அம்மாவுக்காக...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2011
00:00

கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சுதா. அம்மா திலகத்துக்கு, காய்ச்சல் விட்டபாடில்லை. கிழிந்த பாயில், துவண்டு படுத்திருந்தாள். அதிக காய்ச்சலில், கண் திறக்க முடியாமல் கிடந்தாள்.
நொய் கஞ்சி காய்ச்சி, வலுக்கட்டாயமாக, அரை டம்ளர் குடிக்க வைத்து, மாத்திரையை போட்டு படுக்க வைத்திருந்தாள் சுதா.
அவளுக்கு நினைவு தெரிந்து, நோய் என்று அம்மா ஒருபோதும் படுத்ததில்லை. எப்போதாவது, தலைவலி, காய்ச்சல் வரும். பெட்டிக் கடையில் ஒரு மாத்திரையை வாங்கிப் போட்டு, வேலைக்கு கிளம்பி விடுவாள்.
""ஏம்மா... உடம்புக்கு முடியாத நிலமையிலும், வேலைக்கு போகணுமா? ஒரு நாளைக்காவது ரெஸ்ட் எடுத்துக்கோயேன்...''
""ஓடிக்கிட்டே இருக்கணும் சுதா... முடியலைன்னு படுத்தால், நோய்க்கு பலமாயிடும்; அதுக்கு, இடம் கொடுக்கக் கூடாது,'' என்று, கூந்தலை அள்ளி முடிந்து, முகத்தை அலம்பி, துடைத்து, புடவையை உதறி கட்டி, ஒரு வாய் தண்ணீர் குடித்து, வீட்டு வேலைக்கு கிளம்பி விடுவாள்.
சமீப காலமாக அப்படி முடிவதில்லை. ஏதாவது, ஒரு வியாதி வந்து, படுக்கையில் தள்ளி விடுகிறது.
நாலு வீட்டில் துணி துவைத்து, பத்துப் பாத்திரம் தேய்க்கிறாள்.
காலையில் போனால், வீடு திரும்ப இரவாகி விடும். ஒவ்வொரு வீடும், அரை கிலோ மீட்டர், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. மத்தியானத்தில் வீட்டுக்கு வந்து போவது, எல்லா நாட்களிலும் முடிவதில்லை. சுழன்று, சுழன்று உழைத்தாலும், மாசம், 2,000 ரூபாய் தான் வரும்.
அவளைப் போன்றவர்கள், குடிசை வீடுகளில், குறைவான வாடகையில் தான் குடியிருப்பர். திலகமும், வந்த புதிதில், குடிசை வாசம் தான். சுதா, பத்தாவது போன போது தான், படிக்கிற மகளின் வசதிக்காக, எழுநூறு ரூபாயில் வீடு எடுத்திருந்தாள்.
எஞ்சிய பணத்தை, மகளின் படிப்பு செலவுக்கு கொஞ்சமும் ஒதுக்கினாள். வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும் பழையதை சாப்பிட்டு, வயிறு நிறைத்துக் கொண்டிருந்தாள்.
கட்டிய கணவன், கைக் குழந்தையோடு நட்டாற்றில் விட்டு போய்விட்ட நிலையில், தன் மகளுக்காகவே உயிரை வைத்துக் கொண்டு, உடம்பை உருக்கிக் கொண்டிருக்கும் தாயை பார்க்க, துக்கமும், அனுதாபமும் பொங்கியது சுதாவுக்கு.
போர்வையை இழுத்துவிட்டு, பக்கத்து வீட்டு அம்மாவிடம், ""அம்மாவை கொஞ்சம் பார்த்துக்கங்க... பரிட்சை எழுதிவிட்டு சீக்கிரம் வந்துடறேன்,'' என்று சொல்லி, புறப்படும் போது, மொபைல் போன் ஒலித்தது.
எடுத்து, ''ஹலோ...'' என்றாள்.
""வேலைக்காரி திலகம் இருக்காளா...'' என்றது காட்டமான குரல். அது, பேங்க்காரம்மா என்பது தெரிந்தது...
""அவங்களுக்கு உடம்புக்கு முடியல... இன்னைக்கு...'' என்று சொல்வதற்குள், ""நீ யாரு, அவ பொண்ணா... என்னைக்குத்தான் உன் அம்மாவுக்கு உடம்பு நல்லா இருந்திருக்கு. சம்பள தேதி அன்னைக்கு பொறுப்பா வர்றா... அடுத்த நாள், கை வலி, கால் வலின்னு காரணத்தைச் சொல்லி, அரைகுறை வேலை பார்த்து, கணக்கு பண்றாள்.
