அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2011
00:00

வணக்கம் அம்மா—
என் வயது 44; என் மனைவிக்கு 34. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 12 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்களுக்கு திருமணமாகி, 15 வருடங்கள் ஆகிறது. நான் ரயில்வேயில் எழுத்தர் பணி செய்கிறேன். மேலும், எனக்கு அம்மா இருக்கிறார்; அவருக்கு, வயது 72. எனக்கு, 15 வயது இருக்கும் போது இறந்து விட்டார் என் தந்தை. என்னுடன் பிறந்தவர்கள், இரண்டு அண்ணன்கள். அவர்கள் அரசு வேலையில் மற்றும் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கின்றனர். எங்கள் தாய் எங்களை ஒழுக்கமாக வளர்த்தார்.
என்னுடைய மனைவிக்கு, உடன் பிறந்தவர் ஒரு அக்கா; அவளுக்கும் தந்தை கிடையாது. எங்களுக்கு திருமணமாகி, ஒரு வருடத்தில் இறந்து விட்டார்.
என் பிரச்னை என்னவென்றால், நாங்கள் ஆவடியில் தனி வீடு கட்டிக் கொண்டு இருக்கிறோம். என் தாய் எங்கள் வீட்டிற்கு, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அல்லது எப்போதெல்லாம் எங்களுக்கு தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் எங்கள் அண்ணன் வீட்டிலிருந்து வந்து, போய் கொண்டிருந்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் என் மனைவியிடம் சண்டை போட்டு, என் தாயை வரவழைத்துக் கொண்டிருந்தேன். மேலும், என் மனைவி திருமணமாகி வந்ததிலிருந்து, சொல்லாலும் செயலாலும் என் தாயை கஷ்டப்படுத்துகிறார்.
என் அண்ணன் வீட்டிலிருந்து, என் வீட்டிற்கு வர விடாமல் தடுக்கிறார். ஏனெனில், அவளுடைய அக்கா, அம்மா, அக்கா மகன்கள் இவர்கள் அடிக்கடி இங்கு வரவும், செல்லவும், அவர்கள் இஷ்டப்பட்டதை செய்து போடவும் துடிக்கிறார்; ஆனால், எங்கள் வீட்டிலிருந்து வருபவர்களை ஆதரிப்பதில்லை. மேலும், அவர்கள் ஒவ்வொருவர் மீதும் பழி சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஒரு நாளைக்கு குறைந்தது, 20 - 25 போன் கால்கள் அவளுடைய அக்கா வீட்டிலிருந்து வருகிறது. என்னுடைய மனைவி யின் படிப்புக்காக, இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து பி.எட்., மற்றும் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வைத்தேன். இன்று, தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.
இது சம்பந்தமாக என் மனைவியுடன் எவ் வளவோ பேசியும், அவர் சம்மதிக்கவில்லை. சில சமயங்களில் கூச்சல் போட்டு தேவையில்லாத வார்த்தைகள் பேசி கஷ்டப்படுத்துகிறார். இப்படி, என் தாய் முன்பே பலமுறை செய்கிறார். மேலும், என் தாய் இந்த விஷயத்தால் கஷ்டப்படுகிறார், அழுகிறார். நான் மன நிம்மதி, தூக்கம் இழந்துள்ளேன். இதனால், என் அண்ணிகள் இருவரும், இதே பாணியை கடைபிடிக்கின்றனர். என் தாய்க்கு தர்ம சங்கடமாக உள்ளது.
