அன்னா ஹசாரே போராட்டம் சினிமாவாகிறது!
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை மையப்படுத்தி, மராத்திய மொழியில் ஒரு படம் தயாராகிறது. அந்தோலன் ஆக்தாஹா திகாஸி என்ற பெயரில் உருவாகும் அப்படத்தை சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் ஆகியோர் இயக்குகின்றனர். பரபரப்பான படம் என்பதால், இதில் நடிக்க சில பிரபல இந்தி நடிகர்கள் அப்ளிகேஷன் போட்டுள்ளனர்.
— சினிமா பொன்னையா.
பயந்து ஓடும் நடிகைகள்!
தான் இயக்கி நடிக்கும், கெட்டவன் படத்தில் இருந்து, லேகா வாஷிங்டனை நீக்கி விட்ட சிம்பு, மாற்று கதாநாயகி தேடி வருகிறார். ஆனால், நயன்தாராவுக்காக அவர் உருவாக்கிய வேடம் என்பதால், கதையில் இருக்கும் முத்தக்காட்சி, முனகல் காட்சிகளுக்கு பயந்து, கோலிவுட் நடிகைகள் சிக்காமல் மிரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதனால், பாலிவுட்டில் இருந்து புது நடிகையை இறக்குமதி செய்யும் முடிவில் இருக்கிறார்.
— சி.பொ.,
பட்டப் பெயரை மறுக்கும் சந்தானம்!
தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக திகழ்பவர் சந்தானம். இவரது மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சில இயக்குனர்கள், அவரது பெயருக்கு முன் பட்டப் பெயர் வைக்க யோசித்தனர். ஆனால், சந்தானம் குறுக்கிட்டு, "அதெல்லாம் வேண்டாம்...' என்று தடுத்து விட்டார். அதோடு, "உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின், லாரல் - ஹார்டி போன்ற சிறந்த காமெடியன்களே பட்டப் பெயர் வைத்துக் கொண்டதில்லை. அப்படியிருக்க, எனக்கெல்லாம் எதற்கு பட்டப் பெயர்?' என்றும் அவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார்.
— சி.பொ.,
சர்வதேச விழாவில், அழகர்சாமியின் குதிரை!
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம், அழகர்சாமியின் குதிரை. இப்படம், டொரண் டோவில் நடைபெறும், 36வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. தென்னிந்தியாவிலிருந்து இந்த விழாவுக்கு தேர்வாகியுள்ள ஒரே படம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
—சி.பொ.,
48 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு!
கடந்த, 48 ஆண்டுகளாக செயல்படாமல் மூடிக் கிடந்த கோவை பட்சிராஜா ஸ்டுடியோவில், சமீபத்தில், சிறுவாணி என்ற படத்தின் பூஜை, படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில், காரைக்குடி, ஏ.வி.எம்., சேலம் மாடர்ன் தியேட்டர்சுக்கு அடுத்தபடியாக இந்த பட்சிராஜா ஸ்டுடியோவுக்கும் முக்கிய இடம் உண்டு. இதில், கடைசியாக நடந்த படப்பிடிப்பு சிவாஜி கணேசன் நடித்த, நான் பெற்ற செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
— சி.பொ.,
தெலுங்குக்கு செல்லும் அமலாபால்!
தமிழை விட, தெலுங்கு படங்களில் நடிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது அமலா பாலுக்கு. தற்போது, நாக சைதன்யாவுடன் நடித்து வருபவர், ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் தேஜா நடிக்கும் புதிய படங்களுக்கான தீவிர வேட்டையிலும் இறங்கி உள்ளார். இப்போது தமிழில், முப்பொழுதும் உன் கற்பனையில் என்ற படத்தில் மட்டுமே நடித்து வரும் அமலா, இதன் படப்பிடப்பு முடிந்ததும் ஐதராபாத்தில் குடியேற உள்ளார். ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி!
— எலீசா.
தேர்தலுக்கு தயாராகும் விஜய் மக்கள் கட்சி!
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், விஜய்யின் மக்கள் கட்சி, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால், அடுத்து வர இருக் கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்று போட்டியிடுகிறது. அதனால், விஜய் கட்சியினர், உள்ளூர் அ.தி.மு.க., பிரமுகர்களுடன் தேர்தல் குறித்த ஆலோசனைகளை துவங்கி விட்டனர்.
— சி.பொ.,
தமிழுக்கு வரும் சமந்தா!
பாணா காத்தாடியில் நடித்த சமந்தா, அந்த சமயத்தில், விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்ததால், அதன்பிறகு தமிழ் படங்களை தவிர்த்து, முழு நேர தெலுங்கு நடிகையானார். இந்நிலையில், அதே கவுதம் மேனன் தமிழில் இயக்கும், நித்யா என்ற படத்தின் மூலம், மீண்டும் தமிழுக்கு வருகிறார். "ஜீவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில், நானே டைட்டில் வேடத்தில் நடிப்பதால், பாணா காத்தாடி பிடித்துத் தராத இடத்தை, இந்த படம் பிடித்து தரும். அதன்பிறகு, தமிழில் கூடுதல் கவனம் செலுத்துவேன்...' என்கிறார்.
— எலீசா.