சென்னையில் இருந்து புறப்பட்டு ராணிப்பேட்டை தாண்டி, சித்தூரை கடந்து, பெங்களூரு நோக்கி விரைந்து கொண்டிருந்தோம், லென்ஸ் மாமாவும், நானும்; உடன் இரண்டு நண்பர்கள்.
வெளிமாநிலத்தை சேர்ந்த மனநோயாளி ஒருவர், சாலை ஓரத்தில் அமர்ந்து, சாலையில் சென்ற வாகனங்களை பார்த்து, இந்தியில் எதையோ பேசிக் கொண்டிருந்தார்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் எப்படி தமிழ்நாட்டிற்குள் வந்தனர். மற்ற மாநிலங்களில் - வெளிநாடுகளில் இம்மாதிரியான நோயாளிகளுக்கு, எந்த முறையில் சிகிச்சை அளிக்கின்றனர் என்பது பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தோம்.
ஜெர்மனியில், ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் மனநோயாளிகளை எப்படி, "ட்ரீட்' செய்தனர் என்பது குறித்து எப்போதோ படித்தது எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. வேறு எந்த இனக்கலப்பும் இல்லாமல், சுத்தமான ஆரிய ரத்தத்தை உருவாக்க எண்ணினான் ஹிட்லர்.
ஹிட்லரது காலத்தில், ஜெர்மானிய ரத்தத்துடன் இஸ்ரேலிய ரத்தக் கலப்படமும் அதிகம் இருந்தது.
ஜெர்மானியர்கள், இஸ்ரேலிய இனத்தாருடன் திருமண உறவு கொள்வதற்குத் தடை விதித்தான் ஹிட்லர். ஜெர்மனியில் அதிக அளவில் வாழ்ந்த இஸ்ரேலியர்களை கொன்று குவித்தான்.
அந்த நேரத்தில், ஜெர்மானிய பாதிரியார் ஒருவர், ஹிட்லருக்கு கடிதம் எழுதினார். அதில், தன் மகன் ஊனமுற்றவன் என்றும், மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றும் எழுதி, இப்படிப்பட்டவர்களையும் உயிருடன் வைத்திருந்தால், "ஹெல்த்தி'யான ஆரிய இனம் எப்படி தழைக்கும் எனக் கேட்டிருந்தார்.
கடிதத்தைப் படித்த ஹிட்லர், ஊனமுற்ற மற்றும் மனநலம் குன்றிய ஜெர்மானியக் குழந்தைகள் அனைவரையும் விஷமிட்டுக் கொல்லச் சொன்னானாம்.
இந்தக் கொடுமையான கதையை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, "போதும், நிறுத்து... கேட்கவே பயங்கரமா இருக்கிறதே...' என்றார் லென்ஸ் மாமா.
உடன் இருந்த நண்பர் ஒருவர், "வண்டியை கொஞ்சம் நிறுத்து. இயற்கையின் உந்துதலை கவனிக்கணும்...' என்றார். ஓரம் கட்டி மர நிழலில் வண்டியை நிறுத்தி, கீழே இறங்கினோம்.
ஆளுக்கொரு திசை சென்று இயற்கையின் உந்துதலை தணித்துக் கொண்டிருந்த போது, சற்று தூரத்தில் மனநலம் குன்றிய இளைஞன் ஒருவன், நடந்து வருவதைக் கண்டு நண்பர் அலறினார்... "மணி... ஓடிப் போய் கார் கதவை, "லாக்' பண்ணு... சீக்கிரம் போ... சீக்கிரம் போ...' என அவசரம் காட்டினார்.
என்ன, ஏது என்று விவரம் புரியாமல் நானும் ஓடிச் சென்று காரின், "சென்ட்ரல் லாக்கிங்' சிஸ்டத்தை ஆப்பரேட் செய்து, நான்கு கதவுகளையும், "லாக்' செய்தேன். இந்த நேரத்தில் ரோடின் எதிர் திசையில் நடந்து கொண்டிருந்த அந்த மனநலம் குன்றிய இளைஞர், ரோடை கிராஸ் செய்து, கார் அருகே வந்து, குனிந்து உட்கார்ந்து கண் தெரியாதவர் போல் நடித்து, இந்தியில், "குடிக்கத் தண்ணீர் வேணும்...' எனக் கேட்டார்.
