மாய மோதிரம் (4) - இருகூர் இளவரசன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2011
00:00

இதுவரை: மாய மோதிரத்தின் உதவியால் முகுந்தனை அடிக்க வந்த சித்தியின் கை அப்படியே நின்றது. இனி-

முகுந்தனின் சித்திக்கு கை இன்னும் உயர்த்தியே இருந்தது. வைத்தியர், கையில் எண்ணெய் தடவிக் கொண்டிருந்தார். வள்ளியம்மாளுக்கு வலி தாங்க முடியாமல் கத்தினாள்.
""வைத்தியரே... இதென்ன வித்தியாசமாகத் தெரிகிறது. கையில் சுளுக்கு ஏற்பட்டால் இப்படிக் கையைத் தூக்கியா இழுத்துப் பிடிக்கும்?'' என்று புரியாமல் கேட்டான் கந்தசாமி.
""என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு சுளுக்கை நான் பார்த்தே இல்லை. இந்த சுளுக்கு ஏதோ ஒரு விந்தையாகத் தெரிகிறது. ஒருவேளை மந்திரம், செய்வினை என்று யாராவது செய்திருப்பார்களோ? என்றுதான் தோன்றுகிறது,'' என்றார் வைத்தியர்.
""மந்திரம், செய்வினை செய்கின்ற அளவுக்கு வள்ளியம்மாளுக்கு விரோதிகள் யாரும் இருப்பதாய் தெரியவில்லை,'' என்றார் கந்தசாமி.
""இப்படி நேரக் காரணம் என்ன?'' என்று வைத்தியர் கேட்டார்.
""என் மகன் முகுந்தன், என் முதல் மனைவியின் மகன். அவனை எதற்கெடுத்தாலும் கைநீட்டி அடித்து விடுவாள். நேற்றும் இதே போலத்தான் அவனை அடிக்க கை ஓங்கினாள். ஓங்கின கை அப்படியே நின்றுவிட்டது,'' என நடந்ததைக் கூறினார் கந்தசாமி.
""நீங்கள் கூறும் முகுந்தன் சாதாரண பிள்ளை இல்லை; அவன் ஒரு, "தெய்வப் பிறவி' என்றே நினைக்கிறேன். மேற்கொண்டு, "முகுந்தனை அடிக்கமாட்டேன்' என்று தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு முகுந்தனிடம் மன்னிப்புக் கேளுங்கள். அதன்பிறகு, கை சரியாகிறதா என்று பார்ப்போம். இதைவிட்டால் வேறு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,'' என்று வைத்தியர் தன் நிலையை எடுத்து விளக்கினார்.
வள்ளியம்மாளை வேறுவழியின்றி வைத்தியரிடமிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தான் கந்தசாமி.
அந்தக் குடியிருப்பின் கேட்டைத் திறந்து விட்டான் முகுந்தன். ஐந்தாவது மாடிக்குடியிருப்பில் வசிக்கும் குஷ்வந்த்சிங் என்பவர், தன் குடும்பத்துடன் காரில் சென்று திரும்பி வந்தார். கேட்டுப் பக்கம் காரை நிறுத்தி... ""ஏய் பையா... உன் அப்பா எங்கே?'' எனக் கேட்டார்.
""சித்தியக் கூட்டிட்டு வைத்தியர் வீட்டுக்குப் போயிருக்காங்க,'' என்றார் முகுந்தன்.
""கார் டிக்கியில ஒரு பெரிய பெட்டி ஒண்ணு இருக்கு... அதை என் வீட்டுக்கு எடுத்துட்டு வரணும். இந்த நேரம் பார்த்து உங்கப்பா இல்லேன்னா... எப்படி?'' என்று திட்டினான் குஷ்வந்த் சிங்.
""நீங்க காரை பார்க் பண்ற இடத்துல பண்ணிட்டுப் போங்க... பெட்டி உங்க வீடு தேடி வரும்.'' என்றான் முகுந்தன்.
