மந்திரங்கள், சாஸ்திரங்கள் போன்றவை ரகசியமானவை... இதை தானாக போய் யாருக்கும் உபதேசம் செய்யக் கூடாது. யார் விரும்பிக் கேட்கின்றனரோ, அவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்ய வேண்டும் என்பது மந்திரப்பூர்வமான ரகசியம். இதை உபதேசம் செய்யக் கூடியவர் ஹயக்ரீவர்.
ஒரு சமயம் ஹயக்ரீவரிடம் சென்று, "தேவரீர்... எனக்கு பல ரகசியமான சுலோகங்களை உபதேசித்துள்ளீர். ஆனால், ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திர ரகசியத்தை மட்டும் உபதேசிக்கவில்லையே...
நான் அதற்கு அருகதை இல்லாதவனா?' என்று கேட்டார் அகஸ்தியர்.
அதற்கு, "அப்படியில்லை... ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் என்பது மிகவும் ரகசியமானது; அதை நானே வலியச் சென்று உபதேசிப்பதில்லை; விரும்பி கேட்பவர்களுக்கு மட்டுமே உபதேசிப்பேன். நீர் இப்போது விரும்பி கேட்டதால், அதை உமக்கு உபதேசிக்கிறேன்...' என்று சொல்லி உபதேசித்தாராம் ஹயக்ரீவர்.
அந்த ஸ்தோத்திரம், அகஸ்தியர் மூலமாக எங்கும் பரவியதாம். இன்றும் எங்கும் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது;
அவ்வளவு உயர்ந்த கிரந்தம் இது.
ஒரு வித்வானுக்கு புராண கதைகள் தெரியும்... ஆனால், அவர் யாரிடமும் போய், "ஐயா... நான் உங்கள் வீட்டிற்கு வந்து புராண கதைகள் சொல்லட்டுமா?' என்று கேட்கக் கூடாது. யார் கூப்பிட்டு சொல்லச் சொல்கின்றனரோ... அங்கே போய் சொல்லலாம்.
புராணக் கதைகள் சொல்பவர்களுக்கு நல்ல பாண்டித்யம் இருக்க வேண்டும்; சங்கீத ஞானமும், நல்ல ஞாபக சக்தியும் இருக்க வேண்டும். ஒரு இடத்தில் உட்கார்ந்து புராணம் சொல்லும் போது, உடலால் சேஷ்டைகள் செய்யக் கூடாது. யாரையும் குறிப்பிட்டு பேசக் கூடாது — இதெல்லாம் நியதிகள்.
ஒரு ராஜாவிடம் போய், "நான் பாகவதத்தை நன்றாகப் படித்துள்ளேன். ஒரு முறை அரண்மனையில் வந்து சொல்லட்டுமா?' என்று கேட்டார் ஒரு வித்வான்.
அதற்கு, "பாகவதத்தை இன்னும் நன்றாகப் படித்துவிட்டு வாருங்கள்...' என்றார் ராஜா... இவரும் போய் படித்துவிட்டு வந்து மீண்டும் கேட்டார். மறுபடியும் அப்படியே பதில் சொன்னார் ராஜா.
இப்படி இரண்டு, மூன்று முறை கேட்டும் அதே பதிலைத்தான் சொன்னார் ராஜா. வீட்டுக்குப் போய் மீண்டும் பாகவதத்தை படிக்க ஆரம்பித்தார் வித்வான். இரண்டு மூன்று மாதங்கள் இவர் ராஜாவை சந்திக்கவேயில்லை. ஒருநாள் இவரைக் கூப்பிட்டனுப்பி, "இப்போது அரண்மனைக்கு வந்து பாகவதம் சொல்ல முடியுமா?' என்று கேட்டார் ராஜா.
அதற்கு,"இப்போது முடியாது... நான் வீட்டில் பாகவதம் படித்துக் கொண்டிருக்கிறேன்...' என்றார் வித்வான்.
எதையும் சிரத்தையோடு முழுமையாக படித்து, பொருள் தெரிந்து கொண்டால்தான் வித்வத் பெற முடியும். அரைகுறையாக படித்துவிட்டு, மார்தட்டக் கூடாது.
***
ஆன்மிக வினா-விடை!
சிவாலயங்களுக்குச் சென்றால், நந்தியை முதலில் வழிபட்டு, பிறகு சிவபெருமானை வழி பட வேண்டுமா?
சிவாலயங்களுக்குச் சென்று, நந்தியை பிரதட்சணம் செய்து, சுவாமியை தரிசனம் செய்ய வேண் டும். அதன்பின், நந்தியின் இரு கொம்புகளிடையே சிவபெருமானை தரிசித்து, பிறகு ஆலயத்திலிருந்து வெளிவர வேண்டும்.
***
வைரம் ராஜகோபால்