தலைகீழ் வாழ்க்கை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2011
00:00

""சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்...'' என்றான் சரவணன், மகனிடம்.
டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், ""ஏன்?'' என்று கேட்டான்.
சரவணனுக்கு, சுருக்கென கோபம் மூக்கு முனைக்கு வந்தது.
சமீப காலமாக ஹரீஷின் போக்கு, சரவணனை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது.
""காரணம் சொன்னால் தான் செய்வியோ?'' என்று சீறினான்.
""ஏன் கோபப்படறீங்க... நானும் இந்த வீட்டைச் சேர்ந்தவன். காரணம் தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பு?''
""எதிர்த்து பேசாம சொன்னதை செய்டா. இப்பவே குடும்பத் தலைவனாக நினைக்காதே.''
""அடக் கடவுளே... காலங்காத்தால ஏன் வாக்குவாதம்?'' குறுக்கிட்டாள் ரேவதி.
""வேணும்ன்னா பேசறேன்... உன் பிள்ளை பேச வைக்கிறான். ஒரு வேலை சொன்னால், நூறு குறுக்கு கேள்விகள். என்னமோ இவன் சம்பாத்தியத்தில் நான் பிழைக்கிற மாதிரி.''
""அவன் சின்னவன்; பொறுமையாய் சொன்னால் புரிஞ்சுக்கறான்.''
""அவன் பழைய ஹரீஷ் இல்லைடி; பணக்கார ஹரீஷ். ஆமாம்... அவனுக்கு பணத்தைத் தவிர ஒண்ணும் புரியாது. எங்கே பிடிச்சுதோ அந்த பைத்தியம். என் பரம்பரையில் நான் உ<ட்பட யாரும் அப்படி இருந்ததில்லை,'' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வண்டியை கிளப்பிக் கொண்டு போனான் ஹரிஷ்.
அடுத்த நிமிடம், சந்திரன் வீட்டை அடைந்தான் ஹரிஷ்.
அவனை பார்த்ததும், அந்த முதியவர் மகிழ்ச்சியோடு எழுந்து வந்தார்.
""வா தம்பி... அப்பா அனுப்பினாரா?''
""ஆமாம்... அப்பாக்கிட்ட பணம் கேட்டிருந்திங்களா...''
""ஆமாம்!''
""பணம் இல்லைன்னு சொல்லச் சொன்னார். அது விஷயமாக தேடி வர வேணாம்; வேற இடத்துல முயற்சி செய்யுங்க...'' என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
""பாவம் அந்த சந்திரன். ஏமாற்றத்தில் உடைஞ்சு போயிட்டார். எனக்கு சின்ன வயசுல நிறைய உதவி இருக்கிறார். அவருக்கு என் குடும்பமே கடமைப் பட்டிருக்கு. இந்த ஹரீஷ் மேல அவருக்கு ரொம்ப பாசம். அவர்கிட்ட இப்படி சொல்ல எப்படி மனம் வந்தது.
""அவன் அம்மாகிட்ட, "அப்பா இப்படி கண்டபடி வாரி இறைச்சால், சீக்கிரம் நாம் நடுத்தெருவுக்கு வந்திடுவோம். பணம் அதிகமாக இருந்தால், என்கிட்ட கொடுக்கச் சொல்லு. நான் பிசினசில் போட்டு, ரெண்டு மடங்காக்கித் தர்றேன்...' என்கிறான். உறவுகளைக் கொன்னுட்டு, பணத்தை சம்பாதிச்சு என்ன செய்யப் போறான்?'' என்று, கவலையுடன் நெற்றியைத் தேய்த்தார், சரவணன்.
நண்பரைக் கவலையோடு பார்த்தார் திருஞானம்.
சரவணன் தொடர்ந்தார்...
""ஸ்கூல் படிப்பு முடிகிறவரை மத்த பசங்களைப் போல, சாதாரணமாக படிப்பு, விளையாட்டு, சினிமான்னு இருந்தான். காலேஜுக்கு போனதிலிருந்து, ஒரு மாற்றம். காசு பத்தி ரொம்ப தீவிர கவனம். பணக்காரர்கள் பத்திய புத்தகம், பணக்காரனாவது எப்படிங்கறது பற்றிய புத்தகம்ன்னு கொண்டு வந்து படிச்சுக்கிட்டுருந்தான்...
""பாம்பு கடிச்சு விஷம் ஏறும் போது, உடம்பில் நீலம் ஏறுவது போல, அவன் புத்தியிலும் நிற மாற்றம். பாக்கெட் மணின்னு ஒரு கணிசமான தொகையை வாங்கிடறான். அந்த பீஸ், இந்த பீஸ்ன்னு அப்பப்ப பணம். டிரஸ்சுக்குன்னு, 4,000 ரூபாய் வாங்கிட்டுப் போய், நானூறு ரூபாய்ல பிளாட்பாரத் துணி எடுப்பான்...
