இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:00

படியேறும் பெண்களின் கவனத்துக்கு...
சென்னையிலுள்ள, பல தளங்கள் கொண்ட ஒரு பிரபல துணிக் கடையில், ஜவுளி எடுக்க, என் தோழியுடன் சென்றிருந்தேன். லிப்டில் கூட்டமாக இருந்ததால், முதல் தளத்துக்கு, படியேறிச் சென்றோம். மேல் படியில், நடு வயது ஆசாமி ஒருவர், மொபைல் போனில் பேசியபடி நின்றிருந்தார்.
நாங்கள் முதல் தளம் சென்று, சுடிதார் தேர்வு செய்த பின், திரும்பி வரும் போதும், அதே ஆசாமி, அதே இடத்தில், மொபைல் போனில் பேசியபடியே நின்றிருக்க, எனக்குள் எச்சரிக்கை மணி கிணுகிணுத்தது. அந்த ஆசாமி நின்றிருந்த இடத்திலிருந்து, கீழ்நோக்கிப் பார்த்த நான், "ஷாக்' ஆனேன்.
டைட்டான பிளவுஸ் மற்றும் லூசான டாப்ஸ் அணிந்த பெண்கள், கீழிருந்து படியேறி மேல்நோக்கி வரும் போது, அவர்களின் நெஞ்சகப் பகுதி அந்த கோணத்தில், "படு கிளாமராக' தெரிந்தது. இந்த ஆசாமி போனில் பேசுவது போல சீன் போட்டு, இப்படி ஒரு வக்கிர ரசிப்பில் ஈடுபட்டிருப்பதை அறிந்து கடுப்பானேன்.
"ஏய்... இங்க நின்னு பொம்பளைங்களை ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கியா? உன் அக்கா, தங்கச்சிய படியேற வச்சு, பார்த்து ரசிக்கிறதுதானே...' என ஆரம்பித்து, "லெப்ட் அண்ட் ரைட்...' விட, வியர்த்துப் போன அவன், "நான்... நான்... போன் பேசுறேன்...' என்றபடி, கூட்டத்தோடு கலந்து, நழுவினான்.
படியேறும் அம்மணியரே... மேல் பகுதியில் எவனாவது நின்றிருந்தால், துப்பட்டா மற்றும் முந்தானையை சரியாக போட்டுக் கொள்ளுங்கள். "ஜொள்ளன்'களின் கழுகுப் பார்வை காத்திருக்கலாம்; ஜாக்கிரதை!
— ஜே.ரூபி, சென்னை.

பந்தா பேர்வழிகள் திருந்துவரா?
அரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் நான். என்னுடன் பணிபுரியும் அலுவலகத் தோழிக்கு, புடவை மற்றும் நகை மீது கொள்ளைப் பிரியம். மாதம் தவறாமல், விலை உயர்ந்த புதுப் புடவைகள் வாங்குவதும், அவ்வப்போது தங்க ஆபரணங்கள் வாங்குவதும், அவள் வழக்கம்.
இதை தவறென்று சொல்லவில்லை. ஆனால், தகுதிக்கு மீறி, மாத தவணையில் புடவைகளும், நகைகளும் வாங்குவது தான் நெருடல். அவளுக்கு நகை போட்டு கட்டிக் கொடுக்க, பெண் குழந்தையும் கிடையாது; அவளுக்கு, இரு மகன்கள் தான்.
அலுவலகத்திலேயே பகட்டாகவும், ஆடம் பரமாகவும் வலம் வரும் அவள், தன் சம்பளத்தின் பெரும் பகுதியை தவணைத் தொகையாக கட்டி விடுவதால், தன் அன்றாட வசதிகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாள். சாதாரண மொபைல் போன்தான் பயன்படுத்துகிறாள். பாதி நாட்கள் அது ரிப்பேர் ஆகி விடும். ஆட்டோ தவிர்த்து, பஸ் கூட்டத்தில் நசுங்கி பயணிக்கிறாள். தரமான ஓட்டலில் மதிய சாப்பாட்டை தவிர்த்து, பொட்டலம் சாதம் சாப்பிடுகிறாள். இது போல பல, "அட்ஜெஸ்ட்மென்ட்!'
"சம்பளத்திற்கு ஏற்ற வகையில், நகை, உடை வாங்கி, தேவையற்ற தவணைகளைத் தவிர்த்து, வாழ்வின் வசதிகளை அனுபவிக்கலாமே...' என, அவளுக்கு பலமுறை அறிவுரை கூறியிருக்கிறேன். "நல்ல உடையும், நகையும் போடாவிட்டால், யாரும் நம்மள மதிக்க மாட்டாங்கடி!' என்று கூறி, என் வாயை அடைத்து விடுகிறாள்.
மற்றவர் மதிக்க வேண்டும் என்பதற்காக, வசதிகளை குறைத்து, அவஸ்தைப்படும் என் தோழி போன்ற பந்தா பேர்வழிகள் திருந்த மாட்டார்கள் போலும்!
— ஜே.ராணி, மதுரை.

எண்ணெய் குளியலா? - உஷார்!
என் அலுவல மேலதிகாரி, கடுமையான வெயி லிலும், மிக கூலாக, அழகாக தோற்றமளித்தார். நாங்கள் விசாரித்ததில், ஒரு நிறுவனத் தின், "கூல்' ஆயிலில், முழு எண்ணெய் குளியல் எடுத்ததா கவும், மாதம் இரு முறை அந்த ஆயிலை உடல் முழுவதும் தேய்த்து, மசாஜ் செய்து, ஒரு மணி நேரத்திற்கு பின், வெந்நீரில் குளித்தால், உடல் பஞ்சு போல், சுகமாக இருப்பதாகவும், தூக்கம் நன்கு வருவதாகவும் டிப்ஸ் கொடுத்ததுடன், சிலரை வற் புறுத்தி, செய்து பார்க்கவும் தூண்டினார்.
எங்கள் அலுவலகத்தில், கடந்த வாரம் ஓரே நாளில், இருவர் ஆப்சென்ட். என்ன வென்று விசாரித்ததில், ஒருவர் ஆயில் பாத் எடுத்து, குளிர்ச்சி முத்தி, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, கை கால் வாதம் போல் ஆகி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
இன்னொருவர் பெண் அலு வலர். தன், 49வது வயதில் தான், முதன் முதலாக ஆயில் பாத் எடுத்துள்ளார். அது ஒத்துக் கொள்ளாமல், காய்ச்சல் வந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இச்செய்தி அறிந்து, பதறி யடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவரையும் தனித்தனியே பார்த்து, நலம் விசாரித்து வந்தோம்.
இது, அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை... ஒருவருக்கு ஒரு ஆயிலோ, ஒரு பவுடரோ ஏற்றுக் கொண்டால், அது, எல்லாருக்கும் ஏற்றுக் கொள்ளும் என நம்பி, அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
எடுத்தால், மேற்படி விளைவு களும், பணச் செலவும் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. இது, எல்லாருக்கும் ஒரு பாடம்.
— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X