பல்லேலக்கா பாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது! - வட்டார மொழி சிறுகதை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2011
00:00

ஆழியாறு மலைச்சாரலில், அறிவுத் திருக்கோவிலுக்கு எதுக்க, 5.4 கி.மீ., தொலைவில் இருக்கிறது பல்லேலக்கா பாளையம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைக் கிராமத்திலிருந்து தான் இலக்கியக் காலாண்டிதழான, "வெள்ளைக் காக்கா' வெளியாகிக் கொண்டிருக் கிறது. அதன் ஆசிரியன், நவீன கதைஞனும், பெருங்குடி மகனுமான பல்லேலக்கா பாலு.
பல்லேலக்காவின் சிறுகதைகள் மற்றும் நாவல்களை அவனும், டி.டி.பி., செய்த நபரையும் தவிர, வேறு யாராவது முழுதாக வாசித்திருப்பரா என்பது சந்தேகமே. தொல் மொழி, படிம மொழி, புனைவு மொழி, பூடக மொழி என்றெல்லாம் பிதற்றி, 20,000 வருடங்களுக்கு முன், மூதாதைத் தமிழர்கள் லெமூரியாக் கண்டத்தில் பேசிக் கொண்டிருந்த மொழியை, தற்காலத் தமிழர், எழுத்தில் எழுதினால் யார் வாசிக்க முடியும்? ஆனால், மற்ற படைப்பாளிகளுக்கும் இடம் கொடுக்கிற அவனது வெள்ளைக் காக்கா சிற்றிதழை, வேண்டுமானால், ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க புரட்டிப் பார்க்கலாம்.
காலாண்டிதழ் என்ற கிரமம் கொண்ட வெள்ளைக் காக்கா, சிற்றிதழ்களுக்கே உரித்தானபடி கெடுவைத் தாண்டி ஐந்து மாத, ஏழு மாத இடைவெளிகளில் வரும். பாகிஸ்தான்காரன் கைக்குச் சிக்கிவிடக் கூடாத, ராணுவ ரகசியம் போல, "தனிச் சுற்றுக்கு மட்டும்...' என்ற வாசகம் தாங்கியிருக்கும் அது, முந்நூறு பிரதிகள் அச்சடிக்கப்பட்டு, 37 பேரால் மட்டுமே வாசிக்கப்படுவது. அச்சடித்ததில் பாதியை, அவன் வீட்டு அட்டாலிக் கரையான்கள் வாசித்துக் கொண்டிருக்கும். அடுத்த காற்பாதி இலக்கிய விற்பனையகங்களில் சீந்துவாரின்றிக் கிடக்கும். பங்கு பெறும் படைப்பாளிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கான இலவசப் பிரதிகளில் வாசிக்கப்படுவது தான் மேற்படி, 37 பேர் கணக்கு. எழுத்தாளர்களே வாசகர்களுமாக உள்ள, முந்நூற்றுச் சிலுவானம் பேரே கொண்ட தமிழ் இலக்கிய உலகத்தில், இது பெருந்தொகைதானே! தவிர, பல்லேலக்காவைக் கேட்டால், தமிழகத்திலும், பிற மாநிலங்களிலுமாக உள்ள தமிழ் அறிவுஜீவிகள், தான் நீங்கலாக இந்த, 37 பேர்தான் என்றும் சொல்வான்.
தமிழ் இலக்கியத்தை செவ்வாய் கிரக ரேஞ்சுக்கு உயர்த்தியாக வேண்டும் என்ற குண்டுச் சட்டிக் கனவு, மற்ற நவீன இலக்கியவாதிகளைப் போலவே பல்லேலக்காவுக்கும் உண்டு. இதற்காகவே அட்டாலிக் கரையான்களும், 37 அறிவுஜீவிகளும் வாசிக்கும்படியான வெள்ளைக் காக்காவை, "நடா'த்திக் கொண்டிருக்கிறான். இது தவிர, காக்காக் கூட்டம் என்ற பெயரில், மாதாந்திரக் கூட்டங்களும், காக்கா மாநாடு என்ற பெயரில், வருடாந்திர விழாவும் இதற்காகவே நடத்தப்படுகின்றன.
