பக்தியுடன் பதில்கள் | குமுதம் பக்தி | Kumuthampakthi | tamil weekly supplements
பக்தியுடன் பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஆக
2011
00:00

"ஹரி' என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?
"ஹரி' என்றாலும் "ஹரன்' என்றாலும் "அபகரிப்பவன்' என்றுதான் அர்த்தம். "பக்தர்களிடம் உள்ள பாவங்களை, தீயவற்றை பகவான் அபகரிக்கிறான் (நீக்குகிறான்)' என்பது பொருள்.

நானாக எனக்குப் பிடித்த இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்து வருகிறேன். இது எனக்கு நன்மையைத் தருமா?
நாமாக இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்வது நல்லதுதான். அதைவிட ஞான குரு ஒருவரிடம் மந்திரதீட்சை பெற்று ஜபம் செய்வது மேலும் சிறந்தது.

தியானம் பற்றி இரண்டு வரியில்...?
சூரியன் உதிப்பதால் புற இருள் நீங்குவது போல, இறைவனை தியானம் செய்வதால் நமது அக இருள் நீங்கும்.

"பஞ்சகவ்யம்' சிவ பூஜையில் சிறப்பிடம் பெற்றிருப்பது ஏன்?
பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமியம் ஆகிய ஐந்து பொருள்களும் சேர்ந்தது என்ற பொருளில் "பஞ்சகவ்யம்' என்ற சொல் வழங்கப் பெறுகிறது. இதுவே "ஆனிரை ஐந்து' என்றும், "கோ' எனப்படும் பசுவிடமிருந்து கிடைக்கும் செல்வம் என்ற பொருளில் "கோநிதி' என்றும் கூறப்படும்.
பசுவின் பால், சந்திரனின் இருப்பிடம், தயிர், வாயு பகவானின் இருப்பிடம், நெய், சூரியனின் இருப்பிடம், சாணம், அக்கினி பகவானின் இருப்பிடம், கோமியம் வருண பகவானின் இருப்பிடம் என்று கூறுவர்.
இவ்விதம் பஞ்சகவ்யம் தேவர்களின் வாசஸ்தலம் என்பதால், அதை சிவ பூஜைக்குப் பயன்படுத்துவது சிறப்புக்கு உரியதாயிற்று.

இறைவனை அறிவது எப்படி?
இறைவன் அருளால் அன்றி அறிய இயலாதவன் இறைவன். அவன் காட்டாமல் அவனைக் காண முடியாது; அவன் உணர்த்தாமல் அவனை நாம் உணர முடியாது.
"அவன் அருளாலே அவன்தாள் வணங்கி' என்கிறது திருவாசகம்.
இறைவன் அருளால்தான் அவன் தாளை நாம் வணங்க முடியும் என்பதை, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் இவ்விதம் கூறுகிறார்.
"இறைவன் தமது ஒளியைத் தாமே தமது முகத்தின்மீது ஒரு முறை திருப்புவாரானால், அவரை நாம் காண முடியும். போலீஸ்காரன் இறவு வேளையில் கையில் டார்ச் விளக்கை வைத்துக் கொண்டு சுற்றுகிறான். அவனுடைய முகத்தை யாரும் பார்க்க முடிவதில்லை. ஆனால் அந்த விளக்கின் ஒளியால், அவன் மற்றவர்களின் முகத்தைப் பார்க்க முடிகிறது; மற்றவர்களும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொள்ள முடிகிறது. யாராவது போலீஸ்காரனைப் பார்க்க விரும்பினால், அவனிடம் சென்று, "ஐயா, தயவு செய்து விளக்கை உங்கள் முகத்தின் பக்கமாக ஒருமுறை திருப்புங்கள். உங்களைப் பார்க்க விரும்புகிறேன்' என்று கேட்க வேண்டும். "பகவானே! ஞானஒளியைக் கருணைகூர்ந்து உங்கள்மீது ஒருமுறை திருப்புங்கள், நான் உங்களை பார்க்கிறேன்' என்று பிரார்த்தனை செய்.'

