வட மாநிலங்களில், "நான்'என அழைக்கப்படும் ரொட்டி, மிகவும் பிரபலமான உணவு. மைதா, வெண்ணெய், நெய், பால் போன்ற பொருட்களில் தயாராகிறது. தற்போது சீனாவிலும், இது பிரபலமாகி வருகிறது. வித, விதமான வடிவங்கள், சுவைகளில், இதை தயார் செய்து, ரசித்து, ருசித்து வருகின்றனர், சீன மக்கள்.
இங்குள்ள கியாமோ மாகாண அரசுக்கு, ஒரு விசித்திர ஆசை ஏற்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய, "நான்' தயார் செய்ய வேண்டும் என்பது தான், அந்த ஆசை. அங்குள்ள பிரபலமான சமையல் கலைஞரை அழைத்து, இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அரசு உத்தரவிட்டது. அந்த சமையல் கலைஞரும், தனக்கு, 12 உதவியாளர்களை வைத்துக் கொண்டு, மிகப் பெரிய, "நான்' தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.
மைதா, 124 கிலோ, 30 கிலோ மட்டன், 16 கிலோ வெங்காயம் ஆகியவற்றைக் கொண்டு, ஒன்பது அடி சுற்று வட்டமுள்ள பிரமாண்டமான, ருசியான, "நான்' தயார் செய்யப்பட்டது. இதை தயார் செய்த சமையல் கø<<லஞர், "இது ஒரு சாதனை முயற்சி. <உலகில் வேறு எங்கும் இவ்வளவு பெரிய, "நான்', இதற்கு முன் தயாரிக்கப்படவில்லை. இதை, ஆயிரம் பேர் சாப்பிடலாம்...' என, நாக்கை சப்புக் கொட்டியபடி, பெருமிதத்துடன் கூறினார்.
கியாமோ மாகாண பொது மக்களோ, "சாதனை செய்ய வேண்டியது தான். அதற்கு, மக்களின் வரிப் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும். கடைத் தேங்காயை எடுத்து, வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இருக்கிறதே...' என, வேதனைப்பட்டனர்.
— ஜோல்னா பையன்.