இம்மாத முதல் வாரத்தின் வியாழக்கிழமை! நெல்லை மாவட்டம் தென்காசிக்கு அருகே உள்ள ஒரு ஊர். காலை 5.30க்கு அங்கிருந்து கிளம்பினேன். கிளம்பும் நேரம் நல்ல மழை! 120–130 கி.மீ., வேகத்தில் சென்னையை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தேன். (வழியில் ஆங்காங்கே, "ஹால்ட்' உண்டு.) உளுந்தூர்பேட்டையில் இருக்கும் மோட்டலில் 3.00 மணி அளவில் டீ சாப்பிட இறங்கினேன். அங்கிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் வந்திருப்பேன். நடு ரோட்டில் ஒரு, "ஆக்சிடெண்ட்...' ரத்த வெள்ளத்தில் கிடந்தார் நடுத்தர வயது மனிதர் ஒருவர். மோதிய வண்டியை அருகே காணோம். நாகரிக உலகில் மனித மனம் கல்லாகி, இரும்பாகி - இரக்கமில்லாமல் போய் விட்டதே என மற்றவரைப் பற்றியும், என்னைப் பற்றியும், நினைக்க வைத்த சம்பவம் இது! தூரத்தில் வரும்போதே இக்காட்சியை கண்ட நான், வண்டியின் வேகத்தை குறைத்தேன். சிலர் வண்டியை நிறுத்த சைகை காட்டினர். விபத்து காட்சியை பார்த்தபடியே வண்டியை நிறுத்தாமல் செலுத்தினேன். 7.30 மணிக்கு சென்னையில் இருக்கும் அப்பாயின்மென்ட் நினைவு ஒருபுறம்; விபத்து கேஸ்களில் உதவச் சென்று, நம் மீதே பழி போட்ட முன் அனுபவம் ஒருபுறம்... வண்டியை நிறுத்தாமல் செல்லத் தூண்டியது. என் மீதே எனக்குக் கோபமும் வந்தது. மேலும், கொஞ்ச நேரம் சென்று இருப்பேன். அரசு போக்குவரத்துக் கழக லாரி ஒன்று மிக மெதுவாகச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அந்த லாரியின் ஓட்டுனர் கை அசைத்து, என் வண்டியை நிறுத்த சைகை செய்தார். வண்டியின் வேகத்தை குறைக்குமுன்னே, லாரியில் இருந்து காவல் அதிகாரி ஒருவர் குதித்து என் வண்டியை நிறுத்தினார். வேகமாகக் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்து, "சார்... கொஞ்சம் வேகமாகப் போங்க... "கன்டைனர்' லாரி ஒன்று, ஒரு ஆளை மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது!' என்றார். எனக்காகப் பாடிக் கொண்டிருந்த, "பெரி கோமா' வாயை அடைத்து விட்டு, குளிர் சாதனத்தை அணைத்து விட்டு, கியரை மாற்றிப் போட்டு வேகம் எடுத்தேன். "அந்த ஆளை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஏற்பாடு செய்து விட்டீர்களா?' எனக் கேட்டேன். புலம்ப ஆரம்பித்து விட்டார்... "ஜி.எஸ்.டி.ரோட்டில், என் ஸ்டேஷனுக்கு 15 கி.மீ., வரை ரேஞ்ச் இருக்கு, வாரத்தில் நான்கு நாள் இரவில் தூக்கம் கிடையாது. இதே பேஜாராப் போச்சு! இவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்புவது என் கடமை இல்லை; குற்றவாளியைப் புடிக்கணும்!' என அதிகாரி வர்க்கத்தைச் சார்ந்த அவர் கூறியதும், எரிச்சல் தான் வந்தது. ஒரு வழியாக அந்த லாரியைப் பிடித்தார்; எனக்கு நன்றி கூறினார். என் மன உளைச்சல் தீரவில்லை. தவறு செய்துவிட்ட உள் உணர்வுடன், சென்னையில் இருக்கும் 7.30 அப்பாயின்மென்ட்டை உதறி, வண்டியை மீண்டும் ஸ்பாட்டுக்குத் திருப்பினேன். நான் போய்ச் சேருமுன், மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இருந்தனர். இறுகிக் கல்லாகிய இரக்கமற்ற நெஞ்சங்கள் 99 இருந்தால், ஒன்று அவற்றிலிருந்து மாறுபட்டே இருக்கிறது; அதனால் தான் மழையும் பெய்கிறது. இதுவே, இயற்கையின் நியதி என எண்ணியபடி திரும்பினேன். மிக நீண்ட நேரத்திற்குப் பிறகு, "பெரி கோமோ'வை பாட விட்டேன்!