இலக்கியத்தில், ஏழு பேர் சேர்ந்தால் கூட்டம்; 25 பேர் சேர்ந்தால், பெருங்கூட்டம் என்று இலக்கியவாதிகளே கிண்டலடிப்பர். பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களுக்கும் ஆட்கள் வருவது அந்தளவிலேயே இருக்கும். காக்காக் கூட்டங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
மாதாந்திரக் காக்காக் கூட்டங்கள் நடத்தப்படுவது பல்லேலக்கா பாளையம் டாஸ்மாக் அல்லது புள்ளாச்சி நகர ஒயின் ஷாப் பார்களிலாக இருக்கும். இவனும், இவனது இணை மற்றும் துணைக் காக்காய்களும், சிங்கிடிக் காக்காய்களான புள்ளாச்சி வட்டார இலக்கியப் பெருங்குடி மக்கள் சிலரும் மட்டுமே கூடுகிற இந்தக் காக்காக் கூட்டத்தின் எண்ணிக்கை, இரட்டை இலக்கத்தை ஒரு போதும் தொட்டதில்லை. ஆனால், மத்தியானம் பட்டைச் சாராயத்தோடு, கெடா விருந்து, ராத்திரி வெடிய, வெடிய அண்ணன்மார் கதை, தெருக் கூத்து, கரகாட்டம் போன்ற நாட்டார் கலைகள் சகிதம் ஒரு பகல் - ஒரு இரவாக நடைபெறும் காக்கா மாநாட்டுக்கு, தமிழகம் முச்சூடிலுமிருந்து அழையா விருந்தாளிகளும் சேர்த்து, 60 - 70 இலக்கியவாதிகள் பறந்தடித்து வருவர். பல்லேலக்கா பாளையமும், பாலுவும் இலக்கிய உலகில் பேர் பெற்றதே அப்படித்தான்.
"அடங் கொப்பன் தன்னானே... அந்த மாற மாநாடு நடத்தோணும்ன்னா லவுண்டு, லவுண்டாக் கள்ண்டு போயிருமே! அவனென்னொ இலக்கிய ஈயம் பூசுன அரசியல்வாதியா? இல்லாட்டி அவனுக்கென்னொ இடுப்பச் சுத்தி கிட்னி கீது இருக்குதா, ஒவ்வொண்ணா வித்து செலவு பண்றதுக்கு?' என, உங்களுக்குள் கேள்விக் குறி நெளிவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பொண்டாட்டி தாலியைப் புடுங்கி வித்தோ, தன் கிட்னியை அடமானம் வைத்தோ இதழ் நடத்துகிற சராசரி இலக்கிவாதியல்ல பல்லேலக்கா. பரம்பரை ஈஸ்வரங் கூட்டம் (கோடீஸ்வரர்கள்). ஆழியாற்றுக் கால்வாய் பாசனத்தில் செழித்த நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும், தென்னை, வாழை, கமுகுத் தோப்புகளுமாக உள்ள ஏழரை ஏக்கர் புஞ்øகு ஏக வாரிசு. தோப்பில் ஒரு கெடு உளுகிற கொப்பரைக் காசுக்கு சமானமாகாது மாநாட்டுச் செலவு. கறி கிலோ ஐநூறு, முட்டை ஒண்ணு, ஆயிரம் என விற்கிற ஈமு, எச்சமாகப் போடுகிற காசுதான், இதழ் நடப்புக்கும் மாதாந்திரக் கூட்டங்களுக்கும்.
