செல்லப் பிராணியின் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால், தன், மூன்று வயது குழந்தையை பட்டினி போட்டு சாகடித்துள்ளார், கொடுமைக்கார தந்தை. ஜப்பானில் தான், இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இவருக்கு, மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. ஆசை, ஆசையாக ஒரு பூனையையும், தன் வீட்டில் வளர்த்து வந்தார். ஆசை என்றால், உங்க வீட்டு ஆசை, எங்க வீட்டு ஆசை கிடையாது, வெறித்தனமான ஆசையை, அந்த பூனை மீது வைத்திருந்தார், அவர்.
இதனால், தன் குழந்தையைப் பற்றி, அவர் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அந்த குழந்தை சாப்பிட்டதா, தூங்குகிறதா, வீட்டில் உணவுப் பொருட்கள் உள்ளதா என்பது பற்றி, ஒரு நாள் கூட அவர் சிந்திக்கவில்லை.
எந்த நேரம் பார்த்தாலும், தன் ஆசைப் பூனையை மடியில் தூக்கி வைத்து, கொஞ்சிக் கொண்டிருப்பது தான், இவரது அன்றாட வேலை. சரியாக கவனிக்காததால், குழந்தை பசியால் வாடியது. பசி அதிகமாகி, கையில் கிடைக்கும் பொருட் களை எல்லாம் சாப்பிடத் துவங்கியது. வீட்டில் கிடக்கும் குப்பை, கூளங்கள், சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை எல்லாம், அந்த குழந்தைக்கு உணவாகிப் போயின.
திடீரென ஒரு நாள், போலீசாருக்கு, ஒரு பெண்ணிடம் இருந்து போன் வந்தது. "என் குழந்தை பேச்சு மூச்சின்றி கிடக்கிறது. வந்து பாருங்கள்...' எனக் கெஞ்சினார், அந்த பெண். வீட்டின் உள்ளே சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே, உடலில் எந்த அசைவுமின்றி, எலும்பும், தோலுமாக, ஒரு பச்சிளம் குழந்தை கிடந்தது. டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, அந்த குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசாருக்கு போனில் அழைப்பு விடுத்த, அந்த பெண், வேறு யாருமில்லை. அந்த குழந்தையின் தாய் தான். "குழந்தையின் நிலைபற்றி, யாரிடமும் கூறக் கூடாது என, என் கணவர் மிரட்டியதால், இதை வெளியில் சொல்ல முடியவில்லை...' என, கண்ணீர் மல்க கூறினார் அந்த பெண்.
குழந்தையை பசியால் சாகடித்த தந்தையிடம் போலீசார் விசாரித்த போது, "நான் எந்த தவறும் செய்யவில்லை. குழந்தையை காட்டிலும், நான் வளர்த்த பூனையிடம் அதிக அன்பு செலுத்தினேன்; இது தவறா?' என, ஒன்றும் தெரியாத அப்பாவி போல் கூறினாராம்.
நல்ல ஆரோக்கியமான உடல் நிலையுள்ள மூன்று வயது குழந்தை, சராசரியாக, 13.4 கிலோ எடையுடன் இருக்கும். ஆனால், பசிக் கொடுமையால் இறந்து போன இந்த குழந்தை, எவ்வளவு எடை இருந்தது தெரியுமா? வெறும் ஐந்து கிலோ.
— ஜோல்னா பையன்.