""ஒரு வீட்டுல வேலை பார்த்தா, சீரா இருக்கும். பத்து வீட்டுல தலையை காட்டி, பணம் சம்பாதிக்க அலைஞ்சா, அப்படித்தான் ஆகும்... மத்த நேரம் எப்படியோ, பாதி வேலைய நான் செய்து ஒப்பேத்திகிட்டிருந்தேன். இன்னைக்கு வீட்ல விஷேசம். எக்காரணம் கொண்டும் மட்டம் போடக் கூடாதுன்னு, ஒரு வாரத்துக்கு முன்னிருந்து சொல்லிக்கிட்டிருக்கேன். தலைய, தலைய ஆட்டிட்டு, இப்ப மட்டம் போட்டால் என்ன அர்த்தம்...
""வேலை மலையாய் குவிஞ்சு கிடக்கு... முன்கூட்டி எந்த தகவலும் இல்லை. நானாக பேசினால், கதை சொல்ற... உங்களுக்கெல்லாம் பாவம் பார்த்தால், ஆறு மாசம் பாவம் வந்து என் காலை சுத்துது. ஓழுங்கா வர்றதுன்னா வரச் சொல்லு... இல்லைன்னா வர வேணாம்ன்னு சொல்லிடு...'' என்று கொதித்துவிட்டு, தொடர்பை துண்டித்தார்.
அடுத்தடுத்து, வேலை செய்யும் வீடுகளிலிருந்து அழைப்பு வந்தபடி இருந்தது... ஓரு வீட்டிலிருந்து நேரில் வந்து, ""10:00 மணிக்கு ஊருக்குப் போறோம்... அதுக்குள்ள வேலைக்காரம்மாவை அனுப்பி வை,'' என்று உத்தரவிட்டு போயினர்.
சுதாவுக்கு தலை சுற்றியது. பெருமூச்சு விட்டபடி, புத்தகங்களோடு புறப்பட்டாள்.
சுரீரென்று ஜன்னல் வழியாக வெயில் உறைக்கவும், திடுக்கிட்டு எழுந்தாள் திலகம்.
"கடவுளே... இத்தனை நேரம் தூங்கி விட்டேனா...' - பதறி எழுந்தாள்.
ஒரு நாள் லீவுக்கே ஏசுவர்... இன்னைக்கும் போகலேன்னா... அதிலும், அந்த பேங்க் காரம்மா வீட்டில், இன்று விசேஷம் வேறு.
சுற்றிலும் பார்த்தாள். காய்ச்சிய கஞ்சி, தட்டு போட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல், டம்ளர் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் மாத்திரை பட்டை, ரொட்டி பாக்கெட்டு.
எல்லாம் தயாராக வைத்து, குழந்தை காலேஜுக்கு போயிருக்கிறாள். அங்கே அவளுக்கு, மனம் நிலை கொள்ளுமா... அம்மா மீதே நினைப்பாயிருக்கும்.
சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்தில், சுதாவின் பூவாய் மலர்ந்த புன்னகை முகத்தை பார்த்ததும், தெம்பு வந்தது.
"எவ்வளவோ பட்டாச்சு... இன்னும், இரண்டு வருஷம்... டிகிரி முடிச்சுட்டா போதும். அது வரைக்குமாவது, இந்த உடம்புக்கு ஏதும் ஆகாதிருக்க வேண்டும் கடவுளே...' என்றபடி எழுந்து, வாய் கொப்பளித்து, நீராகாரம் குடித்தாள். மாத்திரையை எடுத்து முடிந்து, கதவை பூட்டிவிட்டு, சேலைத் தலைப்பை தலையில் போட்டு, தெருவில் இறங்கினாள்.
நடக்க முடியவில்லை; தள்ளிற்று... எப்படியோ சமாளித்து, நடந்தாள்.
பேங்க்காரம்மா வீட்டை அடைய, இருபது நிமிடங்களாயிற்று.
"கத்துவாங்களே... என்ன சமாதானம் சொல்வது...' என்று யோசித்தபடி, வீட்டு படியேறும் போது, ""ரொம்ப முடியாத போது, எதுக்கு வந்த... ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே...'' என்று அதிசயமாய் கேட்டாள் அந்த அம்மா.