***
அனேகமாக எல்லா இளம் பெண்களும் குறிப்பிட்ட, "செட் டயலாக்' பேசுவதையே பெருமையாக எண்ணுகின்றனர் போலும்! வழக்கமான, "டயலாக்' இப்படித்தான் இருக்கும், "என் குடும்பத்திலேயே நான் ரொம்ப வித்தியாசமானவ! துடுக்குத் தனம் ஜாஸ்தி. "வெடுக் வெடுக்' எனப் பேசி விடுவேன்... மற்ற பெண்கள் எப்பவும் டிரஸ், சினிமா, பாய் பிரண்ட்ஸ்ன்னு தான் பேசிக்கிட்டு இருப்பாங்க. எனக்கு இதெல்லாம் அறவே பிடிக்காது. ஒரு ஜெபர்சன் மக்ளின் எழுத்து பற்றியோ, மாப்சன் டோராதி கவிதை பற்றியோ, தெரியாது. சே... சே... எப்பப் பார்த்தாலும் கல்யாணம், குழந்தை பெத்துக்கறது... இதுதான் பேச்சா?' என அலுத்துக் கொள்வது போல ஆங்கிலத்தில் புலம்பித் தீர்ப்பர்.
கொஞ்சம் வித்தியாசமான இளம் பெண்ணின் டயலாக்கை சமீபத்தில் கேட்க நேர்ந்தது.
இனிமையான மாலை நேரம் ஒன்றில், சென்னையைப் போல் அல்லாத விசாலமான ஆள் அரவமற்ற ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றின் டைனிங் ஹாலில் பேசிக் கொண்டிருக்கும் போது, அரை, குறை குடம் போல் தளும்பாமல், நிறை குடமாகப் பேசினாள். ஜெபர்சனையும், மாப்சனையும் கரைத்துக் குடித்த இளம் பெண் அவள். கொஞ்சம் கூட அலட்டலே இல்லை. திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, லேசாக தலை குனிந்து, தனக்கே உரிய வேற்று நாட்டு அழகு தமிழில், "இப்போ அவசரம் இல்லே... இருந்தாலும், அப்பா, அம்மா, சொல்லும் போது நிச்சயம் உண்டு...' என்றாள்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு, அலட்டல் அல்லாத பேச்சைக் கேட்ட திருப்தி ஏற்பட்டது!
***
மதுரை செல்லும் விமானத்திற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தது ஒரு சினிமா கோஷ்டி. நேரம் அதிகாலை. ஒரு ஓரமாக நானும் அமர்ந்திருந்தேன். கறுப்புக் கலர் குட்டைப் பாவாடை, வெள்ளை நிற இறுக்கமான பனியனுடன் (அதை, "டக்–இன்' செய்து) குதிரை போல நடந்து வந்தார் நடிகை த்ரிஷா. அரை தூக்கம் இன்னும் கண்ணில் இருந்தது. எனக்கு எதிர் வரிசை இருக்கையில் அமர்ந்து, தடிமனான ஒரு, "அயன்ராண்ட்'டின் புத்தகத்தை எடுத்து முடித்த இடத்தில் இருந்து தொடர ஆரம்பித்தார். அவ்வப்போது அடிக்கண்ணால் யாராவது தன்னைக் கவனிக்கின்றனரா என்று பார்த்துக் கொண்டார்! என் அருகே அமர்ந்திருந்த இரண்டு பாலியஸ்டர் வேட்டிகள் கொஞ்சம் சப்தமாகவே கிசுகிசுத்துக் கொண்டன...
