(1) ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அபராதம்?
அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன், இன்று உயிருடன் இருந்தால், அவருக்கு நியூயார்க் நூலகம் ஒன்று மிக கடுமையான அபராதம் விதித் திருக்கும். காரணம், அவர் நூலகத்தில் இருந்து எடுத்த முக்கியமான புத்தகங்களை திருப்பி தராததால் தான். நியூயார்க் நகரில் உள்ள மிக புராதனமான நூலகத்தில் இருந்து ஜார்ஜ் வாஷிங்டன் இரண்டு புத்தகங்களை படிக்க எடுத்துச் சென்றார். 220 ஆண்டுகளாக அந்த புத்தகம் திரும்பி வரவில்லை என நூலக பதிவேடுகள் தெரிவிக்கின்றன. "சர்வதேச சட்டங்கள்' என்ற புத்தகம், சர்வதேச அரசியல் நிலையை விளக்கமாக கூறியுள்ளது; இன்னொரு புத்தகம் பிரிட்டன் கீழ் சபையில் நடந்த விவாதங்களின் தொகுப்பு. இந்த இரண்டு புத்தகங்களையும், திருப்பி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அந்த புத்தகம் இந்த நூலகத்தில் வரவு வைக்கப்பட வில்லை. "ஜார்ஜ் வாஷிங்டன் கட்ட வேண்டிய அபராதத்தை நாங்கள் எதிர்பார்க்க வில்லை; மீண்டும் அந்த புத்தகங்கள் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்...' என்கிறார் இந்த நூலகத்தின் தலைவர் மாரக் பார்ட்லெட். — ஜோல்னா பையன்.
12. (2) விடாமல் துரத்தும் பறவை !
எழுபத்தி இரண்டு வயது ஆசாமி ஒருவரை, ஒரு பறவை விடாமல் துரத்தி, துரத்தி தாக்குகிறது. அதற்கு என்ன காரணம் என தெரியாமல், அவர் திணறி வருகிறார்.
பிரிட்டனில் பிரான்ஸ்கோம்பி என்ற நகரில், கிழக்கு தேவொன் என்ற ஊரில், வசிப்பவர் ஜான் டக்கர்; பறவைகள் ஆராய்ச்சியாளர்; பணி ஓய்வு பெற்றவர். இவர் வீட்டில் இருந்து வெளியே வந்தாலே, எங்கிருந்தோ, "பிசன்ட்' என்ற ஒரு பறவை அங்கு வந்து விடும். இவர் தலை, கை, கால்களை தன் நீண்ட அலகால் கொத்தும். இறக்கைகளை படபடவென அடித்து, அவர் மேல் பாய்ந்து தாக்கும். இந்த பறவைக்கு பயந்து, கைகளில் நீண்ட கையுறை அணிந்து கொள்கிறார். பெரிய, "வாக்கிங் ஸ்டிக்' ஒன்றையும் கையில் பிடித்துக் கொள்வார்.
"வீட்டின் வாசல் வழியாக இவர் எப்போது வெளியே வருவார்...' என்று கூட, அந்த பறவை தெரிந்து வைத்திருக்கிறது.
எனவே, ஜானும் அவர் மனைவியும் இப்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் பின் பக்கத்தில் உள்ள ஜன்னலை திறந்து, அதன் வழியாக குதித்து வெளியேறுகின்றனர். அப்படியும், அந்த பறவை மோப்பம் பிடித்து, அவர்கள் காரில் ஏறும் முன் தாக்க ஆரம்பித்து விடுகிறது. "ஆரம்பத்தில் பறவை எங்களிடம் விளையாடுகிறது என்று தான் நினைத்தோம்; ஆனால், இப்போது அது மிகவும் தொல்லையாகி விட்டது...' என்கிறார் ஜான். பறவை ஆராய்ச்சியாளரான இவருக்கே, இந்த பறவையின் கோபம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. — ஜோல்னா பையன்.
12. (3) ஆன்லைனில், "பேய்கள் ஏலம்' 2 லட்சம் பேர் போட்டா போட்டி!
ஆன்லைனில், சோப்பு, சீப்பு முதல் கம்ப்யூட்டர் வரை வாங்கலாம்; பேயை வாங்க முடியுமா? என்னாது பேயா... என்று டென்ஷன் ஆகிட்டீங்கல்ல... உண்மை தான். நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஆவி உட்பரி; (அவர் பெயரிலும் ஆவி!) தன் வீட்டில் பேய்கள் இருப்பதாக, பேய் ஓட்டும் பூசாரிகளை அழைத்து, இரு குப்பிகளில் தண்ணீர் பிடித்து அதில் அடக்கி வைத்தார். "இந்த குப்பிகளின் மூடியை மட்டும் திறந்து விடாதீர்கள், திறந்தால் நாங்கள் பொறுப்பல்ல; மீண்டும் வீட்டை ஆவிகள் சுற்றி வரும்...' என்று பூசாரிகள் எச்சரித்து விட்டுச் சென்றனர். கம்ப்யூட்டர் மூளையுள்ள இந்த பெண், ஒரு ஐடியா செய்தார். வெப்சைட் ஒன்றில், "என்னிடம் இரு குப்பிகளில் ஆவிகள் உள்ளன; அவற்றை ஏலம் விடத் தயார். அதிக தொகை கேட்போருக்கு தரப்படும்...' என்று விளம்பரம் செய்தார். இதை படித்து விட்டு சிலர் பயந்தனர்; ஆனால், ஏகப்பட்ட பேர் வரவேற்றனர். மொத்தம் இரண்டு லட்சம் பேர், ஏலத்தில் பங்கேற்றனர்.ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, எலக்ட்ரானிக் சிகரட் கம்பெனி உரிமையாளர் ஏலத்தில் எடுத்தார். ஏலத்தில் விட்டதும் தான் உட்பரிக்கு நிம்மதியே வந்தது."என் வீட்டில் அலைந்து கொண் டிருந்த வரை, எனக்கு இந்த ஆவிகளால் தூக்கமே இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறையில் பொருட்களை அலங்கோலப் படுத்தி விடும்; சில சமயம், அமைதியாக இருக்கும். என்னால், அவற்றுடன் நட்பாக போக முடியவில்லை. குப்பிகளில் அடைத்த நாளில் இருந்து, எந்த சத்தமும் இல்லை. ஆனால், குப்பிகளில் தண்ணீர் அலைந்து கொண்டே இருக்கும்; ஆவிகள் படுத்தும் பாடு தான் என்று உணர்ந்தேன்!' என்றார் உட்பரி. இதில் தமாஷ் என்னவென்றால், இதை ஏலத்தில் வாங்கியவர் , உள்ளூர் பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? "என்னிடம் இரு ஆவிகள் உள்ளன. அவற்றை எந்த வழியில் பயனுள்ளதாக செய்ய முடியும் என்பதற்கு, நீங்கள் ஐடியா தர முடியுமா? தந்தால் பரிசு உண்டு!' உங்களிடம் ஐடியா இருக்கா? — ஜோல்னா பையன்.