தென்காசி அருகே உள்ள நண்பர் ஒருவரின் ஊரில், கடந்த மாதம் கோவில் திருவிழா... அதைக் காண என்னையும் அழைத்திருந்தார்; அவர்கள் இல்லத்திலேயே தங்க வைத்தார்.
அந்த கிராம வீட்டில், "நடை' என்று அழைக்கப்படும் பகுதியில், ஏராளமான மர பீரோக்கள் இருந்தன... அவை, நண்பரின் தாத்தாவுடைய புத்தக அலமாரிகளாம்... 1930 முதல், 1960 வரை அவர் சேமித்த புத்தகங்கள், வார இதழ்களில் வெளியான தொடர்கதைகளின் தொகுப்பு பைண்டிங் புத்தகம் என, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன.
எனக்காக, எல்லா பீரோக்களையும் திறந்து விட்டார். கதவைத் திறந்ததும் பழைய புத்தகங்களின் நெடி... கர்சீப்பால் மூக்கை மூடிக் கொண்டேன். அதைக் கவனித்த நண்பர், "இப்போதெல்லாம் எங்க வீட்டு இளைஞர்கள் இந்த பீரோக்கள் பக்கமே வருவதில்லை; திறப்பதில்லை!' என்றார்...
பழைய வார இதழ்களின் தொகுப்பு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டேன். 1959ல் வெளியான இதழ் அது. அதில், மறைந்த நடிகர் சந்திரபாபுவின் பேட்டி வெளியாகி இருந்தது. அந்த பேட்டியில் இருந்து சுவையான ஒரு பகுதி இதோ...
என் வாழ்க்கையிலேயே நான் மறக்க முடியாத நாள் ஒன்று உண்டு. அது தான், 1949ம் வருஷம், பிப்ரவரி மாதம், 18ம் தேதி.
நாலு நாட்களாகக் குலைப் பட்டினி. காலை, 8:30 மணிக்கு, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனை அவரது வீட்டில் சந்தித்தேன். ஜெமினி படங்களில் சிறு வேடம் கொடுக்குமாறு கெஞ்சினேன்.
"மனு எழுதி ஸ்டுடியோவில் பதிவு செய்து வை; கவனிக்கிறேன்!' என்று சொன்னார்.
"நான் என் திறமைகளை நேரில் நிரூபிக்க இதோ இருக்கிறேன். மனு எதற்கு?' என்று வாதாடினேன். "எல்லாம் முறைப்படி தான் நடக்க வேண்டும்!' என்று பிடிவாதமாக சொல்லி விட்டார் அவர்.
ஏமாற்றத்துடன், நடுப்பகல், 12:00 மணி வரை கடும் வெயிலில் மனமும், காலும் போன போக்கில் திரிந்தேன். பிறகு, ஒரு முடிவுக்கு வந்தவனாக, ஜெமினி ஸ்டுடியோவுக்குப் போனேன். அங்கே (ஜெமினி) கணேசனை சந்தித்தேன். அவரும், அங்கு ஒளிப்பதிவாளராக இருந்த தம்புவும் என் திறமையில் நம்பிக்கை கொண்டவர்கள். இருந்தாலும், ஜெமினியில் என்னை சேர்த்து விட இயலாத வகையில், நடிகர் தேர்வு இலாகாவில் ஒரு சாதாரண குமாஸ்தாவாகத் தான் இருந்தார் ஜெமினி கணேசன்.
கணேசனிடம் மூன்று ரூபாய் கேட்டேன்; கொடுத்தார். அதில், இரண்டு ரூபாய் செலவிட்டு ஒரு பாக்கெட் பாஷாணம் (விஷம்) வாங்கிக் கொண்டேன். ஒரு பிரபல ஓட்டலுக்குப் போய், டிபனை முடித்துக் கொண்டேன்.
மீண்டும் ஜெமினி ஸ்டுடியோவுக்குத் திரும்பினேன். அங்குள்ள சிற்றுண்டிச் சாலையில் உட்கார்ந்து, வாசனுக்கு நீண்ட கடிதம் எழுதினேன். அதை மடித்து பையில் வைத்துக் கொண்டேன். ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி, அதில் விஷத்தைக்
கலந்து, குடித்தேன்.
ஒரே குமட்டல்; கொஞ்ச நேரத்தில் பிரக்ஞை இழந்து விட்டேன்.
அன்று இரவு, 1:30 மணிக்கு நான் கண் விழித்த போது, எனக்கு இரு பக்கத்திலும், இரண்டு போலீஸ் ஜவான்கள் உட்கார்ந்திருக்க கண்டேன். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பிழைக்க வைக்கப்பட்டிருந்தேன்.
"நீ இப்படிச் செய்யலாமா?' என்று அன்புடன் கடிந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது எனக்குக் கோபமாக வந்தது; "உங்களை யார் என்னைப் பிழைக்க வைக்கச் சொன்னது?' என்றேன்.
தற்கொலை முயற்சிக்காக என் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது நீதிபதியிடம் நான் எதிர்வாதம் செய்தேன்.
நீதிபதி, "உன் மனதில் ஏதோ குறை, ஏதோ குறை என்று சொல்கிறாயே... என்ன குறை என்று சொல்லேன்?' என்று கேட்டார். நான், "என் பேன்ட் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்தேன். ஒரு குச்சியைக் கிழித்து, என் கையைச் சுட்டுக் கொண்டேன். நெருப்பு சுடும் என்று தான் சொல்ல முடியுமே தவிர, சூடு எப்படி இருக்கும் என உணர்த்த முடியாது. அது, அவரவர்களால் தான் உணர முடியும்!' என்று சொன்னேன்.
