நம் கிராமங்களில் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா நடப்பது போல், தென் கொரியாவில், சகதி குளியல் என்ற திருவிழா நடக்கிறது. ஆனால், நம்ம ஊர் போல், மாமன் மகன் அல்லது மாமன் மகள் மீது தான், மஞ்சள் நீர் ஊற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் எல்லாம் இங்கு இல்லை. யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும், சகதியால் குளிப்பாட்டலாம். தென் கொரியாவின் கடலோர நகரமான போரியோங் என்ற இடத்தில், ஆண்டு தோறும் ஜூலையில் இந்த விழா, வண்ணமயமாக அரங்கேறுகிறது. சகதி குளியல், சகதியில் சறுக்கி விளையாடுதல், பல நிறங்களிலான சகதிகளை உடல் முழுவதும் பூசி, சக போட்டியாளர்களை தழுவுதல் உள்ளிட்ட பல போட்டிகள், மிகுந்த ஆரவாரத்துக்கு இடையே நடக்கும்.
இரண்டு வாரங்கள் நடக்கும் இந்த சகதி திருவிழாவைக் காண, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர், இங்கு வந்து செல்கின்றனர். இதில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடக்கம். இந்த விழாவுக்காக, 200 டன் சகதிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதெல்லாம் இருக்கட்டும், இந்த திருவிழாவை என்ன நோக்கத்துக்காக நடத்துகின்றனர் என்று தானே கேட்கிறீர்கள். "இந்த சகதி குளியல் மூலம், இன்றைய பரபரப்பு உலகில், நம் மனதில் உள்ள டென்ஷன்களை எல்லாம், சற்று நேரம் தூர எறிந்து, நம்முடைய குழந்தை பருவத்தை நினைவுபடுத்தும் வகையில், இந்த திருவிழாவை கொண்டாடுகிறோம்...' என்கின்றனர், போரியோங் நகரவாசிகள்.
— ஜோல்னா பையன்.