எனவே, நீங்கள்தான் எனக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஆலோசனையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு, உங்கள்
அன்பு சகோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு —
உங்கள் வயது 44; உங்கள் மனைவிக்கு 34. திருமணமாகி, 15 ஆண்டுகள் ஆன உங்களுக்கு, 12 வயதில் மகளும், 10 வயதில் மகனும் இருக்கின்றனர். நீங்கள் ரயில்வேயில் எழுத்தர்; உங்கள் மனைவி ஒரு ஆசிரியை. உங்களுக்கு திருமணமான அரசுப் பணியில் இருக்கும் இரு அண்ணன்கள், 72 வயதில் ஒரு விதவைத்தாய் இருக்கின்றனர். உங்கள் மனைவிக்கு விதவை அம்மா, அக்கா, அக்கா மகன்கள் உண்டு. உங்களின் தாய், உங்களது வீட்டுக்கு வருவதை பேச்சாலும், செயலாலும் தடுக்கிறார் உங்கள் மனைவி. உங்களது மனைவியின் செயல் பார்த்து உங்களின் அண்ணன் மனைவிகளும் உங்களின் தாயை வெறுத்து ஒதுக்குகின்றனர்.
நிறைய ஆண்களுக்கு மனைவி தேவை; ஆனால், மனைவியைப் பெற்ற பாவ ஜென்மங்கள் வேண்டாம். நிறைய பெண்களுக்கு, செக்ஸ் வைத்துக் கொள்ளவும், சம்பாதித்து போடவும் புருஷன் தேவை; ஆனால், புருஷனைப் பெற்ற பாவ ஜென்மங்கள் வேண்டாம். இது, வடிகட்டிய சுயநலம்.
அடுத்த, 15 வருடங்களில் உங்களது மனைவி, மகள் - மகனை கட்டிக் கொடுத்து, மாமியார் ஆகப் போகிறார். அப்போது உங்கள் மனைவிக்கு, 49 - 50 வயதாகும். மருமகளோ, மருமகனோ இவரை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர் என்றால், இவர் மனது என்ன பாடுபடும்? "முற்பகல் செயின் பிற்பகல் தாமே விளையும்...' என்பர். "வினை விதைத்தவன் வினை அறுப்பான்...' என்பர். "உப்பைத் தின்னவன் தண்ணீரை குடித்தாக வேண்டும்...' என்பர். தன் விதவை தாயைப் போல தானே, தன் விதவை மாமியார், தன் குடும்பத்தை சிரமப்பட்டு உழைத்து முன்னுக்கு கொண்டு வந்திருப்பார். அப்படி முன்னுக்கு கொண்டு வந்ததால் தானே நாம், நம் கணவரை தகுதியான மாப்பிள்ளை என மணந்தோம் என்று, உங்கள் மனைவி நினைத்து பார்க்க வேண்டும்.
பிறந்த வீட்டின் மீதான பாசம், புகுந்த வீட்டின் மீதான வெறுப்பாகி விடக் கூடாது.
உங்கள் மனைவிக்கு அன்பு வேண்டுகோள்:
சகோதரியே... வணக்கம். உன் மாமியார், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, உன் வீட்டிற்கு வந்து போகிறார். சிலர் வீடுகளில் மாமியார் வருடம் முழுக்க மருமகள் வீட்டில்தான் தங்கியிருப்பர். சில வீடுகளில் இருக்கும் மாமியார், படுத்த படுக்கையாய் கிடப்பர். அவர்களின் கழிவுகளை முகம் சுளிக்காமல் அள்ளிப் போடும் மருமகள்களும் இருக்கின்றனர். சில இடங்களில் கிராமத்தில் தங்கியிருக்கும் மாமியாரை, வீட்டுக்கு வந்து தங்கச் சொல்ல கெஞ்சும் மருமகள்களும் இருக்கின்றனர்.
உன் தரப்பை கேட்டால் மாமியாரைப் பற்றி, நூறு பக்கங்களுக்கு குற்றப் பத்திரிகை வாசிப்பாய். தவறில்லாத மனிதன் யார்? சில வயோதிக விதவைகளின் ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்தான். நீ ஒரு ஆசிரியை. பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பள்ளி நிர்வாகத்தை, சக ஆசிரியர்களை, மாணவ - மாணவியரை சம்பளத்துக்காக, "அட்ஜஸ்ட்' செய்து போகிறாய் இல்லையா? உறவுகளை சிதறி விடாமலிருக்க அத்தையை, "அட்ஜஸ்ட்' செய்து போனால், குறைந்தா போவாய்?
