திருமாலின் துணைவியரான ஸ்ரீதேவி, பூமாதேவி, நீலாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, "யார் உயர்ந்தவர்!' என்ற பிரச்னை எழுந்தது. ஸ்ரீதேவியாகிய லட்சுமியே செல்வத்திற்கு அதிபதி என்பதால், அவளே உயர்ந்தவள் என்றும், உலகத்தில் எல்லா ஜீவன்களும் வாழ்வதற்கு ஆதாரமே பூமியாகிய பூமாதேவியே என்பதால், அவளே உயர்ந்தவள் என்றும், எங்கள் தண்ணீர் தேவதையான நீலாதேவியே உயர்ந்தவள் என்றும், தண்ணீரைப் பாலாக்கி அதில் திருமாலை உறங்கச் செய்வதால், அவளே பெரியவள் என்றும் அவரவர் தோழியர் வாதாடினர். தன்னை உயர்ந்தவள் என நிரூபிக்க, வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தங்காலமலை எனும் பகுதிக்கு வந்தாள் ஸ்ரீதேவி. தன்னையே உயர்ந்தவளாக அறிவிக்க வேண்டுமென கடும் தவம் புரிந்தாள். இவளது தவத்தால் மகிழ்ந்த பெருமாள், இவளுக்கு காட்சி கொடுத்து, இவளே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். "திரு' எனும் லட்சுமி தங்கியதால் இப்பகுதி, "திருத்தங்கல்' ஆனது. மலைக்கோவிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளன. மூலவரான, "நின்ற நாராயணப் பெருமாள்' மேல் நிலையில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் அருளுகிறாள். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.
மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருமுறை, தன் கனவில் அழகிய ராஜகுமாரனைக் கண்டாள். தன் தோழி சித்ரலேகையிடம் அவனைப் பற்றி கூறி, ஓவியமாக வரையக் கூறினாள். வரைந்த பிறகு தான், அந்த வாலிபன், பகவான் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டுமென அடம் பிடித்தாள்.
சித்ரலேகை துவாரகாபுரி சென்று, அங்கு உறங்கிக் கொண்டிருந்த அநிருத்தனை கட்டிலுடன் தூக்கிக் கொண்டு, வாணனின் மாளிகைக்கு வந்தாள். விழித்து பார்த்த அநிருத்தன், தன் அருகே அழகி ஒருத்தி இருப்பதை கண்டான். நடந்ததை அறிந்து, உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன் அவர்களைக் கொல்ல முயன்றான். அப்போது அசரீரி தோன்றி, "வாணா... இவர்களை கொன்றால் நீயும் அழிந்து போவாய்...' என ஒலித்தது. இதைக்கேட்ட வாணன், அநிருத்தனை சிறை வைத்தான். இதையறிந்த கிருஷ்ணர், வாணாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து, நின்ற நாராயணப் பெருமாள் என்ற பெயரில் இங்கேயே தங்கிவிட்டார். துவாரகையில் இருந்து கிருஷ்ணனாக வந்து, பெருமாளாக இங்கு தங்கியதால் இவ்வூரை, "தென் துவாரகை' என்பர். விரும்பும் வாழ்க்கைத்துணையை அடைய விரும்புபவர்கள், இத்தலத்து பெருமாளை வணங்கலாம். கருடனுக்கும், பாம்புக்கும் எப்போதுமே பகை. ஆனால், இங்குள்ள கருடாழ்வார் பாற்கடலைக் கடைய பயன்பட்ட வாசுகி எனும் நாகத்தை கையில் வைத்துள்ளார். எலியும், பூனையுமான தம்பதிகள் இவரை வழிபட்டால், ஒற்றுமையுடன் திகழ்வர் என்பது நம்பிக்கை. பெருமாளுடன் அன்னநாயகி (ஸ்ரீதேவி), அம்ருதநாயகி (பூமாதேவி), அனந்தநாயகி (நீலாதேவி), ஜாம்பவதி ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஜாம்பவதியை, இத்தலத்தில் தான் பெருமாள் திருமணம் செய்து கொண்டார். இங்கு வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடக்கும். உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தைக் கண்டு, நின்ற நாராயணரின் அருள் பெறுங்கள். விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் வழியில், 20 கி.மீ., தூரத்தில் திருத்தங்கல் உள்ளது. - தி.செல்லப்பா , படம்: எம். ஹரிஹர செல்வன்