மனைவியை கொடுமைப்படுத்தும் கணவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த கொடுமையைப் போல், இதுவரை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அந்த விசித்திர மிருகத்தின் (கணவர்) பெயர் மகேஷ் அக்ரிவார். தாமோ மாவட்டத்தை சேர்ந்த விவசாயி. சில ஆண்டுகளுக்கு முன், இவருக்கும், தீபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, தன் கொடூர முகத்தை வெளிப்படுத்த துவங்கி விட்டார், மகேஷ். தன் இளம் மனைவியின் நரம்புகளில் ஊசியை செலுத்தி, அதன் மூலம் ரத்தத்தை எடுத்தார். இதன் விபரீதம் புரியாத தீபா, தன் கணவர் ஏதோ விளையாட்டாக செய்கிறார் என நினைத்தார். ஆனால், அதற்கு பின், நடந்தது தான், கொடுமையிலும், கொடுமை. ஊசி மூலம் எடுத்த ரத்தத்தை, காலி டம்ளரில் ஊற்றி, பின், அதை ரசித்து, ருசித்து, ஏதோ குளிர்பானம் குடிப்பது போல், குடித்தார். இதைப் பார்த்த தீபாவுக்கு, அதிர்ச்சியில் தலை சுற்றியது.
இதன்பின், தினமும் இந்த கொடூரம் அரங்கேறத் துவங்கியது. தீபா, எவ்வளவோ தடுத்து பார்த்தும், முடியவில்லை. தீபா, கர்ப்பமான நிலையிலும் கூட, இந்த கொடூரம் தொடர்ந்தது. மூன்று ஆண்டுகள் வரை, தீபாவின் ரத்தத்தை ருசித்திருக்கிறார், மகேஷ்.
பொறுத்து, பொறுத்துப் பார்த்த தீபா, வேறு வழியில்லாமல், வீட்டை விட்டு தப்பிப் போய், தன் பெற்றோரிடம் புகார் செய்தார். போலீசிடம் புகார் செய்யப்பட்டதும், மகேஷ் தப்பித்து விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதெல்லாம் சரி... மகேஷ் ஏன், தன் மனைவியின் ரத்தத்தை குடித்தார் தெரியுமா? மனைவியின் ரத்தத்தை குடித்தால், நீண்ட காலத்துக்கு ஆரோக்கியமாக வாழலாம் என, யாரோ கூறினராம்.
— ஜோல்னா பையன்.