உயிரே உனக்காக (35)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:00

இதுவரை: நரேனின் சி.இ.ஓ., வைத்தீஸ்வரன், நல்ல தகவல் ஒன்றை கூறப் போவதாக போனில் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதை தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அலுவலகத்துக்கு வந்திருந்தான் நரேன். வைத்தீஸ்வரனுக்கு, மதுரிமா போன் செய்ததாகவும், அப்போது, நரேன் மீது இருந்த கோபம் குறைந்து விட்டதாகவும், எப்படி விவாகரத்து நோட்டீஸ் நரேனால் அனுப்ப முடிந்தது என்று கேட்டதாகவும் கூறினார். நரேனும், அதே மனநிலையில் இருப்பதாக கூறினான் —

கதவருகே வந்து நின்ற பாஸ்கரன், ஒரு வினாடி யோசித்துப் பார்த்தான்...
அவன் அறிவு, அடுத்தவர் அறைக்குள் அனுமதியின்றி நுழைவது அநாகரிகம் என்று உணர்த்தியது; ஆனால், அவனுக்கு, அப்போது ஏற்பட்டிருந்த உணர்வு, அவனது அறிவை மீறச் சொன்னது.
பாஸ்கரன், அவனுக்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாய், மதுரிமாவின் அறைக் கதவைத் தட்டாமலேயே, அறைக்குள் நுழைந்து, அவளது அருகில் வந்து நின்றான்.
தன் மீது நிழல் படிவதை உணர்ந்த மதுரிமா, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவள் அருகே பாஸ்கரன் அவளையே பார்த்தபடி நிற்பதை உணர்ந்தாள் மது... ""பாஸ்கர்... என்ன இது? இப்படி சொல்லாமல், கொள்ளாமல் திடீரென்று... குரல் கொடுத்திருக்கக் கூடாதா?''
தலையணையின் மீது போட்டிருந்த டவலை எடுத்து, அவளது அழகிய தோள்களில் போர்த்தியபடி கேட்டாள் மது.
""குரல் கொடுக்க வேண்டுமா... ஏன் மது, இப்போது என்ன ஆகி விட்டது?''மது உஷாரானாள். "இவனிடம் கொஞ்சம்
ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்!' சுவர் கடிகாரம், இரவு, 10:00 மணி என்பதை, அழகிய இசை ஒலியுடன் அவளுக்கு நினைவூட்டியது...
"இந்த நேரத்தில் இவன் எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறான்? ஏதோ அம்மாவின் திருப்திக்காகப் பெயருக்கு சாப்பிட்டுவிட்டு, அலைக்கழிக்கும் நினைவுகளோடு, தூக்கம் வராமல் அறைக்குள் வந்து அமர்ந்தால்... இந்த பாஸ்கரனுக்குள்ளும் ஏதோ நினைவுகள், இவனையும் அலைக்கழிக்கிறதோ... இவனை தூங்க விடாமல் செய்கிறதோ?' அவனுக்குள் இருக்கும் நினைவு, அவளைப் பற்றியது என்று நினைக்கவே மதுவுக்கு அச்சமாக இருந்தது.
மதுரிமாவின் நினைவுகள் இவ்வாறாக இருக்க, பாஸ்கரனின் நினைவுகள் வேறு மாதிரியாக இருந்தன. அவனுக்குக் கிடைக்க வேண்டிய ஒன்றை, வேறு யாரோ அவசர கதியில் தட்டிப் பறித்துச் சென்றுவிட்ட இழப்பில், ஒருவித சோகம் கலந்த கோபத்தில், மதுரிமாவையே உற்றுப் பார்த்தபடி அவன் நின்றிருந்தான்.
""பாஸ்கர்... இந்த நேரத்தில் என்னை எதுக்கு பார்க்க வந்திருக்கே?''
""மது... நான் உன்னைப் பார்க்க நேரம், காலம் இருக்கா என்ன?''
""நிச்சயமா இருக்கு; நான் அப்படித்தான் நினைக்கிறேன்.''
""எதனால அப்படி நினைக்கிற?''
""இந்தக் கேள்விக்கு, உண்மையிலேயே உனக்கு பதில் தெரியலையா?''
""தெரியற மாதிரியும் இருக்கு; தெரியாத மாதிரியும் இருக்கு. நீயே சொல்...''
சிறிது இடைவெளிக்குப் பிறகு, அழுத்தமாகச் சொன்னாள் மது...
""நான், இன்னொருத்தரோட மனைவி.''
""அது, உன்னோட திருமணத்திற்கு அப்புறமா மது.''
""நீ என்ன சொல்ற பாஸ்கர்... எனக்குப் புரியல.''
அவன் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாதவளாய் கேட்டாள் மது.
