அன்பார்ந்தவர்களுக்கு வணக்கம் பல. எங்களது தூரத்து உறவினர் ஒருவருக்கு, மூன்று பெண் குழந்தைகள். "அய்யோ... மூன்று பொம்பள பிள்ளைகளை வச்சிக்கிட்டு என்ன கஷ்டப்படப் போறாங்களோ தெரியலியே...' என, எல்லா உறவினர்களும் அவர்களை பார்த்து கூறுவர்; ஆனால், அவர்களது தாய் மாமாவிற்கு இரண்டு ஆண் மகன்கள். எனவே, அத்தைக்காரிக்கு எப்பவும் இந்த நாத்தனார் குடும்பத்தினரை கண்டால் இளக்காரம் தான்.
"நான் ஆண் சிங்கங்களை பெத்து வச்சிருக்கேன். எனக்கு என்ன கவலை? நீங்களோ மூன்று பெண் குழந்தைகளை பெத்து வச்சிருக்கீங்க... எப்படித்தான் கரையேத்த போறீங்களோ தெரியல. நான் கொடுத்து வைத்தவள். அதனால் தான், கடவுள் எனக்கு இவ்வளவு இரக்கம் காட்டியுள்ளார்...' என்று சொல்லி, ஏளனமாக பேசுவாள்.
பெண்களை பெற்றவர்கள் மிகவும் வேதனைப்படுவர். என்ன செய்வது... ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் பெற்றுக் கொள்ள போக, இப்படி ஆகிவிட்டதே என வருந்தினாலும், வேறு வழியில்லாமல் மூவரையும் நன்கு படிக்க வைத்தனர்; சிறந்த அழகிகள்.
இதற்கிடையில், இவர்களது மூத்த மகள் பிங்கியை, அத்தையின் மகன் லாரன்ஸ் விரும்பினான்.
"பிங்கியைத்தான் மணப்பேன்...' என அடம்பிடித்தான் லாரன்ஸ்; வேறு வழியில்லாமல் சம்மதித்தாள் அத்தைக்காரி. இது தான் சாக்கு என, லாரன்ஸ் வீட்டாரிடம், "டிமாண்ட்' வைத்தனர் பெண் வீட்டார்.
"எங்களால் நிறைய நகைகள் எல்லாம் போட முடியாது... எங்கள் மகள் வேலை செய்கிறாள்; நிறைய சம்பாதிக்கிறாள். திருமணமும் நீங்கள் தான் செய்து கொள்ள வேண்டும்...' என்றனர். திமிர் பிடித்த அத்தைக்காரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
தன் மகனுக்கு, கார், வீடு நகைகள் தருவதற்கு நிறைய பேர் போட்டி போடும் போது, இவரது தங்கை வீட்டு, "கழுதைகளை' ஏன் நாம் எடுக்க வேண்டும் என்று நினைத்து, மகனிடம் சண்டை போட்டாள்.
ஆனால், லாரன்ஸ் உறுதியாக இருந்தான்.
"சின்ன வயதில் இருந்து பிங்கியை நேசிக்க ஆரம்பித்து விட்டேன். பணம் என்னம்மா பணம்... நம்மிடம் தான் நிறைய பணம் இருக்கிறதே... பாவம் மாமா... மூன்று பெண்களை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறார். வேறு மாப்பிள்ளைகள் வந்தால் அவருக்கு லட்சத்தில் செலவாகும். எனவே, நாம் தான் உதவி செய்ய வேண்டும்...' என்றான்.
எவ்வளவோ சதி திட்டம் தீட்டியும், உறுதியாக இருந்தான். லாரன்சின் தகப்பனாரோ, "மகனின் சந்தோஷம் தான் நமக்கு முக்கியம்...' என்று சொல்லி, தன்னுடைய தங்கையிடம் பேசி, எல்லா கண்டிஷன்களுக்கும் ஒத்துக்கொண்டு, சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தார்.
அத்தைக்காரிக்கு, தங்களை மருமகளாக்கிக் கொள்ள விருப்பம் இல்லாததால், மாமியார் ஆகிவிட்ட அத்தையை வெறுத்தனர் பிங்கி குடும்பத்தினர். லாரன்சை தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொண்டு, தனிக்குடித்தனம் வர முரண்டு பிடித்தாள் பிங்கி.
மாப்பிள்ளை லாரன்சை பயங்கரமாக கவனித்து, "நம் வீட்டு மாடியிலேயே ரூம் கட்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு பிறகு உங்களுக்குத்தானே இந்த வீடு... நீங்கள் இருவரும் அலுவலகத்திற்கு செல்வதற்கு வசதியாக இருக்கும்...' எனப் பேசி, அவனை வளைத்துப் போட்டு விட்டார் மாமனார்.