""ரெண்டு லிட்டர் பெட்ரோல் போடச் சொன்னால், ஒரு லிட்டர் போட்டு, மீதியை சட்டைப் பையில போட்டுக்குவான். பார்ட் டைம் வேலை பார்க்கிறான்; கேட்டால், "சும்மா பிரண்டுக்கு ஹெல்ப் பண்றேன்...'ன்னு மழுப்பறான்...
""உறவுகளைக் கூட, செலவுகள்ன்னு பார்க்கிற அளவுக்கு, மனத்திரிபு அவனுக்குள். ஊரிலிருந்து ஒரு நாள் என் தங்கை வந்தாள். இவனென்றால், அவளுக்கு கொள்ளை பிரியம். இவனை பார்க்கத்தான் கோயமுத்தூரிலிருந்து கிளம்பி வந்திருக்கிறாள். அவளுக்கு புதுத்துணி எடுக்கப் போனால், "ரொம்ப காஸ்ட்லியா எடுத்துடாதிங்க. அத்தைக்கு சிம்பிள் புடவையே போதும்...'ன்னு அவ காதுபடச் சொன்னான்; கூசிக் குறுகிப் போயிட்டாள்...
""இப்படியே போனால், என்னாவது. இப்பவே படிப்பில் கவனம் போயாச்சு. இந்த செமஸ்டரில் மூணு பேப்பர் அரியர்ஸ். கேட்டால், "பணக்காரனாக படிப்பு தேவையில்லை; அது, வெறும் கிளார்க்குகளை உருவாக்க மட்டும்தான் பயன்படும்...'ன்னு அலட்சியமா சொல்றான்; கவலையா இருக்கு திரு. என்ன செய்யட்டும்?''
""தம்பிகிட்ட நான் பேசறேன்...'' என, சரவணன் கைகளைப் பற்றி ஆறுதல் சொன்னார் திருஞானம்.
""அங்கிள்... அப்பா என்னை சரியா புரிஞ்சுக்கல. இவரைப் போல சராசரி வாழ்க்கை வாழ, நான் விரும்பல. வாழ்க்கை ஒரு முறை தான்; அதை, வசதியா வாழணும். அதுக்கு, இப்போதிலிருந்தே காசுல கவனமா இருக்கிறதுல என்ன தப்பு?
""ஐ வாண்ட் டு பி ரிச். பணம் வந்து விட்டால், வேண்டியதெல்லாம் நட்பு <உட்பட, எல்லாம் தேடி வந்து விடும். நினைச்சதை செய்ற சுதந்திரம் வந்து விடும். இது புரிஞ்சதனால தான், மேல் நாட்ல பணம் குவிக்கிறாங்க; நம்ம நாட்ல பணக்காரனாவதை, ஏதோ பாவ காரியம் மாதிரி பார்க்கிறாங்க...
""அப்பா மாதிரி, உங்களை மாதிரி, 10 தேதி வரை சம்பளத்தை வச்சு சமாளிச்சுட்டு, 11ம் தேதியிலிருந்து கடன் கிடைக்குமா, கைமாத்து கிடைக்குமான்னு அலைய நான் தயாரில்லை; எங்கள் தலைமுறையும் தயாரில்லை!'' என்றான் ஹரிஷ்; திட்டவட்டமாக.
""வெரிகுட்!'' என்றார் திருஞானம்.
""எங்கள் வாழ்க்கையிலிருந்து பாடம் கத்துக்கிட்டு, ஒரு மேலான வாழ்க்கை வாழ விரும்பற உனக்கு, என் வாழ்த்துக்கள். நீ முக்கியமான நபர் ஒருவரை சந்திக்கணும். உனக்கு அவரால் பலவகையில் பயன் இருக்கும். அவர் பணக்கார பிசினஸ் மேன். மேலும், உன்னைப் போலவே சின்ன வயசுல பணத்தின் மீது மோகம் கொண்டு, வெற்றியும் பெற்றவர்!'' என்றார்.
""யார் அவர்?'' என்றான் ஹரிஷ்.
""ஹாய் ஹரிஷ்... நான் தன்ராஜ். திருஞானம் உ<ங்களைப் பத்தி சொன்னார். சின்ன வயசுல எனக்கிருந்த அதே மனோபாவத் தோடு, அதாவது, பணம் குவிக்கும் ஆர்வத்தோடு நீங்களும் இருக்கீங்கன்னு கேள்விப்பட்டு, மீட் பண்ண விரும்பினேன்!'' என்று, தேநீர் கொடுத்து உபசரித்தார்.
