* இதயமே... இதயமே...
சமீபத்தில், என் நண்பரின் அப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; நானும் உடனிருந்தேன். டாக்டர், "ஹார்ட் ப்ராப்ளம் இருப்பது போல் தெரிகிறது; எதற்கும் ஒரு ஸ்கேன் எடுத்து விடுவது நல்லது...' என்றதால், தி.நகரில் தலை மற்றும் இதயம் ஸ்கேன் எடுத்தனர். "மதியம் மூன்று மணிக்கு வாங்க... ரிப்போர்ட் கிடைச்சுடும்...' என்றனர். டாக்டர் அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தது மாலை ஐந்து மணிக்கு. மதியம் சென்று ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு, டென்ஷனுடன் காருக்கு வந்தார் நண்பர். "டாக்டர் அஞ்சு மணிக்குத் தான் வரச் சொல்லி யிருக்கார். இவங்ககிட்ட கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டேங் கறாங்க...' என்று பதட்டமாக புலம்பியபடி, கவரைப் பிரித்துப் பார்க்க, ஸ்கேன் படங்களுக்கும், அவர்கள் ரிப்போர்ட்டுக்கும் மேலாக ஒரு கார்டு இருந்தது. அதில், "வாழ்த்துக்கள் - உங்கள் இதயத்தில் பிரச்னை ஒன்றுமில்லை...' என்ற வாசகங்களும், அருகில் பொக்கே யின் படமும் அச்சிட்டிருந்தனர். மருத்துவரைச் சந்திக்கும் வரை டென்ஷனோடு காத்திருப்பதற்குப் பதிலாக, இதைப் பார்த்தவுடனேயே பிரச்னை ஒன்று மில்லை என்று, நிம்மதி அடைந்தார் நண்பர். பிரச்னை எதுவுமில்லாத ரிப்போர்ட்டுகளுக்கு, இது மாதிரி கார்டு வைப்பது அவர்கள் வழக்கமென்று அங்கே விசாரித்ததில் தெரிய வந்தது. இந்த நல்ல விஷயத்தை மற்ற நிறுவனங்களும் பின்பற்றலாம் தானே! — பி.கணேஷ், மேற்கு சைதாப்பேட்டை.
* வெந்நீர் பந்தல் வையுங்களேன் ! பரிசு ரூ.1000
குமரி மாவட்டம் - மண்டைக் காடு பகவதி அம்மன் ஆலயத் திருவிழாவுக்குப் போயிருந்தோம். தாகத்திற்கு தண்ணீர் தேடிய போது, பெரிய பந்தல் அமைத்து தண்ணீர் வழங்கிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. பருகுவதற்காக டம்ளரை வாங்கிய போது, சற்றே மஞ்சள் கலந்தாற் போன்று இளம் சூடாக இருந்தது தண்ணீர். பருகிய போது சீரக வாசனை வந்தது. இப்பகுதியில் கொதிக்கும் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு ஆறவைத்தே குடிக்கின்றனர். அதனால், தண்ணீர்ப் பந்தலிலும் சீரகம் போட்ட சுடு வெள்ளமே வழங்கப்படுகிறது. இதனால், பெருமளவில் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீரால் பரவும் நோய்கள் வர வாய்ப்பில்லை. திருவிழா நடைபெறும் எல்லா இடங்களிலும் இவர்களைப் போன்று, சீரக வெந்நீர் வழங்கப் படுமானால், நோய்கள் தடுக்கப்பட்டு விடுமே! தண்ணீர்ப்பந்தல், மோர்ப்பந்தல் வைப்போர் பின்பற்றலாமே!
— ஆ.கல்யாணி, தோவாளை.
* ஈ.மெயிலில் டிக்கெட் எடுக்கும்போது....
என் நண்பரிடம், சென்னை சென்ட்ரலில் ரயில் டிக்கெட் எடுக்கச் சொன்னேன். அவரும், ஈ-மெயில் மூலம் எடுத்துக் கொடுத்தார். "ரேஷன் கார்டு அட்டையை வைத்துக் கொள்ளுங்கள்...' என்றார். இதற்கு முன் நான் செல்லும் போது, ரேஷன் கார்டு அட்டையை ஜெராக்ஸ் எடுத்துச் செல்வேன். பரிசோதனை செய்யும்போது, ஒன்றும் சொல்ல மாட்டார்.ஈ-மெயில் மூலம் இந்த தடவை டிக்கெட் எடுத்ததால், ரேஷன் கார்டு ஜெராக்ஸ் செல்லாது என்றும், ஒரிஜினல் வேண்டும் என்றும், ஈ-மெயில் டிக்கெட்டில் உள்ள வாசகத்தை படித்து காண்பித்தார் பரிசோதகர். "ஒரிஜினல் இல்லை என்றால், 500 ரூபாய் அபராதம் கட்ட வேண்டியது வரும்...' என்றார். உடனே நான், "மன்னித்து விடுங்கள் சார்... ஏதோ அவசரத்தில் டிக்கெட் வாசகத்தை படிக்காமல் இருந்து விட்டேன். இனி, ஈ-மெயில் மூலம் டிக்கெட் எடுக்கும்போது, கண்டிப்பாக ஒரிஜினல் ரேஷன் அட்டையை கொண்டு வரு கிறேன்...' என்றேன். பரிசோதகர் நல்லவர் என்பதால், சிரித்துவிட்டு, "இனி கவனமாக இருங்கள்...' என்று சொல்லிவிட்டு சென்றார்! என்னைப் போல் வயதானவர்கள், ஈ-மெயிலில் டிக்கெட் எடுத்துக் கொண்டு வரும்போது, அவர்களுக்கும் என் நிலைமை வரக் கூடாது! என்று தான் இதை எழுதுகிறேன்.
— வீ.வீரமுடி, மதுரை.