உயர் ரத்த அழுத்தம் இருந்தால், உடற்பயிற்சி செய்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையுடன், முறையாக பயிற்சி பெற்ற பயிற்சியாளரின் மேற்பார்வையில் செய்வது நல்லது.
வேறு உடல் கோளாறுகள் இல்லாமல், ரத்த அழுத்தம் 180 எம்.எம்., / ஹெச்ஜி என்ற அளவிற்கு மேல் இருப்பது, ரத்த அழுத்தம் கட்டுப்பாடாக இருந்தாலும், ஏற்கனவே ஹார்ட் அட்டாக், சிறுநீரக கோளாறு இருப்பவர்களை தீவிர உயர் ரத்த அழுத்தப் பிரிவில் சேர்க்கலாம். இவர்கள், தசைகளை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கும் தீவிர உடற்பயிற்சிகள் செய்வது கூடாது.
அதற்கு பதிலாக, 'கார்டியோ எக்சர்சைஸ்' எனப்படும் இதயத்திற்கு நன்மை செய்யும் பயிற்சிகளான நடப்பது, ஓடுவது, டிரட்மில் செய்வது, சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றை செய்து, உடலை நன்கு பழக்கிய பின், தசைகளை வலிமைப்படுத்தும் குறைந்த எடை பளு துாக்கும் 'தம்பெல்' போன்ற ஒரே இடத்தில் நின்று செய்யும் தரைதள உடற்பயிற்சிகளை செய்யலாம். பயிற்சியின் அளவையும், நேரத்தையும் சிறிது சிறிதாக அதிகரிக்கலாம்.
உடற்பயிற்சி செய்யும் போது, இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் படிப்படியாக 120, 130, 140 எம்.எம்., / ஹெச்ஜி என்று படிப்படியாக உயர்வது இயல்பு. இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் இருப்பவர்களுக்கு, 120 என்ற அளவு பயிற்சி துவக்கியதும், 150, 180, 200 எம்.எம்., / ஹெச்ஜி என்று சீரற்று உயரும். இதனால், மூச்சு வாங்கலாம்; மாரடைப்பு வரலாம்; பக்கவாதம் ஏற்படலாம்; உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.
அதிக உப்பு, கொழுப்பு, உடற்பயிற்சியின்மையுடன் சூரிய வெளிச்சம் படாமல் இருப்பதாலும், உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடு வெகுவாகக் குறையும். இதனாலும், ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு ஏற்படுகிறது. நம்மால் கட்டுப்பாட்டில் வைக்க முடிகிற காரணிகளை கண்டறிந்து, அதை கட்டுக்குள் வைத்தாலே, எதிர்பாராத இறப்புகளை 90 சதவீதம் தடுக்க முடியும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறும் சொல்லிக் கொண்டு வராது;
அறிகுறிகளையும் ஆரம்பத்தில் வெளிப்படுத்தாது. 5 - 10 ஆண்டுகள் அமைதியாக உள்ளே இருக்கும். இது தெரியாமல் சர்க்கரை என்ற விஷத்திற்கு உடம்பை பழக்குவதால், உருவாகும் கொழுப்பு அடைப்புகள் எப்போது வெடிக்கலாம் என்று காத்திருக்கும். வெடிப்பதற்கான துாண்டுதலில் ஒன்று தான் உடல், மன அழுத்தம். இதுவரையிலும் பழகாத டிரக்கிங், நீச்சல் போன்ற, நம் உடலுக்கு எந்த அளவு முடியுமோ, அதைத் தாண்டி செய்யும் போது, எதிர்பாராமல் ஹார்ட் அட்டாக் வருகிறது.
ஒரு நாளில் ரத்தக் குழாயில் அடைப்பு வராது. பல ஆண்டுகளாக நடக்கும் சிகரெட் பழக்கம் போன்ற அபாயகரமான காரணி, ஹார்ட் அட்டாக்கிற்கு வேறு எதுவும் கிடையாது. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் நம்மிடம் அதிகரித்து கொண்டே போகிறது. அதனால் ஹார்ட் அட்டாக் பிரச்னையும் அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த புதிது புதிதாக மருந்துகளும் வருகின்றன.
ரத்தக் கொழுப்பை குறைக்க, ஆறு மாதம் - ஒரு ஆண்டிற்கு ஒரு முறை புதிய மருந்துகள் அறிமுகமாகின்றன. எளிமையாக சொன்னால், குப்பையை அதிகமாக சேர்க்கிறோம். சுத்தம் செய்ய புதிது புதிதாக வழிகள் வருகின்றன. தேவைகளை குறைத்தால் குப்பையும் குறையும். வருமுன் காப்பதைக் காட்டிலும் மிகச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.
டாக்டர் ஏ.அசோக்குமார்,
இதய ஊடுருவல் சிறப்பு மருத்துவர், சென்னை