மா.உத்தண்டராமன், சென்னை: தனித்தமிழில் இனி பேச முடியுமா?
முடியவே முடியாது... என்னை தமிழ் துரோகி என்று கூறினாலும், அதற்காக நான் வருந்தப் போவதில்லை... பிறமொழி சொற்கள் பலவும் தமிழில் இரண்டற கலந்து விட்டன... இதை, பேச்சு வழக்கில் இருந்து அகற்றுவது யாராலும் முடியாத செயல்!
-------
ஆ.விஜயபாலன், உடுமலைப்பேட்டை: உலகின் பல மூலைகளில் வசிக்கும் தமிழர்களிடம் "நெட்' முலம் நட்பு வைத்துள்ளேன். அவர்கள் தமிழில் "சாட்' செய்ய மறுக்கின்றனரே... ஏன்?
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களில் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு தமிழில் எழுதவோ, படிக்கவோ தெரியாது... அவர்கள் தமிழில் பேசுவது கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவிலேயே உள்ளது. அவ்வளவு ஏன்... இங்குள்ள படித்த இளைஞர்கள் பலருக்கும் தமிழில் தவறு இல்லாமல் எழுத எங்கே தெரிகிறது!
-------
வி.கோபி, சின்னமனூர்: படிக்காதவர்கள் முன்னேறிய அளவிற்கு படித்தவர்கள் தொழில் துறையில் முன்னேறவில்லையே... என்ன காரணம்?
தொழில் துவங்க அரசு நிறுவனம் ஒன்றின் அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன்... அவர், "படித்தவர்கள், குறிப்பாக, தொழில் கல்வி படித்தவர்களுக்கு கொடுத்த கடன் 90 சதவீதம் திரும்பி வருவது இல்லை. இதற்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்தோம். தொழில்நுட்பத்தில் அவர்களுக்கு இருக்கும் திறமை, வியாபாரம் செய்வதில் இல்லை என்பதைக் கண்டறிந்தோம். தொழில் கல்வி படித்தவர்கள் சம்பள ஆட்களாக இருப்பதே சிறந்தது!' என்றார். படிக்காதவர்களுக்கு தொழில் என்பது வாழ்வா, சாவா என்ற பிரச்னை; எனவே, தொழிலை தக்க வைத்து, துட்டும் சம்பாதித்து விடுகின்றனர். படித்தவர்களுக்கு, "இந்த மடம் இல்லேன்னா, சந்தை மடம்!' என்ற எண்ணம் மனதில் ஊன்றி இருப்பதால், துண்டை தோளில் உதறிப் போட்டு, சம்பள ஆட்களாக அடுத்தவர்களிடம் வேலை பார்க்க சென்று விடுவதே முன்னேறாமைக்கு காரணம்.
-------
எஸ்.சந்தானம், புதுச்சேரி: எதிர் சீட்டில் கால் வைக்கும் பயணிகளைத் திருத்துவது எப்படி?
நகம் வெட்டாத, பித்த வெடிப்புடன் அழுக்கும், புழுதியும் நிறைந்த அந்த கால்கள்... ஓ... அருவருப்பு... சொல்லிப் பார்க்கலாம்... நம் காலை அவர் சீட்டில் வைக்கலாம்... (வம்பு) சிரமமான காரியம்தான்.
-------
கே.கிருஷ்ணன், விருதுநகர்: திரைப்படங்களில், "சட்டத்தை நானே கையில் எடுத்துக் கொண்டேன்!' என்கின்றனரே... அதுபோல், நான் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்?
வெள்ளை அரை டவுசர் அணிய வேண்டியது வரும்; மணி அடித்தபின் மாமியார் வீட்டு களி தின்ன வேண்டி வரும்! நேரத்தைப் போக்க, இரும்பு கதவின் கம்பிகளை மீண்டும், மீண்டும் எண்ண வேண்டி வரும்!
-------
சி.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி: நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முடிவே கிடையாதா?
கடந்த காலங்களில், ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டியவர்களின் தீர்க்க தரிசனமின்மையால் பிறந்த சவலைக் குழந்தைகள்தான் பொதுத்துறை நிறுவனங்கள். எந்தக் கோணத்தில் இருந்து எதிர்ப்பு வரினும் இவற்றை தனியார் வசம் ஒப்படைத்தே ஆக வேண்டும்; அப்போது ஏற்படும் முடிவு!
-------
சி.ரமாப்ரியா, காரைக்கால்: சாலை பராமரிப்பில் தமிழகம் படு மோசமாக இருக்கக் காரணம் என்ன?
நாம் எவ்வளவோ மேல்... ஆந்திரா, ஒரிசா போய் பாருங்கள்!