போன ஜென்மத்தில் மசை நாயாகப் பிறந்து, ஜஞ்சணக்கு சாமியாரை சொல்லப் பாங்கில்லாத இடத்தில் கடித்துக் குதறியதால்தான், இந்த ஜென்மத்தில் இலக்கியவாதியாக ஆகியிருக்கிறான் என்றும், இதனால, இப்படியான ஊதாரிச் செலவுகள் செய்வானே தவுத்து, வேறு தோஷம் கிடையாதென்றும் காக புஜண்ட நாடி ஜோசியமே சொல்லியிருக்கிறது.
பல்லேலக்கா பாலுவுக்கு, ரெஜினா மனோன்மணியின் கவிதைகள் என்றாலே ஒரு, "நித்த நிது!'
"அவளோட கவிதைகளப் படிச்சாலே நமக்கு, "நித்த நிது' ஆயிப் போயிருதுங் பங்காளி. மொதல் வடிசல் பட்டை ஆப் பாட்டலு அப்புடியே ராவாக் கமுத்துனாப்புடி, சும்மா ஜிவுஜிவுன்னு ஒடம்பே பத்தீட்டு எரியுது போ! சந்தேகமே இல்ல; சாட்சாத் சரோஜாதேவியோட மறு அவதாரமேதான்...' என்று ஒயின் ஷாப் இலக்கியக் கூட்டங்களுக்கு வருகிற துணை, இணை, சிங்கிடிக் காக்காய்களிடமும், அசலூர் இலக்கியக் கூட்டங்களில் அரங்குக்கு வெளியே நின்று விவாதித்துக் கொண்டிருக்கும் வெளிநடப்பு இலக்கியவாதிகளிடமும் சொல்லி, சிலாகிப்பான்.
பிரசித்தி பெற்ற சமகால, "போர்னோ' பெண்ணியக் கவிஞிகளில், ட்ரிபிள் எக்ஸ் நட்சத்திரம் ரெஜினா மனோன்மணி. அவளது கவிதைகள் அந்தளவுக்கு ஹார்ட் கோராகத்தான் இருக்கும். அதனால்தானே, எழுத வந்த இரண்டே வருடங்களில், சீனியர் போர்னோ பெண்ணியக்காரிகளையும் முறியடித்து உச்சாணிக் கொம்பிலேறி, ஆண் இலக்கியவாதிகளைப் பார்த்து கொக்காணி காட்டிக் கொண்டிருக்கிறாள்.
"நாமெல்லாம் இருவது வருசம், நுப்பது வருசம் எளுதி என்ன பிரயோசனம் பல்லேலக்கா? நாமளுந்தான் பொம்பளைகளோட ஸ்பேர் பார்ட்சுகள பச்சை, பச்சையா இவளுகளாட்டவே எளுதறம். ஆனாட்டி, இவளுகளுக்கு இருக்கற மவுசு, நம்முளுக்கு வர மாண்டீங்குதே!' என, சீனியர் சகாக்கள் பொறாமையில் பொறத்தாண்டி எரிச்சல் படுவர்.
"செரியாப் போச்சு போ... ஆம்பளைக படிக்கறதுல, ஆம்பளைகளே அப்படி எளுதுனா, அதுல என்னுங் பங்காளி ஒரு நிது இருக்கும்? பொம்பளைக, அதுவும் இவளாட்ட கலியாணமாகாத வலசப் புள்ளைக, மூஞ்சியும் லச்சணமா, ஒடம்பும் கிண்ணு கிண்ணுன்னு மதாளிச்சுட்டு இருந்து, எளுதறதும் அந்த மாற எளுதுனா... அது ஒரு, "நிது...' என விளக்கமளிப்பான்.
ரெஜினா மனோன்மணியம் கவிதைகள் மீது, பல்லேலக்காவுக்கு இருக்கிற நிந்த நிது, அவள் மீதும் உண்டு. அவளது கவிதைகளை வாசிக்கிற ஆண்கள் எல்லாருக்குமே அந்த நிது வரத்தான் செய்யும்.
