அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2011
00:00

அன்புள்ள அம்மாவிற்கு —
நான் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன். எனக்கு, எங்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, முறைப்படி திருமணம் செய்தனர்; அவரைப் பற்றி சரியாக விசாரிக்கவில்லை. அதனால், திருமணம் நடந்த மதியம் தான், மாப்பிள்ளை மனநலம் சரி இல்லாதவர் என்று தெரிந்தது. உடனே நாங்கள் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லி விட்டு, எங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். பிறகு, மனநல மருத்துவரிடம் மாப்பிள்ளையை அழைத்து போய் காண்பித்தோம். அவர், "இந்த மாப்பிள்ளை வேண்டாம்; விவாகரத்து செய்து விடு...' என்று சொல்லி விட்டார். அவரை விவாகரத்து செய்து விட்டேன்.

நான் திருமணம் ஆகியும், இன்னும் கன்னி கழியாத பெண். எங்கள் வீட்டில் மீண்டும் மாப்பிள்ளை பார்க்கின்றனர். வரன்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு பிடித்தால், அவர்களுக்கு பிடிக்கவில்லை; அவர்களுக்கு பிடித்தால், எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு வயது, 31 ஆகிறது; ஆனால், நேரில் பார்த்தால், இருபது வயது பெண் மாதிரி இருப்பேன். எங்கள் அலுவலகத்தில் ஒருவருடன் நட்பாக பழகினேன். அவருக்கு வயது, 23 ஆகிறது; ஆனால் நேரில் பார்த்தால், 28 வயது ஆகிறவர் மாதிரி தெரிவார். இருவரும் வயது வித்தியாசம் தெரியாமல் பழகினோம். அவருக்கு, என் மீது காதல் வந்தது.
என் திருமண வாழ்க்கை பற்றி தெரியாததால், என்னிடம் வந்து, என்னை திருமணம் செய்வதாக கூறினார். நான் என்னை பற்றிய எல்லா விஷயங்களையும் அவரிடம் கூறினேன். உடனே அவர் வருத்தப்படாமல், "சரி' என்று கூறி விட்டார். உடனே, என் வயதை சொன்னேன்; அவர் வருத்தப்பட்டார். மறுநாள், "நன்றாக யோசனை செய்தேன். வயது ஒரு தடையில்லை, மனசைத்தான் பார்க்கணும்...' என்றார்.
அவர் நல்லவர், புத்திசாலி, திறமை சாலி இரக்க குணம், தெளிவான பேச்சு உள்ளவர். "தெளிவாகத்தான் நான் இந்த முடிவு எடுத்தேன்...' என்று கூறினார். அவர் குடும்பத்தில், அப்பா இரண்டாம் திருமணம் செய்து, அம்மா, இவர், இவர் தம்பி எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டு, முன்னுக்கு வந்திருக்கின்றனர். +2 வரை தான் படித்தார். அம்மாவை இவர் தான் காப்பாற்றுகிறார்; அப்பாவை சுத்தமாக வெறுத்து விட்டார். அப்பா இவங்க வீட்டிற்கு வந்து போகிறார். இருந்தாலும், இவர் அப்பா என்று அழைப்பதில்லை.
என்னை மிகவும் விரும்புகிறார்; எனக்கும் அவரை பிடிக்கும். அவரிடம், "நம் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம், அதனால் வேண்டாம்...' என்றும் கூறினேன். அதனால், தற்கொலை முயற்சி செய்து விட்டார். அம்மா... நான் அவரை திருமணம் செய்யவில்லை என்றால், அவர் செத்து விடுவார் அல்லது மனநலம் பாதித்து விடும். ஒரு வாரம் பேசாமல் இருந்தேன்; அழுது விட்டார். சரியாக சாப்பிடாமல், ஆறு கிலோ எடை குறைந்து விட்டார். பின் அவரிடம் பேசி, உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். உங்கள் பதில் உடனடியாக வேண்டும். நான் என்ன செய்வது என்று கூறுங்கள் அம்மா. இருவரும் செத்து விடலாம் என்று இருக்கிறோம். உங்கள் பதில் என்ன என்று தெரிந்து கொண்ட பிறகு தான் எங்கள் முடிவு.
இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —
சரிவர விசாரிக்காமல், மனநலம் சரியில்லாதவரை உனக்கு மணம் செய்து வைத்தனர் உன் வீட்டார். விஷயம் திருமணமான மதியமே தெரிந்து, மாப்பிள்ளை வேண்டாம் என்று வீடு திரும்பி விட்டீர்கள். மருத்துவ ஆலோசனைக்கு பிறகு, அரை நாள் கணவனை விவாகரத்து செய்து விட்டாய். ஆசிரியர் பயிற்சி முடித்த நீ, ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறாய். 31 வயதான நீயும், 23 வயதான அலுவலக நண்பரும் காதலிக்கிறீர்கள். வயது வித்தியாசம் கருதி, திருமணம் வேண்டாம் என்கிறாய். காதலனோ தற்கொலைக்கு முயன்றும், உண்ணாவிரதம் இருந்தும் உன் முடிவை மாற்ற முயற்சிக்கிறார். இறுதியாக நீயும், காதலனும் தற்கொலை செய்து கொள்ள விரும்பி, என் ஆலோசனையைக் கேட்டிருக்கிறீர்கள்.
