ஆட்டிப் படைக்கும் "ஐ பாட்' மோகம்... கிட்னியை பறிகொடுத்த சிறுவன்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஆட்டிப் படைக்கும் "ஐ பாட்' மோகம்... கிட்னியை பறிகொடுத்த சிறுவன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
00:00

சீனாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் வசிக்கும் ஏழை, டீன்-ஏஜ் சிறுவன், ஷியாவோ செங். ஐ பாட் (பாட்டு கேட்கும் கருவி) போன்ற சாதனங் களை, தன் நண்பர்கள் பயன்படுத்துவதை பார்த்து, தானும் இதுபோன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஏக்கம், அவனுக்கு ஏற்பட்டது; ஆனால், கையில் தான் காசு இல்லையே... வீட்டில் கேட்டதற்கு, "சாப்பிடவே காசு இல்லை. ஐ போனை எங்கிருந்து வாங்குவது?' எனக் கூறி, செமத்தியாக உதைத்து விட்டார், அவனது தாய்.
அப்போது தான், "சிறுநீரகங்களை விற்றால், அதிகமாக காசு கிடைக்கும்; அதை வைத்து, ஐ பாட் வாங்கி விடலாம்...' என, யாரோ ஒரு புண்ணிய வான்(?) அவனது காதில் ஓதி இருக்கிறார். அவர் மூலமாகவே, புரோக்கராக செயல்படும் ஒருவரை பிடித்து, தன் விருப்பத்தை தெரிவித்துள்ளான், ஷியாவோ.
திடீரென ஒரு நாள், வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், பஸ் பிடித்து, பக்கத்தில் உள்ள ஹூனன் மாகாணத்துக்கு சென்று விட்டான். திருட்டு சிறுநீரகங்களுக்காகவே அறுவை சிகிச்சை செய்யும், சட்ட விரோத மருத்துவமனையில், ஷியாவோவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அங்கு, அவனது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டது. சில நாள் சிகிச்சைக்கு பின், கையில், 82 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து, பஸ் ஏற்றி அனுப்பி விட்டனர்.
வரும் வழியிலேயே, விலை உயர்ந்த ஐ பாட், ஐ போன் மற்றும் ஆப்பிள் போன் ஆகியவற்றை வாங்கி, தன் நீண்ட நாள் ஆசையை தீர்த்துக் கொண்டான், ஷியாவோ. வீட்டுக்கு வந்த மகன், களைப்பாக இருப்பதை பார்த்த தாய், "என்ன நடந்தது?' என விசாரிக்க, "ஐ பாட் வாங்குவதற்காக என் சிறுநீரகத்தை விற்று விட்டேன்...' என, சர்வ சாதாரணமாக அவன் பதில் கூற, அவனது தாயாருக்கு தலை சுற்றி, மயக்கமே வந்து விட்டது. போலீசில் புகார் செய்ததும், புரோக்கர் தலைமறைவாகி விட்டார். அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நவீன தொழில்நுட்ப வசதி, தற்போதைய இளைய தலைமுறையினரை, எந்த அளவுக்கு பாடாய் படுத்துகிறது பார்த்தீர்களா?
— ஜோல்னா பையன்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X