அன்புள்ள அம்மா —
நான் கடந்த சில மாதங்களாக, வாழ்க்கையில் ஒரு பிடிப்பும், விருப்பும் இல்லாமல், மனம் நிறைய பழிவாங்கும் நினைப்புடன் இருக்கிறேன். நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து, இரவு தூக்கத்திற்கு மாத்திரையோ அல்லது மதுவோ தேவைப்படும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. இதே நிலை நீடித்தால், விரைவில் நான் ஒரு மனநோயாளியாக மாறி விடுவேனோ என அஞ்சுகிறேன்.
என் வயது 67; என் மனைவிக்கு 58. சொந்த அத்தை மகள். தன், நல்ல குணங்களால், என் வாழ்க்கை வளம் பெற உதவியாயிருந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன், தெரிந்த ஒருவருக்கு, மாடியில் ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டேன். என் வீட்டில் குடிவந்தவன், அரசு பணியில் இருப்பவன்.
அவனுக்கு வயது 55 இருக்கும். அவன் மனைவி ஒரு பள்ளிக்கூட ஆசிரியை; மிகவும் நல்லவர். சதா விரதம், நோன்பு, கோவில் என்றிருப்பாள்... மரியாதைக்குரியவர் கூட. அவனுக்கு, இவர் இரண்டாவது மனைவி. வயது காரணமோ, என்னவோ, இரண்டு பேரும் ஒன்றாக வெளியில் போக மாட்டார்கள்.
இவர்கள் குடிவந்த சில நாட்களுக்கு பிறகு, அவனைப் பார்த்து, "இவர், இறந்து போன என் அண்ணன் மாதிரி இருக் கிறார்...' என்றாள் என் மனைவி; நானும் அதை ஆமோதித்து, அப்போதே அவ்விஷயத்தை மறந்து விட்டேன்.
சில மாதங்கள் சென்ற பிறகு தான் தெரிந்தது, அந்த கயவன் ஒரு, "ஜொள்ளு' பார்ட்டி என்று. வேலைக்கு போகும் போதும், வரும் போதும், என் மனைவியை பார்த்து, சொல்லிக் கொண்டுதான் போவான். அதற்காக, பெட்ரூம், பாத்ரூம், துணி துவைக்கும் இடம் என தேடுவான். பிறகு, மொட்டை மாடிக்கு போய், என் மனைவியிடம் வழிவான்.
நாளடைவில், பேரன், பேத்தியெடுத்த என் மனைவியின் நடவடிக்கைகளில் மாற்றம் கண்டேன். "நீ வயதுக்கு ஏற்ற மாதிரி நடப்பதில்லை...' என, பலமுறை எச்சரித்து கூட பார்த்தேன்.
பல நாட்கள், இரவு 11.30 மணி வரை, அவன் வருகிறானா என எதிர்பார்த்து, வெளியில் காத்திருப்பாள். இரவு படுத்திருப்பவள், கதவு தாழ்ப்பாள் சத்தம் கேட்டால் போதும்... உடனே எழுந்து வெளியே ஓடுவாள். இதெல்லாம் எனக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. நான் இதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அவளுக்கு தெரியாமல் கவனிக்க துவங்கினேன்.
இந்நிலையில், எனக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. அதில், "சதா வேலை, வேலை என்று அலையாமல், வீட்டில் இருக்கும் அம்மையாரையும் கொஞ்சம் கவனியுங்க சார், பாவம்... இரவு முழுவதும், தூக்கம் கெட்டு, வெளியில் யாருக்காகவோ காத்துக் கிடக்கிறார்...' என்று, சற்று தரக்குறை வாக எழுதப்பட்டிருந்தது.
இந்த வயதில் இப்படி நடந்து கொண்டது, என் உள் மனதில், ஒரு பழிவாங்கும் வெறியாக மாறிவிட்டது. இது போல் ஒரு நிகழ்ச்சியால் தான், என் மனைவியின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.
முதல் வேலையாக, அந்த கயவனை வீட்டை விட்டு துரத்தினேன். இந்த விவகாரங்கள் ஏதும் அவன் மனைவிக்கு தெரியாது.
என் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இறப்பு துயரால், சில மாதங்கள் இதைப் பற்றி மறந்து விட்டோம். ஆனால், பக்கத்து தெருவில் குடிபோன அந்த கயவன், தினசரி காலை வேளைகளில், ஒரு மொபைலை பிடித்தபடி, தெருவில் நின்று, என் வீட்டை நோட்டம் விட துவங்கினான். என் மனைவியும், காலையில் இந்த நேரத்தில் மூன்று, நான்கு தடவை கடைக்கு கிளம்புகிறாள்.