கன்னித்தன்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கெட்ட வார்த்தைகள், ரெஜினாவின் விவிலியத்திலேயே கிடையாது என்பது இலக்கிய உலகம் அறிந்த விசயம். அவளது அந்தரங்கங்கள் பற்றி அனேக செய்திகள் நம்பத் தகுந்த வட்டாரங்கள் வாயிலாக உலவிக் கொண்டிருந்தன. அவளது அந்தப்புர லீலைகள் பற்றிய சுவிசேஷங்களை, பல படைப்பாளிகளும் தங்களது கதை, கவிதை, நாவல்களில் எழுதியும் இருக்கின்றனர்; ரெஜினா அதுபற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், அவளைக் கோபமூட்டுகிறபடி வாலாட்டினால், தக்க பதிலை பேச்சிலோ, எழுத்திலோ அல்ல, செயலில் காட்டி விடுவாள். அவளுக்கு பலான குறுஞ்செய்தி அனுப்பிய குத்தாட்டப் பாடலாசிரியன் பாரதிநேசனும், எச்சுப் பண்ணாட்டுப் பண்ணிய நாவலாசிரியன் வீரகேசரியும் அவ்வாறு மேடையிலேயே அறைச்சல் பட்டவர்கள்.
இப்படியான அசம்பாவிதங்களுக்கு தானும் ஆட்பட்டு விடக் கூடாது என்ற எச்சரிக்கையினாலேயே, தன் தாண்டுகால் ஆøகு தளைகவுறு போட்டிருந்தான் பல்லேலக்கா. எனினும், எப்படியாவது ரெஜினாவுக்கு பிடித்தமானவனாக ஆகி, ஒருமுறையேனும் தன் ஆசையை நிறைவேற்றி விட்டால், ஜஞ்சணக்கு சாமியாரின் வெளியிட தகாத ஸ்பேர் பார்ட்ø கடித்துக் குதறிய, போன ஜென்மப் பாவத்துக்குப் பரிகாரமாகி விடும்; இலக்கியவாதியாக பிறப்பெடுத்திருக்கிற இந்த ஜென்மமும் சாபல்யமடைந்து விடும் என லட்சியம் கொண்டு, பல வகையிலும் முயற்சித்துக் கொண்டிருந்தான்.
வெள்ளைக் காக்கா இதழ், 11, 12 மற்றும் 13ல் அவளது கவிதைகளுக்கு சிறப்புப் பக்கங்கள் ஒதுக்கி வெளியிட்டது இதன் காரணமாகவே. இதழ், 14ல் அவளது, "ஜிகாலோக்கள் தேவை' கவிதைத் தொகுப்புக்கு என, அவனே, ஆறு பக்கம் மாய்ந்து, மாய்ந்து மதிப்புரை எழுதியுமிருந்தான்.
"பெண்களைத் தம் இச்சை தணிக்கும் போக உறுப்புகளாக மட்டுமே பார்க்கிற ஆயிரத்தாண்டு ஆணாதிக்கத்துக்கு எதிராக, ஆண்களைத் தம் தினவு தணிக்கும் எதிர் பால் உறுப்பாக மட்டுமே பார்க்கிறது சமகால தமிழ் பெண்ணியம். பரத்தையர் பாரம்பரியத்தில் ஊறித் திளைத்த ஆணாதிக்க சங்க மரபுக்கெதிராக, காதலன்களையும், கணவன்களையும், கள்ளக் காதலன்களையும் மறுதலித்து, "ஜிகாலோ'க்களை, அதாவது, ஆண் விபச்சாரர்களை தெரிவு செய்கிறார் ரெஜினா மனோன்மணி. இதை, 21ம் நூற்றாண்டு பெண்ணியத்தின் உச்சம் என்றே சொல்லலாம்...' என எழுதியிருந்த அந்த மதிப்புரை மட்டுமே அவனுடைய எழுத்தில் புரியக்கூடிய ஒன்றாக இருந்தது என்று ரெஜினாவே அழைத்துப் பேசினாள்.
