தழும்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2011
00:00

""டீச்சர்... டீச்சர்!'' கதவை, "டக், டக்' என்று தட்டிக் கொண்டே, அழைப்பும் சேர்ந்து வந்தது. மூலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்த ஜெனிபர் டீச்சர், மெதுவாக எழுந்து வந்து கதவைத் திறந்தார்.
""மன்னிச்சுடுங்க டீச்சர்... இந்த மோசஸ் கஞ்சா வச்சிருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான்; ஆனால், இந்த முறை வழக்கம் போல் நீங்க வந்து கூட்டிக்கிட்டு போக முடியாது. ஏன்னா... புதுசா வந்திருக்கிற, சப் - இன்ஸ்பெக்டர் ரொம்ப கண்டிப்பானவர். அதோட குற்றமும் கடுமையானது என்பதால், புதிதாக வந்திருக்கும் டி.எஸ்.பி., இந்த கேசை நேரடியா ஹேண்டில் பண்றார். எஸ்.ஐ., உங்கக்கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னார்.'' ஒரு நிமிடம் அங்கே அமைதி நிலவியது.
ஜெனிபர் டீச்சருக்கு இது ஒன்றும் புதிதல்ல. குறைந்த பட்சம், மாதம் ஒரு முறையாவது திருட்டு, அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, இது மாதிரி வழக்குகளில் அவன் மாட்டிக் கொள்வதும், டீச்சர் முகத்திற்காக குறைந்தபட்ச தண்டனை அல்லது அபராதத்துடன் வெளியே வருவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், இம்முறை கஞ்சா கடத்தும் அளவுக்கு துணிச்சலா? அவரால் நம்ப முடியவில்லை. பொங்கும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, அவிழ்ந்திருந்த கூந்தலை முடிந்து, சாமி படத்திற்கு முன், தன் சுடரால் தன்னைச் சுற்றி இருக்கும் கர்த்தர் படத்திற்கு, கூடுதல் வெளிச்சம் தந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியைப் பார்த்தார். அவர் கண்களில் இருந்து அருவியாக நீர்.
""ஏசுவே... இதென்ன சோதனை?'' என்று சிலுவைக் குறி இட்டுக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டார்.
முப்பது ஆண்டு கால ஆசிரியப்பணி முடித்து, நல்லாசிரியர் விருதும் வாங்கி, பணியில் இருக்கும் போது, பல சாதனைகளை செய்து, ஒன்றுமே தெரியாத மக்கு என்று சொல்லும் மாணாக்கனையும், ஓஹோவென்று தன்னம்பிக்கை நிரப்பி ஊக்குவிக்கும் ஜெனிபர் டீச்சரின் மகன் மோசஸ் தான் இப்படி!
மகனை சரியாக வளர்க்கவில்லையோ என்ற சந்தேகம், எப்போதும் அடிமனதில் கரையானைப் போல் அரித்துக் கொண்டு தான் இருக்கிறது; ஆனால், உண்மை அதுவன்று. கணவன் டேவிட் எப்போதும் போதையிலே மிதப்பார். சரியாக வேலைக்குச் செல்ல மாட்டார். மாதுக்களின் சகவாசம் வேறு. குடித்து, குடித்துக் குடல் கெட்டு, மோசஸ், 13 வயதாக இருக்கும் போதே கர்த்தர் திருவடி சேர்ந்து விட்டார்.
ஆனால், அதற்குள்ளாகவே, மோசஸ் பாதி கெட்டு விட்டிருந்தான். அப்பாவே பல சமயங்களில் அவன் எதிரிலேயே குடித்துக் கும்மாளம் போடுவது, அவன் மனதில் ஆழமாக பதிந்து விட்டிருந்தது.
அப்பா, அம்மாவை அடிக்கும் போது, அப்பாவை தடுக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல், "ஓ... அடித்தால் அம்மா பணம் கொடுத்து விடுவார்...' என்ற தப்பான அபிப்ராயமே, அவன் மனதில் மேலோங்கி இருந்தது. அம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டுவான்; பணம் கேட்டு நச்சரிப்பான். வீட்டிலேயே திருடுவான். டீச்சரும் எவ்வளவோ முயன்றார். ஆனால், அவ்வளவும் விழலுக்கு இரைத்த நீராகி போனது.