""ஆமா மது... உனக்குப் புரிய வைக்காமல் போனது, என்னோட தவறுதான். இப்ப உனக்குப் புரிய வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது... கல்யாணத்துக்குப் பின் தான், நீ அந்த நரேனோட மனைவி; ஆனா, அதுக்குப் முன், நீ என்னோட மனைவி. ஆமா, நான் தாலி கட்டாமல், வாழ்ந்துகிட்டிருந்த, என்னோட மனைவி நீ தான்!''
பாஸ்கரன் சொன்னதைக் கேட்டு, அதிர்ந்தாள் மது.
""பாஸ்கர்... உனக்கென்ன பைத்தியமா? நீ என்ன பேசறேன்னு புரிஞ்சுக்கிட்டுத்தான் பேசறீயா?''
""நல்லாவே புரிஞ்சுக்கிட்டுத்தான் பேசறேன். நீ நரேனோட மனைவிங்கறது நிகழ்கால உண்மை; நான் மறுக்கல... ஆனா, அதுக்கு முன், என்னோட கனவுகளிலும், கற்பனைகளிலேயும் நான் உன்னை மனைவியா நெனச்சு வாழ்ந்துகிட்டிருந்ததுதான், கடந்த கால உண்மை. ஒரு நிகழ்கால உண்மைக்காக, கடந்த கால உண்மை பொய்யாகிடுமா?''
""பாஸ்கர்... யோசிச்சுப் பாரு. நீ மட்டுமே கற்பனை, செஞ்சுக்கிட்ட ஒண்ணை, நான் எப்படி ஏத்துக்க முடியும்? என்னைப் பற்றிய கற்பனை உன்னை மாதிரியே இன்னும் யார், யாருக்கோ வந்திருக்கலாம். அதுக்காக, அத்தனை பேருக்கும் நான் மனைவியாகி விட முடியுமா? அப்படி நினைக்கிறவளுக்கு பேரு மனைவி இல்ல; அதுக்கு வேற பேரு.''
""மது... நீதான் புரிஞ்சுக்காமப் பேசிக்கிட்டிருக்கே... இந்த நினைப்பு எனக்கு நீ நரேனோட மனைவி ஆனதுக்கு அப்புறம் வரல.''
""உனக்குள்ள இப்படி ஒரு நினைப்பு இருக்கறதை, கல்யாணத்துக்கு முன்னாடியே எங்கிட்ட ஏன் நீ சொல்லல?''
""சொல்லி இருந்தா என்ன செய்து இருப்பே? அந்த நரேன் வேணாம்ன்னு, என்னைக் கல்யாணம் செய்துக்கிட்டிருப்பியா... சொல்லு மது?''
""முதலில் நான் கேட்டதுக்கு பதிலைச் சொல். நீ ஏன் உன் காதலை என்கிட்ட சொல்லலை? நான் இன்னொருவரின் மனைவியானதுக்குப் பின், இன்று வந்திருக்கும் தைரியம், அப்போது ஏன் வரவில்லை? எது உன்னைத் தடுத்தது?''
""நான் உன் மீது வைத்திருந்த நம்பிக்கை. என்னைப் போலவே உனக்கும் என் மீது காதல் இருக்கும் என்ற நம்பிக்கை. நீயாக அதைத் தெரிவிப்பாய் என்ற நம்பிக்கையில் நான் காத்திருந்தேன்.''
இது, எத்தனை துயரமான விஷயம்.
மதுவுக்கு, இவனுக்கு, தன் மேல் காதல் வரும்படியாக அமைந்தது எது என்று தெரிந்து கொள்ள வேண்டும் போல், ஓர் உணர்வு தோன்றியது...
""பாஸ்கர்... என்னை நீ காதலிப்பதற்கு எது காரணமாய் அமைந்ததுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?''
""நிச்சயமா நீ ஆடுற நாட்டியம் இல்ல. உன்னோட நாட்டியக் கலையில மயங்கின ஒரு மகா ரசிகன்னு, நான் பொய் சொல்ல விரும்பல...''
""சரி... நாட்டியம் இல்லேன்னா, வேற எது உன்னைக் கவர்ந்தது?''
""உன்னோட பெண்மை, அழகு. இன்னும் வெளிப்படையாக சொல்லணும்ன்னா, உன் உடம்போட வசீகரம்.''
அவன் சொல்வது வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
""நீ சொல்றது எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு ஆணுக்கு, ஒரு பெண் மீது காதல் வர்றதுக்கு, அவள் ஒரு பெண் என்ற காரணம் மட்டும் போதுமா?''
""போதும்... ஏன் தெரியுமா... காதல் வர்றதுக்கு உண்மையான காரணம் அதுதான். ஆண் - பெண் என்று படைக்க பெற்ற படைப்போட ரகசியமும், அழகும் அதுதான்.''