"காலைப் பாருடா... வெண்ணை மாதிரி என்னா வெளுப்பு!' என ஒரு பாலியஸ்டர் சொல்ல, "ஆமாடா...' என்றது அடுத்த பாலியஸ்டர். "வாடா... கிட்டே போய் பார்க்கலாம்...' என இருவரும் கிளம்பவும், அவர்களுடன் நானும் எழ முயன்றேன். அவர்களின் பேச்சை கேட்பதில் ஆர்வம்! ஆனாலும், அப்பட்டமாகத் தெரியக் கூடாது என இரண்டு நிமிட இடைவெளிக்குப் பின் ஒன்றும் தெரியாதது போல அவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டேன். அமர்ந்திருந்த நடிகையின் பின்பக்கம் நின்று, குனிந்து பார்த்தபடி கொஞ்சம் விரசமான கமென்டுகளை பரிமாறிக் கொண்டதுடன், அவர் படித்த ஆங்கிலப் பள்ளியின் பெயர், நடிகையின் குலம், கோத்திரம், உடன் பிறப்பு எல்லாவற்றையும் ஒருவர் மற்றவரிடமும், முதலாமவர் தப்பாக சொல்லும்போது, மற்றவர் அதைத் திருத்துவதுமாக, தமாஷாக இருந்தது. திடீரென நடிகை சரண்யா ஆடி, ஆடி வருவது தெரிய, "சரண்யா அக்கா வராங்க டோய்...' என்றபடியே மஞ்சள் கலரில் ஆர்.ஆர்.சி., மதுரை என அச்சிட்டிருந்த துணிப்பையை ஆட்டியபடியே நடிகையை நோக்கிச் சென்றனர். பக்கத்திலிருக்கும் ஆந்திராவின் தலைநகர் என்ன என்பது கூடத் தெரியாது இவர்களுக்கு... அப்புறம் தானே ஆப்பிரிக்கா பஞ்சத்தைப் பற்றி தெரியப் போகிறது. இப்படியே நடிகைகளையும், அவர்களது ஜாதகத்தையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனரே நம் மக்கள் என வருத்தப்பட்டபடி விமானம் கிளம்பும் அறிவிப்பை எதிர்பார்த்து அமர்ந்தேன்!
***
"தமிழ் எங்கள் உயிர் மூச்சு... காற்று, தண்ணீர், வெண்ணீர், புடலங்காய்...' என வீர முழக்கமிடும் ஆசாமிகள் நம்மில் ஏராளம். இவர்கள் தமிழை வளர்க்க என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர் என பட்டியல் போட்டால், பூஜ்ஜியத்திற்கு மேல் ஒரு எண் கூட எழுத முடியாது. ஒரு மொழி வளர, அம்மொழியில் எழுத்துக்கள் குறைவாக இருக்க வேண்டும் என்பது உலக அளவில் போற்றப்படும் மொழியியலாரின் ஒருமித்த கருத்து! "தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. இவற்றில் 131 எழுத்துக்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களே உள்ளன. இந்த எழுத்துக்கள் எல்லாமே பயன்படுத்தப்படுகின்றன! இதே போல தமிழ் எழுத்துக்களையும் குறைக்க வேண்டும்!' என்கிறார் சமீபத்தில் நான் சந்தித்த கல்வெட்டுகளில் உள்ள தமிழை படித்து ஆராய்ச்சி செய்யும் அறிஞர் ஒருவர்.
மாலை நேர ஓட்டல் சந்திப்பு ஒன்றில் அவருடன் பேசும்போது, "ஜெர்மானிய பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். பழங்கால நாணயங்களில் உள்ள ரோமன் எழுத்துக்களை படித்து அறியும் முறையில் எனக்கு உதவுவதாகச் சொன்ன அவர், தானும் தொன்மையான மொழி தமிழ் என்பதால் தமிழ் படிக்க விரும்பியதாகவும், பின்னர் தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன என அறிந்து, பின் வாங்கியதாகவும் கூறினார். தமிழில் எழுத்துக்களை குறைத்தால் தான் வெளிநாட்டவரும் தமிழ் படிக்க முன் வருவர். மொழி வளரும் என்பது தெரிந்திருந்தும் சில தமிழ் புலவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனரே...' என வருந்தினார்!
எனக்கு தமிழும் தெரியாது; ஆங்கிலமும் புரியாது என்ற விஷயம் அந்தக் கல்வெட்டு மொழி அறிஞருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால், அவரது கருத்தில் உள்ள உண்மை நிதர்சனமாகப் புரிந்தது எனக்கு!
***