அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2011
00:00

வணக்கம் அம்மா—
என் வயது 44; என் மனைவிக்கு 34. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 12 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்களுக்கு திருமணமாகி, 15 வருடங்கள் ஆகிறது. நான் ரயில்வேயில் எழுத்தர் பணி செய்கிறேன். மேலும், எனக்கு அம்மா இருக்கிறார்; அவருக்கு, வயது 72. எனக்கு, 15 வயது இருக்கும் போது இறந்து விட்டார் என் தந்தை. என்னுடன் பிறந்தவர்கள், இரண்டு அண்ணன்கள். அவர்கள் அரசு வேலையில் மற்றும் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கின்றனர். எங்கள் தாய் எங்களை ஒழுக்கமாக வளர்த்தார்.
என்னுடைய மனைவிக்கு, உடன் பிறந்தவர் ஒரு அக்கா; அவளுக்கும் தந்தை கிடையாது. எங்களுக்கு திருமணமாகி, ஒரு வருடத்தில் இறந்து விட்டார்.
என் பிரச்னை என்னவென்றால், நாங்கள் ஆவடியில் தனி வீடு கட்டிக் கொண்டு இருக்கிறோம். என் தாய் எங்கள் வீட்டிற்கு, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அல்லது எப்போதெல்லாம் எங்களுக்கு தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் எங்கள் அண்ணன் வீட்டிலிருந்து வந்து, போய் கொண்டிருந்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் என் மனைவியிடம் சண்டை போட்டு, என் தாயை வரவழைத்துக் கொண்டிருந்தேன். மேலும், என் மனைவி திருமணமாகி வந்ததிலிருந்து, சொல்லாலும் செயலாலும் என் தாயை கஷ்டப்படுத்துகிறார்.
என் அண்ணன் வீட்டிலிருந்து, என் வீட்டிற்கு வர விடாமல் தடுக்கிறார். ஏனெனில், அவளுடைய அக்கா, அம்மா, அக்கா மகன்கள் இவர்கள் அடிக்கடி இங்கு வரவும், செல்லவும், அவர்கள் இஷ்டப்பட்டதை செய்து போடவும் துடிக்கிறார்; ஆனால், எங்கள் வீட்டிலிருந்து வருபவர்களை ஆதரிப்பதில்லை. மேலும், அவர்கள் ஒவ்வொருவர் மீதும் பழி சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஒரு நாளைக்கு குறைந்தது, 20 - 25 போன் கால்கள் அவளுடைய அக்கா வீட்டிலிருந்து வருகிறது. என்னுடைய மனைவி யின் படிப்புக்காக, இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து பி.எட்., மற்றும் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வைத்தேன். இன்று, தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.
இது சம்பந்தமாக என் மனைவியுடன் எவ் வளவோ பேசியும், அவர் சம்மதிக்கவில்லை. சில சமயங்களில் கூச்சல் போட்டு தேவையில்லாத வார்த்தைகள் பேசி கஷ்டப்படுத்துகிறார். இப்படி, என் தாய் முன்பே பலமுறை செய்கிறார். மேலும், என் தாய் இந்த விஷயத்தால் கஷ்டப்படுகிறார், அழுகிறார். நான் மன நிம்மதி, தூக்கம் இழந்துள்ளேன். இதனால், என் அண்ணிகள் இருவரும், இதே பாணியை கடைபிடிக்கின்றனர். என் தாய்க்கு தர்ம சங்கடமாக உள்ளது.
எனவே, நீங்கள்தான் எனக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஆலோசனையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு, உங்கள்
அன்பு சகோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு —
உங்கள் வயது 44; உங்கள் மனைவிக்கு 34. திருமணமாகி, 15 ஆண்டுகள் ஆன உங்களுக்கு, 12 வயதில் மகளும், 10 வயதில் மகனும் இருக்கின்றனர். நீங்கள் ரயில்வேயில் எழுத்தர்; உங்கள் மனைவி ஒரு ஆசிரியை. உங்களுக்கு திருமணமான அரசுப் பணியில் இருக்கும் இரு அண்ணன்கள், 72 வயதில் ஒரு விதவைத்தாய் இருக்கின்றனர். உங்கள் மனைவிக்கு விதவை அம்மா, அக்கா, அக்கா மகன்கள் உண்டு. உங்களின் தாய், உங்களது வீட்டுக்கு வருவதை பேச்சாலும், செயலாலும் தடுக்கிறார் உங்கள் மனைவி. உங்களது மனைவியின் செயல் பார்த்து உங்களின் அண்ணன் மனைவிகளும் உங்களின் தாயை வெறுத்து ஒதுக்குகின்றனர்.
