இந்தியாவை மையமாகக் கொண்ட ஐ.டி., நிறுவனங்களில் டி.சி.எஸ்., எனப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. இந்தியாவிலிருந்து மிக அதிக சாப்ட்வேர் ஏற்றுமதி செய்வதில் இந்த நிறுவனம் முதன்மையானது. வரும் நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 45 ஆயிரம் பணி இடங்களை நிரப்பத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பணி வாய்ப்பு சந்தை நன்றாக வளர்ச்சி அடைந்து வருவதால் இந்த அளவு புதிய பணி வாய்ப்புகள் டி.சி.எஸ்., நிறுவனத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அடுத்த நிதியாண்டில் எப்படி பணிநியமனங்களைச் செய்வது என்பது குறித்த அறிக்கை இன்னமும் கிடைக்கவில்லை என்ற போதும் இது வரை 200 கேம்பஸ்கள் மூலமாக கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு டி.சி.எஸ்., நிறுவனம் பணி நியமனங்களை ஏற்கனவே வழங்கிவிட்டது. இன்னமும் 10 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஏற்கெனவே பணி நியமனம் செய்யப்பட்ட 37 ஆயிரம் பேரில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பலரும் பணியில் சேர்ந்து விட்டனர். அதிகபட்ச ஊழியர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் பணியில் சேர்ந்துள்ளதாக இந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டி.சி.எஸ்., நிறுவனத்தில் தற்சமயம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 770 பேர் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.சி.எஸ்., நிறுவனம் குறித்து வெளியாகியுள்ள இந்த செய்தி ஐ.டி., துறையில் இணைய விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.