எம்.ஜி.ஆரை வைத்து, ஒரே ஒரு படம் தான் எடுத்தீர்களா?
முன்பெல்லாம் கதைக்கு தான் நடிகர்களை தேர்வு செய்தோம். அன்பே வா படத்திற்கு பின், எம்.ஜி.ஆருக்கு ஏற்ற மாதிரியான கதை அமையவில்லை. தெலுங்கில் என்.டி.ராமாராவ் நடித்த படத்தின் கதை ஒன்றை, 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினோம்.
ஹீரோ - ஹீரோயினாக, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்தோம். இருவருக்கும்,'அட்வான்ஸ்' கொடுத்தோம். பிறகு, அந்த கதை ஏனோ, 'செட்' ஆகவில்லை. அதனால், அந்த கதையை கிடப்பில் போட்டு விட்டார், என் அப்பா.
அதற்கு பின்னரும், எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு அமையவே இல்லை.
ஒரே கதையை, இரு தயாரிப்பு நிறுவனங்கள் எடுத்த அனுபவம் ஏதாவது உண்டா?
நோ படி ஷை என்ற ஆங்கில கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான், களத்துார் கண்ணம்மா. பிரபல இயக்குனர் தாதா மிராசி, வெளிநாட்டு கதைகளை படமாக எடுப்பவர். நோ படி ஷை படத்தை, அவர் தமிழில் எடுத்திருந்தார். படம் முடியும் போது தான் எங்களுக்கு இந்த
தகவல் கிடைத்தது.
களத்துார் கண்ணம்மா படத்தில், பாலையாவின் வேடத்தில், அங்கு, ஜாவர் சீதாராமன் நடித்தார். எங்களுக்கு இந்த தகவல் கிடைத்ததும், பதட்டம் வந்தது. படத்தை விரைந்து முடிக்க சொன்னார், அப்பா.
படம் முடியும் நேரத்தில், 'எடுத்த வரை படத்தை போட்டு பார்ப்போம்...' என்றார், அப்பா.
படம் பார்க்க தயாரானோம்.
படத்தில் உள்ள தவறுகள் மற்றும் 'ரீ - டேக்' எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் குறிப்பு எழுதி கொடுப்பது, அப்பாவின் வழக்கம். அதேபோல், இந்த படத்திலும் சில குறிப்புகளை கொடுத்தார், அப்பா.
அதைப் பார்த்ததும், கவலை தொற்றிக் கொண்டது.
'படத்தின் நாயகி சாவித்திரியின் தேதி, மீண்டும் கிடைப்பது சிரமம்...' என்று சொன்னோம்.
'பரவாயில்லை, தாமதமாக வெளியிடலாம். காட்சிகளை மாற்றி படமெடுத்து தான் ஆக வேண்டும்...' என்றார், அப்பா.
'நமக்கு முன், தாதா மிராசியின் படம் வெளிவந்து விட்டால், நம் படம் தோல்வி அடைந்து விடும்...' என்று சொன்னோம்.
'ராமாயணம், மகாபாரதம் போன்ற கதையை கேட்டு இருக்கிறீர்களா. கதை ஒன்று தான். ஆனால், வாரியார் சுவாமிகள் சொல்லும் போது, சின்ன சின்ன நுணுக்கங்களை புகுத்தி சொல்வார். சுவாரஸ்யமாக இருக்கும். அதேபோல தான் சினிமாவும்.
'கதை ஒன்றாக இருந்தாலும், பாட்டு, வசனம், சிரிப்பு இதிலெல்லாம் புதுமையை புகுத்தினால் போதும். படம் வெற்றி அடையும். அந்த படத்தை பற்றி மறந்துடுங்க. அப்படி ஒரு படம் வருதுன்னே நினைக்காதீங்க. நம் படம் நல்லா வரணும்ன்னு மட்டும் வேலை பாருங்க...' என்றார், அப்பா.
கடவுளின் குழந்தை என்ற பெயரில் அந்த படம் வெளியானது. நான்கு வாரங்களுக்கு பிறகு, எங்கள் படம் வெளியானது. 'குமுதம்' விமர்சனத்தில், 'கடவுளின் குழந்தை இருக்கு. ஆனால், களத்துார் இல்லை...' என்று எழுதினர்.
அதை எடுத்துச் சென்று அப்பாவிடம் காட்டினேன்.
'வசூலை பாருங்க, பாவ மன்னிப்பு படத்துக்கு பிறகு, நல்ல வசூல் நம் படத்துக்கு தான்...' என்றார், அப்பா.