நிறைய ஆண்களுக்கு மனைவி தேவை; ஆனால், மனைவியைப் பெற்ற பாவ ஜென்மங்கள் வேண்டாம். நிறைய பெண்களுக்கு, செக்ஸ் வைத்துக் கொள்ளவும், சம்பாதித்து போடவும் புருஷன் தேவை; ஆனால், புருஷனைப் பெற்ற பாவ ஜென்மங்கள் வேண்டாம். இது, வடிகட்டிய சுயநலம்.
அடுத்த, 15 வருடங்களில் உங்களது மனைவி, மகள் - மகனை கட்டிக் கொடுத்து, மாமியார் ஆகப் போகிறார். அப்போது உங்கள் மனைவிக்கு, 49 - 50 வயதாகும். மருமகளோ, மருமகனோ இவரை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர் என்றால், இவர் மனது என்ன பாடுபடும்? "முற்பகல் செயின் பிற்பகல் தாமே விளையும்...' என்பர். "வினை விதைத்தவன் வினை அறுப்பான்...' என்பர். "உப்பைத் தின்னவன் தண்ணீரை குடித்தாக வேண்டும்...' என்பர். தன் விதவை தாயைப் போல தானே, தன் விதவை மாமியார், தன் குடும்பத்தை சிரமப்பட்டு உழைத்து முன்னுக்கு கொண்டு வந்திருப்பார். அப்படி முன்னுக்கு கொண்டு வந்ததால் தானே நாம், நம் கணவரை தகுதியான மாப்பிள்ளை என மணந்தோம் என்று, உங்கள் மனைவி நினைத்து பார்க்க வேண்டும்.
பிறந்த வீட்டின் மீதான பாசம், புகுந்த வீட்டின் மீதான வெறுப்பாகி விடக் கூடாது.
உங்கள் மனைவிக்கு அன்பு வேண்டுகோள்:
சகோதரியே... வணக்கம். உன் மாமியார், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, உன் வீட்டிற்கு வந்து போகிறார். சிலர் வீடுகளில் மாமியார் வருடம் முழுக்க மருமகள் வீட்டில்தான் தங்கியிருப்பர். சில வீடுகளில் இருக்கும் மாமியார், படுத்த படுக்கையாய் கிடப்பர். அவர்களின் கழிவுகளை முகம் சுளிக்காமல் அள்ளிப் போடும் மருமகள்களும் இருக்கின்றனர். சில இடங்களில் கிராமத்தில் தங்கியிருக்கும் மாமியாரை, வீட்டுக்கு வந்து தங்கச் சொல்ல கெஞ்சும் மருமகள்களும் இருக்கின்றனர்.
உன் தரப்பை கேட்டால் மாமியாரைப் பற்றி, நூறு பக்கங்களுக்கு குற்றப் பத்திரிகை வாசிப்பாய். தவறில்லாத மனிதன் யார்? சில வயோதிக விதவைகளின் ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்தான். நீ ஒரு ஆசிரியை. பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பள்ளி நிர்வாகத்தை, சக ஆசிரியர்களை, மாணவ - மாணவியரை சம்பளத்துக்காக, "அட்ஜஸ்ட்' செய்து போகிறாய் இல்லையா? உறவுகளை சிதறி விடாமலிருக்க அத்தையை, "அட்ஜஸ்ட்' செய்து போனால், குறைந்தா போவாய்?
