காஞ்சி மாவட்டக் கோயில்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2011
00:00

“அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சி அவந்திகா!
பூரி துவாரவதீச்சைவ ஸப்தைதே முக்திதாயகா!!’
நினைத்தாலே முக்திதரும் தலங்களாக ஏழு திருத்தலங்கள் கூறப்பட்டுள்ளன. அவை அயோத்தி, மதுரா, மாயா, காசி, காஞ்சி, பூரி, துவாரகை ஆகிய ஏழு தலங்கள்தான்.


அவற்றுள் நடு நாயகமாகக் குறிப்பிடப்படுவது, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம்தான். பதஞ்சலி முனிவர், தனது மாபாடியத்தில் காஞ்சியை குறிப்பிட்டுள்ளார். “நகரேஷû காஞ்சி’ என்று காளிதாசனால் போற்றிப் புகழப்பட்ட நகரம் காஞ்சிபுரம். சீன யாத்திரிகன் “யுவான் சுவாங்’, இந்நகரத்திற்கு வந்து தங்கி, அங்கு வாழ்ந்த மக்கள் பற்றி தனது குறிப்புகளில் விவரித்துள்ளார். நாலந்தா பல்கலைக்கழகம், மகத தேசத்தில் இருந்தது, தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ளது. அங்கு சிறந்த பேராசிரியராகத் திகழ்ந்த தர்மபாலன், காஞ்சிபுரத்தவர்.


காஞ்சியை ஆண்ட அரச குடும்பத்தினரில் ஒருவர், சீனா வரை சென்று புத்த சமயத்தைப் பரப்பினார் என்பது வரலாறு. ஆறாம் நூற்றாண்டில் சமணக் காஞ்சி பற்றியும், திருப்பருத்திக் குன்றத்தில் வாழ்ந்த வஜ்ரநந்தி பற்றியும், பள்ளன் கோயில் செப்பேடுகள் விரிவாகக் குறிப்பிடுகின்றன. சமண சமய நூல்களில் மேரு மந்தர புராணம் என்ற நூலை இயற்றிய வாமனாசாரியார் காஞ்சியில் வசித்தவர். “மயூரசதகம்’ என்ற அரிய நூலை இயற்றிய மயூரசிம்மன், காஞ்சியில் கல்வி பயின்றவன்தான்.


பாலாறு, வேகவதி, செய்யாறு, கிளியாறு போன்ற புனித ஆறுகளின் கரைகளில்தான் எத்தனை எத்தனை திருக்கோயில்கள்! அப்படிப் புகழ் பெற்ற கவின்மிகு காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள், நாம் இப்போது செல்லவிருக்கிறோம். 108 வைணவ திவ்விய தேசங்களில், காஞ்சிபுரத்திலேயே பதினான்கை நாம் தரிசித்து விடலாம்! சுமார் 108 சிவாலயங்கள் காஞ்சிபுரம் நகரத்திலேயே அமைந்திருந்ததாக ஒரு குறிப்பும் உள்ளது. தேவாரத் திருத்தலங்களும், அருணகிரிநாதர் திருப்புகழ் கொண்ட முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருத்தலங்களும், திக்கெட்டிலும் கொண்டுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம்!
முதலில் நாம் காஞ்சிபுரம் நகரையே வலம்வர இருக்கிறோம். 14 திவ்விய தேசங்கள், இந்த நகரிலேயே அமைந்திருப்பது வரப்பிரசாதமே! காஞ்சிபுரம் நகரை சின்னக் காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம், ஜைன காஞ்சிபுரம் என்று மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவர். சென்னைக்குத் தென்மேற்காக 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காஞ்சிபுரம். நாம் வேலூர் மாவட்டத்தின் எல்லை வழியே வருவதால், அங்கிருந்து 70 கி.மீ. வேலூர் மாவட்டத்தில் நாம் கடைசியாக வழிபட்ட தக்கோலம் திருத்தலத்திலிருந்து 22 கி.மீ. தான்.


விஷ்ணு காஞ்சி: சின்னக் காஞ்சிபுரம் என்று இன்று அழைக்கப்படும் பகுதி, முன்பு “விஷ்ணு காஞ்சி’ என்றே அழைக்கப்பட்டது. “அத்திகிரி’ என்று அழைக்கப்பட்ட இப்பகுதியில் மட்டும் ஐந்து பெருமாள் கோயில்களும், இருபதுக்கும் மேற்பட்ட சிவாலயங்களும் உள்ளன. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள திருமால் தலங்கள் பதினான்கினுள் ஒன்பது திருக்கோயில்கள் மேற்குதிசை நோக்கியவை. பொதுவாக சிவாலயங்களில் மேற்குப் பார்த்த கோயில்களை நாம் பரிகாரத் தலங்களாக கருதுகிறோம். அப்படிப் பார்க்கையில் காஞ்சிபுரத்தில் உள்ள மேற்குப் பார்த்த திருக்கோயில்கள் அத்தனையும் ஏதோ ஒரு வகையில் நிவர்த்தித் தலங்களாகவே உள்ளன.