வெளி ஊர்களில், களத்துார் கண்ணம்மா படம், சக்கை போடு போட்டது. இன்று வரை, இந்த படம் 'டிவி'களில் ஒளிபரப்பாகிறது. கடவுளின் குழந்தை படம் பற்றி நிறைய பேருக்கு தெரியவில்லை. அப்பா சொன்னது, உண்மையாகி விட்டது.
இப்போது தமிழில், கே.எஸ்.ரவிக்குமார், வெற்றிமாறன் போன்றோர், மற்றவர்கள் கதையை வாங்கி படம் இயக்குகின்றனர். அந்த மாதிரி கதைகளை
எப்படி, யாரிடம் வாங்கினீர்கள்?
பெரும்பாலும், ஜாவர் சீதாராமன் கதைகள் தான் வாங்கி, படமாக எடுத்தோம். முந்தானை முடிச்சு படம், நாங்கள் தயாரித்தோம். பாக்கியராஜுக்கு, எட்டு லட்சம் கொடுத்தோம்.
நிறைய பெங்காலி கதைகள் எடுத்தோம். நானும் ஒரு பெண், அன்னை போன்ற படங்களின் கதை உரிமையை வாங்கி படம் எடுத்தோம்.
அப்பா இருந்த காலத்திலிருந்து, இப்போது வரை, குடும்பத்தோடு பழகும் நடிகர்கள், திரை
உலகத்தினர் யாராவது இருக்கின்றனரா?
எங்கள் வீட்டில் ஒரு விசேஷம் என்றால், முன்பு ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் என்று அத்தனை பேரும் வருவர். அவர்கள் வீட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால், என் அப்பா தான், முதல் ஆளாக போய் நிற்பார். அவரை முன் நிறுத்தி தான் நிகழ்ச்சியை நடத்துவர்.
இப்போதும் வருவாங்க, போவாங்க அவ்வளவு தான். ரஜினி, கொஞ்சம் நெருக்கமாக இருக்கார். என், 80வது பிறந்தநாளுக்காக என் மகன் போன் செய்து, ரஜினியிடம் தெரிவித்தார். வந்து நிகழ்ச்சியில் கலந்துகிட்டு, இருந்து சாப்பிட்டு போனார், ரஜினி.
ஏவி.எம்., நிறுவனத்தில் அதிக படங்கள் இயக்கிய இயக்குனர்கள் யார் யார்?
கிருஷ்ணன் - பஞ்சு மற்றும் திரிலோக சந்தர்.
நடிகர்கள் யாருக்காவது, சொந்த பெயரை மாற்றி இருக்கிறதா, உங்கள் நிறுவனம்?
பழனிசாமி என்ற பெயரை, சிவகுமார் என்று மாற்றினோம். அவர் ஒருவர் தவிர, யாருக்கும் மாற்றவில்லை.
ஏவி.எம்., தயாரிப்பில் அதிக லாபமும், அதிக
நஷ்டமும் தந்த படம்?
ஆரம்பத்தில், மூன்று படங்கள் தொடர் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன்பின், தோல்வியை அதிகம் சந்திக்கவில்லை. பாக்கியராஜை வைத்து எடுத்த, முந்தானை முடிச்சு படம், பெரும் லாபத்தை, 200 கோடி வரை சம்பாதித்து தந்தது. அந்த படத்தை வெளியிட்ட அத்தனை பேரும் லாபம் பார்த்தனர்.
அப்பா காலத்தில், சென்னையில், ஏவி.எம்., காலனி என்று, ஒரு காலனியை உருவாக்கியதைப் பற்றி சொல்லுங்களேன்...
அப்பா காலத்தில், எங்களிடம் வேலை பார்த்தவர்களுக்கு, அரசாங்கத்தின் உதவியோடு, வீடு கட்டிக் கொடுத்தோம். அப்போது, தமிழக முதல்வராக இருந்தார், அண்ணாதுரை.
அந்த வீட்டில் தான் இன்னமும் இயக்குனர், எஸ்.பி.முத்துராமன் இருக்கிறார். உதவி இயக்குனராக இருந்த போது, அவருக்கு கொடுத்த வீடு அது. இன்றும் பல தலைமுறையினர் அந்த காலனி வீட்டில் தான் இருக்கின்றனர். இன்று, அந்த வீடுகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும்.
உங்கள் பார்வையில் தற்போது திரைப்படத் துறை எப்படி இருக்கிறது?
விலைவாசி அதிகமாகி விட்டது. தயாரிப்பு நிறுவனங்கள் பலவும், பெரிய, 'பட்ஜெட்'டில் படம் எடுக்க முன் வந்து விட்டன. நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சம்பளம் கோடிகளை தாண்டி விட்டது. இனி, 'லோ பட்ஜெட்' படங்கள் எடுப்பது எளிதாக இருக்காது.
நடிகருக்குள் போட்டி, பொறாமை
என்பது...
— தொடரும்