கணவனின் வீட்டாரை சதா குறை கூறிக் கொண்டே இருந்தால், டன் கணக்கில் வெறுப்புதான் மிஞ்சும். இறைவனுக்காகவும், மனசாட்சிக்காகவும் இணக்கத்துடன், சகிப்புடன் மாமியாரை அணுகு. உன் வீட்டாருக்கு விருந்தோம்பல் செய்யும் அதே தரத்தில், கணவர் வீட்டாருக்கும் விருந்தோம்பல் செய். தாத்தாவுக்கு, தந்தை நெளிந்து போன அலுமினியத் தட்டில் சோறு போடுவதை பார்க்கிறான் மகன். ஒருநாள், அந்த அலுமினியத் தட்டை எடுத்து பத்திரப்படுத்து கிறான் மகன். தந்தை, மகனிடம் காரணம் கேட்க, நீ வயதானவுடன் உனக்கு சோறு போட இந்த தட்டை பாதுகாக்கிறேன் என்றானாம் மகன்.
என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன்... எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் செய்த நன்மைகள் பல. எனக்கு வந்த இன்னல்களை, துன்பங்களை, சோதனைகளை, அவை விரட்டியடித் திருக்கின்றன.
நீ, உன் மாமியாருக்கு செய்யும் விருந்தோம்பல், உண்டியலில் காசு போடுவது போல. ஒரு கட்டத்தில் உண்டியல் நிறைந்து உனக்கு உதவும். உன் மாமியாருக்கு ஆம்பிளை வேஷம் போட்டுப் பார்; உன் புருஷன் தெரிவான். உன் கணவனுக்கு பொம்பிளை வேஷம் போட்டுப் பார்; உன் மாமியார் தெரிவார். ஒன்றிலிருந்துதான் ஒன்று. ஒரே ஒரு மாயையில் இருந்துதான், பில்லியன் மனிதர்கள் செய்யப்பட்டுள்ளனர். இன்னும், 11 வருடங்கள் கழித்துப் பார்... மெனோபாஸ் வந்து விடும்; கண்களில் கேட்டராக்ட் பூத்துவிடும். மூட்டுவலி வந்து விடும்; வயோதிகம் ஆரம்பித்து விடும். உன் தாயும், அத்தையும் விதவைகள். தத்தம் கணவர் மார்களுடன் வாழ அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. ஆண்டவனின் கிருபையால் நீயும், உன் கணவனும் இணைந்து, நூறாண்டு காலம் வாழ வேண்டும். அதற்கு நீ என்ன செய்ய வேண்டும்? பாவ மூட்டைகளை கழற்றி விட்டெறிந்து கொண்டே இருக்க வேண்டும்; நன்மைகளை சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உன் கணவர் உனக்கு தனி வீடு கட்டி கொடுத்திருக்கிறார். இரண்டு லட்சம் செலவு செய்து, பி.எட்., படிக்க வைத்து, ஆசிரியை பணியில் சேர்த்து விட்டிருக்கிறார். உன் மாமியார் இல்லாமல், உன் கணவன் வானத்திலிருந்து குதித்து உதவி செய்தாரா?
உன்னை மீறி கோபம் வராமல் பார்த்துக் கொள். ஒரு நாளைக்கு உன் அக்கா, உனக்கு, 25 தடவை போன் செய்கிறார். அப்போதெல்லாம் உன் மாமியாரை உதாசீனப்படுத்து என்று சொல்லித் தருகிறாரா? அப்படி சொல்லித் தந்தால், அந்த துர்போதனையை ஒரு காதில் வாங்கி, மறு காதில் விடு. உன் மாமியாரிடம் நீ காட்டும் அன்பு, உன் மகளுக்கு நல்ல மண வாழ்க்கையையும், நல்ல மாமியாரையும் பரிசளிக்கும்.
சகோதரரே... இந்த வேண்டுகோளை உங்கள் மனைவி படித்தால், மனம் மாறுவார் என நம்புகிறேன். நீங்களும், மனைவியை குறை கூறாது, அவரது எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுத்து செயல்படுங்கள்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (48)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ssk - chennai,இந்தியா
18-நவ-201119:52:38 IST Report Abuse
ssk செல்வா அவர்கள் சொல்லுவது உண்மை தான்.மாமியார் பாசமா இருந்தால் மருமகள் ஏன் அவுங்களை வேண்டாம்னு நினைக்க போறாங்க.மனைவி அம்மாவை கொடுமை படுத்துறதா இவரும் கடிதம் போட்டுருக்கறே அவர் மனைவி வருத்த பட மாட்டாங்க.கல்யாணத்துக்கு முன்னாடியும் அம்மா பேச்சை தான் கேக்குறிங்க கல்யாணம் ஆனதுக்கு பிறகும் அம்மா பேச்சை தான் கேக்குறிங்க.அப்ப மனைவி பேச்சை கேக்க மாட்டிங்க அப்படி தானே? நான் எல்லா ஆண்களையும் கேக்கல.அம்மா சொல்லுறது மட்டும் தான் உண்மைன்னு நினைக்கிற ஆண்களை மட்டும் தான்.பாவம் மனைவிமார்கள் அவர்களையும் புரிந்து நடந்துக்குங்க.நான் யாருடைய மனதையாவது கஷ்ட படுத்திருந்தாள் மன்னிக்கவும்.