அந்த இரவுப் பேச்சின் குழறலில், அவள் கன மப்பில் இருப்பது தெரிய வந்தது; இவனும் அப்போது, மப்பும் மந்தாரமுமாகவே இருந்தான். எனவே, அதன் தைரியத்தில், மற்றவர்களிடம் சொல்கிறபடியே அவளது கவிதைகள் தன்னைக் கிளர்த்தும் அனுபவங்கள் பற்றி, பட்டைச் சாராய - சரோஜாதேவி ஒப்பிடல்களோடு குறிப்பிட்டான்.
உடனே அவள், "பட்டைச் சாராயம் அவ்வளவு ஹார்ட் கோரா பண்ணை? அப்படீன்னா, அதை நான் அடிச்சுப் பாக்கணுமே... ஒரு ஆப் பாட்டில் கெடைக்குமா?' என்று கேட்டாள்.
"ஆப் பாட்டலென்னுங் ஆப் பாட்டல்? உன்னீம் மூணு மாசத்துல காக்கா மாநாடு வாறக்கு இருக்குதுங். அதுல நீங்க நிந்த நிதா - அதுதானுங் ப்பெசல் கெஸ்ட்டாக் கலந்துட்டீங்னா, உங்களைய வடிசல்லயே குளிப்பாட்டிப் போடலாங்...' என்றான்.
"ஓ.கே., டன்...' என்றவள், "மாநாட்டுக்கு நான் மட்டும் வந்தா அவ்வளவு நல்லா இருக்காதே... இந்திராணி, தில்ஷாத் மாதிரி மத்த பெமினிஸ்ட்டுகளையும் கூப்பிடுங்க... பெண்ணிய அமர்வு கூட வெச்சுக்கலாம்...' என்று யோசனைகளும் நல்கவே, அவனுக்கு குஷி கிளம்பி விட்டது. "கும்படப் போன குப்பியண்ணன் குறக்கால வந்ததுமில்லாம, கையிலிருக்கற சாராய பாட்டலையும், கஞ்சா சுருட்டையும் வராமக் குடுத்தாப்புடி இருக்குதுங்...' என்று குதியாளம் போட்டான்.
அமைதிச் சோலையாகத் திகழும் பல்லேலக்கா பாளையம், சற்று பரபரப்புக்குள்ளாவதே காக்கா மாநாடுகளின் போதுதான். அதிலும், இந்த வருச மாநாடு, முன் எப்போதும் இருந்திராதபடி ப்பெசல் ஐட்டங்களோடு களை கட்டியிருந்தது. ஊர் மையமான பேருந்து நிறுத்த முச்சந்தியில் பேனர்கள், ஐந்தாவது காக்கா மாநாட்டுக்கு வருகை தரும் இலக்கிய பெருந்தகைகளுக்கு, "வருக... வருக...' போட்டன. பெண்ணியப் பேரொளி பட்டத்தோடு, 8க்கு 4 ப்ளக்சில் ட்ரிபிள் எக்ஸ் கவிஞி ரெஜினா மனோன்மணி ஜீன்சில் நிறைந்து, டி-ஷர்ட்டில் ததும்பிக் கொண்டிருந்தாள். பொக்குன்னு போயிருவாளுகளே என, சீலை கட்டிய இந்திராணிக்கும், பர்தா போட்ட தில்ஷாத் பேகத்துக்கும் சேர்த்து பட்டைக் கடையாக, 6க்கு 3 ப்ளக்ஸ். டபுள் எக்ஸ் கவிஞிகளான அவள்களுக்கு கெவுருதிப் பட்டமளிப்பும் கிடையாது.