இருபத்தைந்து வயதாகும் மோசஸ், 10ம் வகுப்பு வரை படித்து பாசானதே, பெரிய விஷயமாகி போனது. டீச்சரும் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டார்; திருந்துவதாக இல்லை. அதுவும் கடந்த ஐந்து வருடங்களாக, அவன் செய்யும் வேலைகள், டீச்சரை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது. இன்று, உச்சக்கட்டமாக போதைப் பொருள் வழக்கு.
புடவை தலைப்பை போர்த்திக் கொண்டு, ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள். அங்கே அவர் கண்ட காட்சி, அவரை உறைய வைத்தது. மோசஸ் உள்ளாடையுடன், முட்டி போட்ட கோலத்தில், உடம்பில் பல இடங்களில் போலீஸ் லட்டி கொஞ்சியிருந்ததின் விளைவாக, சிவப்பு அடையாளங்கள். சில அடையாளங்களிலிருந்து கசியும் ரத்தம், அடிக்கு இலவச இணைப்பாக காணப்பட்டது.
இதை பார்த்த டீச்சரால், பீரிட்டு வந்த அழுகையை அடக்க முடியவில்லை. புடவைத் தலைப்பால் வாயைப் பொத்தி, புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் எஸ்.ஐ.,யை நோக்கினார். கூடவே, அந்த டி.எஸ்.பி.,யும். பிறகு பார்வையை தாழ்த்திக் கொண்டார்.
""என்ன மேடம்... உங்க பையன் செய்திருக்கிற காரியத்தைப் பார்த்தீங்களா... எவ்வளவு கேட்டும் உண்மையை சொல்லவில்லை. இவன் வைத்திருந்த கஞ்சாவின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... இரண்டு கோடி ரூபாய். இந்த மாதிரி ஆசாமிங்க எங்களுக்கு குடுக்கிற டார்ச்சர் தாங்க முடியலீங்க. நீங்க ஒரு ஆசிரியரா இருந்தும் கூட, உங்க பையன் இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறானே... நீங்க இவனை நல்வழிப்படுத்தக் கூடாதா?''
கடைசி வாக்கியத்தை முடிப்பதற்குள், சட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்தார் டீச்சர்.
"வெற்றி நேசன்' என்று பொறிக்கப்பட்ட பில்லை தெரிந்தது. சற்றே முகத்தை உற்று நோக்கினார். இடது புருவத்துக்கு மேலே இருந்த தழும்பைக் கண்டவுடன், கண்களை இடுக்கி மறுபடியும் அவரை கூர்ந்து நோக்கினார்.
அதே நேரத்தில் வெற்றி நேசனும், டீச்சரை உற்று நோக்கினார். இடது காதின் தாடைப்பகுதியில் இருந்த மிளகு அளவு மருவைக் கண்டவுடன் அவர் முகம் மலர்ந்தது.
""மேடம்... நீங்க கார்ப்பரேஷன் ஸ்கூல் ஜெனிபர் டீச்சர்தானே?'' என்று கண்கள் விரிய ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் கேட்டார்.
ஏறத்தாழ, 16 - 17 வருடங்கள் இருக்குமா... கண்டிப்பாக இருக்கும். பத்தாவது படிக்கும் பள்ளி மாணவர்கள் சாத்தனூர் அணைக்கட்டு செல்வதாக ஏற்பாடாயிற்று. அந்த சுற்றுலாவுக்கு தலைமை ஜெனிபர் டீச்சர்தான்.
மாணவர்களும், மாணவிகளும் பஸ்சில், "தொடத் தொட மலர்ந்ததென்ன... ஒரு நாளும் உனை மறவாத...' போன்ற பாடல்களையும், பழைய எம்.ஜி.ஆர்., படப் பாடல்களையும் முக்கியமாக, "தொட்டால் பூ மலரும்... நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்...' போன்ற பாடல்களையும் பாடி ஆடிக் கொண்டே மிக, மிக சந்தோஷமாக ஆனந்த கூத்தாடினர்.