பிறகு, ""சொல்லுங்கள் மிஸ்டர் ஹரிஷ்... உங்க எய்மை அடையறதுக்கு, என்ன விதமான திட்டங்கள் வச்சிருக்கிங்க. ஏதாவது பிசினஸ், இண்டஸ்டரி பத்தி யோசிச்சு வச்சிருக்கீங்களா?''
யோசித்து, ""இப்போதைக்கு ஆர்வம் மட்டுமிருக்கு!'' என்றான் ஹரீஷ்.
""தட்ஸ் குட்... எந்த சாதனைக்கும் அடிப்படை, ஆர்வம் தான்; எனக்கும் அப்படி தான். என் அப்பா அக்கவுன்ட்ஸ் ஆபீஸ்ல அட்டெண்டர் வேலை பார்த்தார். நாலு பிள்ளைகள். வாடகை வீடு, பற்றாக்குறை வாழ்க்கை...
""எனக்கு அந்த வாழ்க்கையில் உடன்பாடில்லை. பண வேட்டையில் இறங்கினேன். பத்து ரூபாய் கிடைக்குமென்றால் போதும், சட்டத்துக்கு உட்பட்ட எந்த வேலையும் செய்வேன். கொஞ்சம் பணம் சேர்ந்ததும், பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, வேறிடத்தில் அதிக விலைக்கு விற்றேன். அதுவே, என்னை எக்ஸ்போர்ட் பிசினசில் இறக்கி, பணக்காரனாக்கியது. நான் நினைச்ச பல கோடிகளை சம்பாதிச்சுட்டேன்...
""என்ன... வருஷம்தான் கூடுதலாகிட்டுது. ஐம்பதாவது வயசுலதான் கனவு ஈடேறிச்சு. அதனாலென்ன, நான் கோடீஸ்வரனாயிட்டேன். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை, பாராட்டு, பதக்கம் எல்லாம் வந்தும், ஏதும் வராதது போல ஒரு ஏக்கம்!'' என்று நிறுத்தினார்.
அவர் முகத்தையே பார்த்தான் ஹரிஷ்.
அவரே தொடர்ந்தார்...
""எப்போதும் பணம், பணம்ன்னே தேடிக்கிட்டிருந்தேனா... அதுல நான் என் இளமைக் காலத்தை இழந்துட்டேன். கலகலப்பா ஓடியாடி, துள்ளித்திரிய வேண்டிய கல்லூரிக் காலத்தை மிஸ் பண்ணிட்டேன். அங்கே தான் நல்ல ஆரோக்கியமான நட்பு கிடைக்கும். அந்த அற்புதமான வாய்ப்பை நழுவ விட்டதோடு, உறவுகளையும் உதறிட்டேன்...
""எந்த நிகழ்ச்சிக்கும் போறதில்லை; யார் வந்தாலும் கொண்டாடுறதுமில்லை. "இப்படியிருந்தால் உறவுக்காரர்கள் விலகிடுவாங்க...' என்றார் அப்பா. "பணம் வந்தால் வந்திடுவாங்க...'ன்னு நான் சொன்னேன். அது, அவ்வளவு சரியில்லைன்னு நினைக்கிறேன்.
""உறவுகள் மரியாதைக்குரிய எல்லையில் நிக்கிறாங்களே தவிர, பாசத்தோடு அணைக்கலை. அதை விட கொடுமை, நான் நெருங்கிப் போனால், "வேஷம்'கிறாங்க; நட்பும் அப்படித்தான்...
""நல்ல நண்பர்களை அடையாளம் கண்டு பழக முடியலை. இவங்க பணத்துக்காக பழகறாங்களோன்னு சந்தேகம் வந்து, நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு இனம் காண முடியாம தவிக்கிறேன். என்ன ஒரு கொடுமை.
""அவ்வளவு ஏன்... என் பிள்ளைகளே தேவையிருந்தால் மட்டும் தான் கிட்டே வர்றாங்க. அன்பா, பாசமா பழக வரமாட்டேங்கறாங்க. எப்படி வருவாங்க. அவங்க பிறந்தப்ப, அவங்க பக்கத்துல இருந்து, கொஞ்சி விளையாடி, கேட்டதை வாங்கி கொடுத்து, உறவாடியிருந்தால் ஒட்டி வருவாங்க. நான் விசிட்டிங் புரொபசர் மாதிரி... விசிட்டிங் பாதரா இருந்தால், அட்டாச்மென்ட் எப்படி வரும்...'' என்று கசப்பாக சிரித்தார்.