Rate this:
Cancel
பார்வதி - Thane,இந்தியா
18-நவ-201115:39:39 IST Report Abuse
பார்வதி செல்வா சொல்லுவது 100 % சரி.
Rate this:
Cancel
தமிழன் - சேலம்,இந்தியா
18-நவ-201111:13:20 IST Report Abuse
தமிழன்  செல்வா, கிரிஜா இங்கே இருக்கும் வாசகர்கள் எல்லோரும் பெண் கொடுமைக்கு துணை போகிறவர்கள் இல்லை. பெண் சுதந்திரமும் தவறாக பயன்படுத்தபடுகிறது. குறுகிய,பொறாமை பிடித்த, அதிக அலட்டல் மனப்பான்மை கொண்டு மருமகளை துன்புறுத்துவர்களை, இங்கே இந்த பெண்ணை குறை குரிய யாவருக்கும் பிடிக்காது. அதே போல் மருமகனிடம் தன் மகள் மூலம் கெளரவம் தேடும், நீயா நானா என போட்டி போடும் மாமனார் மாமியாரும் இருக்க தான் செய்கிறார்கள். என் நண்பனுக்கு தந்தை கிடையாது ஆனால் அவன் மாமனார், என் நண்பனிடம் உங்கள் தாய் உங்களுடன் இருக்க கூடாது என்று குறை கூறி உள்ளார். தந்தை இல்லது இருந்தால் இன்றைக்கு பெண் குடுக்கவே மாட்டார்கள். இன்றைக்கு கல்யாணம் ஆனா மறு நாளே இந்த மாதிரி பிரச்சினை வருகிறது. நான் ஏற்கனவே கூறியது போல் மாமியார், மாமனார், சம்பாதிக்கும் நபர்களாக இருந்தால் இது போன்ற பிரச்சினை அதிகம் இல்லை. மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து தன் 30 வயது வரை தாய் தந்தையரின் வளர்ப்பில் வளர்ந்து வேலைக்கு போனவுடன் திருமணம் செய்யும் நபருக்கு வரும் பெண் முதல் வேலை கணவனை அவன் குடும்பத்தில் இருந்து பிரிப்பது தான். காரணம் கணவன் சம்பாதிக்கும் பணம் தாங்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும். A few words in English. It's not always women who tend to be more affected by the split, but it's the men who seem to be all the more baffled. As, they often find it difficult to cope with the life changes brought on by a divorce in relation to the women. According to a new study, men suffer far more in emotional terms than women. Post divorce, 48 per cent of men feel 'very lonely', compared with just 35 per cent of women, who tend to conduct themselves better than the men. And, it's not just at the emotional front that men suffer, in fact, they often bear the financial brunt of divorce, too. Supporting the family they have left behind and somehow having to finance a new roof over their own head, is too much to handle. Also, if they meet someone new, they are then faced with the prospect of supporting their new partner and any additional children. இது மேலைநாடுகளில் மட்டும் இல்லை. இந்தியாவிலும் உள்ளது. கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் 20 லட்சம் குடு நான் இந்த வீட்டை விட்டு போறேன் என்கின்றாள். இது தான் மாறி வரும் இந்திய கலாச்சாரம். முதியோர் இல்லம் அதிகம் பெருகி வரும் களம் இது. நாளை நானும் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தாலும் அது காலத்தின் கட்டாயம். கிரிஜா கூறியது போல் இளமையில் சம்பாதிக்கும் பணத்தில் முதுமைக்கும் சேர்த்து வைக்க வேண்டும். மகன் மற்றும் மகளை நம்புவதை விட பென்சனை நம்புவதே மேல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X