கோயில்களில் தெய்வத் திருவுருவங்களில் நாம் காணும் அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம் ஆகியவற்றுக்கு விளக்கம் வேண்டும்?
ஆலயங்களிலும், தெய்வத் திருவுருவப் படங்களிலும் உள்ள கடவுள்களின் கை அமைப்பு பற்றிச் சொல்லும்போது அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம் ஆகிய சொற்களை நாம் பயன்படுத்துகிறோம்.
இறைவன் அல்லது இறைவியின் வலக்கை விரல்கள் மேல்நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் நிலையிலும் இருப்பது அபய ஹஸ்தம் அல்லது அபய முத்திரை எனப்படும். இதில் இறைவன் அல்லது இறைவி தன் எதிரில் நின்று தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, "நான் உங்களுக்கு அடைக்கலம் தருகிறேன். நான் உல்களைக் காப்பாற்றுகிறேன், நான் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை; கவலைப்பட வேண்டியதில்லை' என்று உணர்த்தும் கருத்துள்ள அடங்கியுள்ளன.
இறைவன் அல்லது இறைவியின் இடது உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களின் பக்கமும், விரல்கள் திருவடிகளைச் சுட்டிக்காட்டும் நிலையிலும் இருக்கும் வடிவம் வரத ஹஸ்தம் அல்லது வரத முத்திரை எனப்படும். இதில் இறைவன் அல்லது இறைவி, "என் திருவடிகளை நீங்கள் சரணடைந்தால், அனைத்து நன்மைகளையும் அடைவீர்கள்; முழுமை பெறுவீர்கள்' என்று உணர்த்தும் கருத்துகள் அடங்கியுள்ளன.

கடவுளின் நண்பன் யார்?
நேர்மையான மனிதன்தான் கடவுளின் நண்பன். ஏனென்றால் அவன் கடவுளைப்போலவே இருக்கிறான்.
நல்லொழுக்கங்களுடன் நேர்மையாகவும், உலக நன்மைக்காகவும் உழைப்பவர்களுக்கு - தெய்வங்கள் தாங்களாக வரிந்து கட்டிக் கொண்டு ஓடி வந்து உதவி செய்வார்கள்.
"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும்.' (குறள் - 1023)

இறைவனை வழிபடுவதற்குப் பல முறைகள் உள்ளன. இவற்றில் மேலான் வழிபாடு எது?
மற்றவர்களுக்குத் தீமை செய்யாமல் நன்மை செய்வதுதான், இறைவனுக்கு நாம் செய்யும் மேலான வழிபாடாகும்.

"சிவன்' என்றால் என்ன?
சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்பது பொருள்.
"அன்பே சிவம்' என்று திருமூலரின் திருமந்திரம் கூறுகிறது.
"சுத்த அறிவே சிவம்' என்று தாயுமானவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆன்மிகத்தில் "பணிவு' என்பதற்குரிய இடம் என்ன?
சைவ சமயம் என்பதற்கு, "தாழ்வு எனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சார்தல்' என்று, சைவ சமயத்தினர் இலக்கணம் கூறியிருக்கிறார்கள்.
இந்தத் தாழ்வு, அடக்கம், பணிவு என்பதைச் சைவ சமயத்திற்கு உரிய சிறப்பு என்று சைவ சமயம் வலியுறுத்துகிறது.
இந்தப் பணிவு என்ற ஒன்று அமையும் போதுதான், ஒரு சைவனின் வாழ்க்கை முழுமை பெற்றதாகக் கருதப்படுகிறது.
"புல்லைப் போன்று பணிவுடையவனாக இரு' என்பது, ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் முக்கிய உபதேசமாகும்.
"மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. அது பள்ளமான இடத்துக்கு ஓடிவந்து விடுகிறது. அதுபோல், இறைவன் திருவருள், தற்பெருமையும் கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. அது பணிவுள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும்' என்று, ஸ்ரீ ராமகிருஷ்ணரும் கூறியிருக்கிறார்.
பணிவு, வாழ்க்கையை உயர்த்துகிறது. பணிவின்மை வாழ்க்கையை அழித்துவிடுகிறது.
நெற்கதிர் முதிர்ந்தால் தலைசாயும் அது போல் வாழ்க்கையில் உயர உயர மனிதனிடம் பணிவும் வளர வேண்டும். வாழ்க்கையில் உயர் பெற விரும்புபவன் பணிவுடையவனாக இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் பணிவு வேண்டும் என்பதை "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
பணிவுதான் பேரழகு, சுயநலமற்ற செயல்தான் தெய்வீகம்.
பணிவு இல்லாவிட்டால் கணவன் - மனைவி உறவுகள். பெற்றோர் - பிள்ளைகள் உறவுகள், ஆசிரியர் - மாணவர் உறவுகள், அதிகாரி - பணியாளர் உறவுகள் அனைத்தும் சிதறிப்போய்ச் சமுதாயத்தில் குழப்பங்கள், போராட்டங்கள், பிரச்னைகள் உருவாகும்.

இறைவனை வணங்குவதற்கு ஏற்ற வயது எது?
விதி விலக்கின்றி எல்லா வயதினரும் இறைவனை வணங்க வேண்டும்; நற்செயல்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், நம் சொல், செயல், சிந்தனை அனைத்தும் சிவன் செயல்களாகவே விளங்கும். அத்தகைய மெய்யடியார்களுக்கும், சிவனுக்கும் வேறுபாடு இல்லை என்று சைவ சமயம் கூறுகிறது.

அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமை என்ன? வேற்றுமை என்ன?
அறுபத்துமூன்று நாயன்மார்கள் அனைவரும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்லர்; ஒரே இடத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர்; ஒரே தொழிலைச் செய்தவர்களும் அல்லர் - எனினும் சிவபக்தியால் ஒன்றுபட்டவர்கள்.
அவர்கள் அனைவரும், "திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீருடைக் கழல்கள்' என்று, சுந்தரமூர்த்தி நாயனார் கூறியதற்கேற்ப சிவனிடம் பக்தி செலுத்தி வாழ்ந்தார்கள்.

இறைவனை சுந்தரமூர்த்தி நாயனார் "பித்தன்' என்று குறிப்பிடுகிறார். இது சரியா?
சரிதான். இறைவனுக்குப் பித்து உண்டு. அடியார்களுக்கு அருள் புரிவது என்பதுதான் அந்தப் பித்து.
திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, "இறைவனைப் பித்தன் என்று சொல்வது ஏன்?' என்பதற்குத் தரும் ஒரு புதிய விளக்கம் இது:
"கங்கை மூன்று முறைதான் பிழை பொறுப்பாள். அம்பிகையோ எத்தனை தடவை வேண்டுமானாலும் பிழை பொறுப்பாள். பித்தர்கள் தாறுமாறாகச் செயல் புரிவது போல், மூன்று முறை பிழை பொறுக்கும் கங்கையைத் தலையிலும், எப்போதும் பிழை பொறுக்கும் அம்பிகையை இடப் பாகத்திலும் கொண்டதால் இறைவனுக்குப் பித்தன் என்பது பொருத்தமான பெயர்.'
எப்போதும் பிழை பொறுக்கும் அம்பிகைக்கு இறைவன் தன் தலையில் இடம் கொடுத்திருந்தால், அதை நியாயமான செயல் என்று சொல்லலாம். இறைவனோ அப்படிச் செய்யவில்லையே! அதனால் அவன் பித்தன்தான் என்பது மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் (உயர்வு நவிர்ச்சி) கருத்து.

அம்மனை "மகமாயி' என்று குறிப்பிடும் வழக்கம் சிலரிடம் இருக்கிறது. "மகமாயி' என்றால் என்ன?
"மகமாயி' என்பதற்கு "மகத்தான தாய், மகிமை பொருந்திய தாய்' என்பது பொருள்.
ஜகமாயையில் உள்ள நம்மை, மகமாயியாக இருந்து முக்திக்கு ஜகன்மாதா அழைத்தச் செல்கிறாள்.

ஸ்ரீகிருஷ்ண பக்திப் பாடல்களைப் பாடிய சூர்தாசரின் குரு யார்?
சூர்தாசரின் குருவின் பெயர் வல்லபாச்சாரியார். அருளாளர்கள் சிலர் தாங்கள் இயற்றிய பாடல்களில், ஸ்தோத்திரங்களில், நூல்களில் தங்களின் குருவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆனால் சுமார் 25 கிருஷ்ண பக்தி பாடல்களைப் பாடிய சூர்தாசர், தமது பாடல்களில் வல்லபாச்சாரியாரின் பெயரைக் குறிப்பிடவில்லை.
ஒரு சமயம் அன்பர் ஒருவர், "நீங்கள் உங்கள் குரு வல்லபாச்சாரியாரின் பெயரை, நீங்கள் இயற்றிய பாடல்களில் ஏன் குறிப்பிடவில்லை?' என்று சூர்தாசரிடம் வினவினார்.
அதற்கு சூர்தாசர், "நான் என் குருவையும் ஸ்ரீகிருஷ்ணனையும் வேறானவர்கள் என்று நினைக்கவில்லை' என்று பதிலளித்ததாக செவிவழிச் செய்தி ஒன்று கூறுகிறது.

வைணவ மரபில் பன்னிரு ஆழ்வார்களைத் தவிரவும் வேறு ஆழ்வார்கள் உண்டா?
விஷ்ணு பக்தியில் - விஷ்ணு தத்துவ ஞானத்தில் ஆழ்ந்தவர் என்ற பொருளில் "ஆழ்வார்' என்ற சொல் வைணவ மரபில் வழங்கி வருகிறது.
பன்னிரு ஆழ்வார்களைத் தவிரவும் ராமாயணத்தில் இடம் பெற்றிருக்கம் பரதன், சத்ருக்னன், விபீஷணன் ஆகியோரையும் பரதாழ்வார், சத்ருக்னாழ்வார், விபீஷணாழ்வார் என்று குறிப்பிடுவது வைணவ மரபு.
இவர்களைத் தவிர கருடனையும் பிரகலாதனையும் கருடாழ்வார், பிரகலாதாழ்வார் என்பர்.

- சுவாமி கமலாத்மானந்தர்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X