என் மனைவி கூட வாழ விருப்பம் இல்லை எனக்கு. என் மனைவியோ, அழுது புலம்பி, நான் தற்கொலை செய்யப் போகிறேன் என்று நாடகமாடி, நிலைமையை சமாளிக்கிறாள். நான், குடும்ப கவுரவம், மானம், மரியாதை காற்றில் பறந்து விடுமே என மனம் வருந்தி, இதுநாள் வரை யாரிடமும் சொல்லாமல் இருக்கிறேன். ஆனால், பழிவாங்கும் எண்ணம் மட்டும் குறையவில்லை. இதற்கு நீங்கள் ஒரு அறிவுரை கூறுங்கள்.
— அன்புடன். உங்கள் சகோதரன்.
அன்புள்ள மூத்த அண்ணனுக்கு —
சஞ்சலம் கொண்ட உங்கள் இதயத்துக்கு இறைவன் சாந்தியும், சமாதானமும் அருளட்டும்!
உங்களது கடிதத்தை படித்ததும், எனக்கு கீழ்க்கண்ட ஆறு பார்வைகள் கிடைத்தன.
1. உங்களுடைய வயது 67, உங்கள் மனைவிக்கு 58. பொதுவாகவே, 45 வயது நிறைவதற்குள் பெண்களுக்கு, "மெனோபாஸ் பீரியடு' வந்துவிடும். அதன்பின், அவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் போய் விடுவர். பல பெண்கள் தாங்கள் பெண்மைக்குரிய பிரதான அம்சத்தை இழந்து விட்டதாக தாழ்வு மனப் பான்மையில் உழல்வர். ஐஸ்வர்யா ராய் கூட 60 வயது நெருக்கத்தில், ஜீரோ பர்சன்ட் செக்ஸ் அப்பீல் தான் பெறுவார்; ஆனால், உங்களுக்கோ, உங்களின் 60 வயதை நெருங்கிய மனைவி அழகாக தெரிகிறார்... மற்ற ஆண்களையும் தன் அழகால் ஈர்க்கிறார் என நம்புகிறீர்கள். இதற்கு காரணம், உங்களுக்கு, உங்கள் மனைவி மீதிருக்கும் மிதமிஞ்சிய காதல் தான். அளவில்லா காதல் சந்தேகத்தை உங்களுக்கு கிளப்புகிறது.
2. உங்களின் இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டீர்கள். ஆகையால், உங்கள் இருவருக்கும் இரண்டாவது தனிக்குடித்தன அனுபவம். 67 வயதாகியும், உங்களுக்கு தாம்பத்ய வேட்கை சிறிதும் குறையவில்லை. குழந்தை இல்லாத வீட்டில், தாத்தா துள்ளி விளையாடுவது போல, துள்ளி விளையாட துடிக்கிறீர்கள். உங்களது மனைவியோ, உங்களது ஆசைகளுக்கு இடம் கொடுக்க வில்லை. அவர் சிற்றின்ப ஊரிலிருந்து, பேரின்ப ஊருக்கு குடிபெயர்ந்து விட்டார். அவரின் மறுப்பு, உங்களுக்கு அவரின் நடத்தை மீது சந்தேகத்தை கிளப்புகிறது அல்லது அவர் நடத்தை பற்றி தவறாக யூகித்து, ரகசிய சந்தோஷப் படுகிறீர்கள்.
3.உங்களின் மாடி வீட்டுக்கு குடிவந்தவருக்கு வயது 55 இருக்கும் என்கிறீர்கள். உண்மையில், அவரின் வயது ஒன்றிரண்டு கூட இருக்கலாம்; ஒன்றிரண்டு குறைய இருக்கலாம். அவர் உண்மையிலேயே உங்கள் மனைவியின் இறந்து போன அண்ணன் சாயலில் இருக்கலாம். உடன்பிறந்த அண்ணனோடு பழகுவது போல், அவருடன் உங்கள் மனைவி பழகுவதை, சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறீர்கள். "ஜொள்ளு - கயவன்' போன்ற உங்களின் கண்ணியமற்ற வார்த்தைகள், உங்களது மனம், பாழாய் போன சந்தேகத்தால் எவ்வளவு பாழ்பட்டு போயுள்ளது என்பதை காட்டுகிறது.
4. தவறான உறவு காரணமாக மனைவியின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதால், மனைவியும் இப்படித் தான் வருவாள் என கண்மூடித்தனமாக யூகிக்கிறீர்கள். கள்ள உறவுகள், மரபியல் ரீதியாய் தொடர்வதில்லை.
5. "நமக்கு வயதாகி விட்டது; இனி பெண் களுக்குரிய கட்டுப்பாடு நமக்கில்லை. உலகின் சகல ஆண்களையும் நாம் அண்ணன்களாக, தம்பிகளாக, மகன்களாக, பேரன்களாக பாவித்து பழகலாம்...' என்ற மனோ நிலை, உங்கள் மனைவிக்கு வந்திருக்கலாம்.