ஆனால், வெற்றிநேசனின் பார்வை மட்டும் வள்ளி மீனாள் மீதே பதிந்திருந்தது. அவன் பார்வை அவளை விழுங்கி விடுவது போல் இருந்தது. ஏன் தெரியுமா... அவள் மிக ஆச்சரியமான, வித்தியாசமான ஒரு அழகி. பூனைக் கண்களும், எலுமிச்சை நிறமும், பழுப்பு நிறக் கூந்தலும் நெடுநெடுவென்ற உயரமும், இது எல்லாவற்றுக்கும் மேலாக, அவள் ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
அதுமட்டுமா... அவள் படிப்பிலும் மிகச் சிறந்த மாணவியாக திகழ்ந்தாள். அதனால், எப்போதுமே அவள், ஜெனிபர் டீச்சரின் செல்லப்பிள்ளைதான். இருக்காதா பின்னே... படிப்பில் முதலாவது இடத்தில் இருக்கும் எல்லா மாணாக்கர்களுமே ஆசிரியர்களின் செல்லப்பிள்ளைகள் தானே!
தன் தோழிகளைத் தவிர்த்து, அணைக்கட்டின் அழகை தனியாக ரசித்துக் கொண்டிருந்த வள்ளி மீனாளை, அவளறியாமல் பின்புறமாகச் சென்று, இறுக்கி அணைத்து, அவள் பின் கழுத்தில் முத்தமிட்டான் வெற்றி நேசன். அவள் தனக்கு என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள், அங்கிருந்து ஓடி விட்டான் அவன். அவள் உடலில் ஏதேதோ ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது போல் உணர்ந்தாள். உடம்பு நெருப்பு போல் கொதித்தது. உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால் வரை, வியர்வை ஆறாக ஓடியது. உடல் கிடுகிடுவென்று ஆடியது. கீழே விழப் போன அவளை தேடி வந்த தோழிகள், விழாமல் பிடித்து கொண்டனர். வெற்றி நேசன் ஓடியதையும் அவர்கள் பார்த்து விட்டனர்.
விசாரித்த போது, விஷயம் வெளியே வர, ஜெனிபர் டீச்சர் கோபத்தின் உச்சத்தில். "போதும் நீங்கள் பார்த்தது... எல்லாரும் பஸ்சில் ஏறுங்கள்...' என்றார்.
விடுதியை அடைந்தவுடன் எல்லாரையும் அவரவர்கள் அறைக்கு போகச் சொல்லி விட்டு, "வெற்றி... நீ மட்டும், என்னுடன் வா...' என்று கூறி, விடுதியின் சமையலறைக்குள் நுழைந்தார். அடுத்த, 10 நிமிடங்களில் வெற்றி நேசன், "மன்னிச்சுடுங்க டீச்சர்... தெரியாம செய்து விட்டேன்...' என்ற கெஞ்சலும், அதன் பின், "ஆ... ஆ... ஆ...' என்ற அலறலும், அந்த விடுதியையே அதிர வைத்தன.
பத்து நிமிடங்கள் போலக் கரைந்தது நேரம். வெளியே வந்த வெற்றி நேசனின் இடது புருவத்துக்கு மேலே, மேல் நெற்றியில் நான்கு இஞ்ச் அளவுக்கு நெருப்பில் சூடு போட்ட தழும்பு. வலி தாங்க முடியாமல், அழுது கொண்டே வந்தான் அவன். கண்கள் இரண்டும் கோவை பழங்களாகச் சிவந்திருந் தன.
இதைக் கண்டு வெடவெட வென்று வேர்வை ஆறாக உடம் பெங்கும் எறும்பு ஊர்வது போல ஒழுக நடுங்கிக் கொண்டும், பதட்டத்துடனும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டி ருந்தனர் மற்ற மாணாக்கர்கள்.