பிறகு, ""நான் வாழ்க்கையை தலை கீழாக வாழ்ந்துட்டேனோன்னு பீல் பண்ணேன். அதாவது, படிக்கிற வயசுல படிப்பு, வேலை செய்யும் காலத்தில் வேலை, காலா காலத்தில் கல்யாணம், குடும்பத் தலைவனா செய்ய வேண்டிய கடமைகளை செய்தபடியே கூடுதல் வருமானத்துக்கான முயற்சி, உ<பரியாய் வரும் பணத்தை நல்ல விதமாய் முதலீடு செய்து, கொஞ்சம் லாபம் பார்க்கறதுன்னு தண்டவாளம் போல் குடும்பம், தொழில் அல்லது வேலைன்னு வாழ்க்கையை கொண்டு போயிருந்தால், நிறைவாயிருத்திருக்குமோன்னு யோசிக்கிறேன்...
""முழுக்க, முழுக்க பணத்துக்கே முக்கியத்துவம் கொடுத்ததால், இந்த வயதில் ஒரு வெறுமை தட்டுது. எதற்காக ஓடி, ஓடி பணம் சேர்த்தேனோ, அதுக்கு பணம் பயன்பட வில்லை. பணத்துக்கும் மேல் ஒண்ணு இருக்கு. அதை நான் அப்போது உணரல... இதை, உங்களை டிஸ்கரேஜ் செய்யறதுக் காகவோ, அட்வைஸ் செய்யறதுக்காகவோ இல்லை. ஜஸ்ட்... சொல்லணும்ன்னு தோணிச்சு; சொன்னேன். உங்களுக்கு எது சரின்னு தோணுதோ, அதை செய்யுங்க. எனக்கு நேர்ந்தது போல, உங்களுக்கும் நேரும்ன்னு கட்டாயமில்லை...'' என்றார்.
""புரியுது சார்!'' என்றான் ஹரிஷ்.
வீடு திரும்பியவன் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டு, தன் வசமிருந்த, 31 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தான் ஹரிஷ்.
அதனுடன் சிறிது பணம் போட்டு, புது பைக் வாங்கிக் கொடுத்தார் சரவணன்.
அதில் கல்லூரிக்கு போய் வந்தான் ஹரீஷ். அவன் சரியான பாதையில் பயணிக்கத் துவங்கி விட்டான் என்பதற்கு சாட்சியாக இருந்தது, அடுத்த செமஸ்டரில், ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் அவன் வாங்கிய மதிப்பெண்கள்.
***

படுதலம் சுகுமாரன்

Advertisement

 

மேலும் வாரமலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விவேகாநந்தன் - bangalore,இந்தியா
20-செப்-201112:07:34 IST Report Abuse
விவேகாநந்தன் நல்ல கருத்துள்ள கதை
Rate this:
Cancel
S .ரவி - நியூபிளய்மோத்,நியூ சிலாந்து
19-செப்-201112:23:24 IST Report Abuse
S .ரவி என் நண்பன் சொல்வான் - அவனுடைய பாஸ் மேஜைக்கு பின் புறம் இப்படி ஒரு வாசகம் மாட்டி வைத்திருப்பாராம். பெரிய எழுத்துக்களில் ' Money is not everything in life' அதன் கீழே சிறிய எழுத்துக்களில் 'earn it before issuing such nonsense statements'. ஊதாரித்தனமாகவும் இருக்க வேண்டாம், கஞ்சத்தனமாகவும் இருக்க வேண்டாம். இந்த கதையின் நாயகன் 31 ஆயிரம் சேர்த்து வச்சதை, தப்புன்னு சொல்லமுடியுமா? சின்ன வயசுல பணம் சம்பாதிக்காமல் பிறகு வயசான அப்புறம் சம்பாதிக்க முடியுமா? பார்ப்பதை எல்லாம் வாங்கி கடனாளியாக போனால் நிம்மதி கிடைக்குமா? எல்லாத்துக்கும் எல்லை உண்டு, அவரவருக்கு தேவைகள் உண்டு. வருமானத்தை பொறுத்து தேவைகளை வைத்து கொண்டால் நிம்மதி. தேவைகளை பொறுத்து வருமானத்தை பெருக்க நினைத்தால், சிலர் வெற்றி பெறலாம், பலர் வேதனை படலாம். அதை புரிந்துகொண்டு வாழ்கையில் வெற்றி பெறுவது அவரவர் சாமர்த்தியம்.
Rate this:
Cancel
நித்யா.கே - சென்னை,இந்தியா
19-செப்-201111:08:34 IST Report Abuse
நித்யா.கே it was nice story.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X