*ஆர்.பிரகாசம், குன்றத்தூர்: துன்பம் வந்தால் ஆறுதல் தேடுவது எப்படி?
"ஏதோ... இதோடு போயிற்றே...' என்று எண்ணி ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்!
***
*தா.முருகேசன், தாயில்பட்டி: தமிழனிடமுள்ள மன்னிக்க முடியாத கெட்ட குணம் எதுவென்று கணிக்கிறீர்கள்?
கொடுக்க வேண்டிய கடனை தானே ஈட்டி கொடுக்காமல், இன்னொருவரிடம் வாங்கி அடைத்து, அவர் நெருக்கும் போது மூன்றாம் நபரை நாடி... இப்படியே ஆளை மாற்றி, மாற்றி கடன் வாங்குகிறானே... இதுதான் மன்னிக்க முடியாத கெட்ட குணம்!
***
*எம்.சரவணன், வளவனூர்: அழகான பெண், புத்திசாலி பெண். யாரை மணக்கலாம்?
சந்தேகமில்லாமல் இரண்டாவது கேட்டகிரிதான்! முதலாவது இத்துடன் சேர்ந்திருந்தால், கரும்பு சாப்பிட கூலியா கதைதான்!
***
** ஜி.நடராஜன், அருப்புக்கோட்டை: நேரமே போக மாட்டேங்குது... வாழ்க்கையே, "போர்' அடிக்குது எனக்கு...
வாழ்வில் முன்னேற்றம் குறித்து சிந்திக்க ஆரம்பியுங்கள். அதற்காக திட்டமிட ஆரம்பியுங்கள். நேரமே போதவில்லை எனக் கூற ஆரம்பித்து விடுவீர்கள். "போர்' என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போகும். முன்னேற்றம் குறித்து நல்ல திட்டங்களை யோசித்துக் கொண்டே இருந்தால், ஒரு நாள் நிச்சயம் ஒரு பொறி தட்டும். வளமான வாழ்க்கை பாதையில் முதல் அடி எடுத்து வைத்து விடலாம்!
***
*தி.சிம்சன், விருத்தாசலம்: ஜோசியம் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்... நீங்கள் அதற்கு எதிரியா?
எதிரி இல்லை... நம்பிக்கை கிடையாது; அவ்வளவே!
***
* கே.பால்துரை, அருப்புக் கோட்டை: என்னதான் கடுமையாக உழைத்தாலும், பற்றாக்குறை தொடர்கிறதே...
தேவைகளைக் குறைத்துக் கொண்டால் போதுமே... அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பதற்காக செய்யும் செலவுகளை நிறுத்தினால் போதுமே... பர்சை திறக்கும் முன், "இது தேவையா?' என எண்ணினால் போதுமே... பற்றாக்குறை பறந்து போய், சேமிப்பு வந்து சேருமே!
***
*என்.சரிதா, திருமங்கலம்: பாடங்களை மனப்பாடம் செய்யும் போது, கவனம் சிதறாமல் இருக்க வழி சொல்லுங்களேன்...
அடிப்படையே தவறு... பாடங்களைப் புரிந்து கொள்ள பழக வேண்டும். மனப்பாடம் செய்தால் பரிட்சையுடன் மறந்து விடும்; வாழ்க்கைக்கு பயன்படாது!
***
** எஸ்.ஹரி, எண்ணூர்: ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை, தைரியம், சுய சிந்தனை, சிரிப்பு ஆகியவை, அவள் திருமணத்திற்கு பிறகு மறைந்து விடுகின்றனவே... ஏன்?
தன் கணவருக்காக அனைத்தையும் தியாகம் செய்வதாக எண்ணினாலும் உண்மையில், கணவன் வீட்டாரின் அடக்கு முறைகளால் தன் குணங்களை எல்லாம் துறக்கிறாள். பெண்கள் செய்யும் சில தியாகங்களில் இதுவும் ஒன்று.
***