அவனைத் தொடர்ந்து அக்னி குழம்பாக கோபக்கனல் கொப்பளிக்க ஜெனிபர் டீச்சர். "பசங்களா... ஒண்ணு மட்டும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க... பள்ளி என்பது கோவில் மாதிரி. அங்கே படிப்பும், ஒழுக்கமும்தான் நீங்க கும்பிட வேண்டிய சாமி. அதுவும் மாணவ - மாணவியர் சேர்ந்து படிக்கும் பள்ளியில் கட்டுப்பாடு ரொம்ப, ரொம்ப முக்கியம்...
"ஒண்ணு மட்டும் நன்றாக ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்... இந்த பதின் பருவத்தில் நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுறீங்களோ, அதை வைத்துத்தான் உங்கள் எதிர்காலம் எவ்வளவு சிறப்பாக அமையும் என்று கணிக்க முடியும். அனாவசியமான சலனங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆட்படாமல், ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்து, பாடங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்...
"வெற்றி நேசனுக்கு நான் கொடுத்த தண்டனை, உங்களுக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கட்டும். எந்த நிலையிலும், யாருக்காகவும், நீங்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல், நேர் வழியில் செல்ல வேண்டும். என் மாணாக்கர்கள் எப்போதும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். அதுதான் நீங்கள் எனக்குத் தரும் மரியாதை. ஏன் குரு தட்சணை என்று கூடக் கூறலாம்...' சொல்லிவிட்டு, "ஆர்த்தி... அந்த முதலுதவி பெட்டியை எடுத்து வா...' என்று கூறி, கண்களில் நீர் திரையிட ஜெனிபர் டீச்சர், அந்த இடத்தை விட்டு அகன்றார்.
"நீங்க எல்லாரும் வெளிய இருங்க. வெற்றி, இங்க வந்து உட்கார்...' என்று கூறி, கதவை தாள் போட்டார் டீச்சர். அவன் காயத்திற்கு மருந்திட்டு, பேண்டேஜ் போட்டுக் கொண்டே பேசத் தொடங்கினார்...
"வெற்றி... உனக்கு நான் ஏன் நெற்றியில் சூடு வைத்தேன் என்று யோசிக்கிறாய். காரணம் இருக்கிறது... ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன் நீ நிற்கும் போது, இந்தத் தழும்பு, நடந்து போன சம்பவத்தை நினைவூட்டும். அது மீண்டும், உன்னை தப்பு செய்ய விடாமல் தடுக்கும்.
"நீ படிப்பிலும், மிக சிறந்த மாணவன். உன்னுடைய அறிவுக் கூர்மைக்கும், தைரியத்திற்கும், உடற்கூறு அமைப்பிற்கும் நீ ஒரு ஐ.பி.எஸ்., ஆவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. எனவே தான், நீ மீண்டும் எந்த ஒரு நிலையிலும் தடம் புரளாமல் இருக்க, ஒரு தடயத்தை ஏற்படுத்தி விட்டேன்.
"நீ பெரிய இடத்துப் பிள்ளை. அதனால், எனக்கு என்ன பிரச்னை வந்தாலும், என் வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக, என் செய்கைக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன். இந்தப் பள்ளியை விட்டு, இந்த வருடத்துடன் நீ சென்று விடுவாய். மீண்டும் ஒரு நல்ல நிலையில் உன்னைப் பார்க்கவே விரும்புகிறேன்...' என்று கூறி, சரேலென்று வெளியே சென்று விட்டார்.
டீச்சர் எதிர்ப்பார்த்ததை போலவே, பள்ளி நிர்வாகம் அவர் செய்கைக்கு விளக்கம் கேட்டது. அவரை சில நாட்களுக்கு தற்காலிக வேலை நீக்கமும் செய்தது. அந்தக் கடிதத்தை பள்ளித் தாளாளர் ஜெனிபர் டீச்சரிடம் கொடுக்கும் போது, "மிசஸ் ஜெனிபர்... உங்களை ஒன்று கேட்கலாமா... கிறிஸ்தவ மதத்தில் பிறந்த நீங்களா இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறீர்கள்... என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை!'