கடைசி நேர அவுதியில் மேற்படி பேனர் கட்டுதல், ப்ளக்ஸ் போர்டு நாட்டுதல்களை பல்லேலக்காவும், மூன்று சிங்கிடிக் காக்காய்களும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்க, "என்னுங் கவுண்ரே... இந்த வாட்டி இலக்கிய நோம்பி பெலமாட்டிருக்குதுங்! பேனரு, கட்டவுட்டெல்லாம் வெச்சுக் கலக்கீட்டிருக்கறீங்கொ? தாருங்க இந்த சீன்சு அம்முணி; நடிகீங்களா? நமீதாளாட்ட, "கும்'முனு இருக்குது!'' என்று சுற்றுப்புறநர்களும், வெட்டி ஆபீசர்களும் குசலம் விசாரிப்புக்கு வந்து விட்டனர். வடிசல் எத்தனை லிட்டர், கெடாய் எவ்வளவு என்று கூப்பிடாத பந்திக்கு, கூட்டு, பொரியல் எண்ணிய குடிகாரக் குப்பனுகள், ""தேனுங் கவுண்ரே... விசுவேசமெல்லாம் முடிஞ்சவிட்டுன்னாலும் அடி வடிசலாச்சு அரைக் கௌõஸ், காக்கௌõஸ் கெடைக்கும்ங்களா... நெல்லுக்குப் பாயறது பில்லுக்கும் பாயறாப்புடி,'' என்று அச்சாரமும் போட்டனர்.
நேற்றிரவே புள்ளாச்சி வந்து சேர்ந்து, தி லாட்ஜில் தங்க வைக்கப்பட்டிருந்த கருத்தரங்க அமர்வாளர்களான இலக்கியப் பெருந்தகைகளையும், சிறப்புக் கருத்தரங்கிகளான பெண்ணியப் பேரொளி மற்றும் பேகம் அண்ட் கோவையும் அழைத்து வருவதற்காக இணைக் காக்கா சோழீஸ்வரனும், உதவிக் காக்கா லெனின் பாலாஜியும் பல்லேலக்காவின் காரை எடுத்துக் கொண்டு சென்றிருந்தனர். போர்னோக்காரிகளுக்கு மட்டுமே கார். ஆண் அமர்வாளர்களுக்கு அங்கிருந்தே வாடகை ஜிப்சி பிடித்துக் கொள்ள வேண்டியது.
தமிழகத்தின் திக்கெட்டிலுமிருந்து ராப் பயணம் முடிந்து வந்த இலக்கிய விடியா மூஞ்சிகள், புள்ளாச்சியிலிருந்து நகரப் பேருந்தோ, சிற்றுந்தோ பிடித்து கூட்டம், கூட்டமாக முச்சந்தியில் இறங்கிக் கொண்டிருந்தன. "விவசாயத்துக்கு மட்டும்...' என எழுதிய டெம்போ, அந்த இலக்கிய லக்கேஜ்களை ஏற்றிக் கொண்டு, மாநாடு நடக்கும் இடமான பல்லேலக்காவின் தோட்டத்திற்குச் செல்வதும், இறக்கி விட்டு வருவதுமாக இருந்தது. எட்டு மணி முதல், அரை மணி, முக்கால் மணி இடைவெளிகளில் அசலூர் விடியாமூஞ்சிகள் மம்மானியமாக வந்து இறங்கிக் கொண்டேயிருக்க, டெம்போ நாலைந்து ட்ரிப் அடிக்க வேண்டியதாயிற்று.