""பாஸ்கர்... கல்யாணத்திற்கு முன், காதல் என்பது நிறைய பேர் வாழ்க்கையில் நிகழத்தான் செய்கிறது. காதல் நிறைவேறாமல், கல்யாணம் வேறு இடத்தில் நடந்துவிட்ட சூழ்நிலையில், அந்த ஆணோ, பெண்ணோ அந்த பழைய நினைவுகளில் இருந்து விலகி விடுவது தானே நல்லது.''
""சில நினைவுகளில் இருந்து எல்லாராலுமே நல்லது, கெட்டது பார்த்து விலகி நிற்க முடிவதில்லை. நியாயங்களையும், தர்மங்களையும் மீறும் சில விஷயங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் அமைவது கொஞ்சம் வருத்தமான
ஒன்றுதான்.''
""சரி... இப்போது எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?''
""மது ... உன் விஷயத்தில் நீ சொல்கிற மாதிரி இது சரியா, தவறா என்றெல்லாம் என்னால் யோசித்துக் கொண்
டிருக்க முடியவில்லை. உன்னைப் பற்றிய என் நினைவுகளை, என்னால் விலக்கித் தள்ள முடியவில்லை. நீ எனக்காவே அமெரிக்காவிலிருந்து, நரேனைப் பிரிந்து வந்திருப்பது போல் ஓர் உணர்வு தோன்றி, உன்னை, என்னுடைய சொந்தமாக்கிக் கொள்ளும் ஒரு ஆசை என்னுள் எரிய ஆரம்பித்து விட்டது.''
""பாஸ்கர்... நீ பேசுவது மிகவும் தவறு. நான் இன்னொருவரின் மனைவி. இதோ பார்... இந்தத் தாலி அதை உனக்கு உணர்த்தவில்லையா?''
""மது... நரேன் தான் உனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டானே... இனி, அவன் வேண்டாம் என்றுதானே, நீயும் இங்கே திரும்பி வந்திருக்கிறாய். இனி, நரேன் கட்டிய தாலி உனக்கு வெறும் சுமைதான் மது!''
""பாஸ்கர்... நீ என்னை ரொம்பவும் ஆத்திரப்படுத்துகிறாய்... தாலியை சுமையாக நினைக்கிறவள் நிச்சயம் தமிழ் மண்ணில் பிறந்த பெண்ணாக இருக்க மாட்டாள். நான் அந்த மாதிரியான பெண் இல்லை.''
""பெண்களில் அந்த மாதிரி, இந்த மாதிரி என்று தனித்தனியாக எதுவும் இல்லை... எல்லா பெண்களுமே சூழ்நிலைகளைப் புரிந்து, தங்களை மாற்றிக் கொள்பவர்கள்தாம்... நீ இன்னமும் வாழ்க்கையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.''
""நான் எதைப் புரிந்து கொள்ள வேண்டும் என நீ எதிர்ப்பார்க்கிறாய்?''
""உன்னுடைய அருமையும், பெருமையும் தெரியாமல், உனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஒருவனைப் பற்றி, நீ இன்னமும் நினைத்து, அழுது கொண்டிருக்கிறாயே... அதைத்தான் சொல்கிறேன். உனக்கேற்ற கணவன், அவன் இல்லை என்பதை, நீ புரிந்து கொள்ள வேண்டும். அவனிலிருந்து நீ விலகி, வெளியே வர வேண்டும்.''
""வெளியே வந்து, அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?''
""உன்னையே நினைத்து, உருகிக் கொண்டிருக்கும் என் காதலை ஏற்று, நீ என்னுடன் வாழ முன் வரவேண்டும்.''
""என் மீது உனக்கு வந்தது காதலே இல்லை பாஸ்கர்.''
""காதல் இல்லாமல், பிறகு வேறென்ன?''
""என் உடல் மீதான கவர்ச்சி; பெண்ணின் அழகின் மீதான ஆசை.''
""அந்தக் கவர்ச்சியும், ஆசையும் இல்லாததுதான் காதல் என்றால், உலகில் யாருமே காதல் மீது காதல் கொள்ள மாட்டார்கள். அதற்காக நான் உன்னைக் கட்டாயப்படுத்தவில்லை. என் விருப்பத்தை சொல்லி விட்டேன். நரேனிடம் இருந்து, நீ விவாகரத்து பெறும் வரையில், உனக்காக காத்திருக்கிறேன்.''
""பாஸ்கர்... நீ நினைக்கிற மாதிரி, எங்கள் விவாகரத்து நிகழப் போவதில்லை.''
""எப்படி அத்தனை உறுதியாய் சொல்கிறாய்?''
