நிம்மதியான வாழ்வு பெறுவோம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நிம்மதியான வாழ்வு பெறுவோம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 செப்
2011
00:00

செப். 17 - பரணி மகாளயம்!

மகாளயபட்சம் எனப்படும், 15 நாள் முன்னோர் விரத காலம் வரும், 13ம் தேதி துவங்க இருக்கிறது. இதன் முக்கிய நாளான பரணி மகாளயம், செப்., 19ல் வருகிறது. இதையடுத்து, செப்., 27ல் மகாளய அமாவாசை வருகிறது.
பரணி மகாளயத்தன்று, தீர்த்த யாத்திரை, அன்னதானம் செய்யலாம். இந்த விரதம், முன்னோர் சார்ந்தது என்பதால், கடற்கரை, நதிக்கரை தலங்களுக்கு சென்று வருவது சிறப்பானது.
சிலருக்கு, முக்கிய விஷயங்களைத் துவங்கியதுமே தடங்கல் வந்து விடும். குறிப்பாக, திருமணம், தொழில் சார்ந்த விஷயங்களில் இவ்வாறு ஏற்படலாம். சிலரை வறுமை வாட்டும்; சிலர் நோய் நொடியால் அவதிப்படுவர். சிலர் மன நிம்மதியை இழந்து, பல காலம் ஆகியிருக்கும். இதற்கெல்லாம் காரணம், இவர்கள் குடும்பத்துக்கு முன்னோர் சாபம் இருப்பது தான். இவர்கள், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் உள்ளிட்ட கடற்கரைத் தலங்களுக்கும், காசி, ஸ்ரீரங்கம் (அம்மா படித்துறை), பாபநாசம் (நெல்லை) ஆகிய நதிக்கரை தலங்களுக்கும் சென்று, முன்னோர் களுக்கான காரியங்களைச் செய்து, அங்குள்ள இறைவனையும் வழிபட்டு வந்தால் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
முன்னோர் சாபம் தீர அன்னதானமும், பசுக்களைப் பராமரித்தலும் மிகப்பெரிய கைங்கர்யம். அருகிலுள்ள முதியோர் இல்லங்கள், அனாதை விடுதிகளில் வசிப்பவர்களுக்கு அன்னதானம் செய்து வரலாம்.
இந்த நாளில் சத்சங்கம் எனப்படும், ஆன்றோர்கள் கூடும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கும், ஏற்பாடு செய்யலாம். நம் முன்னோர்களில், எல்லாருமே நல்லவர்கள் இல்லை. அவர்கள், தாங்கள் செய்த பாவங்களுக்காக நரகத்தில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பர். அவர்களை நரகத் தீயில் இருந்து மீட்க, நம் காலத்தில் ஏற்பாடு செய்தால் நமக்கும் நன்மை; மறைந்தவர்களுக்கும் நன்மை. குறிப்பாக, பகவத் கீதையின் மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தை விவரம் அறிந்தவர்களைக் கொண்டு, பொருள் விளக்கத்துடன் பாராயணம் செய்ய வைப்பது, சிறந்த கைங்கர்யம். இதனால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் அதைக் கேட்பவர்களின் முன்னோர் பலனடைவர்.
சத்சங்கத்தால் ஏற்பட்ட பலன் குறித்து, ஒரு கதையைக் கேளுங்கள்...
ஜடன் என்பவன், கெட்ட பழக்க வழக்கங்களை <உடையவனாக இருந்தான். செய்யாத பாவமே இல்லை. இதன் காரணமாக தன் செல்வத்தை இழந்தான். சம்பாதிக்க வெளியூர் சென்று பொருளுடன் திரும்பிய போது, ஒரு மரத்தடியில் தங்கினான். அங்கு வந்த திருடர்கள் அவனைக் கொன்று, பொருளுடன் ஓடி விட்டனர். அவன் செய்த பாவங்களால் நரகத்தை அடைந்தான். அங்கே அவனுக்கு முன்பே இறந்து போன, அவனது அண்ணனைக் கண்டான். அவனும், பூமியில் வாழ்ந்த காலத்தில் பாவச் செயல்கள் புரிந்தவன். இருவருமாய் தங்கள் செயல்களுக்காக வருத்தப்பட்டபடியே நரகத்தில் தரப்பட்ட வேதனைகளை அனுபவித்தனர்.
ஜடனுக்கு ஒரு மகன் உண்டு; அவன் மிகவும் நல்லவன். தினமும் பகவத்கீதை பாராயணம் செய்பவன். வெளியூர் சென்ற தன் தந்தை, கொள்ளையர்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்து, அவருக்குரிய கர்மானுஷ்டங்களைச் செய்வதற்காக காசிக்கு கிளம்பினான். செல்லும் வழியில், தந்தை கொல்லப்பட்ட அதே மரத்தடியில் தங்கினான். அங்கிருந்த படியே, கீதையின் மூன்றாவது அத்தியாயத்தை பாராயணம் செய்தான்.
அப்போது ஜடனின் ஆவி பேசியது...
"மகனே... உன் கீதை பாராயணத்தால் நான் நற்கதி பெற்று விட்டேன். இனி, நீ காசிக்கு செல்ல வேண்டிய அவசியம் கூட கிடையாது. வீடு திரும்பி, உன் பெரியப்பா மற்றும் நரகத்தில் கஷ்டப்படும் முன்னோர்களுக்காக, இந்த அத்தியாயத்தைப் பாராயணம் செய். அவர்களும் நற்கதி அடையட்டும்...' என்றான். ஜடனின் மகனும் அவ்வாறே செய்து, தன் முன்னோர்கள் அனைவரையும் கடைத்தேற்றினான்.
மனித வாழ்வில் தவறுகள் என்பது தவிர்க்க முடியாதது. நம் முன்னோர் அப்படி செய்தனர்... இப்படி செய்தனர்... அதனால் தான், அவர்களுக்கு துர்மரணம் ஏற்பட்டது என்று தூற்றிக் கொண்டிராமல், அவர்களையும் கடைத் தேற்றுவோம். அவர்கள் செய்த பாவம், நம் தலைமுறைகளையும் தொடராத வண்ணம், பரணி மகாளயத்தன்று செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வோம்; நிம்மதியான வாழ்வைப் பெறுவோம்.
***

தி. செல்லப்பா

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X