""ஏன் ராசு... ரெஜினா வாறதுனால இந்த வாட்டி கூட்டம் டபுள் மடங்கு வரும்ன்னு கணக்குப் பண்ணியிருந்தம்... இப்பப் பாத்தா முப்பிள் மடங்கே ஆயிருமாட்ட இருக்குது? உரிச்சுட்டிருக்கற கெடாய்க பத்தாது... உன்னீமு ரெண்டு கெடாய்க்கு சொல்லீரு! அதுக்குத் தகுந்தாப்புடி எஸ்ட்டாப் பாசுமதிச் சாக்க அண்ணாச்சி கடைலருந்து எடுத்து, டிப்போலயே போட்டுட்டுரு. பிரியாணி சாமானம், ப்ளாஸ்டிக் கௌõசு, எஸ்ட்டா ஏனாம் எது வேணுமோ அதெல்லாம் அங்கயே வாங்கிக்கொ. கொளந்தானக் கூப்புட்டு எலை எஸ்ட்டா அறுக்கச் சொல்லீரு,'' என உத்தரவு போட்டுக் கொண்டிருக்கையில், அலைபேசி ஒலித்தது.
அடுத்தடுத்து அழைப்புகள். தாமதமாக வந்து கொண்டிருக்கும் அசலூர்க்காரர்கள் சிலர், ரெஜினா மாநாட்டுப் பந்தலுக்கு வந்து சேர்ந்தாயிற்றா, மாநாடு சரியாக எத்தனை மணிக்கு என்று புள்ளாச்சியிலிருந்து ஒருத்தர். மாநாட்டுப் பந்தலிலிருந்து மேற்பார்வைக் காக்காய்களின் அதென்ன பண்றது, இதென்ன பண்றது கேள்விகள்.
அதற்குள், ""காரு வந்துருச்சு... காரு வந்துருச்சு...'' என இங்குள்ள சிங்கிடிக் காக்காய்கள் றெக்கையடித்தன. பல்லேலக்கா இன்னும் இங்கே நிற்பதைப் பார்த்து சோழீஸ்வரன் காரை நிறுத்த, பின்னால் வந்த ஜிப்சியும் நின்றது. சிங்கிடிக் காக்காய்கள் புடைசூழ பல்லேலக்கா சிறப்பு விருந்தினர்களை வரவேற்க விரைந்தான்.
— தொடரும்.

ஷாராஜ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - madurai,இந்தியா
25-செப்-201113:36:27 IST Report Abuse
anand யாருங்க இந்த ஷாராஜ்
Rate this:
Cancel
muttal - chennai,இந்தியா
22-செப்-201110:41:52 IST Report Abuse
muttal ஐயா, சாரு அவர் பாணியில் எழுதிய இந்த ”சரோஜா தேவி” கதை, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் தென் அமெரிக்காவின் இலக்கிய கதைகளுக்கு ஒப்பானது! கண்டிப்பாக சாருக்கு இந்த கதையினால் புக்கர் பரிசு, நோபல் பரிசு கிடைக்கப்பெறும். ஆனால் ஒன்று, இந்த கதை எழுதியதற்காக அவருக்கு 10 லட்சம் பொற்கிழி அளித்து விடுங்கள். இல்லையென்றால் அந்தப் பத்திரிக்கைக்கு, 20 வருடமாக் ஒசியில் எழுதறேன், என்னால்தான் அந்தப் பத்திரிக்கை விற்கிறது, அந்த ஆசிரியர் எப்படிப்பட்ட “நல்லவர்”, வக்கீல் நோட்டீஸ் என்ற பிதற்றல்கள் வரும். அப்பொழுது நீங்கள் ஒரு தமிழ் இலக்கியவாதியை அசிங்கப்படுத்தியதற்கு வருத்தப்படுவீர்.
Rate this:
Cancel
ஆனந்த் - SFO,யூ.எஸ்.ஏ
22-செப்-201110:23:42 IST Report Abuse
ஆனந்த் // இந்த விளையாட்டு எல்லாம் 80 களிலேயே வழக்கு அழிந்து போய்விட்டது சாரு நிவேதிதா.. எதாவது உருப்படியாக எழுத முயற்சி செய்யுங்கள்.... // நச் கமெண்ட்..:-)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X