6. உங்களது சந்தேகம் பற்றி, உங்கள் மனைவி யிடம் வன்முறையாய் விசாரித்ததால், அவர் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியும் இருக்கிறார். இது முரட்டு சந்தேகம் ஏற்படுத்திய பக்க விளைவே.
இனி விஷயத்துக்கு வருவோம்... உங்கள் கடித நடையை பார்க்கும் போது, நீங்கள் கீழ்நிலை அரசாங்கப் பணியில் இருந்து, ஓய்வு பெற்றவராக தெரிகிறீர்கள். நீங்கள் ஒரு குடிநோயாளியும் கூட. உங்களுக்கு மகன்கள் இருந்திருந்தால், உங் களுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையே ஆன உறவு விரிசலை, உடனிருந்து செப்பனிட்டு இருப்பர். உங்களது மனைவி கண்ணியமான பத்தினிப் பெண்ணாக தான் எனக்கு தெரிகிறார். முதிய வயது, முதிய வயது காமம், கடமையை முடித்த தனிமை, நீண்டகால குடிப்பழக்கம், கையில் தேவைக்கு அதிகமான பணம், உங்களை சந்தேக மனிதனாக்கி விட்டது.
உங்கள் வீட்டில், வாடகைக்கு குடியிருப்பவர் இரண்டு திருமணம் செய்திருக்கிறார். இரண்டா வது மனைவி சிறுவயது வேறு. சொந்த வீடு வைத்திருக்கும் உங்களுக்கோ ஒரு திருமணம் தான். அந்த மனைவியும் அவசரத் தேவைக்கு பயன்படாமல் இருக்கிறார். ஆசைக்கு உடன்படாத மனைவியையும், இரண்டு திரு மணங்கள் செய்த ஆணையும், கற்பனையில் இணைத்து பார்த்து சந்தோஷப் படுகிறீர் கள்.
"ஆல்கஹாலிக் அனானி மஸ்' போன்ற அமைப்புகள் நடத்தும் கூட்டங்களுக்கு உறுப் பினராய் சென்று வந்து, குடிப்பழக்கத்தை கட்டுப் படுத்துங்கள். தாம்பத்ய உறவு இல்லாமல் கணவனும் - மனைவியும் சந்தோஷமாக இருக்க, இறைவன் ஆயிரம் நியாயமான வழிவகைகளை உருவாக்கித் தந்துள்ளான். இருவரும் சினிமாக் களுக்கு ஜோடியாக செல்லுங்கள். மாதம் ஒருமுறை பிக்னிக் போய் வாருங்கள். மகள் கள் வீடுகளுக்கு, "ட்ரிப்' அடியுங்கள்.
நல்ல சமையல் செய்து, இருவரும் சேர்ந்து உண்ணுங்கள். உங்களுக்கு தாம்பத்ய உறவு கட்டாயத் தேவை என்றால், உங்கள் மனைவியிடம் சம்மதம் பெற்று இதம்பதமாய் முயற்சி யுங்கள். பேரன், பேத்திகளில் யாராவது ஒருவரை வீட்டோடு வைத்து, படிக்க வையுங்கள்.
மனைவியை பிரிந்து வாழ்ந்தீர்கள் என்றால், குறைந்த கால இடைவெளியில் சகல விதத்திலும் வீணாகி விடுவீர்கள். பழிவெறி, இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி; உங்களையும் கிழித்து, உங்களை நேசிப்பவரையும் காயப்படுத்தி விடும். நாற்பதாண்டு காலம் உங்களுடன் தாம்பத்யம் பண்ணிய மனைவியை இப்போது போய் சந்தேகப்படுவது, உங்கள் ஆண்மைக்கு இழுக்கு.
இத்தனை விளக்கத்தையும் மீறி, உங்களுக்கு சந்தேகம் தொடர்கிறது என்றால், குடிக்காத நேரங்களில், மனைவியிடம் ஆற அமர உட்கார்ந்து பேசுங்கள். உடல் சாராத ஈர்ப்பின் ஆபத்தை விளக்குங்கள். இரவல் அண்ணனை கத்தரித்து விடுங்கள்.
உலகின் மிகச்சிறந்த பழிவாங்கல் மன்னிப்பே. உங்களிடம் தவறு இருந்தால், உங்களை, உங்கள் மனைவி மன்னிக்கட்டும்; உங்கள் மனைவியிடம் தவறு இருந்தால், அவரை நீங்கள் மன்னியுங்கள். நம் அனைவரின் தவறுகளையும், எல்லாம் வல்ல இறைவன் மன்னிக்கட்டும்.
— என்றென்றும் அன்புடன், சகுந்தலா கோபிநாத்.