""சீக்கிரம் கொண்டு வரணும்!'' எனக் கூறி காரை வழக்கமாகப் பார்க் செய்யும் இடத்தில் நிறுத்தி விட்டு, காரை விட்டு இறங்கினார் குஷ்வந்த் சிங். அவர் மனைவி சோனியா, ஐந்து வயது மகள் சினேகா... மூவரும் முகுந்தனைப் பார்த்தனர்.
""ஏய் பையா இங்கே வா!'' என்று மீண்டும் அழைத்தனர். முகுந்தன் ஓடிவந்தான்.
கார் டிக்கியைத் திறந்து ஒரு பெரிய பெட்டியை கணவன், மனைவி இருவருமாகத் தூக்கி கீழே வைத்தனர்.
""இந்தப் பெட்டியை வீட்டுக்குள்ள கொண்டுவந்து கொடுத்தா, ஐம்பது ரூபாய் தர்றேன்னு உன் அப்பா கிட்டச் சொல்லு,'' என்றார் சிங்.
""சரிங்கய்யா... சொல்றேன்!''
""ஹாய் முகுந்தா!'' என ஐந்து வயது சினேகா முகுந்தனை அழைத்தாள்.
"ஐந்து வயதுச்சிறுமி தன்னை, அண்ணா என்று அழைக்கவில்லையே?' என்கிற வருத்தம் முகுந்தனுக்கு இருந்தது.
""டேய்... பேசமாட்டியா?'' என்று சிறுமி மீண்டும் சொல்ல, முகுந்தனுக்கு கோபமே வந்துவிட்டது.
""என்னை டேய்னு கூப்பிடாதே! அண்ணான்னு கூப்பிடு'' என்றான்.
சிங்குக்குக் கோபம் வந்தது.
""ஒரு சாதாரண வாட்ச்மேன் பையன் நீ... உன்னை அண்ணான்னு கூப்படணுமா? என் பொண்ணு எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? உன்னை டேய்ன்னு கூப்பிடறதே பெரிய விஷயம்!'' என்று அதட்டினார் சிங்.
சிறுமி சினேகா சிரித்துக்கொண்டு, சிங்கின் கையைப் பிடித்து தன் வீடு நோக்கி நடந்தாள்.
பிறர் எதற்கெடுத்தாலும் சாதாரண வாட்ச்மேன் பையன் என்று தரக்குறைவாகவே பேசுகிறார்கள். ஏன் இப்படி? தன் தந்தை வாட்ச்மேன் வேலை பார்ப்பது கேவலமா? இத்தனை வீடுகளிலும் லைட்டை அணைத்துத், தூங்கிக் கொண்டிருக்கையில் தன் தந்தை இரவு முழுவதும் கண்விழித்துக் காவல் காக்கிறாரே!
புதிதாக யாரேனும் வந்தால் அவருடைய விலாசம் போன் நம்பர், வண்டி நம்பர் அனைத்தையும் குறித்துக்கொண்டு, யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுத் தெரிந்தது பிறகல்லவா அனுப்பி வைப்பார்.
இத்தனை நாளும் இவ்வளவு பெரிய குடியிருப்பில் ஒரு அசம்பாவிதம் எதுவும் நடந்ததில்லை. அந்த அளவுக்குக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக்கொள்வார் அப்பா. அப்படிபட்ட அப்பா செய்கிற தொழிலை அடிக்கடி கேவலமாகச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார்களே என்பதில் முகுந்தனுக்குப் பெரிய வருத்தம் இருந்தது.
காரின் அருகில் இறக்கி வைத்திருக்கும் பெட்டியைப் பார்த்தான். இந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அப்பாவால் ஐந்துமாடிக் கட்டிடத்தின் மீது ஏறிச் செல்ல முடியுமா? லிப்ட் இருந்தாலும் வாட்ச்மேன் குடும்பம் அதில் பயணிக்கக்கூடாது என்று கூறியிருக்கின்றனர். அப்பா வருவதற்குள் தாமே இந்தப் பெட்டியைக் கொண்டு போய்க் கொடுத்து விடலாம் என, நினைத்தான்.
பெட்டியை நகர்த்த முயன்றான் முடியவில்லை. பிறகு விழிகளை மூடிக்கொண்டு,""மாய மோதிரமே... இந்தப் பெட்டியைத் தூக்கும் சக்தியை எனக்குக் கொடு!'' என, வேண்டினான்.