"பாருய்யா... ரொம்ப அழகா ரோடை கிராஸ் பண்ணி, நம்ம கார்ல மோதிக்காம சூப்பரா வந்து குந்திகின்னு கண் தெரியாதவன் போல ஆக்ட் கொடுக்கிறான்...' என்றார் லென்ஸ் மாமா.
ரொம்ப நாட்களாகவே எனக்குள் ஒரு சந்தேகம்... நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, ஆங்காங்கே மனநலம் குன்றியவர்கள் பலரும் நடந்து செல்வதை கண்டிருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் வட மாநிலங்களையே சேர்ந்தவர்களாக இருப்பது ஏன் என்ற கேள்வி எனக்குள் எழும். அதற்கு இதுவரை விடை தெரியவில்லை.
நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு, மனநலம் குன்றியவரிடம் ஒரு பாட்டில் குடிநீரையும் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
என் கேள்விக்கு நண்பர், "அது பெரிய கதைப்பா... சொல்றேன்... அதுக்கு முன், "கதவை மூடு' என ஏன் அவசரப்படுத்தினேன் தெரியுமா?
ஒருமுறை வெளியூர் சென்று தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்று கொண்டிருந்தோம்... இரவில் பரிசுத்தம் ஓட்டல் அருகே உள்ள ஒரு ஒயின் ஷாப்பில், சரக்கு வாங்குவதற்காக காரை நிறுத்தச் சொன்னேன்.
காரில், டிரைவர் மற்றும் இரண்டு பேர் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர். நான் மட்டும் இறங்கி கடைக்குச் சென்றேன்.
திரும்பி வந்து பார்த்த போது, டிரைவர் சீட் அருகே பைத்தியம் ஒன்று ஜாலியாக ஏறி அமர்ந்திருந்தது. புத்தம் புதிய கார்... விலையுயர்ந்த லெதர் சீட்... எப்படி இருக்கும் எனக்கு... நான் குரல் கொடுக்கவும் காரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறிப்
புடைத்து எழுந்து காரை விட்டு இறங்கினர்.
காரில் அமர்ந்திருந்த பைத்தியத்தை வெளியே இறக்க முயற்சித்தோம்; அது இறங்க மறுத்து கூச்சல் போட்டது; பெருங்கும்பல் சேர்ந்து விட்டது.
யார், யாரோ எவ்வளவோ தாஜா செய்தும், இறங்கவில்லை. கடைசியில் உள்ளுர்காரர் ஒருவர், "இது நல்ல பைத்தியம்தாங்க... அடிச்சி கிடுச்சி செஞ்சுடாதீங்க... பிரியாணி பொட்டலம் கொடுத்தா இறங்கிடும்...' என்றார்.
கடைசியில் உள்ளுர்காரன் சொன்னபடியே, பிரியாணி பொட்டலம் வாங்கி வந்து, அதைக் காட்டியபின் தான் காரில் இருந்து இறங்கியது அந்தப் பைத்தியம்.
இந்தக் களேபரங்களால், உற்சாக பான மயக்கத்தில் இருந்த நண்பர்களின் போதை தெளிந்தே போனது... பின்னர், அருகே இருந்த மருந்து கடையில் டெட்டால் வாங்கி, தண்ணீரில் கலந்து சீட்டைத் துடைத்தெடுத்தோம் என்றார்.
கார் வேகமாகப் பறந்து கொண்டிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது... ரோட்டோரம் தோப்பு ஒன்றிற்குள், "தாபா' ஒன்று கண்ணில் பட்டது; வண்டியை அங்கே நிறுத்தினோம்.