"மன்னிக்க வேண்டும் சார்... நான் பைபிள் மட்டும் படித்திருக்கவில்லை. இந்து மதத்தின் பகவத்கீதை, பாகவதம், கருடபுராணம் போன்ற வாழ்வியல் நெறிமுறைகளை வரையறுத்து கூறுகிற புத்தகங்களையும் படித்திருக்கிறேன். அதுவும், கருட புராணத்தில், நீங்கள் செய்கிற தவறுகளுக்கேற்றவாறு சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற விதியும் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலே, என் மனசாட்சி சொல்லியதைத்தான் நான் செய்தேன்!'
கேட்ட தாளாளர் பிரமித்து போனார். "என்னதான் நீங்கள் விளக்கம் தந்தாலும், பெற்றோர் தரப்பிலும் சரி, நிர்வாகத் தரப்பிலும் சரி, எப்படி இதை ஒப்புக் கொள்வர்?'
"அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை சார். இந்த நேரத்தில் நான், ஒரு சில விஷயங்களை இங்கே உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு மாணவனின் ஒழுக்கம், அவன் நேரம் தவறாமல் பள்ளிக்கு வருவதில் வெளிப்படும். செயல்திறன், நடத்தும் பாடங்களை நன்றாக கவனிப்பதிலும், சக மாணவர்கள் புரியாமல் தவிக்கும் போது, அவர்களுக்கு வலியச்சென்று பாடங்களை விளக்குவதிலும், முன்னேற வேண்டும் என்று நினைக்கிற மாணவன், எப்போதும் முதல் பெஞ்சையே நாடுவதிலும்...
"தன் தனித்தன்மையை நிரூபிப்பதற்காக, எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வதிலும், தன்னுடைய தேர்ச்சி அட்டையில் முதலாவது இடத்திலிருந்து, இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டால், ஒரு கோப வெறி வந்து, அடுத்த தேர்விலே முதலிடத்தை பெற்று, பெருமை கொள்வதிலும், சக மாணவன் கஷ்டப்படும் போது, மற்ற மாணவர்கள் அறியாமலே, அவன் மனக் கஷ்டத்தையோ, பணக் கஷ்டத்தையோ போக்குவதிலும்...
"சுற்றுச் சூழல் அக்கறையில், வகுப்பறை மற்றும் பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும், எப்போதும் தன் நட்பை நல்ல நண்பர்கள் சேர்க்கையினாலே வளப்படுத்திக் கொள்வதிலும், ஆசிரியர் தினத்தன்று, தவறாமல், மறக்காமல் தன் வகுப்பு ஆசிரியர் என்றில்லாமல், மற்ற ஆசிரியர்களிடத்தும், வாழ்த்து பெறுவதிலும், அவனுடைய குரு பக்தியை வெளிப்படுத்தும் அளவுகோல்களாகும்...' அதிகமாகப் பேசியதாலோ, என்னவோ, ஜெனிபர் டீச்சர் ஆயாசமாகத் தன்னை உணர்ந்தார். கண்களின் கண்ணீரை மறைக்க முயன்று, தோற்று போனார்.
அவரை ஏறிட்டு நோக்கிய தாளாளருக்கு, ஜெனிபர் டீச்சரின் கண்களில் அந்த மாணவனை பற்றிய அக்கறையும், அவன் எதிர்காலம் பற்றிய ஆசைக் கனவுகளும், கண்ணீருக்குள் பிரதிபலித்தன.
""மேடம்... டீச்சர் எக்ஸ்யூஸ் மீ...'' என்ற வார்த்தைகளால், சுயநினைவுக்கு வந்த டீச்சர், ""சாரி சார்...'' என்று முடிப்பதற்குள்ளேயே, ""மேடம்... நான் கேட்ட கேள்விக்கு, நீங்க இன்னும் பதில் சொல்லவில்லையே?''