இறுதியில், "முதல்முறை என்று உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். மறுபடி நீ இங்கு வந்தால், கண்டிப்பாக தண்டிப்பேன்!' என்று தீர்ப்பு கூறினார் நீதிபதி.
"அடுத்த தடவை நிச்சயமாக உங்களிடம் வர மாட்டேன்; இரண்டாவது முயற்சி நடந்தால், அது, வெற்றிகரமாக முடியும்!' என்று கூறிவிட்டு, கூண்டிலிருந்து இறங்கி நடந்தேன்.
— பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையை பின் நாளில் எட்டிய திறமையானவர் அனைவரின் ஆரம்ப கால கட்டங்களும் மிகக் கொடூரமாகவே இருந்திருக்கின்றன.
***
மைக்கேல் என்ற கத்தோலிக்க கிறிஸ்தவப் பெரியவர், மூத்த பத்திரிகையாளர்... பத்திரிகைத் துறையின் பால பாடங்களை எனக்குக் கற்றுத் தந்தவர். ஓய்வு பெற்று விட்டாலும் அவர், சமீபத்தில் இறக்கும் வரை கூட, கிறிஸ்தவத்துக்கு தொண்டாற்றி வந்தார்.
சமீபத்தில் மைக்கேலை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரிடம், வாட்டிகன் நகரம் பற்றி விரிவாகச் சொல்லும்படி கேட்டேன். சொன்னார்...
வாட்டிகன் நகரம், போப் ஆண்டவர்களின் தலைமை நிலையமாக கி.பி. 1377ம் ஆண்டு முதல் - அதாவது, 634 ஆண்டுகளாக இருந்து வருதுப்பா...
வாட்டிகன் நகரில் இதுவரை, 265 க்கும் மேற்பட்ட போப் ஆண்டவர்கள் முடி சூடி, ஆட்சி செலுத்தியிருக்கின்றனர்.
பிப்., 11, 1929 முதல், வாட்டிகன் நகரம் ஒரு தனி நாடாகத் திகழ்கிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள, ஐம்பது கோடிக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களின் மதகுருவான போப் ஆண்டவர், வாட்டிகனில் தனியாட்சி செலுத்தி வருகிறார். ரோமின் ஒரு பகுதியாக வாட்டிகன் இருந்தாலும், ரோமுக்கோ, இத்தாலிக்கோ எந்த வகையிலும் வாட்டிகன் கட்டுப்பட்டதில்லை. இத்தாலியின் தலைநகர் ரோம்; ஆனால், வாட்டிகன் தனக்குத் தானே தலைநகர்.
வாட்டிகனின் பரப்பளவு, 108 ஏக்கர் மட்டும் தான்; உலகிலேயே மிகச் சிறிய நாடு; ஆனால், உலகத்தில் மிகவும் செல்வாக்குள்ள நாடும் இது தான்.
வாட்டிகனில் வரி கிடையாது; ராணுவமும் கிடையாது. ராணுவம் இல்லாத ஒரே நாடும் வாட்டிகன் மட்டுமே. ஆனால், வாட்டிகன் நகரைக் காவல் புரிவதற்கு, நூறு போர் வீரர்கள் உள்ளனர்; இவர்கள் வாட்டிகனுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. சுவிட்சர்லாந்து நாடு தான் வாட்டிகனுக்கு வீரர்களை அனுப்புவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறது.
வாட்டிகனுக்கு வந்ததும் சுவிட்சர்லாந்து வீரர்கள் போப் ஆண்டவருக்கும், வாட்டிகனுக்கும் உண்மையாக நடந்து கொள்வதாக நம்பிக்கை தெரிவித்து, உறுதிமொழி எடுத்துப் பதவி ஏற்பர். இந்த, நூறு வீரர் களில் ஒருவர் குறைந்தாலும், உடனே, அவருக்கு பதில் மற்றொருவர் சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பப்படுவார். இவர்களுக்கு போப் ஆண்டவரே சம்பளம் கொடுக்கிறார். இவர்கள் அனைவரும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள்.
திருமணம் ஆகாத, 19 - 25 வயதுக்கு உட்பட்ட இவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் ராணுவப் பயிற்சி கொடுக்கப்
படுகிறது. இவர்கள், போப் ஆண்டவருக்கு மெய்க் காப்பாளர்களாகவும் இருப்பர். இது தவிர, வாட்டிகனுக்கு என்று போலீஸ் படையும் உண்டு. அவர்கள் போக்குவரத்திலும், அரசாங்க அலுவல்களிலும் ஈடுபடுகின்றனர்.
வாட்டிகனின் மொத்த மக்கள் தொகை, ஒரு லட்சம் பேர்.
போப் ஆண்டவர் அரண்மனையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் மண்டபம், பொருட்காட்சி சாலை, அரங்கம், நூல் நிலையம், தோட்டங்கள் உள்ளன. அரண்மனை மேல் மாடியில் போப் வாழ்கிறார்.
இந்த அரண்மனை கி.பி., 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதில், இருநூறு அறைகளில் போப்பின் அலுவலகங்கள் உள்ளன. போப் அறையில் தங்க சிம்மாசனம் உண்டு. அவர் பேசுவதற்கு தங்கத்தாலான தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது.
சில சமயங்களில் பல்லக்கில் ஊர்வலம் வருவார் போப். இவரது அரண்மனையில் குதிரை பூட்டும், "கோச்' வண்டிகள், 14 உள்ளன.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் இங்கு, 3 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பம் இருக்கும்; எங்கு பார்த்தாலும் பனி பரவலாயிருக்கும். எக்காலத்திலும் வாட்டிகனுக்கு உலக மக்கள் வருகை புரிவர்.
— வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை போய் பாருங்களேன்!
***