வெவ்வேறு வகை தோஷ பரிகாரங்களுக்கு வெவ்வேறு திருக்கோயில்களைத் தேடிச் செல்லும் அன்பர்கள், காஞ்சிபுரத்திற்கு வந்தால், அத்தனை தோஷங்களையும் நிவர்த்தி செய்து கொள்வதோடு புண்ணியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்! அந்த வகையில் சின்னக் காஞ்சிபுரத்தில் நாம் சேவிக்கவிருப்பவை திருக்கச்சி, சொன்னவண்ணஞ் செய்த பெருமான், எண்கரத்தான், விளக்கொளிப் பெருமாள் மற்றும் அழகிய சிங்கர் ஆகியோரைத்தான். அதுமட்டுமல்ல! மணிகண்டீசுவரர், சாந்தாலீசுவரர் மற்றும் புண்ணியகோடீசுவரர் ஆகிய சிவாலயங்களையும் தரிசிக்க இருக்கிறோம்.


அப்படியே, பெரிய காஞ்சிபுரத்தில் நாம் பிரசித்தி பெற்ற பிருத்வித் தலமான ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் காஞ்சிபுரத்தை எட்டுமுன்னர், ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலின் ராஜகோபுரத்தைத்தான் முதலில் காண்பார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த அதிசய மாமரத்தினடியில் அம்மையப்பராக நமக்குக் காட்சி தரும் அருட்கோலத்தைக் காணவிருக்கிறோம். ஒரு சிவாலயத்தினுள்ளேயே வைணவ திவ்விய தேசமும், அங்கே பெருமாளுக்கு சேவை செய்து, நமக்கு சடாரி சாத்தும் சிவாசாரியாரையும் காணலாம். காஞ்சிபுரம் என்றதும், காமாட்சியம்மன் கோயில்தான் உடனே நினைவில் வரும். அம்மனுக்கேன்றே தனிக்கோயிலாக அமைந்தது. கரும்பு வில் ஏந்தி, ஸ்ரீசக்கரத்தின் எதிரே அமர்ந்தபடி அருளாட்சி செய்கிறாள் அன்னை. காஞ்சி நகரத்தின் எத்திசையில் இருந்தாலும் அதன் மையமாக அமைந்ததே இந்த காமகோட்டம். நேர் கிழக்காக திசை கொள்ளாமல், அக்னி மூலைப் பார்வையில் சற்றே தென்கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இந்தக் கோயில். இங்கிருந்த பங்காரு காமாட்சியம்மன் திருமேனி, அன்னியர் படையெடுப்பின் போது, ரகசியமாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டு உடையார் பாளையத்தில் சில காலம் இருந்து, பின்னர் தஞ்சைக்கு கொண்டு சென்று பிரதிஷ்டை செய்யப்பட்டதெல்லாம் வரலாறு. காமாட்சியம்மன் கோயில் அருகிலேயே நாம் காண்பது குமரக்கோட்டம். சோமாஸ்கந்தர் போல, ஏகாம்பரநாதர், காமாட்சி ஆகியோரிடையே தேவசேனாதிபதி திருக்கோயில் கொண்டுள்ளது அற்புதமே!
உலகில் எட்டு திக்கிலிருந்தும், சுற்றுப் பயணிகள் தேடிவந்து காண்பதுதான், எட்டாம் நூற்றாண்டில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் திருக்கோயில். பதினாறு முகங்கள் கொண்ட ÷ஷாடசலிங்கமும், அதனைச் சுற்றி ஊர்ந்து செல்லவேண்டிய சொர்க்கப் பிரதட்சணமும், அதன் சிறப்பு! சிங்க, யாளித் தூண்களிடையே தான் எத்தனை எத்தனை அரிய சிற்பங்கள். ஊர்த்துவ தாண்டவர், மகிஷாசுரமர்த்தினி, கிராத அர்ஜுனர் என்று பிரமிக்க வைப்பவை! ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் அருகிலேயே நாம் பார்த்தசாரதியான பாண்டவ தூதுப் பெருமாளை சேவிக்கப் போகிறோம். இவர் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.