சுக்கா ரொட்டி, பரோட்டா, பிரைட் ரைஸ், சிக்கன் மசாலா, டால்பிரை ஆர்டர் செய்து காத்திருந்தோம். நண்பர்கள், லென்ஸ் மாமா உட்பட கூல்பேக்கில் இருந்த பீர் கேன்களை திறந்து, சூட்டைத் தணித்துக் கொள்ள தயாராயினர்.
நான், தாபாக்களில் எப்படி விரைந்து உணவு தயாரிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள, ஓப்பனாக இருந்த கிச்சன் அருகில் சென்று கவனித்தேன்.
உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட், காலிபிளவர் போன்ற காய்கறிகளை வேக வைத்து தயார் நிலையில் வைத்திருக்கின்றனர். அதேபோல், அசைவ அயிட்டங்களையும் வேக வைத்தோ, பொரித்தோ தயார் நிலையில் வைத்திருக்கின்றனர்.
நம் ஆர்டருக்கு ஏற்றார் போல், அதையும், இதையும், கலந்து, "ஹை-பிளேமில்' சமைத்து உடனுக்குடன் தருகின்றனர்.
வாயில் வைக்க முடியாத சூட்டில் உணவு இருப்பதால், நம்மால் சுவையை அறிந்து கொள்ள முடிவதில்லை. கொஞ்சம் ஆற வைத்து சாப்பிட்டால் தான் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஊறி, மிக்ஸ் ஆகாமல் இருப்பது தெரிகிறது. பசி நேரத்திற்கு இதையெல்லாம் யார் பொருட்படுத்துகின்றனர். உணவுக்கான விலையும் கொஞ்சம் நஞ்சமல்ல; தாளித்து விடுகின்றனர்.
உணவு தயாராகி மேஜைக்கு வந்ததும், அவசர, அவசரமாக பீரை குடித்துவிட்டு வந்தனர் நண்பர்கள். பாதி வயிறு நிரம்பி, பேச திராணி வந்ததும், நண்பரிடம், "மனநலம் குன்றி தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் பெரும்பாலானோர் வட மாநிலத்தவராகவே இருக்கின்றனரே... அதற்கான காரணம் தெரியும் என கூறினீர்களே...' என்றேன்.
கோழியின் காலை கடித்துக் கொண்டிருந்த நண்பர், "பொறு... பொறு...' என்பது போல் சைகை காட்டி, தன் கடமையில் கவனமாக இருந்தார். கடைசி சொட்டு சதை வரை கடித்துக் குதறிவிட்டு, எலும்பை கடித்து உறிஞ்சி கீழே போட்டார்.
பின்னர், "வடமாநிலங்களில் நம்மூர் ஏர்வாடி மனநல காப்பகங்கள் போல் இல்லை என நினைக்கிறேன். அங்கே பைத்தியம் பிடித்தவர்களை அவர்களது உற்றார், உறவினர், பெற்றோர் போன்றவர், தென் மாநிலங்களுக்குச் செல்லும் நேஷனல் பர்மிட் லாரி டிரைவர்களைப் பிடித்து, அவர்களுக்கு பணம் கொடுத்து கண்காணாத இடங்களில் இறக்கி விட சொல்லி வருகின்றனர்.
"பணம் பெற்றுக் கொண்ட டிரைவர்களும் ஒரிசா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இரவு நேரத்தில் லாரி சென்று கொண்டிருக்கும் போது, காட்டு பகுதிகளில் இவர்களை இறக்கி விட்டுச் சென்று விடுகின்றனர். இதுதான் இவர்களின் பின்னணி...' என்று கூறி முடித்தார்.
— மனம் நலம் குன்றியவர்களிடம், பெற்றோர் கூட இப்படி அரக்கத்தனமாக நடந்து கொள்வரா என எண்ணிய போது, தான் பெற்ற பெண் குழந்தைகளையே கள்ளிப்பால் கொடுத்தும், நெல் மணியை பாலுடன் புகட்டியும் நம்மூரிலேயே சாகடிக்கின்றனரே என்பது கவனத்திற்கு வர, மனம் கனத்துப் போனது!
***