நவீன தொழில்நுட்பம்
நன்னீர் மீன் வளர்ப்பினை ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் அடிப்படையில் மேற்கொண்டால் நல்ல வருமானம் ஈட்டிடலாம். மீன் வளர்ப்புடன் நெற்பயிர், கால்நடைகள் மற்றும் கோழி, வாத்து ஆகிய பறவையினங்களையும் சேர்த்து வளர்த்திட்டால் கூடுதல் வருமானம் பெற்றிடலாம் என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து மீன், கால்நடை, கோழி, வாத்து போன்றவைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம் அதிகலாபம் பெறலாம்.
நெற்பயிரோடு மீன் வளர்ப்பு: நெல் வயல்களில் நாற்று நட்டது முதல் அறுவடை வரை நெற்பயிரோடு மீன் வளர்த்தல் முறை, நெல் அறுவடைக்குப் பின் மழை காலங்களில் பெருமளவு நீர் வயல்களில் நிரப்புவதால் அவற்றில் மீன் வளர்த்தல் மற்றொரு முறை. பொதுவாக வயல்களில் நெல், உளுந்து, கேழ்வரகு என்ற பயிர் சுழற்சியையே நாம் அறிவோம். ஆனால் வெவ்வேறு இடங்களின் சூழ்நிலைக்கேற்ப ஒருமுறை நெல்லும் மறுமுறை மீனும் வளர்த்து நிலத்தையும் நீரையும் முழுமையாகப் பயன்படுத்துதல் ஒரு புதுமுறை சுழற்சி எனலாம். இம்முறை பயிர்- மீன் சுழற்சியால் அதிக பயனடைவதோடு பயிர்களை தாக்கும் பூச்சி புழுக்களையும் களைகளையும் கட்டுப்படுத்தலாம்.
நெல்வயல்களில் வளரும் மீன்கள் நிலத்தை தொடர்ந்து கிளறிவிடுவதோடு, மீனின் கழிவில் நிறைந்துள்ள தழைச்சத்து பயிர்களுக்கு தொடர்ந்து கிடைக்கின்றது. நெல் மணியோடு விலை குறைந்த புரதம் நிறைந்த மீனும் கிடைப்பதால் புரதப்பற்றாக்குறை நீங்குகிறது.
நெல்லையும் மீனையும் சேர்த்து வளர்க்க, விளையும் வயல்களில் குறைந்தது நான்கைந்து மாதங்களாவது நீர் தேங்கி இருக்க வேண்டும். இவ்வகை வயல்களின் வரப்புகள் உறுதியாகவும் உயரமாகவும் இருப்பது அவசியம். வயலின் பள்ளமான பகுதிகளில் ஆழமான குளங்களும் அவற்றிலிருந்து பிரிந்து செல்லும் பல வாய்க்கால்களும் அமைத்தால் வயலின் நீர் குறைந்து தரைமட்டத்தை அடையும் காலங்களில் மீன்கள் மடிந்துபோகாமல் வாய்க்கால்கள் வழியாக குளத்தை வந்தடைந்து பிழைக்கக்கூடும். வாய்க்கால்கள் 50 செ.மீ. அகலமும், 30 செ.மீ. ஆழமும் கொண்டதாய் இருக்க வேண்டும். வயலுக்கு நீர் பாய்ச்சும் வழியின் மூலமாகவும், வெளியேறும் வழி மூலமாகவும் மீன்கள் தப்பிச்செல்வதை தடுக்க வலைகளைப் பொருத்த வேண்டும்.
மேற்கூறிய வசதிகளைக் கொண்ட வயல்களில் உறுதியான வேர்களுடன் குறைந்த வெப்பத்தையும், தேங்கி நிற்கும் நீரையும் தாங்கக்கூடிய நீண்ட காலப்பயிர்களை பயிரிடலாம். நெற்பயிரின் நடவுக்குப் பின் விரலளவு மீன் அல்லது அதற்கு மேல் வளர்ந்த மீன்களை நெல்வயல்களில் எக்டருக்கு 2000 வரை இருப்பு செய்யலாம். இத்தகைய பயிர் வகைகளை பயிரிட்டால் நான்கைந்து மாதங்களில் எக்டர் ஒன்றுக்கு 500 கி.கி. மீன்கள் கிடைக்கிறது. இம்முறையில் நெற்பயிர்களுடன் சாதாக் கெண்டை, திலேப்பியா, விரால் போன்ற மீன் இனங்களையும் நன்னீர் இறால்களையும் வளர்த்தெடுக்கலாம். (தகவல்: -பா.கணேசன், உதவி பேராசிரியர், வெ.பழனிச்சாமி, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி-630 206. 04577-264 288.)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.