* ரொமான்டிக் ஹீரோவாக கமல்!
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், தான் நடிக்கும் படத்திற்கு இறுதியாக, "மன்மதன் அம்பு' என்று, பெயர் சூட்டியுள்ளார் கமல். இப்படத்தில், ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கும் கமல், தன் உடல்கட்டையும் 30 வயது இளைஞர் போன்று மாற்றியுள்ளார். மேலும், படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதுடன், இரண்டு பாடல்களும் எழுதியுள்ளார். ஆக, "மன்மதன் அம்பு'விற்காக கூடுதல் பொறுப்புகளை சுமந்துள்ளார். இதில், கமலுடன் நடிக்கும் இன்னொரு ஹீரோ மாதவன். —சினிமா பொன்னையா.
* உற்சாகத்தில் ரம்யா நம்பீசன்!
ஆட்ட நாயகன், முறியடி படங்களில் நடித்து வந்த ரம்யா நம்பீசன், முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவாகும், "இளைஞன்' பட வாய்ப்பு கிடைத்ததால், கூடுதல் உற்சாகமடைந்துள்ளார். "தமிழில் இந்தப் படம் எனக்கு நல்லதொரு அஸ்திவாரமிடும்; இனி, தமிழில் நான் நிலையான ஆர்டிஸ்டாகி விடுவேன்...' என்கிறார். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்! - எலீசா.
* ப்ரியாமணி பில்ட்-அப்!
"நான் நடித்துள்ள, ரத்த சரித்திரம், ராவணன் ஆகிய இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில், என்னை பிரபலப்படுத்தப் போகிறது...' என்று பில்ட்-அப் கொடுத்து வருகிறார் ப்ரியாமணி. ஆனால், இப்படங்களில், "உங்களுக்கு ஹீரோயின் வேடமில்லையே...' என்று கேட்டால், "ஹீரோயின் இல்லைதான்; அதேசமயம், ஹீரோயினை விட கதைக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்துள்ளேன்...' என்று, பெருமையாக பேசுகிறார். பெருமை பீதக்கலம்; இருக்கிறது ஓட்டைக் கலம்! - எலீசா.
* மீண்டும் வருகிறார் சிந்து மேனன்!
தமிழில் நடித்த, "ஈரம்' படத்திற்கு பிறகு, காதல் திருமணம் செய்து கொண்ட சிந்து மேனன் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். "திருமணமாகி விட்டதால் இப்போது நான், "பி' கிரேடு நடிகையாகி விட்டேன்...' என்று சொல்லும் சிந்து மேனன், "ஹீரோயின் அல்லாத வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தாலும், நடிக்கத் தயாராக உள்ளேன்...' என்று தமிழ், மலையாள இயக்குனர்களுக்கு, தூது விட்டு வருகிறார். போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே! - எலீசா.
* கிலியை ஏற்படுத்தும் சாயாசிங்!
டைரக்டர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள, பேய் படம், "ஆனந்தபுரத்து வீடு!' மர்மதேசம் தொடரை இயக்கிய நாகா இயக்கியுள்ள இப்படத்தில், சாயாசிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக, பேய் வீட்டில் சிக்கித் தவிக்கும் ஒரு காட்சியில், படம் பார்ப்பவர்களே அச்சத்தில் மிரண்டு, ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு கிலியை ஏற்படுத்தும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இச்சேதியறிந்து, ஆந்திராவைச் சேர்ந்த சில மாயாஜால பட டைரக்டர்கள், சாயா பக்கம் திரும்பியுள்ளனர். கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்! - எலீசா.
* புரடியூசர் தேடும் நடிகை!
படங்களில் நடிக்கும் போதே, உதவி இயக்குனரா கவும் பயிற்சி பெற்றார் பத்மப்ரியா. இப்போது தன் மார்க்கெட் டல்லடிப்பதால், கதை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். உடனடியாக தயாரிப்பாளர் யாராவது கிடைத்தால், வேண்டப்பட்ட ஹீரோவை பிடித்து, ரெடி, டேக், ஆக்ஷன் சொல்லவும் தயாராக இருப்பதாக கூறு கிறார். ஆடி, ஓடி நிலைக்கு வந்தது! - எலீசா.
* பணம் வாங்காமல் நடித்த அனுஷ்கா!
"பிரபல தெலுங்கு நடிகைகளான பூமிகா, அனுஷ்கா இருவரும் உயிர்த் தோழிகள். இதை மெய்ப்பிக்கும் வகையில், தெலுங்கில் பூமிகா தயாரித்து வரும், "தகிடதகிட' படத்தில், கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் அனுஷ்கா. நட்புக்காக என்பதால், இதில் நடித்ததற்கு பணம் கூட பெற்றுக் கொள்ளவில்லை.— எலீசா.
* அர்ஜுன் மவுசு குறையவில்லை!
அர்ஜுனுக்கு இருந்த ஆக்ஷன் மவுசு குறையவே இல்லை. தற்போது அவர் கையில், மாசி, மெய் காண், வந்தே மாதரம், வல்லக்கோட்டை என நான்கு படங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, விஜய் நடித்த, வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபு சிவனும், தன் அடுத்த படத்துக்கு அர்ஜுனிடம் தான் கால்ஷீட் கேட்டுள்ளார். ஆக, இப்போதும் அர்ஜுன் காட்டில் அடைமழைதான்! — சி.பொ.,
* சிங்கம்புலி காட்டில் மழை!
"கோரிப்பாளையம்' படத்தில், சிறந்த காமெடியனாக உருவெடுத்துள்ள இயக்குனர் சிங்கம்புலி, இனி மற்றவர்களுக்காக வசனம் எழுதித் தர போவதில்லை என்கிறார். "என்னிடம் காமெடி டிராக் எழுதிக் கேட்பவர்கள், எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் தருகின்றனர்; ஆனால், அந்த வசனத்தை பேசி நடிக்கும் அவர்கள் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி விடுகின்றனர். அதனால், இனி என் வசனத்தை நானே பேசி, நடிக்கப் போகிறேன்...' என்று சொல்லும் சிங்கம்புலி, ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார். — சினிமா பொன்னையா.