காமாட்சியம்மன் கோயில் அருகே நாம் சேவிக்கப்போவது உலகளந்தப் பெருமாளை. இவரும் மேற்குப் பார்த்தவர்தான். 35 அடி உயரமும், 24 அடி அகலமும் கொண்டு நெடிதுயர்ந்து, இடது காலை விண்ணோக்கியும், வலது கரத்தின் ஒரு விரலையும், இடது கரத்தின் இரு விரல்களையும் உயர்த்திக் காட்டியபடி, மெய்சிலிர்க்க வைக்கும் கோலம் அது! கைலாசநாதர் கோயிலைப் போலவே, பல்லவர் காலத்துக் கட்டுமானமாக அமைந்தது பரமேசுவர விண்ணகரம் என்று அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள் திருக்கோயில். அடித்தளத்தில் வீற்றிருந்த நிலையிலும், மத்தியில் சயனக் கோலத்திலும், மேல் தளத்தில் நின்ற கோலத்திலும் பெருமாளை சேவிக்கவிருக்கிறோம். மும்மாடக் கோயில் இது. வடமொழியில் திரிதள விமானம் என்பர். ஒரே கல்லில் குடையப்பட்ட குடைவரைக்கோயில். கார்வண்ணனைக் காஞ்சியில் பவள வண்ணனாகவும் நாம் சேவிக்கப் போவது, ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள பவள வண்ணப் பெருமாள் கோயில்தான். மேற்கு நோக்கிய கோயில். அரக்கர் கூட்டத்தை அழித்து, குருதியுடன் நின்றபடி பவள வண்ணராகக் காட்சி தந்த தலம் இது. சிவந்த மேனியுடன் பெருமாளை வேறு எந்தத் தலத்திலும் காண முடியாததால் தனிச் சிறப்பு பெற்றதாகும்.


இஷ்ட சித்தீசுவரம் என்ற தனிச்சிறப்புடன் விளங்குவது கச்சபேசுவரர் திருக்கோயில் ஆகும். கூர்மாவதாரம் எடுத்த திருமால், ஈசுவரன் அருள் வேண்டி வழிபட்ட தலமிது. “இஷ்ட சித்தி தீர்த்தம்’ தனிச் சிறப்புப் பெற்றது. கண்ணொளி தரும் தேவியாக அஞ்சனாட்சி எழுந்தருளியுள்ளார். “மயூர சதகம் உருவான திருத்தலம் இது! உலகோரின் வாழ்க்கைக் கணக்கை முடிப்பவனாக, ஏடும், எழுத்தாணியும் கொண்ட சித்திரகுப்தனுக்கு, காஞ்சியில் கோயில் அமைந்துள்ளதைக் காணப் போகிறோம். இவை தேவாரத் தலங்களான திருமேற்றளி, ஓணகாந்தன்தளி, அநேக தங்காவதம் மற்றும் கச்சிநெறி காரைக்காடு ஆகிய திருக்கோயில்களும் நம் வழித்தடத்தில் உள்ளன. சர்வதீர்த்தக்கரையையொட்டி இரண்யேசுவரர், கங்காதரேசுவரர், மன்மதேசுவரர், மல்லிகாஜுனேசுவரர், தீர்த்தேசுவரர், தவளேசுவரர், காசிவிசுவநாதர் திருக்கோயில்கள் உள்ளன. பிள்ளையார் பாளையம் என்ற பகுதியில் நாம் காணப்போவது காயாரோகணர், சிதம்பரேசுவரர், ருத்ரகோடீசுவரர் மற்றும் தக்கீசுவரர் கோயில்கள். அதுமட்டுமல்ல, அஷ்ட பைரவர் பூஜித்த சோளீசுவரர் திருக்கோயிலும் இங்கேதான் உள்ளது. எட்டுத் திசைகளிலும் எட்டு பைரவர் பூஜித்த சிவலிங்கங்கள் இடம் பெற்றுள்ள திருக்கோயில் இது.