தாங்கள் வளர்த்த ஆண் சிங்கம், தங்களை விட்டு விட்டு மாமியார் வீட்டில் அடிமையாகி போனதை எண்ணி, கண்ணீர் வடித்தாள் அத்தைக்காரி.
இதற்கிடையில், பிங்கியின் இரண்டாவது தங்கை நான்சியை விரும்பினான் லாரன்சின் தம்பி ஹென்றி. பிங்கி வீட்டினருக்கு மிகுந்த சந்தோஷம். கண்டும் காணாதது போல் இருந்து, இவர்களது காதலை வாழ வைத்தனர்.
செலவில்லாமலே இரண்டாவது பெண்ணுக்கும் மாப்பிள்ளளை என்ற அடிமை சிக்கி விட்டான் என்ற குஷியில் இருந்தனர்; ஆனால், அத்தைக்காரியோ வெகுண்டெழுத்தாள்.
"என்னோட மூத்த மகனை பிடித்துக் கொண்டதும் இல்லாமல், இரண்டாவது மகனுக்கும் வலை வீசுறீங்களா... விட மாட்டேன்...' என்று சீறினாள். ஆனால், எந்த காதலர்கள், பெற்றோர் பேச்சை கேட்டனர். எத்தனையோ பெண்களை காண்பித்தும், "பிடிக்கவில்லை...' என்று சொன்ன ஹென்றி, "சிலிம் ப்யூட்டி என் நான்சியின் கால் தூசிக்கு இவர்கள் வர மாட்டார்கள்...' என்றான்.
பிங்கியும் தன் கணவனின் மனதைக் கரைத்து, திருமணச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டார் தலையிலேயே கட்டி விட்டாள். லாரன்சும், "பூம், பூம் மாடு' போல் ஆனான். வேறு வழியில்லாமல், மூத்த மருமகளுக்குச் செய்தது போலவே, இரண்டாவது மருமகளுக்கும் நகைகள் போட்டு, திருமணத்தையும் மிகவும் ஆடம்பரமாக நடத்தினர். தங்கள் காரியமும் முடிந்ததும், தன் தாய் வீட்டுப் பக்கமே வீடு பார்த்து வந்து விட்டாள் நான்சி.
"இரண்டு ஆண் சிங்கங்களை பெற்றுள்ளேன்; எனக்கென்ன கவலை...' என்று மார்தட்டித் திரிந்த அத்தைக்காரி, இரண்டு மகன்களையும், தன் நாத்தனாரிடம் அடிமைகளாக தாரை வார்த்து விட்டு, வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டிருக்கிறாள்.
ஏகத்துக்கும் சொத்து, வீடு வாசல் உண்டு. ஆனால், அங்கே இருக்க ஆளில்லாமல் கணவனும், மனைவியும் வெறித்த பார்வையுடன் அமர்ந்துள்ளனர்.
இங்கே பிங்கி, நான்சி இருவரின் நகைகளைக் கொண்டே, மருமகன்களின் <உதவியுடன், மூன்றாவது மகளையும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். என்ன சாமர்த்தியம் பாருங்கள். மாப்பிள்ளைகளை வீட்டில் வைத்துக் கொண்டு, பேரப் பிள்ளைகளை பார்த்துக் கொண்டு, பிங்கியின் பெற்றோர் இன்பமாக உள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில், பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர் தான், இன்பமாக உள்ளனர். எப்படியாவது அழுது அடம் பிடித்து, தங்கள் கணவர்களை பெற்றோர் வீட்டுப் பக்கம் கொண்டு வந்து விடுகின்றனர் இன்றைய பட்டாம்பூச்சிகள். அவர்களிடம் தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு, அலுவலகம் செல்கின்றனர். "குழந்தையை பார்த்துக் கொள்வதால், என் பெற்றோர் வீட்டுக்கு பணம் கொடுக்கிறேன்...' என்ற பெயரில் கணவர்களின் வாயை அடைத்து விடுகின்றனர்.
மாமியார், மாமனார் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை கிட்டயே சேர்ப்பதில்லை. ஆண் சிங்கங்களைப் பெற்றவர்கள் தான் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வயதான காலத்தில் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுகின்றனர்.
பட்டாம்பூச்சிகள் இப்படிச் செய்வது சரி என்று சொல்லவில்லை. நாளைக்கு இவர்களுக்கும் வயதாகும், இவர்களது மகனும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டிக் கொள்வான் என்பதை மறந்து விடக் கூடாது.
— தொடரும்.
ஜெபராணி ஐசக்