""வேலைகள் நிறைய இருக்குமே அம்மா?''
""அதான், உன் மகள் வந்து செய்துக்கிட்டிருக்காளே...'' என்றாள்.
திலகத்துக்கு புரியவில்லை; காதில் பஞ்சடைத்தது போல இருந்தது.
""அவள் காலேஜுக்கு போயிருக்காம்மா... இன்னைக்கு அவளுக்கு பரிட்சை...'' என்று சொல்லிக் கொண்டே, வீட்டு கிணத்தடிக்கு வந்தவளுக்கு, பகீர் என்றது.
அங்கே, குவிந்து கிடந்த பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்தாள் சுதா. திலகம் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள். மிகப் பெரிய ஏமாற்றத்தால் தாக்கப்பட்டவள் போல், வெளிறிப் போயிருந்தது அவள் முகம். கண்களில் நீர் வற்றிப் போனது போல் வெறுமை. காய்ச்சல் அதிகரித்திருந்தது.
சுதா, காலை மடக்கி உட்கார்ந்து, சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்தாள்.
""முடியலைம்மா... உன் கஷ்டத்தை என்னால சகிக்க முடியல. எனக்கு தெரியும்... ஒவ்வொரு வீட்லயும், நீ எவ்வளவு பாடு எடுக்கறேன்னு... அவங்க சம்பளம்ன்னு கொடுக்குறதுக்கு, இரண்டு மடங்கா உழைக்கிற. அப்படியிருந்தும், கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாமல், உன்னை திட்டுறதும், நடத்தறதும் பார்க்க சகிக்கல.
""இந்த நேரத்துல உனக்கு உதவியாயில்லாமல், வேறு எந்த காலத்துக்கு உதவி, என்ன பயன்? உன்னை இவ்வளவு சிரமப்படுத்தி நான் காலேஜ்ல படிச்சு, கலெக்டராவா ஆகப் போறேன். படிச்ச எல்லாருக்கும் வேலை கிடைச்சுடுதா... டிகிரி முடிச்ச எத்தனையோ பெண்கள், இதே, 2,000 ரூபாய்க்குத்தான் வேலை பார்க்கறாங்க... அதுக்கு, இப்பவே நான் ஏதாவது ஒரு கடைக்கு வேலைக்கு போனாலும், அந்த, 2,000 ரூபாய் கிடைக்கும். உன்னைப் போல நானும், நாலு வீட்டு பாத்திரம் தேய்ச்சால் கூட, அந்த பணம் கிடைக்கும். உன் கஷ்டம் கொஞ்சமாவது குறையும்மா...'' என்றாள்.
""இருட்டுல விளக்கு கூட போடாம, கதவை திறந்து வச்சுக்கிட்டு என்ன பண்றாளுவ தாயும், மகளும்...'' என்றபடி வந்த அண்டை வீட்டு பாட்டி, சுதாவிடம், ""என்னங்கடி... ஆளுக்கொரு சுவத்துல சாய்ஞ்சுகிட்டு, கப்பல் கவுந்தாப்ல உட்கார்ந்திருக்கீங்க... என்ன நடந்தது...'' என்றாள்.
""கேளுங்கம்மா... இவ, இனிமே படிக்க மாட்டாளாம். எனக்கு உதவியா, வீட்டு வேலை செய்ய வரப் போறாளாம். காலேஜுக்கு போறேன்னு சொல்லிட்டு, வீட்டு வேலைக்கு போயிருக்கா... என் பாரத்துல, பங்கு போட்டுக்குறாளாம்; இனி, படிக்க போகப் போறதில்லையாம்... அந்த சந்தோஷத்துல மெய் மறந்து கிடக்கிறேன்... பேச வார்த்தை வரலைம்மா...''
""ஏண்டி... எதுக்கு இப்படி நொந்து போற... காலையில் நீ இருந்த இருப்பைப் பார்த்து, மனசு கேட்காம ஏதாவது செய்திருப்பாள். நீ ஒரேயடியா தலைல கை வச்சுக்கணுமா... நல்ல பொண்ணுங்க...'' என்றபடி விளக்கு போட்டாள்.
""எழுந்திரிங்க ரெண்டு பேரும். நீ சமையலை கவனி சுதா... இவளுக்கு, போன ஜுரம் திரும்ப வந்துட்டாப்ல இருக்கு. நான் அவளை கூட்டிக்கிட்டு போறேன்... ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துகிட்டு உட்கார்ந்திருந்தால், விடியாது. எழுந்திருங்க ரெண்டு பேரும்...'' என்று அதட்டினாள். அவள் பேச்சு, அவர்களை எழுப்பியது.
