நகைச்சுவைக்கு ஓர் இயல்பு உண்டு. அது, தானாகவும் வரும்; நாமாகவும் தேடிச் செல்வோம். தன்னுடைய பத்திரிகை துறை வாழ்க்கையில் நேர்ந்த, சில சுவையான விஷயங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், "குமுதம்' இதழின் ஆசிரியர் குழுவில் நீண்ட நெடுங்காலம் பணியாற்றிய பாக்கியம் ராமசாமி.
— பொறுப்பாசிரியர்.
நான் ஒரு குடியிருப்பில் வசித்த போது, எதிர் வீட்டுக்காரர், ஈவு இரக்கமில்லாமல் தங்கள் வீட்டு ஈர மெத்தையை படிக்கட்டு பக்கவாட்டு சுவரில் தினமும் உலர்த்தி விடுவார்.
வெயிலில் காய வைத்தால் சாயம் போய்விடும் என்று, மெத்தையை படிக்கட்டு ஓரமாகவே போட்டிருப்பார்.
மெத்தையிலிருந்து வடியும் தண்ணீர், படிக்கட்டில் விழுந்து, ஏறுகிறவர்களையும், இறங்குகிறவர் களையும் சறுக்கிவிட்டு விழச் செய்யும் அபாயம் எல்லாரையும் நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
ஆனால், அந்த நடுக்கத்தை காட்டிலும், அந்தக் குடித்தனக்காரரிடம் பேசுவதற்கு அதிகமான நடுக்கம், அவர் ஓரு முரடர்.
நான் தான் அதிகம் பாதிக்கப்பட்டவன். ஏனெனில், படுக்கையிலிருந்து சொட்டும் தண்ணீர் படி வழியே இறங்கி, என் வீட்டுக்குள் வந்து எட்டிப் பார்க்கும்.
எதிர் வீட்டில் இருந்த அந்த முரடரின் தகப்பனாருக்கு, "ஹார்ட் அட்டாக்' வந்தது; ஓர் நர்சிங் ஹோமில் அட்மிட் ஆகியிருந்தார்.
ஈர மெத்தையை எதிர்வீட்டுக்காரர் வழக்கம் போல் உலர்த்திக் கொண்டிருந்த போது, நான் அவரிடம் துக்கமான குரலில், "என்னவோ, நீங்க கொடுத்து வைச்சது அவ்வளவுதான்...' என்றேன்.
எதிர் வீட்டுக்காரர் அதிர்ச்சியடைந்து, "என்ன சொல்றீங்க?' என்றார்.
நான் வருத்தத்துடன், "என்ன செய்வது... நீங்க வெகு நன்றாக சிரத்தையாகத்தான் செலவழித்து பார்த்துக் கொண்டீர்கள். ஆனால், ஆயுசு எவ்வளவு என்று ஆண்டவன் போட்டிருக்கிறானோ, அவ்வளவு காலம் தானே இருக்க முடியும்...' என்றேன்.
எதிர் வீட்டுக்காரர் குழம்பிப் போய், "என்ன சொல்றீங்க?' என்றார்.
"உங்க அப்பா எத்தனை மணிக்கு காலமானார்? அவர் இறந்த போது, மருத்துவமனையில், கூட இருந்தீர்களா? பாடி இங்கு வரவில்லையா?' என்றேன்.
எதிர்வீட்டுக்காரர் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, "சார்... எங்க அப்பா உயிரோடுதானே இருக்கிறார். என்னென்னவோ உளறுகிறீர்களே...' என்றார் கோபமாக.
"சாரி... நான் தப்பாக நினைத்து விட்டேன். மெத்தையையெல்லாம் நனைத்து உலர்த்தினால், அதில் படுத்திருந்தவர் இறந்து விட்டார் என்று தான் அர்த்தம். சில பேர் அந்த மாதிரி மெத்தையை குப்பைத் தொட்டியிலேயே போட்டு விடுவர். சிலர், நனைத்து, உலர்த்தி உபயோகப்படுத்தி விடுவர். அதனால் தான் கேட்டேன்...' என்றேன்.
மறுதினம் முதல், எதிர்வீட்டுக்காரர் ஈர மெத்தையை படிக்கட்டில் உலர்த்துவதை நிறுத்தி விட்டார். மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று யாருக்கும் தொந்தரவு இல்லாத முறையில் உலர வைத்துக் கொண்டார்.
தினமும் அவர் வீட்டு மெத்தை ஈரமாவதற்கு காரணம், அவரது, ஏழு வயது பையன்தான்.
***
ஒரு சமூக சேவை கிளப்பில் பேசுவதற்கு சென்றிருந்தேன். கிளப் காரியதரிசி கவலையோடு காணப்பட்டார். கூட்டம் நடந்த ஹாலுக்குள் இரண்டு வழிகள் இருந்தன. நுழைவதற்கு ஒரு வழியும், திரும்பி செல்வதற்கு ஒரு வழியுமாக.