பிறகு அந்தப் பெட்டியைத் தூக்கினான். சாதாரண பஞ்சு மூட்டை போல கனமே இல்லாமல் இருந்தது. அந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு படிக்கட்டுகளாக ஏறிச் சென்றான். ஒருசிலர் மேலே இருந்த வீடுகளின் வாசலில் நின்று முகுந்தன் பெரிய பெட்டியைத் தூக்கிக் செல்வதைப் பார்த்து வியந்து நின்றனர். பெட்டிமட்டுமே, மற்றவர்கள் கண்ணுக்குத் தெரிந்தது. பெட்டியை தூக்கிச் செல்வது முகுந்தன் தானா என்பதைக் கூட மற்றவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு சின்னப் பையன் இவ்வளவு பெரிய பெட்டியைத் தூக்க முடியுமா? அதுவும் வாட்ச்மேன் பையன்? என்ன சாப்பிடுகிறான்? இவ்வளவு பலம் எப்படி வந்திருக்கும் என்று வியப்பபோடு பேசிக்கொண்டிருந்தனர்.
சிங்கின் வீட்டுமுன் பெட்டியை வைத்து விட்டுக் கதவைத் தட்டினான் முகுந்தன்.
சிங் கதவை திறந்தார்.
""என்னடா...?''
""நீங்க சொன்னபடி பெட்டியைக் கொண்டு வந்து விட்டேன். பேசியபடி ஐம்பது ரூபாயைக் கொடுத்தால் வாங்கிச் செல்வேன்!'' என்றார்.
""இந்தப் பெட்டியை நீ தூக்கி வந்தாயா?''
""ஆமாம்.''
""பொய் சொல்லாதே! இந்தப் பெட்டியை உன்னால் தூக்க முடியுமா?''
""நான்தான் தூக்கி வந்தேன்!''
""நீ சொல்வதை நான் நம்பமாட்டேன். பெரியவர்களாலேயே இந்தப் பெட்டியைத் தூக்குவது கடினம். அதுவும் இதைத் தூக்கிப் படிக்கட்டு களில் ஏறி வருவது என்பது மேலும் கடினம். யாரோ தூக்கி வந்த பெட்டியை நீ தூக்கி வந்ததாய் சொல்கிறாயே!போ... போ...'' என விரட்டினார் சிங்.
""ஐயா... என்ன நம்புங்கள். இந்த பெட்டியை எங்கே வைக்க வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள். நான் அங்கேயே வைத்துவிட்டு செல்கிறேன்.''
""அதோ... அந்த அறைக்குள் வை பார்க்கலாம்.''
""முகுந்தன் சற்றும் யோசிக்கவில்லை, சட்டெனப் பெட்டியைத் தூக்கி சிங் சொன்ன இடத்தில் வைத்தான்.
சிங் இரண்டு விழிகளையும் உயர்த்திப் பார்த்தார். அவர் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை. இவ்வளவு கனமான பெட்டியை ஒரு சாதாரணச் சிறுவனால் தூக்க முடியுமா?
""ஐயா கேட்டுல யாரும் இல்லை... பணம் குடுங்க!'' என்றான்.
சிங், வேகமாக சென்று, ஐம்பது ரூபாயை எடுத்து வந்து முகுந்தனிடம் கொடுத்தார்.
முகுந்தன் அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நடந்தான். ஐந்தாவது மாடியிலிருந்து கீழே பார்த்தால் கார்கள் வரிசையாக நின்றிருக்கும் அழகே தனிதான். அதோடு நீச்சல் குளம் தெரியும். பார்க்கப் பார்க்க அழகாக இருக்கும். முகுந்தன் மாடியிலிருந்து நீச்சல் குளத்தைப் பார்த்தான்.