""ஏதோ ஒரு வேகத்தில், நரேன் எனக்கு இப்படி ஒரு நோட்டீசை அனுப்பி இருக்க வேண்டும். இப்போது, நரேன் என்னை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்.''
""இதுவும் உன்னுடைய கற்பனைதான். நீ ஆண்களை இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.''
""அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். இப்போதைக்கு என்னுடைய கவலை எல்லாம், என்னை நரேனுக்குப் புரிய வைப்பது பற்றிதான். நிச்சயம் நான் அதில் வெற்றி பெறுவேன்.''
""எனக்கு அப்படித் தோன்றவில்லை. என்னை மறுக்க வேண்டும் என்ற வேகத்தில், இப்போதைக்கு நீ இப்படிப் பேசுகிறாய். ஆனால், வாழ்நாள் முழுக்க, ஆண் துணை இல்லாத ஒரு வாழ்க்கை நரகமாக இருக்கும்...''
""அப்படியா... நீங்கள் சொல்வதுதான் உண்மை என்பதை உணரும் பட்சத்தில், அதுபற்றி நான் யோசித்துக் கொள்கிறேன். இப்போதைக்கு அந்தப் பேச்சு வேண்டாம் பாஸ்கர். எனக்கு தூக்கம் வருகிறது; காலையில் பார்ப்போம்.''
ஒருவித விஷமமான சிரிப்புடன், அறையை விட்டு வெளியேறினான் பாஸ்கர். அவன் சென்ற பிறகும், அவன் சொன்னதன் தாக்கத்தில், தூக்கம் வராமல், மதுரிமா வெகுநேரம் கட்டிலில் கண்விழித்து அமர்ந்திருந்தாள்.
"ஒரு வேளை எனக்கும், நரேனுக்கும் விவாகரத்து என்ற அந்த துயர சம்பவம் நடந்து முடிந்து, அம்மா என்னை எதையாவது சொல்லி பயமுறுத்தி, இந்த பாஸ்கரனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து விடுவாளோ!'
அந்த நினைப்பே மதுரிமாவுக்கு அருவருப்பாகவும், உறுத்தலாகவும் இருந்தது.
ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி இருப்பது மட்டுமே, அந்த பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பு என்றாகி விடாது. அந்தத் தாலியைக் கட்டியவனும், அவளுக்கு அருகே இருக்க வேண்டும். அவனைப் பிரிந்து வந்த பின்பு அவள் தன்னை அடக்கிக் கொள்ளலாம்... ஆனால், அவளைச் சுற்றி இருக்கும் ஆண்களை...
"இந்த புனிதமான தாலியை பாஸ்கரன் சுமை என்று கழற்றி விடும்படி எத்தனை சுலபமாகச் சொல்கிறான். இதைக் கட்டியவனை நான் எத்தனை சுகமாக இன்னமும் நெஞ்சில் சுமந்து கொண்டு இருக்கிறேன். போதும்... இனியொரு புதிய சுமைக்கு நான் தயார் இல்லை!'
மதுரிமாவுக்குள் நரேனைப் பற்றிய நினைவுகள் மெல்ல, மெல்ல அரும்பி, அவனும், அவளும் சந்தோஷித்திருந்த அந்த பழைய ஞாபகங்கள், பூவாய் விரிய, மதுரிமா ஒரு முடிவுடன் கட்டிலை விட்டு எழுந்தாள். கம்ப்யூட்டர்
எதிரே வந்து அமர்ந்தபடி யோசித்தாள். தன் நிலையை விளக்கி, மன்னிப்புக் கோரி, நரேனுக்கு, "இ-மெயில்' அனுப்பினால் என்ன?
மதுரிமா ஒருவித படபடப்போடு இன்டர்நெட்டை திறந்த போது...
மதுரிமாவின் பெயருக்கே, "இ-மெயில்' ஒன்று வந்திருந்தது.
அனுப்பியது யார் என்று ஆவலோடு மதுரிமா பார்த்த போது, அவளுக்கே ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
மதுரிமாவிற்கு, "இ-மெயில்' அனுப்பி இருந்தது கவிதா.
தொடரும்.

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ம .துரைராஜ். - chennai,இந்தியா
09-ஆக-201117:05:17 IST Report Abuse
ம .துரைராஜ். தூர்தர்சன் முன்னால் இயக்குனர் நடராஜன் எழுதிய உயிரே உனக்காக தொடரில் ''தாலியை சுமையாக நினைக்கிறவள் நிச்சயம் தமிழ் மண்ணில் பிறந்த பெண்ணாக இருக்க மாட்டாள் ''மதுரிமாவின் கூற்று .இக்கால வழி தவறும் பெண்களுக்கு சம்மட்டி அடி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X