1.உன் திருமணம் முறைப்படிதான் நடந்தது. நீ யாரையும் காதலிக்கவில்லை, பதிவு திருமணம் செய்து கொள்ளவில்லை. உன் வீட்டார்தான் சரி வர விசாரிக்காமல், மனநலம் பாதிக்கப்பட்டவரை உனக்கு திருமணம் செய்து வைத்தனர். உன் வாழ்க்கை வீணானதற்கு முழு முதல் காரணம் உன் வீட்டார்தான். தாலி கட்டும் வைபவம் நடந்திருந்தாலும், நீ கன்னிப் பெண்ணாய்தான் இருக்கிறாய். உனக்கு நடந்தது நிஜக் கல்யாணமல்ல, பொம்மை கல்யாணம்.
2.பொம்மைக் கல்யாணத்திற்கு பிறகு, உன் வீட்டார், ஐந்தாண்டு காலமாக மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். வரும் மாப்பிள்ளைகளை நீயும், உன்னை மாப்பிள்ளைகளும் தட்டிக் கழிக்கின்றனர். இப்போது உனக்கு வயது 31. இனியும் காலம் தாழ்த்தாமல், நீ திருமணம் செய்து கொள்வதே சாலச் சிறந்தது.
3.வயது வித்தியாசம் பாராமல், உன்னை காதலிக்கும் அலுவலக தோழனிடம், நீ இரண்டு விஷயங்களை மறைக்கவில்லை. ஒன்று: அரை நாள் கணவனை விவாகரத்து செய்தது. இரண்டு: நீ தோழனை விட, எட்டு வயது மூத்தவள் என்பது. இவ்விரு விஷயங்களை நீ மறைத்து, அலுவலக தோழனை மணந்திருந்தால், வாழ்க்கையில் நீ பேரிடர்களை சந்திக்க வேண்டி வந்திருக்கும்; நல்ல வேளை, நீ அதை செய்யவில்லை.
4. முப்பத்தியொரு வயதான நீ, 23 வயதானவள் போலிருப்பாய், 23 வயதான உன் தோழன், 28 வயதாய் தெரிவான் என நீ கூறுவது ஒரு வகை எஸ்கேப்பிசம். சதா வயது வித்தியாசத்தை நினைத்து, நினைத்து குழம்பிப் போயுள்ளாய் என்பதை இது காட்டுகிறது. மனித உடம்புகளில் ஒளிந்திருக்கும் உயிரியல் கடிகாரம், மனித வயதுகளை நொடிக்கு நொடி துல்லியமாக வெளிக்காட்டுகிறது.
5.அலுவலகத் தோழன் புத்திசாலி, திறமைசாலி, இரக்க குணமுள்ளவர், தெளிவான பேச்சு பேசுபவர் என கூறியிருக்கிறாய். இரண்டாம் திருமணம் செய்த அப்பாவை வெறுத்து, அம்மாவுடன் வாழ்கிறார் உன் தோழன். உன் தோழன் பற்றிய விவரக் குறிப்புகள் நம்பிக்கையூட்டுபவையாய் உள்ளன. நம்பகமான ஆணாய் தெரிகிறார். நீயும், அவரும் திருமணம் செய்து கொண்டால், அத்திருமணம் வெற்றிகரமாய்தான் அமையும்.
6.உன் கடிதத்தின் பிற்பகுதியை அலசிப் பார்த்ததில், ஓர் உண்மை புலப்படுகிறது. நீ தாழ்வு மனப்பான்மையில் உழன்று, உன் அபிமானியை சித்திரவதைக்கு உள்ளாக்குகிறாய். சாடிஸ்டிகலாக நீ சில பரிட்சைகள் வைத்து, காதலன் தேறுகிறானா என்று பார்க்கிறாய். வயது வித்தியாசமிருக்கிறது, திருமணம் வேண்டாம் எனக் கூறி, அவனை தற்கொலைக்கு முயற்சிக்க வைத்திருக்கிறாய். ஒரு வாரம் பேசாமல் இருந்து, அவனை, ஆறு கிலோ எடை குறைய வைத்திருக்கிறாய்.
உன்னை அவன் திருமணம் செய்து கொள்ளாவிட்டால், மனநலம் பாதிக்கப்படுவான் அல்லது செத்து விடுவான் என அறிந்து, உள்ளுக்குள் குதூகலிக்கிறாய். இப்போதும், அவனுக்கு கூட்டுத் தற்கொலை பரிட்சை வைத்து பார்க்கிறாய். நீங்களிருவரும் திருமணம் செய்து கொண்டால், அவன் உன்னை சிறப்பாக கவனித்துக் கொள்வான்; ஆனால், நீ அவனை சிறப்பாக கவனித்துக் கொள்வாயா என்பது சந்தேகமே.
7.உங்களிருவருக்கும் திருமணம் ஆனால், ஐந்து வருடம் கழித்து என்ன நடக்கும், பத்து வருடம் கழித்து என்ன நடக்கும் என யோசித்து, மண்டையை குழப்பிக் கொள்ளாதே. நம்பிக்கைதானே வாழ்க்கை! சிறப்பாக ஒன்றை துவங்கினால், அது சிறப்பாகவே தொடரும். திருமணத்திற்கு பின் நீங்கள் இருவரும் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அதை ஒட்டித்தான் உங்கள் திருமணத்தின் வெற்றி, தோல்வி அமையும்.
8.தெளிவான மனநிலையுடன், பெற்றோர் அனுமதியுடன் அலுவலகத் தோழனை திருமணம் செய்து கொள். +2 படித்த அவரை, தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கச் சொல். உங்களது திருமணத்திற்கு பின், நீங்களிருவரும் படிப்படியாக உயர்ந்து, ஆதர்ச தம்பதிகளாய் மாறுங்கள். திருமண வாழ்க்கையில் நீங்கள் பெறும் அக, புற வெற்றிகளே லட்சம் தம்பதிகளுக்கு அழகிய முன் மாதிரியாக்கும் உங்களை.
உங்கள் திருமணத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 

மேலும் வாரமலர் செய்திகள்:We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X