ஒழிக ஆணாதிக்கம்!
அரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் நான். சில நாட்களுக்கு முன், அவசரத் தேவை காரணமாக, பணம் எடுக்க வங்கிக்கு கிளம்பினேன். கருவூலம் செல்வதற்காக, அலுவலக கணக்காளரும் அதே நேரம் புறப்பட்டார். வாகனம் இல்லாமல் அவர் தவித்ததால், என் இரு சக்கர வாகனத்தில், அவரை அழைத்துச் செல்ல முன் வந்தேன்.
உற்சாகமாக கிளம்பியவர், நான் வண்டியை எடுத்ததும், தயங்கினார். "சார்... நான் நல்லா வண்டி ஓட்டுவேன்; பயப்படாம ஏறி உட்காருங்க...' என்று நான் அழைக்க, அவரோ, "அதில்லை மேடம்... லேடீஸ் பின்னாடி உட்கார்ந்து எப்படி வர்றது... நான் ஓட்டுறேனே...' என்று கேட்டார்.
எனக்கு வந்ததே கோபம்... போவதே ஓசி சவாரி. ஓட்டுவது ஆணாய் இருந்தால் என்ன, பெண்ணாய் இருந்தால் என்ன? ஒரு பெண் வண்டி ஓட்டி, இவர் பின்னால் அமர்ந்து பயணித்தால், என்ன தேய்ந்து விடப் போகிறார்? இந்த ஆண் வர்க்கமே இப்படித்தான். ஒரு சின்ன விஷயத்தில் கூட, பெண்கள் முன்னிலைப்படுவதை சகித்துக் கொள்வதில்லை.
"நான் தான் ஓட்டுவேன். வர்றதானா வாங்க; இல்ல, நான் போயிட்டே இருக்கேன்...' என்ற நான், அவர் மேலும் தயங்க, கிளம்பி சென்று விட்டேன்.
வறட்டு கவுரவம் பார்த்த அந்த ஆசாமி, வங்கிக்கு போக - வர, ஆட்டோ கட்டணமாக, நூறு ரூபாய் தண்டம் கொடுத்து அலைந்தது தனிக்கதை. யாருக்கு நஷ்டம்? ஒழிக ஆணாதிக்கம்!
— பாரதி கண்ணம்மா, திருநெல்வேலி.
ஞாயிறு விடுமுறை!
கழக அரசின் கைங்கர்யத்தால், "குடிமகன்' ஆன நான், சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள சுற்றுலா தலமான டார்ஜிலிங் சென்றிருந்தேன். வார நாட்களில் திறந்திருந்த மதுக்கடைகள், ஞாயிறன்று இழுத்து மூடப்பட்டிருந்தன. சுற்றுலாப் பயணிகள் கூடும் ஒரு மலை வாசஸ்தலத்தில், ஞாயிறன்று மதுக் கடைகளை மூடி இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
நம் மாநிலத்தில், "டாஸ்மாக்' கடைகள் மூடியிருக்கும் நாட்களில், கடைக்குப் பக்கத்திலேயே, கூடுதல் விலை வைத்து சரக்குகள் விற்பனை நடக்கும்; அங்கு, அந்த பிசினசே இல்லை. பெரிய மனது வைத்து, பார்களை மட்டும் திறந்து வைத்திருந்தனர்.
வேறு வழியின்றி ஒரு பாருக்குள் நுழைந்து அமர்ந்தேன். அங்கு, அதை விட ஆச்சரியம். நான் அங்கு அமர்ந்து, "தண்ணீ' அடித்த ஒரு மணி நேரமும், தனியாகத்தான் அமர்ந்திருந்தேனே தவிர, பாரில் பணியாளர்களைத் தவிர, "தண்ணீ' பார்ட்டி யாரும் வரவே இல்லை. நம்மூரில் நடக்குமா இப்படி?
நான் அங்கு தங்கியிருந்த நான்கு நாட்களில், "தண்ணீ' அடித்துவிட்டு, தள்ளாடித் தடுமாறும் ஒரு உள்ளூர் ஆசாமி கூட கண்ணில் தென்படாதது கூடுதல் ஆச்சரியம்.
— எஸ்.அகமது, சென்னை.
த்ரீ இன் ஒன் யோசனை!
எங்கள் பக்கத்து தெருவில், எங்கள் உறவினர் குடும்பம் புதியதாய் குடிவந்துள்ளதால், மரியாதை நிமித்தமாக, சந்தித்து வர சென்றிருந்தேன். அவரை, "அண்ணி' என்றே அன்புடன் அழைப்பேன். அன்புடன் வரவேற்றவர்கள், "மதிய உணவருந்தி விட்டு தான் செல்ல வேண்டும்...' என வற்புறுத்தவே, சம்மதித்தேன்.
எங்கள் அண்ணி, தன், எட்டு வயது மகனைக் கூப்பிட்டு, அருகில் உள்ள மளிகை கடையிலிருந்து, அப்பளம் வாங்கி வரச் சொன்னார். சிட்டாகப் பறந்தவன், சில நிமிடங்களில் அப்பளத்தோடும், மீதி சில்லரையோடும் வந்தான்.
என் அண்ணி, அந்த சில்லரையிலிருந்து, இரண்டு ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்தார்; எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "சொந்த வீட்டிற்கு வேலை செய்ய கூலியா?' என, அடக்க முடியாமல், அண்ணியிடமே கேட்டு விட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, "இது உங்கள் அண்ணன் கொடுத்த, த்ரீ இன் ஒன் யோசனை...' என்றார்.
அதாவது, வீட்டில் உள்ள குழந்தைகளைச் சிறு, சிறு வேலைகள் வாங்கும் போது, அதற்கு உண்டான சிறு தொகையை அந்த குழந்தையிடமே கொடுத்து, சேமிக்க சொல்ல வேண்டும். பின், வருடத்திற்கு ஒரு முறை, அச்சேமிப்பில் ஒரு பங்கை, கல்வி கற்க முயலும் ஏழை மாணவருக்கு,< அவர்கள் கையாலேயே உதவித் தொகையாக கொடுக்கச் செய்ய வேண்டும். மீதி பணத்தில், நல்ல புத்தகங்கள் வாங்கி கொடுக்க வேண்டும்.
இதன் மூலம், சிறு வயதிலிருந்தே பெற்றோருக்கு உதவும் மனப்பாங்கும், சேமிக்கும் பழக்கமும், நம் உழைப்பில் சம்பாதித்ததை தானம் செய்யும் மனப்பக்குவமும் வளரும். சிறிய வயதிலேயே இக்குணங்கள் வளரும் போது, பெரியவர்கள் ஆனாலும் நல்லொழுக்கத்துடன் இருப்பர்.
இது, எனக்கு மிகச் சிறந்த யோசனையாகப்பட்டது. உங்களுக்கு எப்படி?
— சுபப்பிரியா குருபிரசாத், சென்னை.