டாக்டரிடம் போய் வந்த திலகம், அப்படியே படுத்து விட்டாள்.
""இந்தாடி சுதா... இப்படி வா...''
""என்ன பாட்டி...''
""ஊசி போட்டிருக்கு. கொஞ்சம் தூங்கி எழுந்ததும், ரொட்டி கொடுத்து, மாத்திரை கொடு. அப்புறம் ஒரு சமாச்சாரம்... இப்படி பண்ணலாமாடி நீ... உம் மனசு கேட்காம தான், வீட்டு வேலைக்கு போயிருப்ப... அதை தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா, இனி படிக்க போக மாட்டேன்னு சொல்லி, அவ நெஞ்சுல நெருப்பு அள்ளி கொட்டிட்டீயே, தப்பில்லையா?
""உன்னை அந்த கோலத்தில் பார்க்கவா, உன் அம்மா, உயிரை உருக்கி உழைக்கிறாள். இத்தனை வருஷம் படாத கஷ்டத்தையா, இன்னைக்கு படறாள். வெறும் வயித்துப் பாட்டுக்குன்னு நினைச்சிருந்தால், அவள் ஏன் உன்னை படிப்புல போடறாள். சின்ன புள்ளையாயிருக்கும் போதே, உன்னைத் தன்னோடு அழைச்சிட்டுப் போய், வேலைக்காரியா துணைக்கு வச்சிக்கிட்டிருக்க மாட்டாளா... அவ மனசை புரிஞ்சுக்கலையே...
""அவள் பிறந்த வீட்லயும் சுகப்படலை, கணவனாலும் சுகப்படலை. உன்னாலதான், ஒரு நல்ல நிலைக்கு வரணும்ன்னு, மனசுல வைராக்கியம் வச்சுக்கிட்டு, பாடுபட்டுக்கிட்டிருக்காள். வீட்டு வேலையை விரும்பியா செய்றாள். வேற வேலை தெரியாது; கிடைச்சதை செய்றாள். நீ படிச்சு, பெரியாளாகி, பெரிய வேலையில் சேர்ந்து, கை நிறைய சம்பாதிக்கணும். உன் வீட்ல வந்து, உன் சம்பாத்தியத்துல, ஒரு பிடி சோறாவது தின்னுட்டு சாகணும்ன்னு ஆசைப்படறாள்.
""உன்னை வச்சு தானும் உயரலாம்ன்னு அவள் நினைக்கிறாள். நீ என்னடான்னா, அதை புரிஞ்சுக்காம, அவளைப் போல நீயும் வேலைக்காரியா வேன்னு சொல்றீயே... அம்மாவுக்கு இப்போதைக்கு உதவறது, சந்தோஷமா வச்சிக்கிறது பெருசா, காலம் பூராவும் சந்தோஷமா வச்சிக்கிறது பெருசான்னு யோசி...''
""யோசிச்சுட்டேன் பாட்டி... இனிமே அவங்க வருத்தப்படற மாதிரி நடக்க மாட்டேன். தொடர்ந்து படிச்சு, அவங்க கனவை நிறைவேத்துவேன்...'' என்று விசும்பினாள் சுதா.
""அப்படி சொல்லுடி என் ராசாத்தி...'' என்று நெகிழ்வோடு அணைத்துக் கொண்டாள், அந்த பாட்டி. அவர்கள் பேசிக் கொண்டதை படுக்கையிலிருந்தபடி கேட்ட திலகத்துக்கு, அந்த நொடியே நோய் விட்டுப் போனது போலிருந்தது.
***

- சுப. பூபதி ராஜா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seba - dindigul,இந்தியா
03-செப்-201111:18:29 IST Report Abuse
seba எக்சலன்ட் ஸ்டோரி
Rate this:
Share this comment
Cancel
prabhu - tirunelveli,இந்தியா
03-செப்-201109:54:43 IST Report Abuse
prabhu nice ஸ்டோரி...
Rate this:
Share this comment
Cancel
ராஜா - குளித்தலை,இந்தியா
03-செப்-201109:19:22 IST Report Abuse
ராஜா அருமையான கதை .... final touch super.. tears shed from my eyes.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X