கணவனின் வீட்டாரை சதா குறை கூறிக் கொண்டே இருந்தால், டன் கணக்கில் வெறுப்புதான் மிஞ்சும். இறைவனுக்காகவும், மனசாட்சிக்காகவும் இணக்கத்துடன், சகிப்புடன் மாமியாரை அணுகு. உன் வீட்டாருக்கு விருந்தோம்பல் செய்யும் அதே தரத்தில், கணவர் வீட்டாருக்கும் விருந்தோம்பல் செய். தாத்தாவுக்கு, தந்தை நெளிந்து போன அலுமினியத் தட்டில் சோறு போடுவதை பார்க்கிறான் மகன். ஒருநாள், அந்த அலுமினியத் தட்டை எடுத்து பத்திரப்படுத்து கிறான் மகன். தந்தை, மகனிடம் காரணம் கேட்க, நீ வயதானவுடன் உனக்கு சோறு போட இந்த தட்டை பாதுகாக்கிறேன் என்றானாம் மகன்.
என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன்... எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் செய்த நன்மைகள் பல. எனக்கு வந்த இன்னல்களை, துன்பங்களை, சோதனைகளை, அவை விரட்டியடித் திருக்கின்றன.
நீ, உன் மாமியாருக்கு செய்யும் விருந்தோம்பல், உண்டியலில் காசு போடுவது போல. ஒரு கட்டத்தில் உண்டியல் நிறைந்து உனக்கு உதவும். உன் மாமியாருக்கு ஆம்பிளை வேஷம் போட்டுப் பார்; உன் புருஷன் தெரிவான். உன் கணவனுக்கு பொம்பிளை வேஷம் போட்டுப் பார்; உன் மாமியார் தெரிவார். ஒன்றிலிருந்துதான் ஒன்று. ஒரே ஒரு மாயையில் இருந்துதான், பில்லியன் மனிதர்கள் செய்யப்பட்டுள்ளனர். இன்னும், 11 வருடங்கள் கழித்துப் பார்... மெனோபாஸ் வந்து விடும்; கண்களில் கேட்டராக்ட் பூத்துவிடும். மூட்டுவலி வந்து விடும்; வயோதிகம் ஆரம்பித்து விடும். உன் தாயும், அத்தையும் விதவைகள். தத்தம் கணவர் மார்களுடன் வாழ அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. ஆண்டவனின் கிருபையால் நீயும், உன் கணவனும் இணைந்து, நூறாண்டு காலம் வாழ வேண்டும். அதற்கு நீ என்ன செய்ய வேண்டும்? பாவ மூட்டைகளை கழற்றி விட்டெறிந்து கொண்டே இருக்க வேண்டும்; நன்மைகளை சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உன் கணவர் உனக்கு தனி வீடு கட்டி கொடுத்திருக்கிறார். இரண்டு லட்சம் செலவு செய்து, பி.எட்., படிக்க வைத்து, ஆசிரியை பணியில் சேர்த்து விட்டிருக்கிறார். உன் மாமியார் இல்லாமல், உன் கணவன் வானத்திலிருந்து குதித்து உதவி செய்தாரா?
உன்னை மீறி கோபம் வராமல் பார்த்துக் கொள். ஒரு நாளைக்கு உன் அக்கா, உனக்கு, 25 தடவை போன் செய்கிறார். அப்போதெல்லாம் உன் மாமியாரை உதாசீனப்படுத்து என்று சொல்லித் தருகிறாரா? அப்படி சொல்லித் தந்தால், அந்த துர்போதனையை ஒரு காதில் வாங்கி, மறு காதில் விடு. உன் மாமியாரிடம் நீ காட்டும் அன்பு, உன் மகளுக்கு நல்ல மண வாழ்க்கையையும், நல்ல மாமியாரையும் பரிசளிக்கும்.
சகோதரரே... இந்த வேண்டுகோளை உங்கள் மனைவி படித்தால், மனம் மாறுவார் என நம்புகிறேன். நீங்களும், மனைவியை குறை கூறாது, அவரது எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுத்து செயல்படுங்கள்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X