கம்மாளத் தெருவில் இறவாத்தானம், கடகேசுவரர், கங்கணீசுவரர், ஆலடிப் பிள்ளையார் தெருவில் பணாதரேசுவரர் ஜுரஹரேசுவரர் கோயில்களும் நம் பட்டியிலில் இடம்பெறும். மேற்குப் பகுதியில் காஞ்சிபுரத்தின் ஜடாயு அருள்பெற்ற திருப்புட்குழி, தாமோதரப் பெருமாள் எழுந்தருளியுள்ள தாமல், திருப்பருத்திக்குன்றம் உள்ளன. தெற்கில், உடும்பு வடிவில் காட்சிதந்த மாகறலீசுவரரை மாகறலிலும், பழைய சீவரத்தில் லட்சுமி நரசிம்மரையும் தரிசிப்போம். திருப்புலிவனம், வியாக்ரபுரீசுவரரும், தவறாது தரிசிக்க வேண்டியவரே! “குடவோலைச்சீட்டு’ முறையில் ஊராட்சி உறுப்பினரைத் தேர்வு செய்த வரலாறு படைத்தது உத்திரமேரூர். சுந்தரவரதப் பெருமாள் திருக்கோயில் முக்கியமானது. அங்கிருந்து சற்றே கிழக்கே ஒதுங்கி அச்சிறுப்பாக்கத்தில் ஆட்சீசுவரரையும், ஈசனின் தேரை மீண்டும் ஓடச் செய்தருளிய விநாயகரையும் காணப்போகிறோம். ஏரிகாத்த ராமனுக்குப் புகழ்பெற்ற மதுராந்தகத்தில் புகழ்மிக்க வெண்காட்டீசுவரர் திருக்கோயில் அற்புதமானது. அருகிலேயே கண்ணொளி தரும் திருக்கண்ணரர், கிணாரில் அருள்பாலிக்கிறார். அப்படியே புலிப்பரக்கோயிலை தரிசித்து விட்டு, “செய்கையம்பதி’ எனப்படும் செய்யூரில் வன்மீக நாதரையும் முத்துக்குமார சுவாமியையும் தரிசிக்க விருக்கிறோம். “பெரும்பேர் கண்டிகை,’ மடிச்சங்குக்கு புகழ்மிக்க தலம்.


கிழக்குக் கடற்கரைச் சாலையிலே பயணித்து சதுரங்கப்பட்டினத்தையும், கடல்மல்லை மகாபலிபுரத்தில் தலசயனப் பெருமாளையும், கோவளம்-திருவிடந்தையில், நித்திய கல்யாணப் பெருமாளையும் சேவிக்கப் போகிறோம். மாமல்லபுரத்திலிருந்து சென்று, திருக்கழுக்குன்றம், பக்தவத்சலேசுவரரையும், ருத்ரகோடீசுவரரையும், பட்சிதீர்த்தத்தில் தரிசிப்போம். இந்த ஆண்டு, சங்கு தீர்த்தத்தில், சங்கு வெளிவந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்க ஒரு முறை நிகழும் பேரதிசயம் இது! பொன் விளைந்த களத்தூர், பொன்பதர்க்கூடம் ஆகிய தலங்கிளும் நம் பயணத்திட்டத்தில் இடம் பெறும்.


“பாடலாத்ரி’ எனப்படும் சிங்கப்பெருமாள் கோயில், திருக்கச்சூர், திருஇடைச்சுரம், திருவடிசூலம் ஆகியவையும் அருகருகே அமைந்துள்ள தலங்கள். திருமலை வையாவூரில், பிரசன்னவேங்கடேசப் பெருமாளையும், மகாசுதர்சனமூர்த்தியையும் சேவித்துவிட்டு படப்பை வழியே, பெரும்பூதூரை சென்றடைவோம். “உலகில் எல்லோரும் சமமே’ என்றுரைத்த உடையவரையும், ஆதிகேசவப் பெருமாளையும் அங்கே சேவித்துவிட்டு, கூரத்தாழ்வாரையும், கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தியையும் வணங்கிடப் போகிறோம். அடுத்து குன்றத்தூரில் திருநாகேசுவரர் தரிசனம். சேக்கிழார் பெருமானுக்கு தனிக்கோயில் அமைந்த பெருமை கொண்ட தலம் இது. அருகிலேயே “சோவூர்கிழார்’ அவதரித்த கோவூரில் சுந்தரேசுவரர் தரிசனம். சோமங்கலத்தில் சோமநாத ஈசுவரரையும் காமாட்சியையும் வழிபட்டு, தழுவக்கொழுந்தீசுவரரை படப்பையில் காணப்போகிறோம்.


“மாங்காடு,’ காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடமேற்கு எல்லையருகில், திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழையுமிடத்தில் அமைந்துள்ள தலம். ஒற்றைக் காலில் நின்றபடி, பஞ்சாக்னி நடுவே, தவக்கோலம் கொண்ட காமாட்சியின் அற்புத தரிசனம் இங்கே நமக்கு உண்டு. திருநீர் மலையும், திரிசூலமும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையில்தான் அமைந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழையும் முன்னே 108 திவ்வியதேசங்களில் ஒன்றான திருநீர்மலைக்கோயிலில் நீர்வண்ணப் பெருமாளையும், ரங்கநாதரையும் சேவித்திட வேண்டும். ஏரக்குறைய 28 மாவட்டங்கள் வலம் வந்துவிட்டோம். காஞ்சியை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தையும் வலம் வந்து விட்டோமானால், சென்னைப்பட்டணம் தான் நமது கடைசி மைல்கல் ஆக இருக்கும்.


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X