ஆப்பிள் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான ஸ்டீவ் ஜாப்ஸ், உடல்நிலை காரணமாக, அப்பதவியிலிருந்து விலகிவிட்டார். வெற்றிகரமாகச் செயல்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்களின் பட்டியலில், தாமஸ் எடிசன், கார்னீகி, ஹென்றி போர்டு மற்றும் பில் கேட்ஸ் வரிசையில் போற்றப்பட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இந்த உலகம் 21 ஆம் நூற்றாண்டில் அடி எடுத்துவைக்கும் போது, நாம் டிஜிட்டல் உலகமாக அதனை மாற்றினோம். இந்த செயல்பாட்டில், ஆப்பிள் 1 மற்றும் மேக் இன்டோஷ் கம்ப்யூட்டர்கள், ஐ-பாட் மற்றும் ஐ-பேட் ஆகியவை பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன. புதிய தொழில் நுட்பங்கள் பலவற்றைக் கொண்டு வர, ஏறத்தாழ 35 ஆண்டுகள், ஸ்டீவ் ஜாப்ஸ் தொடர்ந்து உழைத்தார்.
1977ல் அவர் கொண்டு வந்த ஆப்பிள்–ஐஐ கம்ப்யூட்டர், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதிய திருப்பத்தினைக் கொண்டு வந்தது.
2000 ஆண்டின் தொடக்கத்தில் வந்த ஐ-ட்யூன் மற்றும் ஐ-பாட், டிஜிட்டல் இசைக்கு சட்டபூர்வமான காப்புரிமை தந்தது. 2007ல் ஐ-போன் வந்த பின்னர், அதுவரை இயங்கிய மொபைல் போனின் தன்மையிலும், அனைத்து போன்களிலும், அது மாற்றத்தை ஏற்படுத்தியது.
2010ல் ஐ-பேட் வந்த போது, அனைத்து நிறுவனங்களும் தாங்களும் இதனைத் தயாரித்து அளிக்க வேண்டும் என்ற அவசரத்தைக் காட்டின. இது போல பல மாற்றங்களின் முன்னோடியாய், பல புதிய வழிகளை வகுத்த வல்லவராய், ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்தார். அவரின் புதிய முயற்சியை, தொழில் நுட்பத்தை மற்றவர் கள் உணர்ந்து, பின்பற்றி தங்களுடைய சாதனத்தையும் கொண்டு வருகையில், அவர் அறிமுகம் செய்த சாதனங்கள், உலகெங்கும் பரவி, உச்ச நிலையில் இருந்தன.
1955ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், தன் ஐந்து வயதிலேயே, தற்போது சிலிகான் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் சாண்டா கிளாரா பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்து அங்கேயே வாழத் தொடங்கினார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இடமான மவுண்டன் வியூ மற்றும் க்யூபெர்ட்டினோ ஆகிய இடங்களில் தன் வாழ்க்கையில் பெரும் பங்கினைக் கழித்தார்.
தன் கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் விட்டுவிட்டு, தன் மனதிற்குப் பிடித்தவற்றைப் படிக்கத் தொடங்கினார். இந்தியாவில் கொஞ்ச காலம் சுற்றித் திரிந்து புத்தமதக் கோட்பாடுகளைக் கற்றார். அதுவே தன் நிர்வாகத்திறனுக்குப் பெரிதும் உதவிற்று என்று பின் நாளில் கூறவும் செய்தார்.
1976 ஆம் ஆண்டு, அனைத்து கம்ப்யூட்டர் நிறுவனங்களைப் போல, குடியிருந்த வீட்டின் ஒரு பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தைத் தன் நண்பர் ஸ்டீவ் வொஸ்னியாக் என்பவருடன் தொடங் கினார். 1984 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த மேக் இன்டோஷ் கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் பிரிவில் தானாக ஒரு நல்ல இடத்தை எடுத்துக் கொண்டது. மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.
இடையே ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகி நெக்ஸ்ட் (NeXT) என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் ஆப்ஜெக்ட் ஓரியண்டட் சாப்ட்வேர் தயாரிப்பைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கியது. ஆப்பிள் நிறுவனம் தன் செயல்பாட்டில் தள்ளாடிய போது, ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்து, அதனை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பவர் ஹவுஸாக மாற்றினார். ஐ-பாட், ஐ-போன் மற்றும் ஐ-பேட் இந்த வரிசையில் வந்து, ஆப்பிள் நிறுவனத்தை 33,000 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றின.
ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த சமுதாயத்திற்கு அளித்த டிஜிட்டல் சாதனங்கள் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கின்றன. ஆனால் அவர் வழக்கம்போல் ஒரு ஜீன்ஸ் பேண்ட், கழுத்தைச் சுற்றி அணியும் வேடிக்கையான மப்ளர் ஆகியவற்றுடன், மிகவும் ஆணித்தரமாகவும், கடுமையாகவும் தன் கருத்துக்களைத் திணிக்கும் ஒரு நபராகவே வலம் வந்தார். டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கருத்தரங்கங்களில், அவர் தன் புதிய சாதனங்களை அறிமுகப்படுத்திய போது, மக்கள் மகுடிக்கு மயங்கியது போல, அப்படியே அந்த சாதனங்களை வாங்கத் தொடங்கினார்கள். சாதனங்களும் உலகைப் புதிய கோணத்தில் மக்களுக்குக் காட்டின.
தொடர்ந்து பணியாற்ற முடியாத அளவிற்கு நோயின் தீவிரம் இருப்பதால், தலைமை நிர்வாகி என்ற பதவியிலிருந்து தற்போது விலகி உள்ளார். தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் அவரைத் தலைவராகவே கொண்டுள்ளது. இதுவரை ஸ்டீவ் ஜாப்ஸ் வலதுகரமாக இயங்கி வந்த 50 வயது குக் (Cook) இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் இடத்தில், தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
தன் நோய் நீங்கி, நலமுடன் ஆப்பிள் நிறுவனம் திரும்பி, இந்த சமுதாயத்திற்கு இன்னும் பல புதிய தொழில் நுட்பத் தினையும் சாதனங்களையும் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்போம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் வழித் தடங்கள்
1976 - ஆப்பிள் நிறுவனம் தொடக்கம்
1984 - மேக் கம்ப்யூட்டர் அறிமுகம்
1985 - பின்னாளில், நெக்ஸ்ட் சாப்ட்வேர் என அழைக்கப்பட்ட நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் நிறுவனம் தொடக்கம்
1997 - மீண்டும் ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாகி
2001 - ஐ-ட்யூன்ஸ் சாப்ட்வேர் மற்றும் ஐ-பாட் அறிமுகம்.
2003 - ஐ-ட்யூன்ஸ் ஸ்டோர் தொடக்கம்
2007 - ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் அறிமுகம்
2010 - ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் அறிமுகம்
2011 - நீண்ட மருத்துவ விடுப்பு
2011 ஆகஸ்ட் - தலைமை நிர்வாகி பதவி ராஜினாமா. நிறுவனத் தலைவராக அறிவிப்பு.