அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:00

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்திலிருந்து வாசகர் ஒருவர், நம், "டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் இது. படியுங்கள்...
டியர் ஸ்ரீ அந்துமணி,
நலம். உங்கள் நலத்திற்கு கடவுளிடம் பிரார்த்திக்கும் உங்கள் நீண்ட கால வாசகன் - ரசிகன். உங்கள் எழுத்தில் உள்ள ஒரு நிதர்சனமான உண்மை மனசுக்கு திருப்தி அளிக்கிறது. நான், என், 59வது பிறந்த நாளை, என் பிள்ளையின் அன்பால், அமெரிக்காவில் கொண்டாட வந்துள்ளேன். மனைவி, துணைவி - ஒருவரே, இரண்டு அல்ல! ஆனால், நேரத்திற்குத் தகுந்தவாறு பலவாகி, இன்று வரை, இன்முகத்துடன் என்னை பொறுத்துக் கொண்ட புண்ணியவதியுடன் கடந்த, 160 நாட்களாக அமெரிக்காவில் இருக்கிறோம்.
இன்னும், 65 நாட்களில் தாயகம் - சென்னை வர உள்ளேன்.
கடவுளின் கிருபையால், என் மகனின் அன்பால், நாங்கள் இருவரும் இங்கு பல இடங்களைச் சுற்றிப் பார்த்து
விட்டோம்.
சென்னையில் இருக்கும் வரை, பல காரணங்களால், தமிழ், "டிவி' தொடர்களையோ, தமிழ் சினிமாக்களையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; அதில், பெரிய விருப்பமும் இல்லை. ஆனால், இங்கு அமெரிக்காவில், நாமாக
எங்கும் தனியாக செல்ல முடியாத காரணத்தால், வேண்டாம் என்றாலும் சில சமயங்களில், "டிவி'யில் தமிழ் தொடர்களையும், சினிமாவையும் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டு விட்டோம்.
மனம் நொந்து விட்டது. நம் தமிழ்த் தொடர்களும், தமிழ் சினிமாவும் இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதே... என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மகாபாரதத்திற்கு ஒரு சகுனி தான், ராமாயணத்திற்கு ஒரு கூனி தான். ஆனால், இந்த தமிழ், "டிவி' தொடர்களில், அனேகமாக ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு கூனியாகவோ, ஒரு சகுனியாகவோ இருந்து, சூழ்ச்சி செய்கின்றனர்.
சூது, வாது இல்லாத பாத்திரங்களே இல்லை. பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்.
- உன் புருஷன் உன்னை ஏமாற்றி மற்றவனுடன் வாழ்ந்தால், விடாதே... நீயும், உன் புருஷனை ஏமாற்றி, மற்றவளின் புருஷனுடன் வாழ்ந்து காட்டி, உன் புருஷனுக்கு புத்தி புகட்டு.
- ஓரகத்தியுடன் சண்டையா...உடனே உன் தங்கையை, உன் மச்சினனை மயக்கச் செய்து, அவனை வயப்படுத்தி, ஓரகத்தியை பழிவாங்கு.
- அவன் சாம்ராஜ்யம் அழியணும்; நான் முன்னுக்கு வரவேண்டும்.
- சாகும் தருவாயில், மகளிடம் அப்பன் கேட்கும் உதவி...
"என் குடும்பத்தை நாசமாக்கிட்டான் அவன். நயவஞ்சகத்தால், கூட இருந்து குழி பறித்து, அவன் குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலும்; பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடை
யிலும்; உடன்பிறப்புகளுக்கு இடையிலும் பிரிவு ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் பகைவராக்கி, அந்த குடும்பத்தை நாசம் செய்ய வேண்டும். இதுவே என் கடைசி ஆசை; அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்...'
- "நீ தான் மணமேடையில், சண்டை செய்து, உன்னை மணக்க இருந்தவளின் திருமணத்தை நிறுத்தி விட்டாயே! அதன் பின், மற்றொருவளுக்குத் தாலி கட்டி, மணம் செய்து குடும்பம் நடத்துகிறாயே! நீ கைவிட்ட பெண்ணை நான் மணம் செய்து கொள்ள, நீ யார் என்னை எதிர்ப்பது?' இதற்கு ஒன் லைன் பதில்: "என்ன பெரிய தாலி? இப்ப கூட நான் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு, முன்னவளை கட்டிக்குவேன். நீ இதுல குறுக்கிடாதே!'
- அரசியல்வாதிகளுக்கும், தாதாக்களுக்கும், போலீசுக்கும் உள்ள ஒட்டுறவு.
இவர்கள் நாட்டின் நடப்பைச் சொல்கின்றனரா? இல்லை, மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கின்றனரா?
அம்மம்மா... எங்கு சென்று ஒளிந்தது நம் நாட்டுக் கலாச்சாரம்? நம் கலாசாரத்தின் உயர்வு என்ன? நமக்கு அவை புகட்டிய அறிவுரைகள் என்ன? நாம் எங்கு செல்கிறோம்?
உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், அகிம்சை, நட்பு, மரியாதை, இன்சொல், வன்சொல் களைதல், ஒழுக்கம், பணிவு, அடக்கம் எல்லாம் எங்கு சென்றன? மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகியதால், "டிவி'யில் தமிழ் சினிமா, தமிழ் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டோம்.என் மன எண்ணங்களை கொட்டித் தீர்த்து விட்டேன்!
— என்றும், இன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதியுள்ளார். ஏதாவது ஒரு தனியார், "டிவி'யாவது, நம் பண்பாடுகளை நிலைநிறுத்தும் விதமாக, ஒரே ஒரு தொடராவது சோதனை முயற்சியாக எடுத்து ஒளிபரப்புமா?
***

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X