாகாலமும் பகவத் நாமாவை சொல்லியே பழக் கப்பட்டிருந்தால் தான், கடைசி காலத்திலும் அந்த நாமா தானாகவே வாக்கில் வரும்; நல்ல கதி பெற முடியும். இல்லையேல், கடைசி காலத்தில் எதையெல்லாமோ பிதற்றுவான். பயங்கரமான உருவங்கள் கண் முன் தோன்றும். அலறுவான்; அழுவான்; நடுங்குவான். "அதோ... அவனைப் போகச் சொல்லு...' என்று கத்துவான். இவன் கண்ணுக்குத் தெரிவது மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாது; "ஏதோ பிதற்றுகிறான்...' என்பர். அதனால், வாழ் நாளில் பகவத் பக்தி, பகவத் நாமாவை சொல்வதை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்; முயற்சி செய்யுங்கள்.
***

ஆன்மிக வினா-விடை

சூரிய நமஸ்காரம், பெண்களும் செய்யலாமா?
ஒளிக் கடவுளான சூரிய பகவானை, பெண் களும் வணங்கி, சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X