காரியதரிசியை நான் கேட்டேன்... "ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?'
"கூட்டம் முடியும் போது என்ன ஆகுமோ என்று கவலையாயிருக்கிறது...' என்றார்.
"ஏன்... என்ன பிரச்னை?' என்று கேட்டேன்.
வெளியே போகும் வழியை சுட்டிக் காட்டினார் காரியதரிசி.
நான் அதிர்ச்சியுடன், "என்னை வெளியே போகச் சொல்கிறீர்களா?' என்றேன்.
காரியதரிசி பதற்றத்துடன், "அய்யோ... நான் அப்படி சொல்லவில்லை. வெளியே செல்லும் வழி சற்று நேரத்தில் ரணகளம் ஆகப் போகிறது. இரண்டு மூட்டை சிமென்ட் வாங்கிப் போடப்பட்ட தரையெல்லாம் மிதிபட்டு வீணாகப் போகிறது. "அந்த வாசல் வழியே செல்ல வேண்டாம், இப்போதுதான் சிமென்ட் போட்டிருக்கிறது...' என்று சொன்னாலும் அந்தப் பக்கம் போகிறவர்கள் மிதித்தவாறே போய்க் கொண்டுதான் இருக்கின்றனர். நம்ம ஆளுகளுக்கு பொறுப்புணர்ச்சியே கிடையாது...' என்று அங்கலாய்த்தார்.
நான் ஒரு யோசனை சொன்னேன்... அன்று நடந்த கூட்டம், ரத்த தானம் பற்றியது. ""ஒரு அட்டையில் நான் சொல்கிறபடி எழுதி வெளியே செல்லும் வழியில் மாட்டி விடுங்கள்...' என்றேன்.
"என்ன எழுதுவது?' காரியதரிசி கேட்டார்.
நான் சொன்னேன்... "ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள இந்த வழி செல்லவும்...' என்பதே அட்டையில் எழுதப்பட வேண்டிய வாக்கியம்.
அவ்வாறே காரியதரிசி எழுதி மாட்டி விட்டார்; அதற்கப்புறம் ஒரு ஆள் கூட அந்த வழியில் செல்லவில்லை.
***
என் சகோதரர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி - சென்ற ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர். சென்னை அருகே குன்றத்தூரில் அரை நூற்றாண்டிற்கு மேலாக வசித்து வருகிறார்.
அந்தக் கிராமத்தில் அவர் சென்ற புதிதில், அவருக்கு பல வேடிக்கையான அனுபவங்கள் நிகழ்ந்ததை சுவாரசியமாக சொல்வார்.
கைக் குழந்தையுடன் ஒரு கிராம பெண் அவரிடம் வந்தாள். குழந்தை மெலிவாக, சக்தியில்லாமல், மூக்கு ஒழுக, இருமலும் ஜலதோஷமுமாக இருந்தது.
டாக்டர் தன்னிடமிருந்த கேப்சூல்களை அவளுக்கு வழங்கினார். பத்து கேப்சூல்களைக் கொடுத்து, "தினமும் குழந்தைக்கு மூக்கை கிள்ளிவிட்டு கொடுங்கள்...' என்றார்.
ஒரு வாரம் சென்றதும்,
அந்த அம்மாள் அந்தக் குழந்தையுடன் சற்றே கவலையுடன் வந்தாள்.
"என்ன சமாசாரம்?' என்று கேட்டார் டாக்டர்.
அவள் அழாத குறையாக, "குழந்தை மூக்கைப் பாருங்க டாக்டர்?' என்றாள்.
டாக்டர் பார்த்தார். மூக்கு செக்க செவேலென்று பெரிய நாட்டுத் தக்காளிப் பழம் போல் சிவந்து, புண்ணாயிருந்தது.
"நீங்க சொன்ன மாத்திரை கொடுத்தேங்க; இப்படி ஆயிட்டது...' என்று கூறி இருக்கிறார்.
"எந்த மாத்திரை?' என்று கேட்டார் டாக்டர்.
"இதோ இந்த மாத்திரைதான்...' என்று, கையில் வைத்திருந்த அடக்சிலின் மாத்திரைகளைக் காட்டி இருக்கிறாள்.
"ஒவ்வொரு தடவையும் மூக்கைக் கிள்ளிட்டுத்தானுங்க கொடுத்தேன். அது கத்தினாக் கூட நல்லா கிள்ளிடுவேன்...' என்று கூறி இருக்கிறாள்.
டாக்டர் சொன்னது, கேப்சூலின் மூக்கை; அந்தத் தாய் கிள்ளியது, தன் பிள்ளையின் மூக்கை.
— தொடரும்.
பாக்கியம் ராமசாமி