அந்த காம்பவுண்டில் உள்ள குழந்தைகள் சப்தம் போட்டு அந்த நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். சற்று நேரம் உற்றுப் பார்த்தான். நீச்சல் குளத்தின் மேடையில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றுவயதுச் சிறுமி தவறி அந்தக் குளத்தில் விழுந்து விட்டாள். குழந்தை விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. மற்ற பிள்ளைகள் சத்தம் போட்டுக் கொண்டு தண்ணீரை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
தவறி விழுந்த குழந்தை தத்தளிப்பதைக் கண்ட முகுந்தனுக்கு திக்கென்றிருந்தது. ஓரிரு நிமிடத்திற்குள் குழந்தையைக் காப்பாற்றவில்லை என்றால் குழந்தைக்கு ஆபத்து நேர்ந்து விடும்.
""மாய மோதிரம், தவறிக் தண்ணீரில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற நீதான் உதவி செய்ய வேண்டும்.'' என வேண்டிக்கொண்டு, ஐந்தாவது மாடியிலிருந்து நீச்சல் குளத்தை நோக்கித் தாவினான். சர்ரென்று அந்தக் குளத்தின் மையப் பகுதியில் விழுந்தான் முகுந்தன். வேகமாக நீந்திக் குழந்தையைத் தூக்கினான். குளத்தின் மேட்டுப்பகுதிக்கு குழந்தையுடன் வந்து குழந்தையைப் படுக்க வைத்தான்.
வாட்ச்மேன் மகன் முகுந்தன் பணக்காரர்கள் பயன்படுத்தும் நீச்சல் குளத்தில் குதித்துவிட்டான் என்று, அங்குள்ள பிள்ளைகள் அனைவரும் அவனை அடிக்க வந்தனர். அதில் கிரிக்கெட் விளையாட்டில் தேர்ச்சி பெற்ற சுசீந்தரனும் ஒருவன்.
""நாங்க குளிக்கிற இந்த நீச்சல் குளத்துல நீ எப்படிக் குளிக்கலாம், போடுங்கடா நாலு!'' என்று சுசீந்தரன் சொல்லி முடித்ததும், பையன்கள் அவனை அடிக்க ஆரம்பித்தினர்.
அதற்குள் தண்ணீரில் விழுந்த சிறு குழந்தையின் தாய் ஓடிவந்தாள்.
""என்னாச்சு... எதுக்காக முகுந்தனை அடிக்கிறீங்க?'' என்றாள் அவள்.
""இவன் இந்த நீச்சல் குளத்தில் குதித்தான்!'' என்றார் சுசீந்திரன்.
""முகுந்தா... ஏன் அப்படிச் செய்தே? நீயெல்லாம் இங்க குளிக்கக் கூடாது என்பது உனக்குத் தெரியும் அல்லவா?'' என்றாள்.
""தெரியும். நான் குளிப்பதற்காகக் குதிக்கவில்லை. அதோ... உங்கள் மகள்... பந்து விளையாடிக் கொண்டிருந்தவள் தவறி தண்ணீரில் விழுந்து விட்டாள். இங்குள்ளவர்கள் யாரும் அதை கவனிக்கவில்லை. நான் சிங் வீட்டுக்குப் பெட்டிக் கொடுக்கப் போனேன். அங்கிருந்து எதேச்சையாய்ப் பார்த்தேன். எப்படியாவது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று குதித்து விட்டேன். முதலில், குழந்தைக்கு என்னவாயிற்று என்று பாருங்கள்!'' என்றான் முகுந்தன்.
மேல்மூச்சும், கீழ்மூச்சும் வாங்கி குழந்தை படுத்திருந்தது. ஓடிச்சென்று தாய் குழந்தையைத் தூக்கினாள்; வயிற்றை அழுத்தினாள். வாய் வழியாக குழந்தை குடியிருந்த தண்ணீர் வெளியே வந்தது. சிறு நேரத்தில் குழந்தை கண்விழித்தாள்.
""என் குழந்தைக்கு மறுபிறவி கொடுத்த தெய்வம் நீ!'' என்று அக்குழந்தையின் தாய் கண்ணீருடன் வாழ்த்தினாள். முகுந்தனை அடித்த சிறுவர்கள் தலைகுனிந்து நின்றனர். முகுந்தன் அவனுக்கே உண்டான, "ஸ்டைலில்' நடந்து சென்றான்.
(- தொடரும்)

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X