""ஆங் என்ன கேட்டீங்க... கார்ப்பரேஷன் ஸ்கூல் டீச்சரா என்றுதானே... ஆம், அதே ஜெனிபர் டீச்சர் தான். நீ... நீங்கள் அதே அந்த வெற்றி நேசன் தானே?'' கேட்கும் போதே, அவர் குரலில் நடுக்கம் கலந்ததொரு மகிழ்ச்சி.
""உங்கள் யூகம் சரிதான்... நான் அதே சேம் ஓல்டு வெற்றி நேசன் தான்...'' என்று இடது புருவத்தின் மேல் உள்ள, தழும்பை தடவி விட்டுக் கொண்டே புன்னகை பூத்தார்.
""மேடம்... உங்க பையன் செய்திருக்கிறது சாதாரண குற்றமில்லை. போதைப் பொருள் கடத்தல். அதனால், தண்டனை மிக, மிகக் கடுமையாகத்தான் இருக்கும். நான் இங்கே வந்து இந்த இளைஞனைப் பார்த்ததும், ஒரு நிமிடம் தயங்கினேன். "குடும்பம், குழந்தை என்று வாழ வேண்டிய வயதில், இப்படி தப்பை செய்து விட்டு வந்திருக்கிறானே... இவன் வாழ்க்கை சிறையிலேயே கழிந்து விடுமே...' என்றெல்லாம் யோசித்தேன்.
""ஆனால், வரம் தந்த தெய்வமே வந்த மாதிரி, உங்களைப் பார்த்ததும், என்ன செய்ய வேண்டுமென்பது புரிந்து விட்டது. நிச்சயமாக தண்டனை அனுபவிக்கும் காலத்தில், தன்னுடைய நன்னடத்தையாலும், ஒழுக்கத்தாலும், மிஸ்டர் மோசஸ் சீக்கிரமாகவே விடுதலையாகி ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தண்டனையின் சக்தி, அவ்வளவு மகத்தானதில்லையா டீச்சர்?''
அவரையும் மீறி அவர், ""டீச்சர்!'' என்று அழுத்தமாக அழைத்தவுடன், பொங்கி வந்த அழுகையை அடக்க முயற்சி செய்தார் ஜெனிபர் டீச்சர்.
***

டி.சாய் சுப்புலட்சுமி
கல்வி தகுதி: சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
பணி: சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இந்தி துறை பேராசிரியை.
இதுவரை இவர் எழுதிய, 25 சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளது. இலக்கிய பீடம் மற்றும் புதுகை தென்றல் சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்டு, பரிசுகள் பல பெற்றுள்ளார். இந்தி - தமிழ் மொழி பெயர்ப்பிலும் ஒரு சிறுகதை தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தன் - பெங்களூர்,இந்தியா
16-நவ-201117:05:18 IST Report Abuse
நந்தன் ஐயோ ....முடியலே!
Rate this:
Cancel
danalakshmi - chennai,இந்தியா
15-நவ-201116:53:02 IST Report Abuse
danalakshmi கதை அருமை. மாணவனை திருத்த முடிந்த டீச்சரால் மகனை திருத்த முடியவில்லை இதற்கு காரணம் என்ன?
Rate this:
Cancel
எஸ். மணி - ஸ்ரீபெரும்புதூர் ,இந்தியா
15-நவ-201112:36:25 IST Report Abuse
எஸ். மணி இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்னு தோணுது ........... வளவள கொளகொளன்னு இல்லாம இருந்திருக்கலாம் ...... பணியில் இருந்தபோது தவறு செய்த மாணவனை தன் மத கோட்பாடுகளையும் மீறி தண்டனை கொடுத்த டீச்சர், தன் மகன் விஷயத்தில் திரும்ப திரும்ப அவன் தவறு செய்த போதும் அவனுக்கு பரிந்தது ஏன்? ........... மாணவனுக்கு ஒரு நியாயம், மகனுக்கு ஒரு நியாயமா? ............... அதனால் தான் மாணவன் அதிகாரியாய் வந்து நியாயத்தை புரிய வைக்கிறானா? ................ என்னவோ போங்கப்பா ....... எல்லாம் பிரம்மை .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X